விடுதலைப் புலிகளை அழித்து விட்டதாக பிரகடனம் செய்தவர்கள் அதிகாரத்தில்! உறுதிப்படுத்தப்பட்ட உரிமை

Report Print Subathra in கட்டுரை

அழுத்தங்கள், கெடுபிடிகள் இருந்த போதும் வடக்கு, கிழக்கில் மாவீரர் நாள் நிகழ்வுகள் பெரும்பாலும் தடையின்றி நடந்தேறியிருக்கின்றன.

ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர் கேள்விக்குறியாக இருந்த பல விடயங்களில் மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கு அனுமதி அளிக்கப்படுமா என்பதும் ஒன்று.

2009இல் போரை முடிவிற்கு கொண்டு வந்து விடுதலைப் புலிகளை அழித்து விட்டதாகப் பிரகடனம் செய்தவர்கள், அதில் நேரடியாகப் பங்களித்தவர்கள் அனைவரும் இப்போது நாட்டின் மிக முக்கிய பதவிப் பொறுப்புகளில் இருக்கிறார்கள்.

அப்போது ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ச இப்போது பிரதமராக இருக்கிறார். அப்போது பாதுகாப்புச் செயலாளராக இரந்த கோட்டாபய ராஜபக்ச இப்போது ஜனாதிபதியாக இருக்கிறார்.

போரின் இறுதிக்கட்டத்தில் 52ஆவது டிவிஷனை வழிநடத்திய மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன இப்போது பாதுகாப்புச் செயலாளராகவும் 58ஆவது டிவிஷனுக்குத் தலைமை தாங்கிய லெப். ஜெனரல் சவேந்திர சில்வா இராணுவத் தளபதியாகவும் இருக்கின்றனர்.

இவர்கள் எல்லாம் அதி உச்ச அதிகாரத்தில் இருக்கின்ற நிலையில் அவர்களாலேயே அழிக்கப்பட்ட விடுதலைப் புலிகளை நினைவுகூரும் மாவீரர் நாள் நிகழ்வுக்கு புதிய அரசாங்கம் அனுமதி அளிக்குமா என்ற சந்தேகங்கள் இருந்தன.

போர் முடிவிற்கு கொண்டு வரப்பட்ட பின்னர் விடுதலைப் புலிகளை நினைவு கூர அனுமதிப்பதில்லை என்ற உறுதியான கொள்கையை கடைப்பிடித்து மஹிந்த ராஜபக்ச அரசாங்கம்.

விடுதலைப் புலிகளின் நினைவுச் சின்னங்களாக இருந்த துயிலும் இல்லங்கள் அழிக்கப்பட்டு பெரும்பாலும் அவற்றின் மீது இராணுவத் தளங்கள் கட்டியெழுப்பப்பட்டன.

புலிகளை நினைவுப்படுத்தக் கூடிய எந்தவொரு நினைவுச் சின்னத்தையும் விட்டு விடாமல் எல்லாவற்றையும் துடைத்து அழித்திருந்தார் இப்போதைய ஜனாதிபதியும் அப்போதைய பாதுகாப்புச் செயலாளருமான கோட்டாபய ராஜபக்ச.

அவை அழிக்கப்பட்ட போது கடுமையான விமர்சனங்களும் எதிர்க்கருத்துக்களும் வந்த போதும் அவர் அதில் உறுதியாக இருந்தார். விடுதலைப் புலிகளின் தடயங்களே இருக்கக்கூடாது என்றும் அது எதிர்காலத்தில் இன்னொரு எழுச்சிக்கு காரணமாகி விடும் என்றும் அவர் நியாயம் கற்பித்திருந்தார்.

அதுமாத்திரமன்றி மாவீரர் நாள் நினைவுகூரல்களையும் அவர் பாதுகாப்புச் செயலாளராக இருந்த காலத்தில் நடத்துவதற்கு அனுமதிக்கவில்லை. மாவீரர் நாளை அண்டியதாக இந்துக்களின் கார்த்திகை விளக்கீடும் வருவது வழக்கம்.

அவ்வாறு காரத்திகை விளக்கீட்டுக்கு வீட்டின் முன்பாக விளக்கேற்றியவர்கள் பலர் தாக்கப்பட்ட சம்பவங்களுகம் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவங்களும் நடந்தேறியிருந்தன.

அந்த காலக்கட்டத்தில் மிக இரகசியமாகவே வீடுகளில் மாவீரர்களுக்கு விளக்கேற்றப்பட்டன. மாவீரர் நாள் நிகழ்வை நடத்தியதற்காக யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல்களும் நடத்தப்பட்டன.

