பொருத்தமான தலைமை இருந்தால் தமிழீழம் சாத்தியப்படுவதற்கேற்ற சர்வதேச சூழல் உண்டு

Report Print M.Thirunavukkarasu in கட்டுரை
1376Shares

முள்ளிவாய்க்கால் யுத்தம் முடிவடைந்ததோடு ஒரு புதிய சர்வதேச அரசியல் ஒழுங்கு தோன்றியுள்ளது. 1990ஆம் ஆண்டுடன் பனிப்போர் யுகம் முடிந்து பனிப்போரின் பின்னான யுகம் தோன்றியது.

2001ஆம் ஆண்டு அமெரிக்க இரட்டைக் கோபுரங்கள் மீதான பின்லேடனின் விமானத் தாக்குதல்களோடு பனிப்போரின் பின்னான யுகம் தோன்றியது. முள்ளிவாய்க்கால் யுத்தம் முடிவடைந்ததோடு இந்தோ- பசுபிக் பிராந்திய கொள்கையின் மூலம் மேலும் புதிய சர்வதேச ஒழுங்கு தோன்றியது.

இதனை இந்தோ - பசிபிக் சர்வதேச ஒழுங்கு என்று கூறலாம். இதனை ஆழமாக புரிந்து கொள்ளாமல் ஈழத் தமிழர்களின் அரசியல் தலைவிதியை நிர்ணயிக்க முடியாது.

தேசிய விடுதலைப் போராட்டம் என்பது எப்போதும் சர்வதேச உறவுகளோடும் சர்வதேசப் பிரச்சினைகளோடும் சம்பந்தப்பட்டதாகும். ஆதலால் தேசிய இனப் பிரச்சினை என்பது ஒரு சர்வதேசப் பிரச்சினை என்ற கண்ணோட்டம் மிகவும் அத்தியாவசியமானது.

சர்வதேச அரசியல் ஒழுங்கில் ஏற்பட்ட மாற்றத்திற்கு முள்ளிவாய்க்கால் யுத்தம் ஓர் அச்சாணியாய் அமைந்தது என்பதை புரிந்துகொண்டால் தமிழீழப் பிரச்சினையில் சர்வதேச முக்கியத்துவம் துலாம் பரமாக தெரியவரும்.

முதலாம் இரண்டாம் யுத்தங்களின் போதெல்லாம் அமெரிக்கக் கண்டங்களில் அமெரிக்க தேசம் பாதுகாப்பாக இருந்தது. பனிப்போர் காலத்திலும் மேற்படி அமெரிக்கக் கண்டங்களில் அமெரிக்கா பாதுகாப்பாகவே இருந்தது.

ஆனால் தனிப்பொருள் முடிந்ததன் பின்னான காலத்தில் அமெரிக்காவின் இருதயம் என வர்ணிக்கப்படக் கூடிய வர்த்தக கேந்திர நிலையமான இரட்டைக் கோபுரங்கள் மீது பின்லேடன் வெற்றிகரமாக தாக்குதல்களை மேற்கொண்டு அந்த இரட்டை கோபுரங்களை தகர்த்து எறிந்தார்.

ஆனாலும் அந்தத் தாக்குதல்கள் அமெரிக்காவுக்கு உள்ளிருந்தே வெடித்ததினால் அது தன் இரு கண்டங்களைக் கடந்த ஒரு பாதுகாப்பு வலயத்தை உருவாக்க வேண்டி இருக்கவில்லை. மாறாக சர்வதேச பயங்கரவாத எதிர்ப்பு என்ற ஒரு வியூகம் அதற்கு போதுமாக இருந்தது.

சர்வதேச பயங்கரவாத எதிர்ப்பு என்ற உலகளாவிய வியூகம் மத்திய கிழக்கு வளைகுடா நாடுகளை மையமாகக் கொண்டு காணப்பட்டது. இதற்குள் ஆப்கானிஸ்தானும் இழுத்து விடப்பட்டிருந்தது.

ஆதலால் பனிப்போரின் பின் பின்னான யுகத்தில் அமெரிக்காவின் முழுக்கவனமும் மேற்படி மத்திய கிழக்கு வளைகுடா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய இஸ்லாமிய நாடுகளை கொண்ட ஒரு பரந்த தொடர் பிராந்தியத்தை மையமாகக் கொண்டு காணப்பட்டது.

