மத்திய கிழக்கும் மதில்மேல் பூனையும்

Report Print Subathra in கட்டுரை

இலங்கையின் வெளிநாட்டு உறவுகள் அமைச்சினால் கடந்த திங்கட்கிழமை இரண்டு வரிகளில் அமைந்த ஒரு சிறிய அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.

மூத்த ஈரானிய தலைவர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து மத்திய கிழக்கில் அதிகரித்துவரும் பதற்றங்கள் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது.

பிராந்தியத்தின் உறுதித்தன்மைக்கான அச்சுறுத்தலை தணிப்பதற்காக அனைத்து தரப்பினரும் மிகுந்த கட்டுப்பாட்டுடன் செயற்படவும் ஆக்கப்பூர்வமான உரையாடலின் மூலம் அமைதியையும், பாதுகாப்பையும் பேணுமாறும் இலங்கை கேட்டுக்கொள்கிறது இதுதான் அந்த அறிக்கை.

ஈராக்கின் பக்தாத் விமான நிலையத்திற்கு அருகே ஈரானின் கூட்ஸ் படைப்பிரிவின் தளபதியான ஜெனரல் காசிம் சுலைமானி அமெரிக்காவின் ஏவுகணை தாக்குதலில் கொல்லப்பட்டதை அடுத்து மத்திய கிழக்கில் பதற்றநிலை உச்சம் அடையத் தொடங்கிய போது இந்த அறிக்கை வெளியானது.

ஈரானின் ஆன்மீகத் தலைவரான ஆயதுல்லா கொமேய்னிக்குப் பின்னர் இரண்டாவது சக்தி வாய்ந்த தலைவராகக் கருதப்பட்டு வந்தவர் ஜெனரல் காசிம் சுலைமானி. அவர் அமெரிக்காவின் தாக்குதலில் கொல்லப்பட்டது மூன்றாவது உலகப் போருக்கான கதவுகளை திறந்திருப்பதாக சர்வதேச ஆய்வாளர்கள் பலரும் கருத்துக்களை வெளியிட்டிருந்தனர்.

இவ்வாறான சூழ்நிலையில் தான் வெளிநாட்டு உறவுகள் அமைச்சு இந்த இரத்தினச் சுருக்கமான அறிக்கையை வெளியிட்டிருந்தது.

ஈரான் தலைவர் படுகொலை செய்யப்பட்டார் என்ற தகவலுக்கு அப்பால் யாரையும் குற்றம்சாட்டவோ யாரையும் நோகடிக்கும் வகையிலான தகவல்களோ அதில் இடம்பெற்றிருக்கவில்லை.

மதில் மேல் பூனையாக இருக்க விரும்புகின்ற ஒரு அரசாங்கமாக இலங்கையினால் இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.

பிராந்திய நாடுகளில் ஆதிக்க மோதல்களுக்குள் இலங்கை சிக்கிக் கொள்ள விரும்பாது என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஏற்கனவே கூறியிருந்தார். அதற்கமையவே, வெளிநாட்டு உறவுகள் அமைச்சு இந்த அறிக்கையை தயாரித்திருந்தது.

இலங்கையைப் பொறுத்தவரையில் மத்திய கிழக்கில் குறிப்பாக ஈரானில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலை கடுமையான சவால்களையும் நெருக்கடிகளையும் ஏற்படுத்தியுள்ளது.

இலங்கைக்கும் ஈரானுக்கும் இடையிலான உறவுகள் மிகவும் நெருக்கமானவை. அதிலும் தற்போது ஆட்சியில் இருக்கும் ராஜபக்ச அரசாங்கத்துக்கும் ஈரானுக்கும் இடையில் மிக நெருக்கமான உறவுகள் இருந்து வந்திருக்கின்றன.

இந்த உறவுகள் அமெரிக்காவுக்கு எரிச்சலை ஏற்படுத்தக் கூடியதாகவும் காணப்பட்டது

ஈரானின் கூட்ஸ் படைப்பிரிவு தளபதி காசின் சுலைமானி கொல்லப்பட்ட சம்பவத்தில் இலங்கை அரசாங்கத்துக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும் அது பற்றி வெளிப்படையாகப் பேசுவதற்கு அரசாங்கம் தயாராக இல்லை.

