மங்குகிறதா மாற்று அணி?

Report Print Habil in கட்டுரை

தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு மாற்றாக புதிய கூட்டணி ஒன்றை உருவாக்கும் முயற்சிகள் பற்றிய பரபரப்பான பேச்சுகள் தற்போது மெல்ல மெல்ல குறையத் தொடங்கியிருக்கின்றன.

தமிழ் மக்களின் தற்போதைய அரசியல் பிரதிநிதிகளாக கருதப்படும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் மீது அதிருப்தியையும், விமர்சனங்களையும் கொண்டுள்ள தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகள் தமக்கிடையில் கூட்டணியொன்றினை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வந்தன.

தமிழ் அரசியல் கட்சிகள் அனைத்தும் தம்முடன் இணைந்து கொள்ள வேண்டுமென்றும் பலமான ஒரு அணியாக போட்டியிட வேண்டும் என்றும் தமிழ்தேசிய கூட்மைப்பின் சார்பில் அதன் பேச்சாளர் சுமந்திரன் அழைப்பு விடுத்திருந்தாலும் அந்த அழைப்பை எந்த தமிழ் கட்சியும் கண்டுக்கொள்ளவில்லை.

இந்த நிலையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கு எதிரான அல்லது மாற்றான புதிய அணி உருவாக்கும் முயற்சிகளில் சி.வி விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணியும் வீ.ஆனந்தசங்கரியின் தலைமையிலான தமிழ் விடுதலை கூட்டணியும், தமிழ்த் தேசிய விடுதலை கூட்டணியும் தனித்தனியான முயங்சிகளில் இறங்கியிருந்தன.

கூட்டமைப்புக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்ட கட்சிகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து பலமான ஒரு மாற்று அணியை உருவாக்க வேண்டும் என்ற கருத்துக்கள் பரவலாக காணப்பட்ட போதும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பிடிவாதப் போக்கு சி.வி விக்னேஸ்வரன் போக்கு உள்ளிட்ட சில காரணங்களால் அந்த முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை.

அதற்கு பின்னர் விக்னேஸ்வரன் தலைமையில் தனியான ஒரு மாற்று அணியை உருவாக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதேவேளை, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தாமே உண்மையான மாற்று அணி என்று கூறி வந்தார். ஆனந்த சங்கரி பலமான ஒரு கூட்டணி அமைக்கப்போவதாக அறிவித்திருந்தார்.

ஆனால் இன்று வரை தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிரான கட்சிகள் தமக்கிடையில் கூட்டணி ஒன்றை உருவாக்குவதில் வெற்றிப்பெறவில்லை.

சி.வி விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைமையில் இடம்பெறும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட வடக்கு மாகாண முன்னாள் அமைச்சர் ஐங்கரநேசன் தலைமையிலான தமிழ் தேசிய பசுமை இயக்கம் ஆரம்ப கட்டத்திலேயே அதிலிருந்து ஒதுங்கிவிட்டது.

ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் ஏற்பட்ட பிளவை தொடர்ந்து ரொலோவில் இருந்து வெளியேறிய அல்லது வெளியேற்றப்பட்ட ஸ்ரீகாந்தா மற்றும் சிவாஜிலிங்கம் தலைமையிலான தமிழ் தேசியக் கட்சி தாம் விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணியுடன் இணைந்து செயற்பட போவதாகவும் கூட்டமைப்புக்கு எதிராக எந்த எதிர்ப்பார்ப்புமின்றி பலமான கூட்டணியை உருவாக்க தோள் கொடுக்கப் போவதாகவும் அறிவித்திருந்தது.

ஆனால் திடீரென கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் தமிழ் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஸ்ரீ காந்தா,தமது கட்சி வரும் பொதுத்தேர்தலில் தனித்து போட்டியிடப்போவதாக அறிவித்திருக்கின்றார்.

அவரது இந்த அறிவிப்பு சி.வி விக்னேஸ்வரன் தலைமையிலான மாற்று அணியை உருவாக்கும் முயற்சிகளுக்கு ஏற்பட்டுள்ள பெரும் பின்னடைவாக கருதப்படுகின்றது.

ஏனென்றால் தமிழ் மக்கள் கூட்டணியுடன் இப்போது இணைந்திருப்பது ஈ.பி.ஆர்.எல்.எவ் என்ற ஒரு கட்சி மாத்திரமே,இது தவிர தமிழ் மக்கள் பேரவை மற்றும் சில பொது அமைப்புகளும் அவரது அணியில் இருக்கின்றன.

