ஐ.நா மனித உரிமை சபையில் இலங்கையின் கனவு பலிக்காது!

Report Print S.V Kirubaharan S.V Kirubaharan in கட்டுரை

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையில் இலங்கையின் கனவு ஒரு போதும் பலிக்காது என பிரான்ஸ் நாட்டின் மனித உரிமைகள் செயற்பாட்டாளரும் கட்டுரையாளருமான கிருபாகரன் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

கட்டுரையாளர் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 24ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 20ஆம் திகதி வரை ஐ.நா மனித உரிமை சபையின் 43ஆவது கூட்டத்தொடர் வழமை போல் ஜெனிவாவில் நடைபெறவுள்ளது. சுழற்சி முறையில் இச்சபையின் தலைமைத்துவத்தை, இவ் வருடம் மேற்கு ஐரோப்பிய நாடுகளிற்கு உரியதனால், ஆஸ்திரியாவின் ஐ.நா பிரதிநிதி, ஏலீசபெத் ரீச்சி-பிஸ்பேர்க் தலைமை வகிக்கிறார்.

ஐ.நா மனித உரிமை சபை நாற்பத்தி ஏழு அங்கத்துவ நாடுகளை கொண்டுள்ளது. இவ் அடிப்படையில் நாற்பத்தி ஏழு நாடுகளும் - ஆசிய நாடுகளிற்கு பதின்மூன்று நாடுகளாகவும், ஆபிரிக்காவிற்கு பதின்மூன்று நாடுகளாகவும், லத்தின் அமெரிக்க நாடுகளிற்கு (தென்அமெரிக்க நாடுகள்) எட்டு நாடுகளாகவும், மேற்கு ஐரோப்பா மற்றைய நாடுகளிற்கும் ஏழு நாடுகளாகவும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளிற்கு ஆறு நாடுகளாகவும், பூளோக ரீதியாக அங்கத்துவம் உள்ளது.

இவ் அடிப்படையில், ஐ. நா. மனித உரிமைசபையில் இலங்கையின் விவகாரம் முன்வரும் ஒவ்வொரு வேளையிலும், ஆசியாவின் பலநாடுகளும், கியூபா, ரஸ்யா போன்ற நாடுகளும் ஸ்ரீலங்காவை அரசியல் ரீதியில், ‘நீ என்னை காப்பாற்று நான் உன்னை காப்பாற்றுகிறேன்’ என்ற அடிப்படையில் ஆதரிக்கின்றன. ஆனால் காப்பாற்ற முடியாது சங்கடப்படுவது வழமை.

இதேவேளை, ஸ்ரீலங்காவின் மனித உரிமை மீறல்கள், போர் குற்றங்களிற்கு எதிரான நாடுகள், விசேடமாக ஐரோப்பிய யூனியன் நாடுகளுடன், அமெரிக்கா, பிரித்தானியா, கனடா போன்ற நாடுகள் என்றும் ஐ. நா மனித உரிமை சபையில் இலங்கைக்கு சவாலாக இருந்து வந்துள்ளன.

மற்றைய ஆபிரிக்கா, லத்தின் அமெரிக்க, கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் ஆதரவு என்பது பலம் வாய்ந்த நாடுகளின் பின்ணனியிலும், அடுத்து புலம்பெயர் வாழ் தமிழ் மக்களின் செயற்பாடுகளிலும் தங்கியுள்ளன. ஐ. நா. மனித உரிமை சபையில் கடந்தகாலங்களில், ஸ்ரீலங்கா மீது நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை இவற்றிற்கு முன்னுதாராணமாக கொள்ளலாம்.

புதிய ஜனதிபதி வீரம் பேசுகிறார்

இலங்கையின் புதிய ஜனதிபதி, தனக்கு வாக்களித்த சிங்கள பௌத்த மக்களிற்கு, ஐ. நா. மனித உரிமை சபை பற்றி வீரம் பேசும் சம்பவங்கள் பல நடைபெறுகின்றன.

இவையாவும் நடைமுறைக்கு, விசேடமாக சர்வதேச சமூதாயத்தின் பார்வையில் சாத்வீகமாகுமா என்பது கேள்விகுறியென்பதை அவர்கள் நன்கு தெரிந்து கொண்டாலும், எதிர்கொள்ளவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தாம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவதற்காக, புதிய ஜனதிபதியும் அவரது அரசும் மக்களிற்கு நன்றாக தம்பட்டம் அடிக்கிறார்கள்.