இவ்வாறான ஒரு சூழலே 2014ஆம் அண்டு வரை இருந்தது. ஆனால் 2015ஆம் ஆண்டில் ஆட்சி மாற்றத்துக்கு பின்னர் மாவீரர்களை நினைவு கூர அரசாங்கம் அனுமதியளிக்காவிடினும் அதற்கு தடை விதிக்கவில்லை.

சில இடங்களில் நீதிமன்ற உத்தரவைப் பெற்று தடைவிதிக்கும் முயற்சிகள் இடம்பெற்ற போதும் அவை பெரும்பாலும் மாவீரர் நாள் நிகழ்வுகளை தடை செய்யும் அளவுக்கு வீரியமான முயற்சிகளாக இருக்கவில்லை.

இதனால் பெரம்பாலான துயிலும் இல்லங்களில் மீண்டும் மாவீரர் நாள் நிகழ்வுகள் நடத்தேறி வந்தன. கடந்த 2018ஆம் ஆண்டு மாவீரர் நாள் கூட கேள்விக்குறியான ஒன்றாகவே இருந்தது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஆட்சிக் குழப்பம் ஏற்பட்டிருந்த காலம் அது. பிரதமராக மஹிந்த ராஜபக்ச பதவியில் இருந்தார். அதனால் ஏதேனும் குழப்பங்கள் ஏற்படுத்தப்படுமோ என்ற கவலை இருந்தது.

எனினும் ஜனாதிபதியாகவும், பாதுகாப்பு அமைச்சராகவும் மைத்திரிபால சிறிசேனவே இருந்ததால் கடந்த முறை எந்தப் பிரச்சினையுமின்றி மாவீரர் நாள் நிகழ்வுகள் நடந்தேறியிருந்தன.

இந்த முறை எல்லமே மாறிவிட்டது. விடுதலைப் புலிகளை அழித்து விட்டதாக பிரகடனம் செய்தவர்கள் அனைவரும் அதிகாரத்தில் இருக்கின்ற நிலையில் இந்த முறை மாவீரர் நாளை நடத்துவதற்கு அனுமதிக்கப்படுமா என்ற கேள்வி இருந்தது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் அவரது இடைக்கால அரசாங்கத்திற்கும் கூட இது ஒரு சிக்கலான விடயமாகவே இரு்நதது.

கடந்த காலங்களில் மாவீரர் நாளை நினைவுகூர மைத்திரி - ரணில் அரசாங்கம் அனுமதியளித்திருந்த போது மீண்டும் புலிகள் வந்து விட்டதாகவும் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்படுவதாகவும் கூட்டு எதிரணியில் இருந்தவர்கள் கூச்சல் எழுப்பினர்.

விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, தினேஸ் குணவர்த்தன போன்ற இனவாதிகள் கடுமையான எதிர்ப்புகளை வெளியிட்டனர். கடந்த ஆண்டு அவர்கள் ஆட்சியில் இருந்த போதே மாவீரர் நாள் நிகழ்வுகள் நடத்தப்பட்டிருந்தன.

இந்த முறையும் அரசாங்கத்தைப் பொறுத்த வரையில் முள்ளில் விழுந்த சேலை போல பக்குவமாகவே அதனை எடுக்க வேண்டியிருந்தது. ஏற்கனவே இந்த அரசாங்கம் சிறுபான்மையினரின் நம்பிக்கையை பெற்றதல்ல என்ற அடையாளத்துடன் தான் பதவிக்கு வந்திருக்கிறது.

எனவே அவர்களை இனிமேலும் பகைத்துக் கொள்ளாமல் அரவணைத்துக் கொள்ளும் அவசியம் அரசாங்கத்துக்கு இருக்கிறது.

மாவீரர் நாள் போன்ற உணர்வுபூர்வமான விடயங்களின் மீது கை வைக்கும் போது அது பாரதூரமான தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதை அரசாங்கம் நன்றாகவே அறிந்து வைத்திருக்கிறது.

போரில் இறந்து போன உறவுகளுக்கு நினைவு கூரும் உரிமை வழங்கப்பட வேண்டும் என்பது சர்வதேச நிலைப்பாடாகவும் இருந்து வருகிறது. தற்போதைய அரசாங்கம் சர்வதேச நம்பிக்கையைப் பெற்ற ஒன்று அல்ல. அதன் நிலைப்பாடுகளும் கருத்துக்களும் இன்னமும் சர்வதேசத்துக்கு நம்பிக்கையை அளிக்கவில்லை.

அதற்குள்ளாகவே நினைவுகூரல் உரிமைகளை பறித்தெடுத்து விட்டால் சர்வதேச அளவில் நெருக்குதல்களைச் சந்திக்க வேண்டிய நிலை வரக்கூடும் என்ற சிக்கலும் இருந்தது.