இது மாற்று அணி ஒன்றை உருவாக்குவதற்கும் போதுமான பலத்தை கொண்டதல்ல. மாற்று அணியை உருவாக்குவது என்பது ஓரிரு கட்சிகளின் கூட்டு மாத்திரமல்ல மாற்று அணியை உருவாக்க விரும்புபவர்கள், தங்களைத் தாங்களே மாற்று பிரகடனம் செய்து கொள்பவர்கள் முதலில் அந்த மாற்று என்பதற்கான தகைமையை கட்டமைத்துக் கொள்ள வேண்டும்.

அது,தான் தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தும்.அவர்களின் கவனத்தையும் ஈர்க்கும்.

உள்ளக முரண்பாடுகளை மற்றும் குத்து வெட்டுக்களை முன்னிலைப்படுத்திக் கொண்டிருக்கும் போது மாற்று அணி ஒன்று மேலெழுந்து வர முடியாது.

விக்னேஸ்வரனை தலைவராகக் கொண்ட ஒரு மாற்று கட்சியை உருவாக்கும் முயற்சிகளில் பலருக்கு நம்பிக்கை இருந்தாலும்,அவ்வாறான மாற்று அணியில் எவ்வாறு இணைந்திருப்பது.எத்தகைய பங்கை வகிப்பது. என்பதில் கட்சிகள் பலவற்றுக்கும் குழப்பம் நீடிக்கின்றது.

கட்சிகள் எதுவும் விட்டுக்கொடுப்புக்கு தயாராக இல்லாதிருப்பது தான் இதற்கு காரணம்.விக்னேஸ்வரன் தரப்பின் மீது கூட இவ்வாறான குறைப்பாடுகள் எடுத்துச் சொல்லப்படுகின்றன.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பு என்பது, விடுதலை புலிகளின் ஆதரவு பின் புலத்துடன் இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் கட்டமைக்கப்பட்டது.

அவ்வாறானதொரு பின்புலத்தைக் கொண்ட ஒரு அரசியல் சக்திக்கு மாற்றானது, என்று கூறி கிளம்பும் போது அதற்கு சமமான பலத்தையும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

மாறாக உதிரிகளான அணிகளை உருவாக்குவதன் மூலம் தேர்தல்களில் போட்டியிடுவதன் மூலம் மாற்று அணி வலுப்பெறவும் முடியாது. தமிழ் மக்களுக்கு தலைமை தாங்கவும் முடியாது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பை தோற்கடிக்க முடியாது. தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்வது ஒன்றைத் தான் அவர்களால் செய்ய முடியும். இன்னும் ஒரு மாதத்துக்குள் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு விடும்.

அதற்குப் பின்னர் இரண்டு மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்படும். தேர்தலுக்கு இருப்பது இன்னும் மூன்று மாதங்கள் தான்.

இந்த மூன்று மாதங்களுக்குள் பலமான மாற்று அணியை உருவாக்குவது என்பது சாதாரணமல்ல.நாடாளுமன்ற தேர்தலுக்கான ஆசனங்களுடன் மாற்று அணியை உருவாக்குவதில் மிகக் கடினமாகும். எல்லா அரசியல் கட்சிகளும் தமக்கு மிகப்பெரிய செல்வாக்கு மக்கள் மத்தியில் இருப்பதாக நம்பிக் கொண்டிருக்கின்றன.

ஆனால் பெரும்பாலான தமிழ் கட்சிகளுக்கு பிரதேச மட்டத்தில் கட்டமைப்புகள் எதுவும் கிடையாது. இவ்வாறான நிலையில் இருந்து கொண்டு தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதிகளாக தாம் மாறிவிட முடியும் என்று நம்பிக் கொண்டிருக்கின்றன.

தமிழ் மக்கள் தங்களை நம்புகிறார்களா என்ற கவலை அவர்களுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. அது போல தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற கூடிய கொள்கைத் திட்டங்கள் எதையும் கொண்டு இருப்பதாகவும் தெரியவில்லை.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் தமிழ் மக்களுக்கு எதிரான செயற்பாடுகளை மிகத் தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. இவ்வாறான நிலையில் தமிழ் தேசிய அரசியல் கட்சிகள் வழியிலேயே வேண்டியது முக்கியமானது.

