பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் தொடர்பில் விழிப்புடன் இலங்கை அரசு! இருதரப்பு வணிகமாக புலனாய்வு பகிர்வு

Report Print Subathra in கட்டுரை

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்சவினால் முன்வைக்கப்பட்ட தேசிய புலனாய்வு சட்டத்தை (National Intelligence Act) உருவாக்கும் யோசனைக்கு, அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டிருக்கிறது.

அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன, அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் இந்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார். இதன்மூலம், தேசிய பாதுகாப்புச் சட்டத்தை வரைவதற்கான ஆணையை அரசாங்கம், சட்டவரைஞர் திணைக்களத்திற்கு அனுப்ப முடியும்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்தின் முக்கியமானதும் முதன்மையானதுமான இலக்கு. நாட்டின் தேசிய பாதுகாப்பை வலுப்படுத்துவது தான். புலனாய்வுக் கட்டமைப்பை பலப்படுத்துவதையே அந்த இலக்கை அடைவதற்கான பிரதான மூலோபாயமாக அரசாங்கம் கையாளுகிறது.

போர்த்தளபாட மற்றும் ஆளணிப் பலத்தை கொண்டு இலங்கையின் தேசிய பாதுகாப்பை பலப்படுத்திய காலம் முடிந்து விட்டது என்றே கூறலாம். விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் பெரும் எண்ணிக்கையான ஆளணியும் அதிகளவு போர்த் தளபாடங்ளும் அரச படைகளுக்குத் தேவைப்பட்டன.

ஆனால் தற்போது விடுதலைப் புலிகளின் நேரடியான அச்சுறுத்தல்கள் இல்லை. பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய வெளிப்படையாக இயங்கக்கூடிய சக்திகள் எதுவும் நாட்டில் இல்லை. சில மறைமுக அச்சுறுத்தல்களை கையாளும் சிக்கல்கள் மட்டுமே அரச படைகளுக்கு உள்ளன.

இவ்வாறான மறைமுக அச்சுறுத்தல்களை கையாள்வதற்கு அதிகளவு படைகளோ போர்த் தளபாடங்களோ தேவையில்லை. மாறாக புலனாய்வுத் தகவல் சேகரிப்புகளின் மூலமும் நவீன புலனாய்வு தொழிநுட்பங்களின் மூலமும் இவ்வாறான அச்சுறுத்தல்களை இல்லாமல் செய்து விட முடியும்.

போர்க்காலத்திலேயே இலங்கையில் புலனாய்வுக் கட்டமைப்புகள் பலப்படுத்தப்பட்டிருந்தன. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் வெற்றி கொள்ளப்பட்டதில், புலனாய்வுக் கட்டமைப்புகளுக்கு கணிசமான பங்கு இருந்தது.

அதுவும், போர் முடிவுக்கு வந்த பின்னர் எதிர்பார்க்கப்பட்ட சிறியளவிலான எதிர்ப்பு நடவடிக்கைகள் தாக்குதல்கள் கூட நடக்கமால் பார்த்துக் கொண்டதில் புலனாய்வுப் பிரிவுகளின் பங்கு முக்கியமானது.

தேசிய புலனாய்வுப் பணியகம், அரச புலனாய்வுப் பிரிவு, கடற்படை, விமானப்படை, விசேட அதிரடிப்படை மற்றும் பொலிஸ் புலனாய்வுப் பிரிவுகள் என பல்வேறு புலனாய்வு அலகுகள் இலங்கையில் செயற்படுகின்றன.

எனினும், 21/4 குண்டுத் தாக்குதல்களை இந்த புலனாய்வு அமைப்புகளால் தடுக்க முடியவில்லை. அதிலும் இந்தியாவிடம் இருந்து கிடைத்த புலனாய்வுத் தகவல்களைப் பயன்படுத்தியாவது தாக்குதல்களை தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

இந்தியாவிலிருந்து அரச புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த புலனாய்வுத் தகவல்கள் ஏனைய புலனாய்வுப் பிரிவுகளுக்குப் பகிரப்படவும் இல்லை.

21/4 குண்டுத் தாக்குதல்கள் குறித்து விசாரணை நடத்திய நாடாளுமன்றத் தெரிவுக்குழு புலனாய்வு அமைப்புகள் ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்றும், தேசிய பாதுகாப்புச் சபை உருவாக்கப்பட வேண்டும் என்றும் அதற்குப் பொறுப்பாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என்றும் தமது அறிக்கையில் பரிந்துரைத்திருந்தது.

தற்போதைய அரசாங்கம் தேசிய பாதுகாப்புச் சபையை உருவாக்குவதற்கு முன்னதாக தேசிய புலனாய்வு சட்டத்தை கொண்டு வந்து புலனாய்வுப் பிரிவுகளை ஒழுங்கமைத்து ஒருங்கிணைப்பதற்கான நடவடிக்கையில் இறங்கியிருக்கிறது.