கடந்த மூன்று தசாப்தங்களிற்கு மேலான எனது சர்வதேச மனித உரிமை செயற்பாட்டின் அனுபவத்தில், இலங்கை மட்டுமல்லாது, உலகில் மிகவும் மோசமான மனித உரிமை மீறல்கள், போர் குற்றங்களை புரிந்துவரும் நாடுகள் யாவும், இப்படியாகவே தமது ஆட்சியை தாக்கு பிடிக்கின்றனர். சர்வாதிகார ஆட்சி நடைபெறும் நாடுகளில் இவை யாவும் சகஜம்.

இவ் அடிப்படையில், இலங்கையின்புதிய ஜனாதிபதியும் அவரது அரசாங்கமும் ஐ.நா.மனித உரிமை பற்றி சிங்கள பௌத்த மக்களிற்கு கூறும் ஆசை வார்த்தைகள் பற்றி, சர்வதேச அரசியல் அறிவு அனுபவம் கொண்ட யாரும், எந்த கவலையும் கொள்ள வேண்டிய அவசியமுமில்லை.

எதிர்வரும் 43ஆவது கூட்டத் தொடரில், இலங்கையின் ஜனாதிபதி கனவு, இவர்கள் நினைப்பது போல் நடைபெற போவதில்லை.

இலங்கைக்கு உறுதுணையாக உள்ள முக்கிய நாடுகளான - சீனா, ரஸ்யா, கியூபா போன்ற நாடுகள், 2020ஆம் ஆண்டு, ஐ. நா. மனித உரிமை சபையில் அங்கத்துவ நாடுகளாக இல்லை. இவ் மூன்று நாடுகளும், இலங்கை போன்று ஐ.நா.மனித உரிமை சபையின் பார்வையாளர் நாடுகளாகவே இவ் ஆண்டு திகழும்.

இலங்கையின் கனவு பலிக்காது

அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சீனா, ரஸ்யா நாடுகளின் வெளிநாட்டு அமைச்சர்களின் விஜயங்களும், அவர்கள் அங்கு சந்தித்து உரையாடிய அமைச்சர்கள் நிறுவனங்களை நாம் மனதில் கொள்ள வேண்டும்.

இதேவேளை, அமெரிக்காவின் மிக மிக முக்கிய பிரதிநிதியுடன் சிலர் இலங்கைக்கு விஜயம் செய்து, அவர்களும் சில முக்கிய புள்ளிகளை சந்திந்துள்ள அதேவேளை, சிவில் சமூகத்தின் அங்கத்தவர்களையும் சந்தித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகில் சிவில் சமூகத்தின் பங்களிப்பு என்பது மிகவும் பலம் வாய்ந்த ஒன்று. ஓர் அரசாங்கத்தை உருவாக்கவும், இதேவேளை அதே அரசாங்கத்தை கவுக்கக்கூடிய பலம்வாய்ந்தவர்கள் என்பதை உலகம் உணர்த்தியுள்ளது.

இதேவேளை, இலங்கையில் நடைபெற்று கொண்டிருக்கும் மனித உரிமை மீறல்கள்,போர் குற்றங்களை முன்னெடுத்துச் செல்லும் சர்வதேச மனித உரிமை அமைப்புக்களான - சர்வதேச மன்னிப்பு சபை, மனித உரிமை கண்காணிப்பகம் போன்றவற்றின் அறிக்கைகளை நாம் உன்னிப்பாக அவதானிக்க வேண்டும்.

இலங்கை விடயத்தில் முன்னின்று, கண்டன பிரேரணைகளை ஐ.நா. மனித உரிமை சபையில் நிறைவேற்ற ஆரம்பித்த அமெரிக்க வல்லரசு, முற்றுமுழுதாக ஐ.நா. மனித உரிமை சபையில் பங்குகொள்ளவில்லை என்பதில் எவ்வித உண்மையுமில்லை.

இதைதான் தமிழில் கூறுவார்கள், ‘தான் ஆடாவிட்டாலும், தன் தசை ஆடுமென” இதை இங்கு விபரமாக எழுதுவதை தவிர்த்துகொள்கிறேன்.

இலங்கையின் ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்ச , சர்வதேச சமூதாயத்தின் முன் ஓர் போர்குற்றவாளி. இவர் என்ன பதவியில் இருந்தால் என்ன, இவர் எவ்வளவு வாக்குகளை பெற்றால் என்ன, இவர் ஓர் போர்குற்றவாளி என்ன பதில் மேற்கு நாடுகளிற்குள் மாற்று கருத்து கிடையாது.

