அமெரிக்காவின் இரட்டை முகம்

Report Print Subathra in கட்டுரை

புதிய பாதுகாப்புச் செயலாளராக மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன நியமிக்கப்பட்டு கிட்டத்தட்ட ஒரு மாதம் கழித்து அவரை சந்தித்துப் பேசியிருக்கிறார் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா ரெப்லிட்ஸ்.

ஜனாதிபதியாக பதவியேற்றதும் கோட்டாபய ராஜபக்ஷ இரண்டு முக்கியமான நியமனங்களை வழங்கியிருந்தார். ஒன்று ஜனாதிபதியின் செயலாளருக்கான நியமனம். இரண்டாவது பாதுகாப்புச் செயலாளருக்கான நியமனம்.

தனது நம்பிக்கைக்குரிய ராணுவ கூட்டாளியான மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவை பாதுகாப்புச் செயலாளர் பதவிக்கு நியமித்திருந்தார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ.

ஒருவகையில் இது நன்றிக்கடன் செலுத்தலாகவும் இருக்கலாம் அல்லது முன்கூட்டியே போடப்பட்ட ஒப்பந்தத்தின் தொடர்ச்சியாகவும் இருக்கலாம்.

ஏனென்றால் மீண்டும் ராஜபக்சவினரை ஆட்சிக்கு கொண்டு வருவதற்காக கடுமையாக உழைத்தவர்களில் மிக முக்கியமானவராக இருந்தார் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன.

இறுதிக்கட்ட போரில் முக்கிய பங்கு வகித்த அவர் 2015 ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர் ராணுவத்திற்குள் முக்கியத்துவத்தை இழந்த நிலையில் ஓய்வு பெற்றுச் சென்றிருந்தார்.

2016 செப்டெம்பர் மாதம் அவர் ராணுவத்தில் இருந்து விலகிய சில நாட்களிலேயே “நந்திக்கடலுக்கான பாதை” என்ற நூலை வெளியிட்டார்.

அந்த நூல் தனியே போர் தொடர்பான பதிவுகளை வெளிப்படுத்தும் நோக்கத்தை மாத்திரம் கொண்டிருக்கவில்லை.

அதற்கும் அப்பால் ஒரு அரசியல் நோக்கமும் அதற்குள் ஒளிந்திருந்தது. அந்த நூல் வெளியீட்டு விழாவில் அப்போதைய அரசாங்க பிரதிநிதிகள் யாரும் அழைக்கப்படவில்லை.

மஹிந்த ராஜபக்சவும், கோட்டாபய ராஜபக்ஷவும் தான் முக்கிய விருந்தினர்களாக பங்கேற்றனர். அந்த நிகழ்வுக்குப் பின்னர் ஆங்கில நாளிதழ் ஒன்றில் உபுல் ஜோசப் பெர்ணான்டோ எழுதியிருந்த ஒரு பத்தியில், “நந்திக்கடலுக்கான பாதையா? அல்லது அதிகாரத்தை அடைவதற்கான பாதையா?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

மஹிந்த ராஜபக்ஷ அல்லது கோட்டாபய ராஜபக்ஷ மீண்டும் அதிகாரத்தை அடைவதற்காக மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவை பயன்படுத்தியுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

அதற்குப் பின்னர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவினால் “கோட்டாபய” என்ற நூல் ஒன்றும் எழுதி வெளியிடப்பட்டது.

அதுதவிர கோத்தபாய ராஜபக்ஷவை அதிகாரத்துக்கு கொண்டு வருவதற்காக உருவாக்கப்பட்ட எலிய மற்றும் வியத்கம அமைப்புகளின் செயற்பாடுகளிலும் மிகத் தீவிரமாக ஈடுபட்டிருந்தார் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன.

எனவேதான் அவருக்கு பாதுகாப்புச் செயலாளர் பதவி அளிக்கப்பட்டது நன்றிக்கடனாகவோ, முன்னர் காணப்பட்ட இணக்கப்பாட்டின் தொடர்ச்சியாக போயிருக்கலாம் என குறிப்பிடநேர்ந்தது.

பாதுகாப்பு செயலாளராக மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன நியமிக்கப்பட்ட பின்னர் அவரை முதலில் சந்தித்துப் பேசிய வெளிநாட்டு பிரதிநிதி ரஷ்யாவின், அசாதாரணமான மற்றும் செயற்படுத்துவதற்கான தூதுவர் யூரி மட்டேரி தான்.

இந்த சந்திப்பு நவம்பர் 25ஆம் திகதி இடம்பெற்றிருந்தது. அதையடுத்து பாகிஸ்தான் தூதரக பாதுகாப்பு ஆலோசகர் கர்ணல் சஜாட் அலி நவம்பர் 29ஆம் திகதி மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார்.

ஆனாலும் அவருடன், முக்கியமான இரண்டு நாடுகளான அமெரிக்கா, இந்தியா தரப்பிலான சந்திப்புகள் நடக்கவில்லை.