தேசிய புலனாய்வு சட்டத்தின் மூலம் எல்லா புலனாய்வு அமைப்புக்களும் ஒழுங்கமைக்கப்பட்டு, மீளமைக்கப்படும். எல்லா புலனாய்வு அமைப்புகளினது தகவல்களும், ஒரே இடத்தில் மையப்படுத்தப்பட்டு, பகுப்பாய்வு செய்யப்படும். அதற்கான ஒரு அலகு அல்லது கட்டமைப்பு உருவாக்கப்படும்.

புலனாய்வுத் தகவல்கள் பகிரப்பட்டு, மேலதிக தகவல்களைத் திரட்டவும் கூடுதல் பாதுகாப்பை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் இது போன்ற ஒருங்கிணைப்புக் கட்டமைப்புகள் இருக்கின்றன. சில விதிவிலக்கான புலனாய்வு செயற்பாடுகள் இந்த நாடுகளில் முன்னெடுக்கப்படுவதும் உண்டு.

குறிப்பாக இந்தியாவின் றோ மற்றும் அமெரிக்காவின் சி.ஐ.ஏ போன்றனவற்றின் இரகசிய புலனாய்வு செயற்பாடுகள் இவ்வாறான மையப்படுத்தப்பட்ட புலனாய்வு கட்டமைப்புக்குள் வருவதில்லை. ஆனால் பொதுவான தேசிய பாதுகாப்பு தகவல்களை இந்த அமைப்புகள் பகிர்ந்து கொள்ளத் தவறுவதில்லை.

தேசிய புலனாய்வு சட்டத்தை வரைவதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ள போதும், அதன் உள்ளடக்கம் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பது தெரிய வந்த பின்னர் தான் இந்தப் புலனாய்வு ஒருங்கிணைப்புக் கட்டமைப்பு எந்தளவிற்கு வலுவானதாக இருக்கும் என்று தெரியவரும்.

எனினும் தற்போதைய அரசாங்கத்தின் முதன்மையான இலக்கு தேசிய பாதுகாப்பு தான். தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு பிரதான மூலோபாயமாக இருப்பது புலனாய்வுப் பிரிவுகளை வலுப்படுத்துவதாகவே உள்ளது.

புலனாய்வுத் தகவல்களை உரிய நேரத்தில் பெற்றுக் கொள்வதன் மூலம் எத்தகைய பாதுகாப்பு அச்சுறுத்தல்களையும் சமாளித்து விட முடியும் என்பது தற்போதைய அரசாங்கத்தின் உறுதியான நிலைப்பாடு.

புதிய அரசாங்கம் பதவிக்கு வந்தவுடனேயே புலனாய்வுப் பிரிவுகளை மறுசீரமைக்கும் வேலைகளைத் தான் தொடங்கியது. குறிப்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் நம்பிக்கைக்கு பாத்திரமான அதிகாரிகள் பொறுப்பாக நியமிக்கப்பட்டு கடந்த அரசாங்கத்திலிருந்து ஓட்டைகளை அடைக்கும் பயணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தனியே புலனாய்வுப் பிரிவுகளை வலுப்படுத்திக் கொள்வதுடன் நிற்காமல் புலனாய்வுத் தகவல்களை ஏனைய நாடுகளிடமிருந்து பெற்றுக் கொள்வதற்கான வழிகளையும் அரசாங்கம் தேடிக் கொண்டிருக்கிறது.

குறிப்பாக இந்தியாவுடன் இராணுவப் புலனாய்வுத் தகவல்களை பகிர்ந்து கொள்வதற்கு இணக்கப்பாடு ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் இந்தியப் பயணத்தின் போது புலனாய்வுத் தகவல்ளைப் பகிர்ந்து கொள்வது குறித்து முக்கியமாக பேசப்பட்டிருந்தது.

புலனாய்வுப் பிரிவை வலுப்படுத்தவும் மறுசீரமைக்கவும் தொழிநுட்ப கருவிகளை கொள்வனவு செய்வதற்கும் 50 மில்லியன் டொலர் நிதியை ஒதுக்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இணங்கியிருந்தார்.

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் அண்மையில் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்த போதும் புலனாய்வுப் பிரிவை பலப்படுத்துவதற்கு 50 மில்லியன் டொலர் நிதியை உதவியாக வழங்குவதாக உறுதிப்படுத்தினார்.

இலங்கையுடன் புலனாய்வுத் தகவல்கள் பகிந்து கொள்வதற்கு இந்தியா விரும்புகின்ற அதேவேளை இலங்கையிடமிருந்து அவ்வாறான தகவல் பகிர்வை இந்தியா எதிர்பார்க்கிறது.

ஏனென்றால் 21/4 குண்டுத் தாக்குதல்களை மேற்கொண்ட சஹ்ரான் ஹாசிம் தலைமையிலான குழுவினர் இந்தியாவிலும் வலுவான தொடர்புகளை வைத்திருந்தனர். அவர்களை கண்டறிந்து வேரறுக்கும் முயற்சிகளில் என்.ஐ.ஏ எனப்படும், இந்தியாவின் தேசிய புலனாய்வு முகவரகம் ஈடுபட்டுள்ளது.

