விக்னேஸ்வரனுடன் மல்லுக்கட்டு

Report Print Habil in கட்டுரை

இலங்கையை ஒரு பௌத்த நாடு என்று உரிமை கோருகின்ற தகைமை யாருக்கும் கிடையாது என்ற வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் கருத்து தென்னிலங்கையில் பெரும் புயலை கிளப்பி இருக்கிறது.

யாழ்ப்பாணத்துக்கு பயணம் மேற்கொண்டிருந்த புதிய பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன இலங்கை ஒரு பௌத்த நாடு என்று கூறியிருந்தார்.

அதற்கு முன்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் அதே விதமாகவே கூறியிருந்தார்.

இவற்றை மறுக்கும் வகையில் தனது வழக்கமான வாராந்த கேள்வி-பதில் அறிக்கையில் வரலாற்றுத் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு வரலாற்றுத் திரிபுகளை அம்பலப்படுத்தி இருந்தார் சி.வி விக்னேஸ்வரன்.

அதில் அவர் இலங்கைத் தீவின் ஆதிக் குடிகள் தமிழ் சைவர்களே என்றும் சிங்கள மொழி இலங்கையில் உருவாக முன்னரே தமிழ் பௌத்தம் இருந்தது என்றும் பாளி மொழியில் எழுதப்பட்ட புனை கதைகளை அடிப்படையாகக் கொண்டு, மகாவம்சம் வரலாற்றை திரித்து வைத்துள்ளது என்றும் கூறியிருந்தார்.

அவரது இந்தக் கருத்து அரசாங்க தரப்பில் உள்ளவர்களுக்கும் சிங்கள-பௌத்த தேசியவாத சக்திகளுக்கும் அஸ்கிரிய பீடம் போன்ற பௌத்தப் இடங்களுக்கும் கொதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

விக்னேஸ்வரனின் இந்தக் கருத்து வெளியானதுமே அவர் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த முனைகிறார், பௌத்த மதத்துக்கு எதிரான கருத்துக்களை விதைக்கிறார் என கடந்த காலங்களில் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுக்கு இலக்காகிய சிங்கள பௌத்த அமைப்பு ஒன்று பொலிஸ் தலைமையகம் மற்றும் குற்ற விசாரணை திணைக்களத்தில் முறைப்பாடு செய்து இருந்தது.

அதற்குப் பிறகு பௌத்தர்களுக்கும் இந்துக்களுக்கும் இடையே மோதலை தூண்டிவிட முற்படுகிறார் விக்னேஸ்வரன் என்று அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க குற்றச்சாட்டை சுமத்தியிருந்தார்.

வேறு பல அமைச்சர்களும் சிங்கள பௌத்த அடிப்படைவாத சக்திகளும் விக்னேஸ்வரனின் கருத்துக்கு கண்டனங்களையும் எதிர்ப்பையும் வெளியிட்டு வருகின்றனர்.

இந்த விடயம் குறித்து விக்னேஸ்வரனின் சம்பந்தியான வாசுதேவ நாணயக்காரவிடம் செய்தியாளர் ஒருவர் கேட்டபோது விக்னேஸ்வரனின் மகனும் தனது மகளும் தான் திருமணம் செய்திருக்கின்றனரே தவிர தான் அவருடன் அரசியல் திருமணம் செய்யவில்லை என்று கூறியிருக்கின்றார்.

அஸ்கிரிய பீடத்தில் முக்கியமான பௌத்த பிக்குகளில் ஒருவரான நாரங்கனாவே ஆனந்த தேரர், விக்னேஸ்வரன் மகாவம்ச வரலாற்றை இழிவுபடுத்தும் வகையில் கருத்துக்களை முன்வைத்திருக்கின்றார். இதனை நாங்கள் தேசத்துரோக கருத்தாக கருதுகின்றோம். சிங்கள பௌத்த மக்களக்கு எதிராக சிறுபான்மை மக்களை தூண்டிவிடும் வகையில் விக்னேஸ்வரன் செயற்பட்டு வருகின்றார். அவருக்கு எதிராக அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இவ்வாறாக தென்னிலங்கை அரசியலில் இப்போது சிங்கள பௌத்த தேசியவாத சிந்தனையாளர்களின் கோபம் முழுதும் விக்னேஸ்வரனுக்கு எதிராக திரும்பியிருக்கின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையே தமது பிரதான எதிரியாக கருதியிருந்த சிங்கள பௌத்த தேசியவாத தரப்புக்கள் கடந்த வாரத்தில் தமது கோபத்தை விக்னேஸ்வரன் மீது திருப்பியிருக்கின்றார்கள்.

