கத்தி மேல் நடக்கும் பயணம்

Report Print Subathra in கட்டுரை

சீன கடற்படையின் Shiyan 1 என்ற சமுத்தரவியல் ஆய்வுக் கப்பல், இந்தியாவின் பொருளாதாரக் கடல் எல்லைக்குள் அத்துமீறியது தொடர்பாக இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் கரம்பீர்சிங் கடந்த வாரம் தகவல் ஒன்றை வெளியிட்டிருந்தார்.

வங்கக் கடலில் மியான்மருக்கு தென்மேற்கே 300 கி.மீ தொலைவில், அந்தமான் - நிகோபார் தீவுகளுக்கு அருகே, இந்தியாவின் கடல் எல்லைக்குள், சீனாவின் இந்த ஆய்வுக் கப்பல் தரித்து நின்றது.

உடனடியாக அந்த இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட இந்திய கடற்படையின் போர்க்கப்பல் ஒன்று, எச்சரிக்கை செய்து, சீன கப்பலை இந்திய கடல் எல்லைக்கு வெளியே துரத்தி விட்டது.

Shiyan 1 என்ற இந்தக் கப்பல், குவாங்சோவில் 2009ஆம் ஆண்டு கடத்தப்பட்டது. இது சாதாரண கப்பல்களைப் போலன்றி, கட்டுமரம் போல, அடிப்பகுதி பிணைக்கப்பட்டது. 60 மீற்றர் நீளம் 26 மீற்றர் அகலம் மற்றும் கிட்டத்தட்ட 700 தொன் எடையைக் கொண்டது.

இது 40 நாட்கள் தொடர்ந்து, 8,000 கடல் மைல்கள் வரை பயணிக்கக் கூடியது.

தொழில்நுட்ப ரீதியாக இது ஒரு சிவிலியன் கப்பல் தான் என்ற போதும், அதிலுள்ள கருவிகள் சீன இராணுவத்திற்கு தேவையான தரவுகளை சேகரிக்க பயன்படுத்தப்படக் கூடியது.

குறிப்பாக, கடற்பகுதி வரைபடங்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களின் பயணங்களுக்குத் தேவையான தரவுகளை சேகரிக்கக் கூடியது.

இதுபோன்ற சீன கப்பல்களின் நடமாட்டம் இந்தியப் பெருங்கடலில் வழக்கமானது தான். சீனா அதிகளவிலான சமுத்திரவியல் ஆய்வுக் கப்பல்களையும், தகவல் சேகரிப்புக்கான கப்பல்களையும் இந்தியப் பெருங்கடலில் பயன்படுத்தி வருகிறது.

அவ்வவப்போது இத்தகைய கப்பல்கள், இந்திய கடல் எல்லைக்குள் ஊடுருவி தரவுகளை சேகரிப்பதும் வழக்கம். அவ்வாறான ஒரு சம்பவமே அண்மையில் நிகழ்ந்துள்ளது.

கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு முன்னர் தான் இந்தச் சம்பவம் நடந்தது. செப்டெம்பர் மாதம் நடந்த இந்த சம்பவம் குறித்து கடந்த வாரம் தான் இந்திய கடற்படைத் தளபதி தகவல் வெளியிட்டிருக்கிறார்.

அதுவும், புதிய இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் இந்தியப் பயணத்துக்குப் பின்னரே இந்த செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்தக் கப்பல் இந்தியக் கடல் எல்லையில் இருந்து துரத்தப்பட்ட பின்னர் தான், கொழும்புத் துறைமுகத்துக்கு சீன கடற்படையின் ஆய்வுக்கப்பலான 'Zhu Ke Zhen' வந்திருந்தது. இது சீன கடற்படையினர் வெளிப்படையாகப் பணியாற்றுகின்ற ஒரு இராணுவக் கப்பல்.

ஜனாதிபதி தேர்தலுக்கு இரண்டு நாட்கள் முன்னமாக நவம்பர் 14ஆம் திகதி கொழும்பு வந்த அந்தக் கப்பல், தேர்தல் முடிந்து, ஜனாதிபதியாக கோட்டபாய ராஜபக்ச பதவியேற்ற பின்னர் 19ஆம் திகதியே புறப்பட்டுச் சென்றிருந்தது.

இந்தியப் பெருங்கடல் அமைதிப் பிராந்தியமாக இருக்க வேண்டும். இந்தியப் பெருங்கடல் கப்பல் பாதையில் யாருடைய குறுக்கீடுகளும் இருக்காமல், சுதந்திரமான கப்பல் போக்குவரத்துக்கானதாக இருக்க வேண்டும் என்பதே அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளினது நிலைப்பாடாக உள்ளது.

இதனையே புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் அண்மையில் வலியுறுத்தி வருகிறார். இவ்வாறான நிலையில் சீன கடற்படை தனது நீர்மூழ்கிக் கப்பல்கள், போர்க் கப்பல்களை மாத்திரமின்றி, ஆய்வுக் கப்பல்கள், தரவுகளைச் சேகரிக்கும் உளவுக் கப்பல்களையும் அடிக்கடி இந்தப் பகுதியில் நடமாட விட்டிருக்கிறது.

