கீனி மீனியின் வைன் கிளாஸ் குண்டுகள்! புலிகளுக்கு எதிரான போரில் இராணுவத்தினரின் தந்திரம் என்ன?

Report Print Subathra in கட்டுரை

பிரித்தானியாவின் “கீனி மீனி” என அழைக்கப்பட்ட கே.எம்.எஸ் என்ற தனியார் இராணுவ நிறுவனம் பற்றிய ஒரு நூல் அண்மையில் லண்டனில் வெளியாகியிருக்கின்றது.

Keenie Meenie: The British Mercenaries Who Got Away With War Crimes என்ற இந்த நூலை, Phill Miller என்பவர் எழுதியிருக்கின்றார்.

1970, 80களில், இலங்கை, நிக்கரகுவா, ஓமான் உள்ளிட்ட நாடுகுளில் கிளர்ச்சிகளை ஒடுக்கும் இரகசிய நடவடிக்கைகளில் கீனி மீனி தனியார் இராணுவ நிறுவனம் பங்குப்பற்றியிருந்தது.

ஆயுத வியாபாரத்தை போலவே, இதுவும் ஒரு வகையான பாதுகாப்பு வியாபாரம்தான். பிரித்தானிய இராணுவத்தில் தீவிரவாத முறியடிப்பு, பணய மீட்பு, வேவு உள்ளிட்ட சிறப்பு நடவடிக்கைகளுக்காக உருவாக்கப்பட்டுள்ள S.A.S எனப்படும் Special Air Service என்ற படைப்பிரிவில் இருந்து ஓய்வுபெற்ற அதிகாரிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டதே, KMS என்ற தனியார் இராணுவ நிறுவனம். இது கீனி மீனி என்றும் அழைக்கப்படுகின்றது.

1970, 1980களிலும், உலகின் பல்வேறு நாடுகளில் ஆயுதப் போராட்டங்கள் இடம்பெற்றன. தனிநாடு கோரிய ஆயுதப் போராட்டங்களும் ஏகாதிபத்திய அரசுகளுக்கு எதிரான ஆயுதப் போராட்டங்களும், கம்யூனிச அரசுகளுக்கு எதிரான ஆயுத போராட்டங்களும் தீவிரமாக இடம்பெற்ற காலக்கட்டம் அது.

அத்தனை போராட்டங்களை ஒடுக்குவதற்கு சிறிய நாடுகள் பலவற்றிடம் போதிய ஆயுதங்களோ, ஆளணி வசதிகளோ, சரியான தொழில்நுட்பங்களோ, அதற்குரிய நிபுணத்துவங்களோ இருக்கவில்லை.

தன்னியக்க துப்பாக்கிகள் கூட சரியாக பாவனைக்கு வராத நிலையில் இருந்த நாடுகளில் கிளர்ச்சிகளை முறியடிப்பதற்குத் தேவையான நிபுணத்துவ உதவிகள் ஆலோசனைகளை அளிக்கும் வகையில், கீனி மீனி அமைப்பு செயற்பட்டிருந்தது.

பிரித்தானியாவின் எஸ்.ஏ.எஸ் சிறப்புப் படையில் பணியாற்றிய போது பெற்ற அனுபவங்கள், பயிற்சிகளை கீனி மீனி அதிகாரிகள், கிளர்ச்சிகளை ஒடுக்கும் பணியில் ஈடுபடும் நாடுகளின் படை அதிகாரிகளுடன் பகிர்ந்து கொண்டனர்.

நவீன போரியல் தந்திரங்களையும் தாக்குதல் வியூகங்களையும் கற்றுக் கொடுத்திருந்தனர். ஜே.ஆர்.ஜெயவர்த்தன ஆட்சிக்காலத்தில் ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்த, விடுதலைப் புலிகள் உள்ளிட்ட தமிழ் இயக்கங்களுக்கு எதிரான போரிலும் இந்த கீனி மீனி இராணுவ நிபுணர்கள் பங்கேற்றிருந்தனர்.

தமிழ் இயக்கங்களின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு அப்போதைய அரசாங்கத்தின் வேண்டுகோளை ஏற்று அமெரிக்கா, பாகிஸ்தான், இஸ்ரேல் போன்ற நாடுகள் தமது நிபுணர்களை அனுப்பியிருந்தன.

பிரித்தானியாவில் அப்போது ஆட்சியிலிருந்த இரும்புச் சீமாட்டி என்று அழைக்கப்பட்ட மார்க்கிரட் தட்சரும் இலங்கைக்கு இராணுவ உதவிகளை வழங்கியிருந்தார்.

கீனி மீனி என்ற தனியார் இராணுவ நிறுவனத்தின் ஊடாகவே பிரித்தானியா இந்த போரில் பங்கெடுத்திருந்தது.