இதற்கு அப்பால் மாவீரர் நாளுக்கு அடுத்த நாளான கடந்த 28ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இந்தியாவிற்கு புறப்பட திட்டமிட்டடிருந்தார்.

மாவீரர் நாள் நிகழ்வுகளை இந்தியா அங்கீகரிக்காது போனாலும் தமிழ் மக்களின் நினைவுகூரல் உரிமைகள் பறிக்கப்பட்டால் அது இந்தியப் பயணத்தின் போது கோட்டாபய ராஜபக்சவிற்கு சங்கடமான சூழ்நிலைகளை ஏற்படுத்தும் என்பதையும் அரசாங்கம் கவனத்தில் கொண்டிருக்கும்.

தமிழ்மொழி பெயர்ப்பலகைகள் அழிப்பட்டதையே கோட்டாபய ராஜபக்சவின் இந்திய பயணத்தை சீர்குலைக்க முனையும் சக்திகளின் சதி என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச கருதுகிறார் என்றால் நினைவுகூரல் உரிமை தடுக்கப்படுவதை எந்தளவுக்கு பாரதூரமானதாக எடுத்துக் கொண்டிருப்பார் என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

இவை எல்லாவற்றுக்கும் அப்பால் போர் முடிந்து பத்து ஆண்டுகளாகி விட்ட நிலையில் தமிழ் மக்களின் உணர்வுகளை மதிக்க வேண்டிய ஒரு பக்குவ நிலையை தற்போதைய அரசாங்கம் அடைந்திருக்கக்கூடும்.

தமிழ் மக்கள் போரில் இழந்தவைகள் ஏராளம். அவர்கள் தமது உறவுகளை பலர் தமது தலைமுறைகளை இழந்திருக்கிறார்கள். அவர்களின் காயங்களை ஆற்றுவதற்கு ஒரு வழி தேவை.

நீதி விசாரணைப் பொறிமுறைகளும், பொறுப்புக்கூறலும் இத்தகைய காயங்களை ஆற்றுகின்ற ஒரு வழிமுறையாக இருந்தாலும் அவ்வாறான ஒரு சூழல் இன்னமும் உருவாக்கிக் கொடுக்கப்படவில்லை.

இவ்வாறான நிலையில் மாவீரர் நாள் போன்ற நினைவேந்தல் நிகழ்வுகளில் தான் உறவுகளை இழந்தவர்கள் அழுந்து புரண்டு தமது காயங்களுக்கு மருந்திடும் ஆறுதல் கிடைக்கும்.

துயிலும் இல்லங்களில் கேட்கின்ற அழுகுரல்கள் ஆறுதலையும் தேறுதலையும் அவர்களுக்கு கொடுக்கிறது என்பதையே உணர்த்துகின்றது. இவ்வாறான அழுகுரல்களை அடக்கி வைப்பதும் ஆறுதல் அடைவதை தடுப்பதும் தான் மக்கள் மத்தியில் இன்னும் இன்னும் முரண்பாட்டை வளர்தெடுக்கும்.

இதனை புதிய அரசாங்கம் புரிந்து கொண்டிருக்கவும் வாய்ப்புகள் உள்ளன. இவை எல்லாவற்றுக்கும் அப்பால் மாவீரர்களை நினைவுகூர அனுமதிக்கப்பட்டதால் எங்கும் சட்டம் ஒழுங்கு மீறப்படவோ வன்முறைகள் நிகழவோ இல்லை. அதிகபட்சம் ஒரு மணி நேரம் அமைதியான நினைவுகூரலுடன் மக்கள் கலைந்து செல்கின்றனர்.

இதனை முன்வைத்து விடுதலைப் புலிகளின் மீள் எலுச்சி பற்றி கவலை கொள்வது மிகையான கற்பனை. இதனால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு விட்டதாக யாரும் கூறவும் முடியாகது. ஏனெனில் அவ்வாறான எந்த நிகழ்வம் நடக்கவில்லை.

அரசாங்கம் இன்னொரு போரைத் தடுப்பதற்கான எல்லா பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்திருக்கிறது. இவ்வாறான நிலையில் மாவீரர் நினைவுகூரல் போன்ற தமிழ் மக்களின் உணர்வுகளையும் மதிக்கின்ற வகையில் அவர்களையும் அனுசரித்துச் செல்வது நிலையான அமைதியை ஏற்படுத்தும். அதன் இலக்கை இன்னும் இலகுபடுத்தும் என்பதில் சந்தேகமில்லை.