இது இந்தியப் பெருங்கடலின் சுதந்திரமான கப்பல் போக்குவரத்துக்கும், இந்தியாவின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலானது என்பதே அமெரிக்கா, இந்தியா போன்ற தரப்புகளின் குற்றச்சாட்டு.

சீனா தனது கப்பல்களைக் கொண்டு இந்தியப் பெருங்கடலில் நோட்டம் விடுவதற்கும், ஆதிக்கத்தை விரிவுபடுத்துவதற்கும், இலங்கையைப் பயன்படுத்திக் கொள்கிறது என்பது இந்தியாவினதும், அமெரிக்காவினதும் கவலையாக இருந்து வந்திருக்கிறது.

குறிப்பாக, 2014இல் சீன நீர் முழ்கி கப்பல்கள் கொழும்பில் தரித்துச் சென்ற சம்பவங்களை இந்தியா பாரதூரமாகவே எடுத்துக் கொண்டது. அப்போது ஆட்சியில் இருந்த மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் மீது இந்தியாவும், மேற்குலகமும் முற்றாக நம்பிக்கையிழக்க அந்தச் சம்பவமே காரணமாக இருந்தது.

ஆனால், சீன நீர்முழ்கியை கொழும்பில் தரித்துச் செல்ல அனுமதித்தமை தமது தவறு அல்ல என்பதே மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் நிலைப்பாடாக இருந்தது. அப்போதும் சரி இப்போதும் சரி அந்த நிலைப்பாட்டில் இருந்து கோட்டாபய ராஜபக்ச மாறவில்லை.

அவர் அதனை ஒரு சிறிய விடயமே என்று தான் இப்போதும் கூறுகிறார்.

புதுடெல்லியில் தி ஹிந்துவின் ஆசிரியர் சுஹாசினி ஹைதருக்கு அளித்திருந்த செவ்வியில் அவர், “சீன நீர்மூழ்கி விவகாரம் என்பது சாதாரணமானது. அதனை இந்திய அதிகாரிகள் பெரிதுபடுத்தினார்கள்.

போர்க்கப்பல்கள் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்வது வழமை. சீனா நீர்மூழ்கிகள் தரித்துச் செல்ல இடமளிக்குமாறு கோரிய போது, அதிகாரிகள் அதனை சாதாரண விடயமாக கருதி அனுமதித்தார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அப்போது பாதுகாப்புச் செயலாளராக இருந்தவர் கோட்டபாய ராஜபக்ச சீன நீர்மூழ்கிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது அவருக்குத் தெரியாமல் நடந்ததல்ல. ஆனால் அவர் அந்தப் பொறுப்பை ஏற்காமல், அதிகாரிகள் அனுமதி அளித்தார்கள் என்று இந்தச் செவ்வியில் கூறியிருக்கிறார்.

அந்த செவ்வியில் அவர், “இந்தியாவின் முன்னாள் வெளிவிவகார செயலாளர் சிவ்சங்கர் மேனன் தனது நூலில் இந்தியாவின் நலனுக்கு எதிரான எந்த நடவடிக்கைக்கும் இடமளிக்க மாட்டேன் என கொட்டபாய ராஜபக்ச தெரிவித்தார். அதனை நிறைவேற்றினார்” என குறிப்பிட்டுள்ளார், ஆகவே நான் நேர்மையாக செயற்பட்டுள்ளேன் என்பதை நினைவுபடுத்தியிருக்கிறார்.

இருந்தாலும், கோட்டபாய ராஜபக்சவின் வாக்குறுதியை இந்திய அதிகாரிகள் நம்பவில்லை என்பதே உண்மை.

குறிப்பாக, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அப்போதும் இருந்த, இப்போதும் அதே பதவியில் இருக்கின்ற அஜித் டோவல் அந்த வாக்குறுதியை நம்பவில்லை.

இதனை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச இப்போது கூறவில்லை. 2015 ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர், கோட்டபாய ராஜபக்ச ஊடகச் செவ்விகளில் இதனைக் குறிப்பிட்டிருந்தார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு மிகவும் நெருக்கமானவர் அஜித் டோவல். அவரது நம்பிக்கையைப் பெற்றவரும் கூட அதனால் தான், 2014இல் அவருக்கு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவியை மோடி அளித்திருந்தார்.

அப்போது, மத்திய இணை அமைச்சர் ஒருவருக்கு இணையான பதவியாகவே. அது இருந்தது. இப்போது, அஜித் டோவல் வகிக்கின்ற தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவி, மத்திய அமைச்சர் ஒருவருக்கு இணையானதாக, அதிகார வலுவூட்டப்பட்டதாக உள்ளது.

இது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவிக்காக அன்றி, அஜித் டோவலின் அதிகாரத்தை வலுப்படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்ட மாற்றம்.

அஜித் டோவலை, சீனா, பாகிஸ்தான், மாலைதீவு உள்ளிட்ட பல சிக்கலான விவகாரங்களில் இந்தியாவின் பிரதிநிதியாக பங்கேற்க வைத்தவர் மோடி.