முதலாவதாக, ஐ. நா. மனித உரிமை சபையின் தீர்மானத்திற்கு, முன்னைய அரசாங்கம் கொடுத்து வந்த அனுசரணையிலிருந்து, இலங்கையின் ஜனாதிபதி வாபஸ் பெற்றுக் கொள்ள எண்ணுவது என்பது ஓர் தற்கொலைக்கு சமமானது.

ஐ. நா மனித உரிமை சபையின் தீர்மானத்திற்கு, முன்னைய அரசாங்கத்தின அனுசரணை என்பது, நேரம் காலம் கடந்து வேலை என்பதை முன்பு பல கட்டுரைகளில் எழுதியிருந்தேன். இவை யாவும் உண்மை என்பதை ரணில், சிறிசேன அரசு இன்று நிரூபித்துள்ளது.

இரண்டவதாக, தற்போதைய ஜனாதிபதி, ஐ. நா.மனித உரிமை சபையின் தீர்மானத்திற்கான அனுசரணையிலிருந்து வாபஸ்பெற விரும்பின், இதை இலங்கை அரசு செய்வதற்கு, 43ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமாகும் வரை பொறுத்திருக்க வேண்டிய அவசியமில்லை.

இலங்கை அரசினால் ஓர் கடிதம் மூலம் தாம் அனுசரணையிலிருந்து விலகுவதாக அறிவிக்க முடியும். இதை இவர்கள் அறியாதவர்களும் அல்ல. இதை இவர்கள் செய்யாது ஏன் காலம் கடத்துகிறார்கள் என்பதற்கு பல காரணிகள் உண்டு.

இவர்களது உண்மையான இலக்கு என்பது எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் நடைபெறவுள்ள இலங்கையின் நாடாளுமன்ற தேர்தலில், தமது கட்சி மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்றுகொள்ள வேண்டும் என்பதே.

மூன்றவதாக, ஐ. நா மனித உரிமை சபையின் தீர்மானத்தில் பல மாற்றங்களை கொண்டு வரவரவுள்ளதாக தனது வாக்களர்களிற்கு இலங்கையின் ஜனாதிபதி தம்பட்டம் அடித்து வருகிறார்.

அவையாவன, வெளிநாட்டு நீதிபதிகளை தாம் ஒரு பொழுதும் ஏற்கப் போவதில்லை என்றும், 13ஆவது திருத்தச் சட்டத்தை தாம் முழுதாக நிறைவேற்ற முடியாது போன்று பல விடயங்களை புதிய ஜனாதிபதி கூறுகிறார்.

காணமல் போனோருக்கான காரியாலயம்

இவர்கள் நேர்மையாக விசுவசமாக ஐ.நா மனித உரிமை சபையின் தீர்மானத்திற்கு சவால் விடுபவர்களானால், இத் தீர்மானத்தின் அடிப்படையில் கொழும்பில் உருவாக்கப்பட்டுள்ள, “காணமல் ஆக்கப்பட்டோருக்கான காரியலாயத்தை - OMP” ஏன் இன்றுவரை மூடுவிழா செய்யாது அலட்சியம் பண்ணுகிறார்கள்?

உண்மை என்னவெனில், ரணில் விக்ரமசிங்க, சிறிசேன போல், இவ் ஜனாதிபதியும் அரசாங்கமும் நாடகமாட ஆரம்பித்துள்ளார்கள் என்பதே உண்மை.

இதனால் இறுதியில் பாதிக்கப்படப் போவது நிச்சயம் ஈழத் தமிழர்கள் என்பதை சர்வதேச சமுதாயம் நன்கு அறிவதுடன் தம்மால் தான் இன்று ஈழத் தமிழர்கள் இந்த நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர் என்ற குற்ற உணர்வும் அவர்களிடம் நிலவுகிறது.

இவ் விடயங்கள், 43ஆவது கூட்டத் தொடரில் அரங்கேறுவதற்காக, இலங்கையினால் பல குறுக்கு வழிகள் கையாளப்படுகிறது.

இதில் ஒரு செயற் திட்டம் என்னவெனில், ஐ. நா. மனித உரிமை சபையில் விஷயத்துடன் வேலை செய்யும் தமிழ் செயற்பாட்டாளர்களுக்கு, ஐ. நா. மனித உரிமையில் வலம் வரும் புலம் அல்ல புலன் பெயர் செயற்பாட்டாளர்கள் மூலம் தொல்லைகள் தொந்தரவுகளை கொடுப்பதற்கான வழிமுறைகள் கையாளப்படுகிறது.

இவ் புலன் பெயர் செயற்பாட்டாளர்கள், மிக நீண்ட காலமாக ஐ.நா மனித உரிமை சபையில் சிங்கள பௌத்த அரசிற்கு மறைமுகமாக வாக்காளித்து வாங்குகின்றனர்.