ஏனென்றால் இந்த சூழலில் கொழும்பில் இருந்து வெளிப்படுத்தக் கூடிய எந்த ஒரு கருத்தும் அமெரிக்காவை கொவப்படுத்தக் கூடியவையாக இருக்கும். இது அரசாங்கத்துக்கு நன்றாகவே தெரியும்.

ஏற்கனவே எம்.சி.சி உடன்பாடு விவகாரத்தில் அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளில் ஒரு தேக்க நிலை தோன்றியிருக்கிறது.

அந்த விவகாரத்தில் வெளியே வர முடியாமல் உள்ளே போகவும் முடியாமல் கோட்டபாய ராஜபக்ச அரசாங்கம் திணறிக் கொண்டிருக்கிறது.

இவ்வாறான சூழலில் ஈரான் விவகாரத்தில் தேவையற்ற கருத்துக்களை வெளியிட போய் அமெரிக்காவுடன் முரண்பாட்டை தீவிரப்படுத்தி கொள்வதற்கு அரசாங்கம் தயாராக இல்லை.

இலங்கைக்கான ஈரானிய தூதுவர் முஹமட் சாரி அபிரானி கடந்த இரண்டாம் திகதி பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்து பேசியிருந்தார்.

இதன்போது இருதரப்பு ஒத்துழைப்புகளையும் நட்புறவையும் மேலும் பலப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து ஆராயப்பட்டிருந்தன.

இந்த சந்தர்ப்பத்தில் இலங்கை படையினர் மற்றும் பொலிஸாருக்கு ஈரானில் பயிற்சி வாய்ப்புக்களை பெற்றுக் கொடுக்க முடியும் என்று ஈரானிய தூதுவர் மொஹமட் சாரி அபிரானி குறிப்பிட்டிருந்தார்.

அந்த சந்திப்பு தொடர்பான தகவல்கள் கொழும்பில் வெளியான போது மேற்கு நாடுகளினால் உன்னிப்பாக கவனம் செலுத்தப்பட்டிருந்தது.

ஏனென்றால் கோட்டபாய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து விலகிச் செல்கிற போக்கை கடைப்பிடிக்க ஆரம்பித்தது.

மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த போது ஈரானுக்கு பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். அப்போது ஈரானிய ஜனாதிபதி அமெரிக்காவுக்கு எதிரான புதிய உலக ஒன்றை உருவாக்குவோம் என்று வெளியிட்ட கருத்து அப்போது மகிந்த ராஜபக்சவுக்கும் கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தியிருந்தது.

ஏனென்றால் மஹிந்த ராஜபக்ச அப்போது அமெரிக்காவுக்கு எதிரான கடுமையான நிலைப்பாட்டை கொண்டிருந்த நாடுகளான ஈரான், லிபியா, சிரியா, கியூபா போன்றவற்றுடன் நெருக்கமான உறவுகளை வைத்திருந்தார்.

மகிந்த ராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிராக அமெரிக்கா தீவிரமான நிலைப்பாட்டை எடுக்க ஆரம்பித்ததற்கு அவரது இந்தப் போக்கும் ஒரு காரணமாக சொல்லப்பட்டது.

2019இல் மீண்டும் ராஜபக்ச ஆட்சி ஏற்பட்டதை அடுத்து ஈரானுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதற்கான சூழ்நிலை ஒன்று தோன்றியிருந்த நிலையில் தான் ஜெனரல் காசிம் சுலைமானி மீதான தாக்குதல் இடம்பெற்றிருக்கிறது.

இந்த தாக்குதலை அடுத்து ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் தோன்றியிருக்கும் முறுகல் நிலை எந்த கட்டத்தையும் நோக்கி நகரலாம் என்ற சூழலில் காணப்படுகிறது.