சிக்கலான பிரச்சினைகளையும் சாதுரியமாகவும், இந்தியாவின் நலன்களுக்குப் பாதிப்பின்றியும் கையாளக் கூடியவர் என்ற ஒரு பெயர் அவருக்கு இருக்கிறது.

கோட்டபாய ராஜபக்ச ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டதும், அவரை கொழும்புக்கு வருமாறு அழைப்பதற்கு, இந்தியப் பிரதமர் மோடி, வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரைத் தான் பயன்படுத்தினார். தேசிய பாதுகாப்பு ஆலோசகரான அஜித் டோவலைப் பயன்படுத்தவில்லை.

அஜித் டோவலுக்கும், கோட்டபாய ராஜபக்சவுக்கும் இருந்த சரியான புரிந்துணர்வின்மை தான் அதற்கு முக்கியமான காரணம்.

2015இல் மகிந்த ராஜபக்ச ஆட்சி தோற்கடிக்கப்பட்ட பின்னர், பல்வேறு செவ்விகளில் அஜித் டோவல் தொடர்பாக கோட்டபாய ராஜபக்ச வெளியிட்ட கருத்துக்கள் பாரதூரமானவை.

அஜித் டோவல் சீன எதிர்ப்பு நிலைப்பாட்டை கொண்டிருந்தவர் என்றும் அதே கண்ணோட்டத்துடனேயே எல்லாவற்றையும் பார்த்தார் என்றும், அவரது அந்த நிலையே ஆட்சி மாற்றத்துக்காக இந்தியாவை பணியாற்ற நிர்ப்பந்தித்தது என்றும் அவர் கூறியிருந்தார்.

தாம் அளித்த வாக்குறுதிகளை அவர் நம்பவில்லை என்றும், கொழும்பு துறைமுக நகர திட்டத்தை சீனாவிடம் இருந்து மீளப் பெறுமாறும், இலங்கை போன்ற சிறிய நாட்டுக்கு இந்தளவு பெரிய திட்டம் தேவையில்லை என்று அழுத்தம் கொடுத்தார் என்றும் கோட்டபாய ராஜபக்ச அப்போது தெரிவித்திருந்தார்.

2015 ஆட்சி மாற்றத்துக்கு அஜித் டோவலின் தவறான அணுகுமுறையே காரணம், இந்தியாவை தவறாக அவர் வழிநடத்தினார் என்பதே அவரது கருத்துக்களின் சாரமாக இருந்தது.

இவ்வாறான முரண்பாடான கருத்துக்கள் வெளியிடப்பட்ட நிலையில், அஜித் டோவலை கொழும்புக்கு உடனடியாக அனுப்புவது உசிதமல்ல என்று முடிவு செய்திருந்தார் இந்தியப் பிரதமர்.

எனினும், ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த போது அவரை முதலில் சந்தித்துப் பேச்சு நடத்தியவர் அஜித் டோவல் தான்.

கடந்த மாதம் 28ஆம் திகதி மாலை புதுடெல்லி சென்றடைந்ததும், கோட்டபாய ராஜபக்சவை இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் சந்தித்துப் பேசினார். பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து அதில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டது.

அந்தச் சந்திப்பு தொடர்பான விடயங்கள் பெரும்பாலும் இலங்கை ஊடகங்களில் வெளிவரவில்லை. அல்லது இருட்டடிப்புச் செய்யப்பட்டது.

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகங்களிலும், அஜித் டோவலுடனான சந்திப்பு குறித்த செய்திகளோ, படங்களோ இடம்பெற்றிருக்கவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.

இந்தப் பின்னணியில், “தி ஹிந்து" வுக்கு அளித்திருந்த செவ்வியில், கோட்டபாய ராஜபக்ச, “இந்தியாவுக்கும் எங்களுக்கும் இடையிலான முக்கிய விவகாரமாக அமையக் கூடியது.

பாகிஸ்தான், சீனாவுடனான உறவே என நான் கருதுகின்றேன். எனினும், இந்திய அதிகாரிகள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தக் கூடிய எதனையும் நாங்கள் செய்யாவிட்டால் பிரச்சினைகள் எழாது” என்று மிகத் தெளிவாக கூறியிருக்கிறார்.

பாகிஸ்தான், சீனா விவகாரங்களால் தான் முரண்பாடுகள் ஏற்படக் கூடும் என்று நம்பும் கோட்டபாய ராஜபக்ச, அவ்வாறான நிலையில் இந்திய அதிகாரிகள் மத்தியில் சந்தேகம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டிருப்பது முக்கியமானது.

சீனக் கடற்படையின் நடமாட்டங்களும், சீனாவின் முதலீடுகளும், இந்தியாவுக்கு சந்தேகங்களை ஏற்படுத்தக் கூடியவை.

இவ்வாறான நிலையில் இந்திய அதிகாரிகளுக்கு சந்தேகம் வராதபடி, அவர் கையாளப் போகின்ற உத்தி என்ன என்பது கேள்விக்குரியதாகவே உள்ளது.

Latest Offers