ஐ.நா அறிக்கை

எதிர்வரும் ஐ. நா மனித உரிமைசபையின் 43ஆவது கூட்டத் தொடரில், முதலாவது வாரத்தின் இறுதியில் அல்லது, இரண்டாவது வாரத்தில், இலங்கை பற்றிய அறிக்கையை, ஐ.நா.மனித உரிமை ஆணையாளர் மிசேல் பாற்லற் வெளியிடுவார்.

இவ்அறிக்கை இலங்கை மீது மிகவும் கடுமையாக இருப்பதற்கான வாய்ப்பு குறைந்தே காணப்படும். இதற்கு காரணங்கள் பல!

அதனை தொடர்ந்து இலங்கை உட்பட சில நாடுகள், இலங்கையின் தற்போதைய நிலைப்பற்றி கருத்து கூறுவதற்கு முன்வரலாம். ஆனால் முன்னைய தீர்மானத்தில், மாற்றத்திற்கான எந்த வாய்ப்பும், மனித உரிமை சபையில் இம்முறை நடைபெறுவதற்கான எந்தவித சாத்வீகமும் கிடையாது.

இதேவேளை - சர்வதேச மனிதஉரிமை அமைப்புகளான சர்வதேச மன்னிப்பு சபை, மனித உரிமை கண்காணிப்பகம் போன்றவர்கள் சில அறிக்கைகளையும், பக்க கூட்டங்களை நடத்துவார்கள். அதேவேளை அங்கு சில அசம்பாவிதங்கள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் நிறைந்து காணப்படுகின்றன.

2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் என்னால் “இலங்கையின் போர்களம் ஐ.நா. மனித உரிமை சபைக்கு நகர்த்தப்பட்டுள்ளது” என்று ஓர்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

அதிசயம் நடக்க போவதில்லை!

சில புலன்பெயர் செயற்பாட்டாளர்கள், தமது சுயதேவைக்கு நிதி சேகரிப்பதற்காக, ஐ.நா.மனித உரிமை சபையில் ஈழத் தமிழர்களிற்கு அதிசயங்கள் நடக்கவிருப்பது போல் காண்பிக்கிறார்கள். இவை யாவும் முழு தவறான கருத்தும் நிலைபாடும்.

மிக அண்மையில், மேற்கு நாடு ஒன்றில் வாழும் ஓர் தமிழ் பாடகரிடம், ஐ.நா.மனித உரிமை செயற்பாட்டின் பெயரால், ஐம்பதினாயிரத்திற்கு மேற்பட்ட வெளிநாட்டு பணத்தை நன்கொடையாக ஒருவர் பெற்றுள்ளார்.

ஐ.நா. மனித உரிமை செயற்பாட்டிற்கு ஆயிரம் ஆயிரமாக பணம் எதற்கு தேவைப்படுகின்றது என்பதனை நிதி வழங்குபவர்கள் வினாவ வேண்டும். ஆய்வு செய்ய வேண்டும். இது எமக்கு புரியாத புதிராகவுள்ளது.

யதார்த்தம் என்னவெனில், அடுத்த வருடம், அதாவது 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள 46ஆவது கூட்டத் தொடரில், இலங்கை மீது சில கடுமையான நிலைப்பாட்டை சர்வதே சமூதாயம் கொண்டுவருவதற்கு முயற்சிக்கலாம். அதுவரை, ஐ. நா மனித உரிமை சபையில், ஈழத் தமிழர்களிற்கு எந்த அதிசயங்களும் நடக்கபோவதில்லை என்பதே உண்மை யதார்த்தம்.

ஈழத்தமிழர், விசேடமாக புலம் பெயர் மக்கள், ஐ.நா.மனித உரிமை சபையில் நம்பிக்கை வைப்பதற்கும் செயல்படுவதற்கும் மேலாக, இந்தியாவில் மீது நம்பிக்கை வைத்து அங்கு தமது அரசியல் ராஜதந்திர நகர்வுகளை அதிகரித்து செயற்பட வேண்டும்.

இந்தியா மூலமே, அழிந்து கொண்டிருக்கும் தமிழீழத்தையும், தமிழீழ மக்களையும் எம்மால் காப்பாற்ற முடியும்

இதேவேளை தமிழ் நாட்டிலிருந்து வெளிநாடுகளிற்கு வரும் தமிழ்நாட்டு பிரமுகர்கள், ஈழத்தமிழர்களிற்கு தமிழீழ விடுதலை போராட்டம் எப்படி நடந்தது, எங்கள் சரித்திரம் என்ன என்பதை இவர்கள் எங்களிற்கு கூறி, கண்கட்டி வித்தை காட்டுவதை தவிர்த்து, இந்தியாவின் மத்திய அரசு, மற்றைய மாநில அரசுகளுடன் தங்களது செயற் திட்டங்களை பாரிய அளவில் செய்ய வேண்டும்.

