கிழக்கு தமிழர்கள் விடயத்தில் தமிழ் தலைமைகள் முஸ்லிம் தலைமைகளிடம் பாடம் கற்க வேண்டும்

Report Print Varunan in கட்டுரை

இலங்கையில் இன்று சுதந்திர நாடு ஒன்று உதயமாவது போன்ற பெருமிதத்தில் தற்போது அம்பாறை, சாய்ந்தமருது எங்கும் பட்டாசு ஓசையால் அதிருகின்றது.

இலங்கையின் கிழக்கின் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை மாநகரசபையிலிருந்து பிரிந்து சாய்ந்தமருது நகரசபை புதிதாக உதயமாகின்றது. சாய்ந்தமருது மக்கள் கல்முனையிலிருந்து பிரிந்து செல்வதற்கு பலகாரணங்கள்.

அவர்களிடையே காணப்பட்ட பிரதேசவாதம் மற்றும் கல்முனைக்குடி முஸ்லிம் காங்கிரஸ் அரசியல்வாதிகளின் புறக்கணிப்பு, கல்முனை மாநகரசபை மேயராக சாய்ந்தமருதை சேர்ந்தவர்களை நியமிப்பதில் தடை போன்றவற்றால் சாய்ந்தமருது, மாளிகைக்காடு உள்ளடக்கிய பகுதியையும் காரைதீவு எல்லையாக கொண்ட பகுதி சாய்ந்தமருது நகரசபை உருவாகியுள்ளது.

இது அம்மக்களின் நீண்டகால பிரச்சினையாகும். இதே நேரம் கல்முனை தேர்தல் தொகுதியில் முஸ்லிம் காங்கிரஸ் இன் சரிவை எதிர்நோக்கியுள்ளது.

சாய்ந்தமருது மக்களிடையே தற்போது அதாவுல்லாவின் கை ஓங்கியுள்ளது புலப்படுகின்றது. இது கல்முனையில் இருந்து சாய்ந்தமருது பிரிந்து செல்வதால் தமிழ்மக்கள் சந்தோசப்படுவதை விட, நீண்ட காலமாக ஒரு மக்கள் தரப்பினரின் ஜனநாயக போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாக பார்க்கின்றார்கள்.

சாய்ந்தமருது மக்களை போன்றே கல்முனையில் தனிப்பிரதேசம் கேட்கவில்லையாயினும் நிர்வாக ரீதியில் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் என அழைக்கப்படும் தமிழ் பிரதேச செயலகம் தரம் உயர்வு நீண்டகால பிரச்சினையாக உள்ளது.

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் தமிழரும் முஸ்லிம்களும் ஒற்றுமையாக இருந்தனர். முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அஸ்ரப் காலத்தில் சந்தாங்கேணி மைதானத்தில் பல்வேறு பிரச்சார கூட்டத்தில் ஒரே தேர்தல் மேடையில் ஒன்றாக தமிழர்களும் முஸ்லிம்களும் பயணித்தனர்.

பின்னர் கிழக்கு மாகாணத்தில் முதலமைச்சர் பதவியில் இரு சிறுபான்மை சமூகம் ஒன்று சேர்ந்து ஆட்சியமைத்து ஏறாவூர் ஹாபீஸ் நஸீர் முதலமைச்சராகியதற்கு இரு சமூகத்தினரும் ஒரே நேரத்தில் வெற்றியில் கொண்டாடியதும் கல்முனை மாநகரம் பின்னர் காலம் மாற ஹிஸ்புல்லா, அதாவுல்லா, ஹரிஸ் போன்ற இனவாத அரசியல்வாதிகளின் செயற்பாட்டால் இரு சமூகத்தினரிடையே விரிசலும் ஒற்றுமையின்மையும் ஏற்பட்டது.

கல்முனையிலிருந்து சாய்ந்தமருது நகரசபை பிரிந்ததனால் கல்முனைக்குடி முஸ்லிம் அரசியல்வாதியான ஹரிஸ் போன்றோர் சாதாரண மக்களிடையே பீதியை உருவாக்க காரணம் கல்முனை வாழ் தமிழரை பற்றிய மாய தோற்றத்தை உருவாக்கவே.

கல்முனை மாநகர மக்கள் மொத்த சதவீதத்தில் கல்முனையில் தமிழரும் முஸ்லிம்களும் சமவீதத்தில் உருவாகுவார்கள்.

இனி வருங்காலத்தில் மேயர் போட்டியில் இரு சமூகத்தினரிடையே பலத்த போட்டி நிலவும். கல்முனையில் தமிழரின் சதவீத அதிகரிப்பால் கல்முனை பொதுசந்தை, பேருந்து தரிப்பிடங்களிலும், கடை மற்றும் முச்சக்கர வண்டி பகிர்ந்தளிப்பதில் விகிதசார ரீதியில் அண்ணளவாக வழங்கவேண்டிய சூழ்நிலை உருவாகும்.

இது போன்ற பூச்சாண்டிகளை காட்டி கல்முனைக்குடி மக்களை தங்களது சொந்த இனமான சாய்ந்தமருது மக்களின் நகரசபை கோரிக்கைக்கு ஆதரவு வழங்காமையில் இழுத்தடிப்பு என நீண்டது.

இப்பொழுது எல்லாவிதமான பிரச்சினைகளையும் முறியடித்து சாய்ந்தமருது மக்களின் கோரிக்கை நிறைவேறும் வண்ணம் வர்த்தமானியில் விசேட அறிவித்தல் வெளிவந்துள்ளமையை முன்னிட்டு சாய்ந்தமருது மக்கள், தங்களை தமது ஊர் பிரநிதிகள் ஆளும் அதிகாரம் கிடைத்த வெற்றியில் தற்போது ஈடுபட்டுள்ளார்கள்.

சாய்ந்தமருது நகரசபை உருவாகும் முன்னர் அந்த பகுதியை சேர்ந்த பல உறுப்பினர்கள் கல்முனை மாநகரசபையில் சுயேட்சையாக இயங்கி தங்களது தனித்துவத்தை வெளிக்காட்டினார்கள், தங்களது நகரசபை கோரிக்கை நிறைவேறும் வரை கல்முனைக்குடி அரசியல்வாதிகளின் கைப்பொம்மையாக கல்முனை மாநகரசபையின் எந்த ஒரு செயற்திட்டத்திலும் ஆதரவு வழங்காமல், வரவுசெலவு திட்டம் மற்றும் மேயர், உதவிமேயர் தெரிவிலும் மாநகரசபையினை புறக்கணித்தார்கள்.

இன்று தங்களின் ஒத்துழைப்பு, நீண்டகால கோரிக்கையை வென்று சந்தோசத்தில் இருக்கின்றனர். முஸ்லிம் அரசியல் தலைமைகளிடமிருந்து தமிழ் தலைவர்கள் மண் சார்ந்த, மக்கள் சார்ந்த விடயங்கள் பற்றி தகுந்த பாடம் கற்க வேண்டிய சூழலில் இருக்கின்றனர்.

காலா காலத்திற்கும் அதிகார போட்டியும், அனைத்து விடயங்களும் தங்களூடாகவே நிறைவேற்றப்பட வேண்டும் என்ற எண்ணப்பாடும் என்றும் தமிழ் மக்களின் அரசியல், பொருளாதார உரிமை, கல்வி வளர்ச்சியில் வீழ்ச்சியை ஏற்படுத்தும் என உணராத வகையில் தமிழ் மக்கள் ஏதிலிகளாகவே இருக்க நேரிடும்.

Latest Offers

loading...