இந்திய தூதரக பாதுகாப்பு ஆலோசகர் கேப்டன் அசோக் ராவ் டிசம்பர் 13ஆம் திகதி சந்தித்திருந்த நிலையில்தான் அமெரிக்க தூதுவர் அலைனா ரெப்லிட்ஸ் கடந்த 17ஆம் திகதி பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்னவை சந்தித்திருக்கிறார்.

ஜனாதிபதி, பிரதமர், பாதுகாப்புச் செயலாளர், முப்படைகளின் தளபதிகள், வெளிவிவகார அமைச்சர் போன்ற பதவிகளுக்கு நியமிக்கப்படுபவர்களை வெளிநாட்டு தூதுவர்கள் அல்லது தூதரகத்தின் உயர் அதிகாரிகள் சந்தித்துப் பேசுவது மரபு.

வாழ்த்து கூறுவது, அறிமுகப்படுத்திக் கொள்வது, எதிர்கால உறவுகளை ஏற்படுத்தி வாய்ப்புகளுக்காக இத்தகைய சந்திப்புகள் நடக்கும்.

ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர் பதவிக்கு வருபவர்களை பெரும்பாலும் எல்லா நாடுகளின் தூதுவர்களும் மரியாதை நிமித்தமாக சந்திப்பார்கள்.

பாதுகாப்புச் செயலாளர் மற்றும் முப்படைத் தளபதிகளை முக்கியமான நாடுகளின் தூதுவர்கள் அல்லது பாதுகாப்பு ஆலோசகர்கள் சந்திப்பது மரபு.

முக்கியமாக பாதுகாப்பு ரீதியான உறவுகள் உடன்பாடுகளை கொண்ட நாடுகளின் பிரதிநிதிகள் இவ்வாறான சந்திப்புகளை நடத்துவது வழமை.

புதிய அரசாங்கத்தின் பாதுகாப்புச் செயலாளராக மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன நியமிக்கப்பட்ட பின்னர் அவருடன் அமெரிக்க தூதுவர் அல்லது பாதுகாப்பு ஆலோசகர் சந்திக்காமல் இருந்தது ராஜதந்திர வட்டாரங்களில் கூர்மையாக அவதானிக்கப்பட்டு வந்தது.

பாதுகாப்பு செயலாளராக நியமிக்கப்பட்ட மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவும் சரி, அமெரிக்க தூதுவரும் சரி இறுக்கமான நிகழ்ச்சி நிரலுடன் இயங்குபவர்களாக இருந்தாலும் இவர்களின் சந்திப்பு கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்கு பின்னரே இடம்பெற்றிருக்கிறது.

இது திட்டமிட்டு இழுத்தடிக்கப்பட்ட தாமதமா அல்லது இயல்பானதா என்பது அவர்களுக்கே வெளிச்சம். எவ்வாறாயினும் போர்க்காலத்தில் இடம்பெற்ற மீறல்களுக்கு பொறுப்புக்கூற வேண்டிய தளபதிகளாக குற்றம்சாட்டப்படுபவர்களில் மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவும் ஒருவர்.

அவருக்கு எதிராக மனித உரிமை அமைப்புகள் போர்க் குற்றச்சாட்டுகளை முன் வைத்திருக்கின்றன. இவர் முன்னர் அமெரிக்காவுக்கு செல்ல முயன்ற போது விசா வழங்க மறுப்பும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

போர்கால மீறல்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும், மீறல்களுக்கு பொறுப்புக்கூற வேண்டும் என்று அமெரிக்கா தொடர்ச்சியாகவே வலியுறுத்தி வருகின்ற நிலையில் போர்க் காலத்தில் இடம்பெற்ற சம்பவங்களுக்கு பொறுப்பானவர் என்று குற்றம் சாட்டப்பட்ட ஒருவருடன் இராஜதந்திர தொடர்புகளை வைத்திருக்க வேண்டிய நிலை அமெரிக்காவுக்கு ஏற்பட்டிருக்கிறது.

போர்க்கால மீறல் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்று ஐநா அறிக்கைகளில் குற்றம்சாட்டப்பட்ட லெப். ஜெனரல் சவேந்திர சில்வா இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்ட போது அமெரிக்காவிற்கு எதிர்ப்பை வெளியிட்டது.

இந்த நியமனத்தினால் இலங்கை இராணுவத்துடனான பாதுகாப்பு உறவுகள் பாதிக்கப்படக்கூடும் என்றும் அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் எச்சரிக்கை செய்திருந்தது.

ஆனால் அந்த எச்சரிக்கையை மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை. ராணுவத் தளபதியின் நியமனம் உள்நாட்டு விவகாரம், இலங்கையின் இறைமை, ஜனாதிபதியின் முடிவெடுக்கும் உரிமையுடன் தொடர்புடையது என்று பதில் அளித்திருந்தது.