மகாவம்ச வரலாறு தொடர்பாக கருத்துக்களை வெளியிடுவது தேசத்துரோகம் என்று குற்றம் சாட்டப்படும் அளவுக்கு சென்றிருக்கின்றது நிலைமை.

தேசத்துரோகம் என்பது மிகவும் பாரதூரமான ஒரு குற்றச்சாட்டு. பாகிஸ்தானில் முன்னாள் இராணுவ ஆட்சியாளர் ஜெனரல் பர்வேஷ் முஷாரப்புக்கு எதிராக பாகிஸ்தான் நீதிமன்றம் தேசத்துரோக வழக்கில் மரண தண்டனை விதித்துள்ள சூழலில்தான் விக்னேஸ்வரனுக்கு எதிராக தேசத்துரோக குற்றச்சாட்டை அஸ்கிரிய பீடம் முன்வைத்திருக்கின்றது.

இலங்கையில் பௌத்த மதம் நாட்டின் முதன்மையான மதமாக கூறப்பட்டுள்ளதே தவிர குறித்த நூல் நாட்டின் தேசிய நூலாகவோ அதுவே வேதமாகவோ பிரகடனம் செய்யப்பட்டிருக்கவில்லை.

அவ்வாறு பிரகடனம் செய்யப்பட்ட ஒன்றை இழிவுபடுத்துவது தான் தேசத்துரோகமாக கருத முடியும்.

அதைவிட வடக்கின் முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஒன்றும் புதிய விடயத்தை கூறிவிடவில்லை.

அவர் மகாவம்சத்தின் புரட்டுகளையும் இலங்கையில் தமிழரின் தொன்மையையும் சிங்கள இனம் தோன்றிய வரலாறு பிற்பட்டது என்பதையும் தமிழ் பௌத்தம் அதற்கு முந்தியது என்பதையும் பல்வேறு அறிக்கைகளில் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

பல மேடைகளில் அது பற்றியெல்லாம் உரையாற்றியிருக்கின்றார். அப்போதெல்லாம் யாரும் அதனை மறுதலிக்க முன்வரவில்லை. அவருக்கு எதிராக பொலிஸ் தலைமையகத்திலோ, சி.ஐ.டியிலோ முறைப்பாட்டையும் செய்ய வில்லை.

அமைச்சர்களும் பௌத்த பீடங்களும் சிங்கள பௌத்த பீடங்களும் சிங்கள பௌத்த தேசியவாத அமைப்புகளும் அவருக்கு எதிராக கிளர்ந்தெழவில்லை. அவர் மீது குற்றச்சாட்டுகளை முன்வைக்கவும் இல்லை.

திடீரென இப்போது, அதுவும் ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர் தான் இவ்வாறான ஒரு நிலை தோற்றம் பெற்றிருக்கின்றது.

ஆட்சி மாற்றத்துக்குப் பிந்திய நிலைமையில் ஊடக சுதந்திரம் பாதுகாக்கப்படும், கருத்து வெளிப்பாட்டு உரிமைக்கு பாதிப்பு வராது என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச திரும்பத் திரும்ப கூறிக்கொண்டிருந்தாலும் நிலமைகள் என்னவோ அதற்கு மாறானவையாகவே சென்று கொண்டிருக்கின்றன.

பொதுத் தேர்தலுக்குப் பின்னர் ஊடகங்களின் கழுத்து நெரிக்கப்படும் என்று ஐ.தேகவின் முன்னாள் அமைச்சர் ஒருவர் பகிரங்கமாகவே எச்சரிக்கை செய்திருந்தார்.

கடந்த ஒரு மாதத்தில் விக்னேஸ்வரன் போன்று கருத்துக்களை வெளியிட்டவர்கள் பலர் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகின்றார்கள். அவர்களைக் கைது செய்ய வேண்டும், சிறையில் அடைக்க வேண்டும் என்ற அழுத்தங்கள் கொடுக்கப்படுகின்றன.