உதிரிகளாக பிரிந்து நின்று ஆலையால் குற்றம் சொல்லிக்கொண்டு இருப்பதன் மூலம் தமிழ் மக்களை ஓரம்கட்டி ஒதுக்கும் தற்போது அரசாங்கத்தின் நிலைப்பாட்டிற்கு மேலும் வலு சேர்ப்பதாக அமையும். தாங்களே உண்மையான தமிழ் தேசியக் கட்சிகள் என்று எல்லா கட்சிகளும் கூறிக்கொண்டு இருக்கின்றனவே தவிர தமிழ் தேசிய நிலைப்பாட்டின் ஒருமித்து செயற்பட கூடிய நிலையில் எந்த கட்சியும் இல்லை.

தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை வலியுறுத்தி அரசியல் கட்சிகளின் ஒற்றுமை மிக முக்கியமானது சில சிறிய அளவிலான கொள்கை முரண்பாடுகள், வேறுபாடுகள் இருந்தாலும் தமிழ் தேசியம் சார்ந்து ஒன்றித்து பயணிக்க வேண்டிய அவசியமான சூழல் ஒன்று மீண்டும் உருவாகி இருக்கிறது.

விடுதலைப்புலிகளின் காலத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருவாக்க வேண்டிய அவசியம் எவ்வாறு ஏற்பட்டதோ செல்வநாயகம், ஜி.ஜி.பொன்னம்பலம், தொண்டமான் ஆகியோர் இணைந்து 1972இல் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி உருவாக்குகின்ற சூழல் எவ்வாறு ஏற்பட்டது ஏற்பட்டதோ அது போலத்தான் இப்போதும் தமிழ் தேசிய அரசியல் கட்சிகள், இணைந்து பயணிக்க வேண்டிய சூழல் எழுந்திருக்கிறது.

போருக்குப் பின்னர் தமிழ் மக்களின் அரசியல் பலம் சிதைக்கப்பட்டு விட்டது. அதை புரிந்துகொண்டு தமிழ் தேசிய அரசியல் கட்சிகள் செயல்பட்டிருக்க வேண்டும். ஆனால் அதற்குப் பின்னர்தான் தமிழ் தேசிய அரசியல் கட்சிகள் ஒன்று விழுங்கிக் கொள்ளவும் தட்டிக்கொடுக்கவும் ஆரம்பித்தன.

10 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கிய, இந்த குட்டி முந்தும் ஓட்டம் இன்று உதிரிகளாக சிதறிப் பரந்து கிடக்கும் தமிழ் அரசியல் கட்சிகளைத்தான் உருவாக்கியிருக்கிறது.

தமிழ் தேசியம் பேசிக்கொண்டு, தமிழ் மக்களின் உண்மையான பிரதிநிதிகள் என்று கூறிக் கொண்டு செயல்படும் கட்சிகள் அனைத்தும் தமிழ் மக்களின் அபிலாசைகளையும், விருப்பங்களையும் நிறைவேற்றுவதற்காக எதனை செய்திருக்கின்றன, எத்தகைய விட்டுக்கொடுப்புக்களுக்குத் தயாராக இருக்கின்றன என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த சுய மதிப்பீட்டை மேற்கொள்ள எந்த கட்சியும் தயாராக இல்லை. இவ்வாறான நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பையும் வீழ்த்தி,தாங்களும் கைப்பற்ற முடியாமல் இருக்கும் நிலை ஏற்பட்டால், மூன்றாவது தரப்பின் அதன் பலன்களை அனுபவிக்கப்போகிறது.

பாட்டியின் வடையை அபகரித்துக் கொண்டு போன காகம், நரியிடம் அதனை பறி கொடுத்த பாடத்தை, ஆரம்ப வகுப்புகளில் கற்றுக்கொண்ட நாம், அதன் உண்மையான பாடத்தை புரிந்து கொள்ளவில்லை.

அவ்வாறு புரிந்து கொண்டிருந்தால் தமிழ் தேசிய அரசியல் கட்சிகள் பலமான நிலையை எட்டுவதற்கு முற்பட்டு இருக்குமே தவிர, ஒன்றையொன்று ஒழித்து தலையெடுக்கும் யுக்தியை கையாள முற்பட்டு இருக்காது. உதிரிகளாக செயற்பட முனைந்திருக்காது.

பேரழிவுகளுக்கு பின்னரும் கூட, வரலாற்றின் பாடங்களை கற்க வேண்டிய நிலையில்தான், தமிழர் தரப்பில் அரசியல் செய்ய முற்படும் அனைவரும் இருந்திருக்கிறார்கள் என்பது வேதனையானது.

Latest Offers

loading...