அதற்கு தேவையான தகவல்கள் இலங்கையிடமிருந்து பெறப்படுகின்றன. இந்த ஒத்துழைப்பையும் தாண்டி இந்தியப் பெருங்கடல் குறித்த பாதுகாப்பு புலனாய்வுத் தகவல் பகிர்வையே இந்தியா எதிர்பார்க்கிறது.

இந்தியா ஏற்கனவே சீஷெல்ஷ், மொரீசியஸ், மாலைதீவு போன்ற நாடுகளுடன் இந்தியப் பெருங்கடல் தொடர்பான புலனாய்வுப் பகிர்வுத் திட்டத்தை செயற்படுத்த ஆரம்பித்திருக்கிறது. அதனை மேலும் வலுப்படுத்த இலங்கையுடன் கைகோர்க்க விரும்புகிறது.

இந்த விடயத்தில் அரசாங்கம் எந்தளவுக்கு இந்தியாவிற்கு நேர்மையாக செயற்படும் என்ற கேள்வி இருக்கிறது. ஏனென்றால் அவ்வாறான தகவல்களை இந்தியாவிற்கு வழங்கப்படுவதை இலங்கையின் மற்றொரு நெருங்கிய பங்காளியான சீனா விரும்பாது.

அதுவும் அம்பாந்தோட்டையில் தனக்கான ஒரு துறைமுகத்தைக் கொண்டிருக்கும் சீனாவிற்கும் இது நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தும். அதேவேளை மேற்குலக நாடுகளுடனும் புலனாய்வுத் தகவல் பகிர்வுக் கட்டமைப்பை ஏற்படுத்திக் கொள்ள இலங்கை விரும்புகிறது.

பிரித்தானிய தூதுவர் சாரா ஹோட்டன் அண்மையில் பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்துப் பேசியிருந்தார்.

இதன்போது தீவிரவாத முறியடிப்புக்குத் தேவையான இராணுவப் புலனாய்வுத் தகவல்களையும் தொழிநுட்ப மற்றும் நிபுணத்துவ உதவிகளையும் இலங்கையுடன் பிரித்தானியா பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற கோரியிருந்தார். அதற்கு பிரித்தானிய தூதுவர் சரியான பதிலைக் கொடுக்கவில்லை.

பிரித்தானியாவில் உள்ள புலம்பெயர் தமிழர்கள் குறித்து பாதுகாப்பு அமைச்சு விழிப்புடன் இருக்கிறது. அவர்களால் இலங்கயைின் இறைமைக்கு ஆபத்து வரும் என்பது தற்போதைய அரசாங்கத்தின் கருத்து.

எனவே பிரித்தானியாவுடன் இராணுவப் புலனாய்வுத் தகவல் பகிர்வு கட்டமைப்பை ஏற்படுத்த இலங்கை விரும்புகிறது. ஆனால் பிரித்தானியா அதனை இன்னமும் உயர்மட்டக் கலந்துரையாடலுக்குக் கொண்டு செல்லவில்லை.

அதேவேளை பிரித்தானியத் தூதுவர் சாரா ஹோட்டன், பிராந்திய புலனாய்வுப் பகிர்வு குறிப்பாக இந்தியப் பெருங்கடல் விவகாரங்கள் குறித்த புலனாய்வுப் பகிர்வு அவசியம் என்று வலியுறுத்தியிருக்கிறார்.

இந்தியப் பெருங்கடல் விவகாரங்கள் குறித்த புலனாய்வுப் பகிர்வை இந்தியா எவ்வாறு எதிர்பார்க்கிறதோ அதேபோன்று தான் பிரித்தானியாவும் எதிர்பார்க்கிறது.

இந்தியப் பெருங்கடலின் பாதுகாப்பு விவகாரங்கள் குறித்த புலனாய்வுப் பகிர்வுக்கு இலங்கை தயாராக இருந்தால் மாத்திரமே இராணுவப் புலனாய்வுப் பகிர்வுக்கு பிரித்தானியா போன்ற நாடுகளும் தயாராக இருக்கும் என்று தெரிகிறது. இலங்கையின் புலனாய்வுக் கட்டமைப்பை வலுப்படுத்த பல்வேறு நாடுகளும் விரும்புகின்றன.

இலங்கையின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுவதற்காக மாத்திரமன்றி இலங்கையிடமிருந்து தமது பாதுகாப்பை வலுப்படுத்துவதற்குத் தேவையான தகவல்களைத் திரட்டிக் கொள்வதற்கும் தான். கிட்டத்தட்ட இருதரப்பு வணிகம் போலத்தான் இது. அந்த இருதரப்பு வணிகத்தை மேற்கொள்ள இலங்கை அரசாங்கம் தயாராக இருக்கிறதா?