தமிழ் பேசும் மக்களின் நாடாளுமன்ற இருப்புக்கும், ஆசனத்திற்கும் வருகின்றது ஆப்பு?

Report Print M.M.Nilamdeen M.M.Nilamdeen in கட்டுரை

இலங்கை வாழ் சிறுபான்மை முஸ்லிம்கள், தமிழர்கள், மலையக தமிழர்கள் ஆகியோர் இதுவரை காலமும் அனுபவித்து வந்த பங்குபற்றுவதற்கும், நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக் கொள்வதற்கும் தனது அரசியல் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்குமான உரிமையையும், வாய்ப்புக்களையும் இல்லாது செய்வதற்காக பௌத்த இராஜ்ஜிய சிந்தனையாளர்களின் நீண்டகால அபிலாசைகளில் ஒன்றான மற்றுமொரு சதி அரங்கேற்றப்பட்டுள்ளது?

இவ்வாறு கட்டுரையாளர் எம்.எம்.நிலாம்டீன் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். அக்கட்டுரையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நாடாளுமன்ற பிரதித்துவத்திற்கான 5% எல்லைப் புள்ளி 12 .5 % ஆக உயரத்தப்படுவதன் ஊடாக சிறுபான்மை சமூகத்தின் பிரதிநித்துவத்தினை இல்லாது செய்வதற்கான பேரினவாத பின்னனியில் அதற்கான வர்த்தமானிப் பத்திரிகை 2019.12.30ஆம் திகதி விஜயதாச ராஜபக்சவினால் வெளியிடப்பட்ட நிலையில் குறித்த திருத்தச்சட்ட மூலம் 21ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

ஏலவே 12.5% வீதமாக காணப்பட்ட எல்லைப்புள்ளியால் சிறுபான்மை சமூகங்களின் பிரதிநிதித்துவம் மறுக்கப்பட்ட நிலையில் இதன் பாதிப்பையும், எமது பிரதிநிதித்துவம் ஒடுக்கப்படுவதனையும், உணர்ந்த முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அஸ்ரப், தவிசாளர் சேகு இஸ்ஸத்தீன் உள்ளிட்டோர் அன்றைய ஜனாதிபதி ஆர்.பிரேமதாசவிடம் தமது பேரம்பேசும் சக்தியூடாக பெற்றுக்கொண்ட மாபெரும் சாதனையே இவ் 5% எல்லைப் புள்ளியாகும்.

அன்றை அரசியல் தலைமைகளின் போராட்டத்தினூடாகப் பெற்றுக் கொண்ட வெற்றியையடுத்தே சிறுபான்மை சமூகத்தின் வாக்குகளின் தாப்பரியமும் அதனூடான நாடாளுமன்ற பிரதிநித்துவமும் அவர்களின் குரல்களும் இன்று வரை உறுதிப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இவ் எல்லைப்புள்ளியை 12.5% ஆக மாற்றுவதற்கான திருத்தச் சட்டமூலமானது நிறைவேற்றப்படும் நிலையில் இந்நாட்டின் சிறுபான்மை சமூகம் அரசியல், சமூக, பொருளாதார, கலாசார ரீதியாக முடக்கப்பட்டு ஒட்டு மொத்தமாக ஓரங்கட்டப்படும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

யாவற்றிற்கும் மேலாக இத்திருத்தச் சட்டடமூலமானது சிறுபான்மை குறித்த நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்திற்கப்பால் நேரடியாக சிறுபான்மை சமூகங்களின் இருப்போடு சம்மந்தப்பட்டுள்ளது.

மட்டுமல்லாமல் இத்திருத்தச் சட்டமூலம் இன்றைய காலச்சூழலில் இந்தியாவின் CAA, NRC, NPR ஆகிய சட்டங்களுக்கு சமனானதாக ஆழமாக நோக்கப்பட வேண்டும்.

இச்சட்டமூலம் அமுல்படுத்தப்படுவதற்காக நாடாளுமன்றில் 2/3 பெரும்பான்மைப் பலத்தைப் பெறுவது அவசியமாகும். ஆனால் தற்போதைய ஆளும் கட்சியிலுள்ள சிறுபான்மை பங்காளிக் கட்சிகள் இந்த விடயத்தில் சுதந்திரமாக இயங்குதற்கான வாய்ப்பு கேள்விக்குறியாகவே உள்ளது.

மாறாக UNP, SLFP போன்ற கட்சிகள் பொதுத்தேர்தலை நோக்கி பௌத்த வாக்குகளை கவரும் நோக்கில் செயற்படும் நிலையில் அவர்களது ஆதரவும் கேள்விக்குறியே.