எனவே, பனிப்போரின் பின்னான காலம் என்று சொல்லப்படுகின்ற 2001ஆம் ஆண்டிலிருந்து 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் யுத்தம் நிகழ்ந்து கொண்டிருந்ததான அந்த காலப்பகுதியில் அமெரிக்காவின் முழுக் கவனமும் மேற்படி ஆப்கானிஸ்தான் மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா நாடுகளையும் மையமாகக் கொண்டு அமைந்திருந்தது.

இக்காலப்பகுதியில் சீனா தனது பட்டுப்பாதை வியூகத்துக்கான One Belt one Road (Belt and Road Initiative) அச்சாணியாக இலங்கைத் தீவை ஆக்கிக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டது. 2005ஆம் ஆண்டு ராஜபக்சக்கள் பதவிக்குவர உதவியதுடன் அவர்களைத் தொடர்ந்து பதவியில் பாதுகாப்பதற்காகவும் முள்ளிவாய்க்கால் யுத்தத்தில் ராஜபக்சக்களுக்கு சீனா தோளோடு தோள்கொடுத்து உதவியது.

வீட்டோ அதிகார பலத்தைக் கொண்ட சீனாவின் ஆதரவு யுத்த சூழலில் ராஜபக்சக்களுக்கு வலக்கரமாய் அமைந்தது. அரசியல், இராஜதந்திரம், இராணுவம், புலனாய்வு, நிதி என சீனாவின் பல்பரிமாண உதவிகளுடன் ராஜபக்சக்கள் யுத்தத்தில் வெற்றி பெற்றதும் சீனாவின் மீது ராஜபக்சக்கள் அதிகூடிய விசுவாசத்துடன் செயற்படும் நிலை பெரிதும் தோன்றியது.

உலக அரங்கில் சீனா வைத்தான் ராஜபக்சக்கள் உண்மையான விசுவாசமிக்க நண்பனாகக் கருதினர். இதனால் இந்துமா கடலில் மேற்படி சீனாவின் பட்டுப்பாதை வியூகத்துக்கு பொருத்தமான அச்சாணியாக இலங்கையை ஆக்கிக் கொள்வதற்கு ஏதுவான வகையில் சீனாவிற்கு ராஜபக்சக்கள் கை கொடுக்க தொடங்கினர்.

இதனைக் கண்டு மேற்குலகமும் இந்தியாவும் சீற்றம் அடைந்தன. அமெரிக்காவின் பிரதான கவனம் மேற்படி ஆப்கானிஸ்தான் மத்திய கிழக்கு வளைகுடா நாடுகளுக்குள் புதையுண்டதாக அமைந்திருக்க அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி சீனா இலங்கையை மையமாகக் கொண்ட இந்துமா கடல் ஆதிக்கத்திற்கான வியூகத்தை வெற்றிகரமாக அமைத்துக் கொண்டது.

1976ஆம் ஆண்டு மாசேதுங்கின் மரணத்தைத் தொடர்ந்து பதவிக்குவந்த டெங் ஸியாஓ பிங் நால்வகை நவீனமயமாக்க கொள்கையை முன்வைத்து சீனாவை முற்றிலும் நவீன மயமாக்குவதில் ஈடுபட்டார். சுமாராக கால் நூற்றாண்டு காலத்திற்குள் சீனா ஒரு புதிய நவீன தேசமாக உலகில் எழுச்சி பெற்றது. உற்பத்தி சக்திகள் பெருகின.

பண்ட உற்பத்தி அதிகரித்தது. தொழில்நுட்பம் பெரிதும் வளர்ந்தது. இதனால் சீனா பண்ட வர்த்தகத்திற்காகவும் மூலப்பொருள் தேடலுக்காகவும் உலகளாவிய பொருளாதார, இராணுவ, ஏகாதிபத்திய அரசியலில் ஈடுபட வேண்டியது தவிர்க்க முடியாததாய் அமைந்தது.

அத்தகைய ஏகாதிபத்திய வியூகத்துக்கான முதுகெலும்பாகவே பட்டுப்பாதை - One Road one Belt - என்ற சமுத்திரங்களையும், கண்டங்களையும் இணைக்கும் ஒரு உலகளாவிய கொள்கையை வகுத்துக் கொண்டது.

ஐரோப்பிய வல்லரசுகளிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கான ஒரு பாதுகாப்பு கொள்கையாகவே 1823ஆம் ஆண்டு அமெரிக்கா மொன்றோ கோட்பாட்டை வகுத்துக் கொண்டது. அதன்படி வட தென் அமெரிக்கக் கண்டங்கள் இரண்டும் அமெரிக்காவின் பாதுகாப்பு வலயத்துக்கு உட்பட்டவை என்ற கொள்கை அமெரிக்கா முன்வைத்தது.