இதன் மூலமே, அழிந்து கொண்டிருக்கும் தமிழீழத்தையும் தமிழீழ மக்களையும் இவர்களால் காப்பாற்ற முடியும்

புலம்பெயர் வாழ் நாடுகளிலிருந்து இயங்கும் சில ஊடகங்களும், ஊரகங்களும், தமது சுய தேவையை மனதில் கொண்டு, புலம் பெயர் தமிழரிடையே தினமும், வாரா வாரம், பாரிய பிரிவுகள், விரிசல்கள் ஏற்படுத்தும் வகையில், தமது நீண்ட பார்வையற்ற வேலை திட்டங்களை மேற்கொண்டு வருகிறார்கள்.

இவை யாவும், சிங்கள, பௌத்த அரசின் செயற்பாடுகளிற்கு, மறைமுகமாக இவர்களால் செய்யப்படும் தொண்டாகவே, உணர்வாளர்களால் பார்க்கப்படுகிறது.

சவால்கள்

உண்மையை கூறுவதனால், ஐ.நா மனித உரிமை சபை செயற்பாட்டில், தமிழர் மனித உரிமை மையத்தின் அங்கத்தவர்கள் தவிர்ந்தவேறு யாரும், 2009ஆம் ஆண்டிற்கு முன்பிலிருந்து செயலாற்றியது என்பது அறவே கிடையாது.

முன்பு இருந்த சிலர், ஆயுதப் போராட்டம் முடிவுற்றதுடன், ஊதியம் கிடைக்காத காரணத்தில் தாமாவே ஒதுங்கி கொண்டார்கள். நாம் தொடர்ந்து ஐ.நா.வில் செயற்படுவது, சில பேய்காட்டு பெயர்வழிகளிற்கு தொல்லை என்பதை நாம் நன்கு அறிவோம்.

கடந்த சில வருடங்களாக, ஐ.நா.மனித உரிமை சபை செயற்பாட்டின் பெயரால், நிதி சேகரிக்கும் சிலர், தாம் இருபது வருடங்களாக ஐ.நா.மனித உரிமைசபை செயற்பாட்டில் இருந்து வருவதாகவும், தாம் வழக்கறிஞர் என்றும் முழுபொய் கூறி பலரை ஏமாற்றி நிதி சேகரிக்கிறார்கள்.

ஐ.நா.வின் உத்தியோக ஆவணங்களையும், பல்கலைக்கழகத்தின் வழக்கறிஞராக பட்டம் பெற்ற உத்தியோகபூர்வ ஆவணங்களை காண்பித்து, தாம் ஐ.நா.வில் இருபது வருடங்களாக வேலைசெய்வதாகவும், தாம் ஓர் வழக்கறிஞர் என்பதையும், யாவரும் ஏற்கக் கூடியவகையில் நிருபித்தால், தமிழர் மனிதர் உரிமை சார்பாக ஐ.நா.வில் கடந்த முப்பது வருடங்களிற்கு மேலாக சேவை செய்யும் நாம், ஐ.நா.வின் செயற்பாட்டிலிருந்து உடன் விலகிக்கொள்வோம் என்பதை இங்கு சவாலாக முன்வைக்கிறோம்.

‘சந்திரனை பார்த்து நாய் குலைப்பது போல்’ தமது இணையத்தளங்கள், முக நூல்களில் - தமது பண்பு கல்வி அறிவிற்கு ஏற்ற வகையில் சிலர் தமது உள்ளம் குளிருவதற்காக, பிறரை வசைபாடுவதாக அறிகிறோம். சுருக்கமாக கூறுவதனால், யாராக இருந்தாலும் ‘தம்மால் முடிந்தவற்றை மட்டுமே செய்ய முடியும்’ - ‘பானையிலிருந்தால் தான் அகப்பையில் வரும்’என்பார்கள்.

இவர்கள் ‘மோதிர கையால்குட்டு வாங்கநினைப்பது’ நிச்சயம் நடக்காது. ‘சந்திரனை பார்த்து நாய் குலைப்பதால், சந்திரனுக்கு என்ன நட்டம்?’ என்பதை அறியும் அளவிற்கு இவர்களிற்கு பகுத்தறிவு கிடையாது. யாவற்றிற்கும் காலம் தான் பதில் சொல்ல வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.