அமெரிக்கப் படையினர் நிலைகொண்டிருந்த தலங்கள் இலக்கு வைத்து ஈரான் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியபோதும் அந்தத் தாக்குதல்களை முறியடிக்கும் முயற்சிகளில் அமெரிக்கா இறங்காமல் இருந்தது ஆச்சரியமான விடயமாக பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவில் உள்ள நவீன தொழில்நுட்பங்களை கொண்டு ஈரானின் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்த முயற்சித்திருக்க முடியும்.

ஆனால் அமெரிக்கா அந்த ஏவுகணைகள் ஈராக்கிய படைத்தளங்களை தாக்கும் வரை பொறுத்திருந்து அமெரிக்க நிலைகளை தாக்கினால் ஈரான் கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடுமையான எச்சரிக்கை விடுத்திருந்தார்.

அதையும் மீறி ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்திருக்கிறது. இதனால் மத்திய கிழக்கில் பதற்றமும் போர்ச் சூழலும் மோசமடைந்து வருகிறது.

ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான இந்த மோதலில் இலங்கை எந்தப் பக்கம் சாய்வது என்று முடிவை எடுக்க முடியாது.

ஈரானுக்கும் இலங்கைக்கும் இடையில் நட்புறவும், வர்த்தகத் தொடர்பு அதிகம் உள்ளன.

இலங்கையிடமிருந்து தேயிலையை அதிகளவில் இறக்குமதி செய்கிறது ஈரான். இலங்கையின் தேயிலை ஏற்றுமதியில் நான்காவது இடத்தில் ஈரான் உள்ளது. ஆண்டுக்கு 32 மில்லியன் கிலோ தேயிலையை இலங்கையிடம் இருந்து கொள்வனவு செய்து வந்தது ஈரான். அதுபோலவே ஈரானிடமிருந்து மசகு எண்ணெய்யையும் இலங்கை இறக்குமதி செய்து வந்தது.

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் விதித்த தடையை தொடர்ந்து எண்ணெய் இறக்குமதியை மேற்கொள்ள முடியாத நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டது.

அதுபோல் ஈரானுக்கான தேயிலை ஏற்றுமதியும் 10 மில்லியன் கிலோவாக குறைந்து போனது.

ஏற்றுமதி செய்யப்படும் தேயிலைக்கான கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்ள முடியாத சூழலும் ஏற்பட்டது. இதனால் தேயிலைக்கு எண்ணெய் என்ற பண்டமாற்று முறையே கையாளுவதற்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன.

இந்த நிலையில் ஈரானின் ஏவுகணை தாக்குதல்களை அடுத்து ஈரான் மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்திருக்கிறார்.

இது இலங்கைக்கும் பொருளாதார ரீதியாக நெருக்கடிகளை ஏற்படுத்தும். மத்திய கிழக்கு பதற்ற நிலை காரணமாக என்னைப் பெரல்களின் விலை கடுமையாக உயர்ந்திருக்கிறது.

ஈரான் நெருக்கடியால் கொழும்பு பங்குச் சந்தையிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள் வருகையும் பாதிப்புகளை சந்திக்கிறது.

மத்திய கிழக்கில் பணியாற்றும் இலங்கையர்கள் நாடு திரும்பக் கூடிய அல்லது வேலை இழக்கக் கூடிய சூழ்நிலைகளால் அந்நிய செலாவணி வருவாயும் பாதிக்கும்.

ஏற்கனவே கடுமையான நிதி நெருக்கடிகளை எதிர் கொண்டிருக்கும் இலங்கைக்கு இது இன்னும் சவாலான சூழ்நிலையை ஏற்படுத்தும்.

அதைவிட இலங்கையின் புதிய அரசாங்கம் ஈரான் போன்ற நாடுகளுடன் இணைந்து சர்வதேச அளவில் உருவாக்கிக் கொள்ள முயன்ற ஒரு வட்டமும் இந்தப் பதற்ற சூழ்நிலையால் கெட்டுப் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இலங்கைக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக இருக்க முடியாது.

Latest Offers

loading...