ஆனால் 21ஆம் நூற்றாண்டில் 2009ஆம் ஆண்டு நிகழ்ந்த முள்ளிவாய்க்கால் யுத்தத்தோடு இலங்கையையும் மையமாகக் கொண்ட பட்டுப்பாதை வீதி வியூகத்தின் வழியாக சீனா இந்து சமுத்திரத்தில் பரவி அது பசுபிக் சமுத்திரத்தில் கூடாக அமெரிக்கா வரை விரியும் ஆபத்தை கொண்டதாக அமெரிக்கா கருதத் தொடங்கியது.

இத்தகைய பின்னணியில் அமெரிக்கா நோக்கிய சீனாவின் விரிவாக்கத்தை தடுக்கும் வகையில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வகுக்கப்பட்ட இரு அமெரிக்கக் கண்டங்களையும் தழுவிய மொன்றோ கோட்பாட்டின் நீட்சியாக 2011ஆம் ஆண்டு இந்தோ - பசிபிக் பிராந்திய கோட்பாட்டை அமெரிக்கா வடிவமைத்தது.

ஆசியப் பேரரசாக எழுச்சி அடைந்துள்ள சீனாவை இன்னொரு ஆசியப் பெரும் அரசான இந்தியாவின் துணை கொண்டு ஆசியாவுக்குள் முடக்க வேண்டிய அவசியம் அமெரிக்காவுக்கு எழுந்துள்ளது.

வடக்கே எல்லைப்புற நாடான சீனாவின் அச்சுறுத்தல், மேற்கே அணுவாயுத வல்லமை கொண்ட இஸ்லாமிய நாடான பாகிஸ்தான் கிழக்கே இஸ்லாமிய நாடான பங்களாதேஷ் உள்நாட்டில் 21 கோடி மக்களைக் கொண்ட முஸ்லீம் சவால், பாகிஸ்தானில் 20 கோடி முஸ்லிம்கள், பங்களாதேஷில் 19 கோடி முஸ்லிம்களென மொத்தத்தில் இந்தியாவுக்கு உள்ளேயும் அயலும் 60 கோடி முஸ்லிம்களைக் கொண்ட சவால் என்ற கண்ணோட்டத்தை கொண்டிருக்கும் இந்திய அரசு மேற்படி அமெரிக்காவின் இந்தோ - பசிபிக் திட்டத்துக்குள் தன்னையும் இணைத்துக்கொள்ள தவறாது.

மத்திய கிழக்கு - வளைகுடா நாடுகள் உள்ளிட்ட மொத்தம் 24 முஸ்லிம் நாடுகளின் மொத்த மக்கள் தொகை சுமாராக 51 கோடி. எனவே இத்தகைய மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா நாட்டுக்கு உட்பட்ட முஸ்லிம் பிராந்தியத்தின் சனத் தொகையை விடவும் தென்னாசியாவில் வாழும் முஸ்லிம்களின் சனத்தொகை 9 கோடியால் அதிகம் என்ற நிலையில் முஸ்லிம்கள் மீதான அச்சம் இந்திய தரப்பில் அதிகம் இருக்க வாய்ப்புண்டு.

ஆதலால் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் மிக இறுக்கமான மேற்குலக சார்பு கொள்கையை இந்தியா பற்றி பிடிக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதாவது அடிப்படையில் அமெரிக்கத் தலைமையிலான மேற்குலகினதும் இந்தியாவினதும் நீண்டகால கண்ணோட்டத்தில் முஸ்லிம்கள் அவர்களின் ஒரு பொது எதிரி என்ற எண்ணம் உண்டு.

எனவே மொத்தத்தில் மேற்குலகுக்கும், இந்தியாவிற்கும், சீனாவும், முஸ்லிம்களும் பொது எதிரிகள் என்கின்ற ஒரு வரலாற்றுப் போக்கு உண்டு. இதனால் அமெரிக்க தலைமையிலான மேற்குலகிற்கும், இந்தியாவுக்குமிடையே இருதரப்பு நலன்களின் அடிப்படையில் இவர்களிடையேயான உறவுகள் மேலும் மேலும் வலுவடையும்.