கடந்த அரசாங்கத்தின் காலத்தில் இது போன்ற நிலை இருந்ததில்லை. விக்னேஸ்வரன் வெளியிட்ட கருத்துக்களுக்கு எதிராக யாரும் பொலிஸில் முறைப்பாடு செய்யும் நிலையும் இருக்கவில்லை.

இப்போது தான் மோதலைத் தூண்ட முனைகிறார், கலவரத்தை ஏற்படுத்தப் பார்க்கின்றார் என்று அவர் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. சர்வதேச சதித்திட்டத்தின் ஒரு பங்காளி போல சிங்கள பௌத்த தேசியவாதிகள் விக்னேஸ்வரனை சிங்கள மக்கள் முன் அறிமுகப்படுத்த முனைகிறார்கள்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் தேசியவாத ஆதிக்கம் பெருகத் தொடங்கியிருக்கின்றது. அதன் விளைவுகளில் ஒன்று தான் இத்தகைய மிரட்டல்கள் எனலாம்.

சிங்கள பௌத்த தேசியவாத ஆதிக்கம் அரசியலிலும் சமூகத்திலும் அதிகரிக்கும் போது அது ஏனைய இனங்கள் மதங்களுக்கு பெரும் அச்சுறுத்தலாகவே மாறும்.

அரசாங்கத்தில் உள்ளவர்களின் கருத்துக்களை மறுப்பவர்கள் அனைவரும் துரோகிகளாக அடையாளப்படுத்தப்படுகிறார்கள். தேசத்துரோகம் புரிந்தவர்களாக பார்க்கப்படுகிறார்கள்.

இந்த நிலையானது எதிர்காலத்தில் யாரும் வாய் திறக்க முடியாத ஒரு நிலையை உருவாக்கும் சூழ்ச்சியின் அங்கமாக இருக்குமோ என்றே சந்தேகம் கொள்ள வேண்டியிருக்கின்றது.

அதேவேளை, விக்னேஸ்வரனுக்கு எதிராக கிளப்பி விடப்பட்டுள்ள சிங்கள பௌத்த தேசியவாத உணர்வுகள் அரசியல் ரீதியாக அவருக்குப் பாதிப்பை ஏற்படுத்தி விடப் போவதில்லை என்பது தான் உண்மை.

கோட்டாபய ராஜபக்சவை சிங்கள பௌத்த தேசியவாதம் எவ்வாறு ஆட்சியில் அமர வைத்ததோ அதுபோலவே விக்னேஸ்வரனுக்கு எதிராக கிளம்பக் கூடிய சிங்கள பௌத்த தேசியவாத உணர்வுகள் தமிழ்த் தேசியவாதத்தைத் தான் தலைதூக்க வைக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

தமிழ்த் தேசியவாதம் இப்போது விக்னேஸ்வரனுக்கு முற்றிலும் சாதகமான நிலையில் இல்லை. எனினும் சிங்கள பௌத்த தேசியவாதம் அவருக்கு எதிராக கக்கக் கூடிய இனவாதக் கனல்கள் விக்னேஸ்வரனுக்கு சாதகமான திருப்பத்தை ஏற்படுத்தவும் காரணமாக அமைந்து விடும்.

அவ்வாறானதொரு நிலைக்குக் கொண்டு செல்வது தான் சிங்கள பௌத்த தேசியவாத சக்திகளின் எதிர்பார்ப்பாக இருக்குமோ என்றும் சந்தேகம் கொள்ள வேண்டியிருக்கின்றது.

சிங்கள மக்களை எப்போதும் உசுப்பேற்றி வைத்திருப்பதன் மூலம்தான் சிங்கள பௌத்த தேசியவாதிகளினால் ஆட்சியில் நிலைத்திருக்க முடியும்.

அவ்வாறு சிங்கள பௌத்த தேசியவாதத்தை உசுப்பேற்றுவதற்கும் உயிர்ப்பு நிலையில் வைத்திருப்பதற்கும் விக்னேஸ்வரன் போன்றவர்களுடன் சீண்டிக் கொண்டிருப்பதே அவர்களுக்கு முக்கியமான தேவை என்பதை மறந்து விடக்கூடாது.