எனவே தெளிவாக முற்றிலும் பௌத்த இராஜ்ஜிய சிந்தனையினூடாக தொடர்ந்த அழுத்தங்களும் சிறுபான்மை பிரதிநிதித்துவமும் எமது இருப்பும் நேரடியாக இலக்கு வைக்கப்பட்டுள்ளதால் எமது கட்சியரசியலுக்கும், தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கும் அப்பால் சகல சிறுபான்மைக் கட்சிகளும் குறிப்பாக நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்யும்.

SLMC, ACMC, TNA, JVP மலையக் கட்சிகளும் ஏனைய சிறுபான்மைக் கட்சிகளும் சிறுபான்மை மக்களும் இதற்கு ஆதரவாக குரல்கொடுக்கும் பெரும்பான்மை புத்திஜீவிகளும் ஒருமித்துச் செயற்பட்டு 2/3 பெரும்பான்மை பலம் கிடைக்கப்பெறாமல் செய்து இத்திருத்தச் சட்டமூலத்தை தோல்வி அடையச் செய்வதே எமது இருப்பினை‌ உறுதிப்படுத்தும்.

முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்புரிமையை பறிக்கும் சதியே வெட்டுப் புள்ளி அதிகரிப்பு...!

விகிதாசார பிரதிநிதித்துவத்தின் கீழ், நாடாளுமன்றத் தேர்தல் ஒன்றில், உறுப்பினர் ஒருவரை பெறுவதற்கான தகுதி பெறுவதற்காக ஆகக்குறைந்தது குறித்த மாவட்டத்தில் அளிக்கப்பட்ட மொத்த செல்லுபடியான வாக்குகளில் குறைந்தது 12.5% இனை அந்த உறுப்பினர் பெறவேண்டும் என்பதே அரசியல் அமைப்பாக இருந்தது.

ஆனால், முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் மர்ஹூம் அஷ்ரப்பின் அரசியல் ஞானத்தின் மூலம், முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசவின் காலத்தில் தகுந்த தருணத்தில் பேரம் பேசி அவரை வெற்றிபெறச் செய்து 1989ஆம் ஆண்டு அந்த வெட்டுப்புள்ளி 5% ஆகக் குறைக்கப்பட்டு சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது.

இதன்படியே ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாவதற்கு அளிக்கப்படுகின்ற செல்லுபடியான வாக்குகளில் குறைந்தது 5% பெறவேண்டும் என்பதே தற்போதைய சட்டம்.

இதனை பெற்றுத்தந்தது மறைந்த தலைவர் அஷ்ரப்பின் வரலாற்றுச் சாதனைகளில் ஒன்று. இதனால் சிறுபான்மை கட்சிகளும் ஜே.வி.பி போன்ற சிறிய கட்சிகளும் அதிக அளவிலான நாடாளுமன்ற உறுப்பினர்களை பெற்று வந்தனர் என்பது வரலாறு.

இந்த வாய்ப்பினை இல்லாமல் செய்யும் நோக்கத்தோடு டிசம்பர் 30 2019ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானியின் பிரகாரம் இந்த வெட்டுப்புள்ளியை மீண்டும் 12.5%ஆக ஆக்குவதற்கான சட்டமூலம் நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்‌சவினால் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.

இந்த முயற்சி சிறுபான்மையினரையும், சிறுகட்சிகளின் உறுப்பினர்களையும் நாடாளுமன்றம் செல்ல முடியாமல் தடுப்பதற்கான ஒரு சதியாகவே நாம் நோக்க வேண்டியுள்ளது.

இம்முயற்சியானது பல கட்சி ஜனநாயகத்திற்கு குந்தகமான, பங்குபற்றுதலுக்கும் பிரதிநிதித்துவத்திற்குமான உரிமையை பாதிக்கின்ற ஒரு விடயமாகும் என்பதும் தெட்டத்தெளிவானது.

இதனால் இலங்கை முஸ்லிம் சமூகம் நாடாளுமன்ற உறுப்புரிமை எண்ணிக்கையில் வீழ்ச்சியை சந்திக்கும் என்பது கசப்பான உண்மையாகும்.

எனவே கொண்டுவரப்படும் இந்த சட்டமூலத்தை தடுப்பதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள வேண்டும் எப்படி என்பதே இன்றைய அரசியல் சூழலில் பாரிய சவாலாக அமைகிறது.