இப்பின்னணியில் இந்தியாவை தலை ஊசியாக கொண்டு ஏனய இந்தோ - பசிபிக் நாடுகளை அந்த ஊசியில் கொழுவி ஒரு "King pin" கோட்பாடு அமெரிக்காவால் இங்கு வடிவமைக்கப்படலாயிற்று. வரப்போகும் சில பத்தாண்டுகளுக்கு இதுவே உலக ஒழுங்கில் பிரதான கொள்கையாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

அந்தவகையில் இந்திய அமெரிக்க உறவுகளும், பெறப்போகும் சில பத்தாண்டுகள் மிகப் பலம் மிக்கவையாக அமையும். ஆதலால் முழு மேற்குலகமும் கூடவே ஜப்பானும் இந்தியாவுடன் பலமான உறவுகளை கொண்டவையாக அமையும். இவைகளுக்கிடையே சிறுசிறு சலனங்கள் ஏற்படுவது இயல்பு. ஆனால் அடிப்படையில் ஆழமான உறவு நிலவும்.

இந்தவகையில் பட்டுப்பாதை அரசியல், இராணுவம் ஒருபுறமும் இந்தோ- பசிபிக் அரசியல் இராணுவம் இன்னொரு புறமுமென இருமுனை வல்லரசு அரசியல் சக்திகளுக்கு இடையேயான போராட்டத்தில் இலங்கை அச்சாணியாய் அமைகிறது. இந்த அச்சாணியில் ஈழத் தமிழரின் விடுதலைப் போராட்டம் ஒரு முக்கிய பகுதியாகும்.

வரப்போகும் சில ஆண்டுகளுக்குள் இலங்கையை மையமாகக் கொண்ட இந்தப் போட்டிக் களம் பெரிதும் கூர்மையடையும். ராஜபக்சக்கள் தமிழ் பகுதிகளை விரைவான சிங்களமயமாக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபடுவார்கள்.

தமிழரை இலங்கை அரசியலில் ஒரு சக்தி அற்றவர்களாக ஆக்கிவிட்டால் தமிழரின் பெயரால் இலங்கையில் தலையிடுவதற்கான வாய்ப்பு இந்தியாவிற்கு இல்லாத போய்விடுமென்ற கண்ணோட்டத்தின் அடிப்படையில் தமிழின அழிப்பை ராஜபக்சக்கள் பெரிதும் துரிதப்படுத்துவார்கள். இந்தியாவுக்கும் கூடவே மேற்குலகத்திற்கும் பாதகமாய் அமையும்.

தமிழ் பகுதிகளை கபளீகரம் செய்து இலங்கை முழுவதையும் சிங்கள மயமாக்குவது என்பது இலங்கையை சீன மயமாக்குவது என்பதற்கு சமனாகும். இலங்கை முழுவதும் சீன மாயமானால் இந்தியாவுக்கு எதிரான ஒரு வெடிகுண்டு கிடங்காக மாறும்.

முழு இலங்கையிலும் தமிழ் நிலப்பரப்பு அதிகம் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதி. அது எஞ்சிய இலங்கையும் அன்னியரின் கைக்கு போவதை கட்டுப்படுத்தவில்லை நிலப்பகுதி ஆகும். ஆதலால் நெருக்கடியின் உச்சக்கட்டத்தில் தமிழீழம் பிரிய வேண்டியது தவிர்க்கமுடியாத எதார்த்தமாய் இந்தியா மற்றும் மேற்குலக நாடுகளின் கண்முன் தோன்றும். இது விருப்பு வெறுப்புக்களை கடந்த ஓர் அரசியல் நியதியாய் அமையும் என்பதில் சந்தேகமில்லை.

இதனை நோக்கி தமிழ் தலைவர்கள் தீர்க்கதரிசனத்துடனும் புத்தி சாதுரியத்துடனும் செயற்பட்டால் இதனை சாத்தியமாக்குவது இலகு. இது விடயத்தில் மெத்தனமான அரசியல் போக்கை தமிழ்த் தலைவர்கள் மேற்கொள்வதன் பின்னணியில் தமிழ் பகுதிகள் விரைவான சிங்கள மயமாக்கப்பட்டுவிட்டால் நிலைமை கவலைக்கிடமாய் அமையும்.

வரலாற்றில் வாய்ப்புக்கள் காணப்படுகின்றன என்பதற்காக அவற்றை சரிவரக் கையாள தவறினால் அது எதிர்வளமாய் அமைந்திட முடியும். பெரிதளவு வாய்ப்புகள் உண்டாயினும் சிறிய தவறுகள்கூட பெரிதளவு தோல்விக்கு வழிவகுத்துவிடும்.