ஆனால் லெப். ஜெனரல் சவேந்திர சில்வா ராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டு கிட்டத்தட்ட 4 மாதங்களுக்கு மேலாகியும் அவரை இன்னமும் அமெரிக்கத் தூதுவரோ, அமெரிக்கப் பாதுகாப்பு ஆலோசகரோ, ஏனைய அதிகாரிகளோ அதிகாரப்பூர்வமாக சந்திக்கவில்லை.

லெப். ஜெனரல் சவேந்திர சில்வா இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்ட போது அதற்கு எதிர்ப்பை வெளிப்படுத்தி ராணுவ உறவுகள் பாதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா அதே போரில் படைகளை வழிநடத்திய குற்றச்சாட்டுகளுக்கும் உள்ளாகிய மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன கடந்த மாதம் பாதுகாப்புச் செயலாளராக நியமிக்கப்பட்ட போது இந்த எதிர்ப்பையும் வெளியிட்டு இருக்கவில்லை.

அவரது நியமனம் தொடர்பாக அமெரிக்கா எந்த கருத்தையும் வெளியிடாமல் இருப்பதற்கு பல காரணங்கள் இருக்கலாம். லெப். ஜெனரல் சவேந்திர சில்வாவை இராணுவத் தளபதியாக நியமித்தது மைத்திரிபால சிறிசேன அரசாங்கம். அந்த அரசாங்கம் தமது பேச்சை கேட்கும் என்ற நம்பிக்கை அமெரிக்காவுக்கு இருந்தது.

ஆனால் மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவை பாதுகாப்புச் செயலாளராக நியமித்துள்ள தற்போதைய அரசாங்கம் அமெரிக்காவின் பேச்சை கேட்கக் கூடியது அல்ல.

ஏற்கனவே இந்த அரசாங்கத்துக்கும், அமெரிக்காவுக்கும் இடையில் பல விடயங்களில் முரண்பாடுகள், இழுபறிகள் நீடித்து வருகின்றன. இவ்வாறான நிலையில்

தற்போதைய அரசாங்கத்தின் நியமனம் அல்லது முடிவுகள் குறித்து கருத்து வெளியிடுவது வீண்செயல் என்று அமெரிக்கா ஒதுங்கியிருக்கலாம். அதேவேளை இலங்கையுடனான பாதுகாப்பு உறவுகளை அமெரிக்கா முக்கியமானதாக கருகிறது.

அந்த உறவுகளை தொடருவதற்கு பாதுகாப்பு செயலாளராக இருப்பவருடன் இராஜதந்திர தொடர்புகளை வைத்துக்கொள்ள வேண்டியது அமெரிக்காவுக்கு தவிர்க்க முடியாத நிர்ப்பந்தம் தான்.

இலங்கை இராணுவத்துக்கும், அமெரிக்காவுக்கும் உறவுகள் குறைவு. ஆனால் கடற்படைக்கும், அமெரிக்காவுக்குமான உறவுகள் பல நெருக்கடியான சந்தர்ப்பங்களிலும் நீடித்திருந்தது.

இலங்கை கடற்படையை வலுப்படுத்துவதும் அதனுடன் இணைந்து செயற்படுவதுடன் - இந்தியப் பெருங்கடல் குறித்த அமெரிக்காவின் மூலோபாயத்தில் முக்கியமானது. ஆனால் இராணுவத்துடன் அவ்வாறு இணைந்திருக்க வேண்டிய தேவை அமெரிக்காவுக்கு குறைவு.

எனவே இராணுவத்துடனான உறவுகளை மட்டுப்படுத்தினாலும் கடற்படையுடனான உறவுகளை தொடர்ந்து பேணவே அமெரிக்கா நினைக்கிறது.

ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர் கடந்த இரண்டாம் திகதி தொடக்கம் 14ஆம் திகதி வரை திருகோணமலையில் கடற்படையின் அதிவேக தாக்குதல் அணி, விசேட படகு அணி ஆகியவற்றைச் சேர்ந்த 35 கடற்படையினருக்கு அமெரிக்க கடற்படையின் எட்டு அதிகாரிக்ள 12 நாட்கள் பயிற்சிகளை அளித்துள்ளனர்.

இது போன்ற பயிற்சிகளை அமெரிக்கா தொடரவே விரும்புகிறது. அதற்கு பாதுகாப்பு செயலாளருடன் உறவுகளை வைத்திருக்க வேண்டியது தவிர்க்க முடியாது.

இலங்கை போன்ற நாடுகளில் பொறுப்புக்கூறல், மனித உரிமைகள் சார்ந்த சிக்கல்களுக்கு மத்தியிலும் அமெரிக்கா தனது நலன்களை விட்டுக் கொடுக்காது. அதன் நலன்களை உறுதிப்படுத்திக் கொண்ட பின்னர் தான் அடுத்த விடயங்களை கையாளும்.

அத்தகையதொரு நிலைப்பாட்டைத் தான் புதிய பாதுகாப்புச் செயலாளருக்கும், அமெரிக்க தூதுவருக்கும் இடையிலான சந்திப்பு வெளிப்படுத்தி நிற்கிறது.