1970, 80களில் இலங்கை உள்ளிட்ட நாடுகளில் பிரித்தானியாவின் இராணுவத் தலையீடுகள் பங்களிப்புகள் தொடர்பாக பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகத்தில் இருந்த பெருமளவு கோப்புக்கள் இரகசியமாக அழிக்கப்பட்டு விட்டதாக அண்மையில் குற்றச்சாட்டுக்கள் எழுந்திருந்தன.

கடைசி நேரத்தில் தான் எழுத்தாளர் Phill Miller உள்ளிட்ட சிலர், எஞ்சிய ஆவணங்களை பாதுகாத்தனர்.

அவற்றில் முக்கியமான பல தகவல்கள் இல்லை. குறிப்பாக கீனி மீனி அமைப்பின் பங்களிப்புக்கள் தொடர்பான விபரங்கள், நேரடியாக போரில் பங்கெடுத்தமைக்கான சான்றுகளை பிரித்தானியா மறைத்து விட்டதாக குற்றச்சாட்டுக்கள் உள்ளன.

இலங்கை உள்ளிட்ட நாடுகளில் பிரித்தானியாவின் கீனி மீனி கூலிப்படையினர், போர்க்குற்றங்களை ஊக்குவித்தனர் அல்லது அதற்குத் துணை போயினர் என்ற குற்றச்சாட்டுக்கள் பரவலாகவே முன்வைக்கப்பட்டு வருகின்றன.

Phill Miller எழுதியுள்ள நூலுக்கு கூட கீனி மீனி போர்க்குற்றங்களுடன் தப்பித்த பிரித்தானிய கூலிப்படையினர் என்றே பெயரிடப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் கீனி மீனி, இஸ்ரேலின் மொசாட் போன்ற கூலிப்படையினர் தமிழ் இயக்கங்களின் ஆயுதப் போராட்டத்தை ஒழிப்பதற்காக இலங்கைப் படையினருக்கு இரண்டு விதமான உதவிகளை வழங்கியிருந்தனர்.

முதலாவது பயிற்சிகளை வழங்குதல், இரண்டாவது, தேவையான இராணுவ ஆலோசனைகளை வழங்கி தாக்குதல்களுக்குத் திட்டமிட்டு வழி நடத்துவது.

1984இல் உருவாக்கப்பட்ட பொலிஸ் விசேட அதிரடிப்படை கொமாண்டோக்களுக்கு பயிற்சிகளை கீனி மீனி அதிகாரிகள் தான் அளித்தனர். அவர்களின் பயிற்சிகளும், அவர்களின் ஆலோசனைக்கமைய பெற்றுக் கொடுக்கப்பட்ட ஆயுதங்களும் தான் இன்று வரை விசேட அதிரடிப்படையினரால் பயன்படுத்தப்படுகின்றன.

அதேவேளை, கீனி மீனி அதிகாரிகள் பயிற்சிகளை வழங்குவதற்கு அப்பால் நேரடியாகவே இராணுவ நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருக்கின்றார்கள். தமிழ் போராளி இயக்கங்களுக்கு எதிரான நடவடிக்கைகளில், ஹெலிகொப்டர்களின் துணை விமானிகளாக பணியாற்றியிருக்கின்றார்கள்.

போர் திட்டங்களை வகுத்து செயற்படுத்தும், கட்டளையிடும் பணிகளிலும் ஈடுபட்டிருக்கின்றார்கள்.

அதற்கான ஆதாரங்களையும் The British Mercenaries Who Got Away With War Crimes என்ற தனது நூலில் முன்வைத்திருக்கின்றார் Phill Miller. இலங்கையில் போர் நடவடிக்கைகளில் ஈடுபட்ட அதிகாரிகளிடம் பெறப்பட்ட தகவல்களையும் அவர் இணைத்திருக்கின்றார்.

முதலாம் கட்ட ஈழப்போர் காலத்தில் இலங்கை விமானப்படையினரால் ஜாம் போத்தல் குண்டுகள் பரவலாகப் பயன்படுத்தப்பட்டிருந்தன. அந்தக் குண்டுகளை முதல் முறையாக கீனி மீனி அதிகாரிகள் தான் இலங்கைப் படையினருக்கு அறிமுகம் செய்து வைத்திருந்தனர்.

கைக்குண்டுகளை ஹெலியில் இருந்து வீசினால் அது இடைவழியிலேயே வெடித்து விடும். சில இடங்களில் ரொக்கட் குண்டுகளை துல்லியமாக ஏவ முடியாது. தொலைவில் இருந்தே ஏவ வேண்டும். ரொக்கட் குண்டுகளை ஹெலியில் இருந்து ஏவுவதற்கு செலவும் அதிகம். ஹெலியில் இருந்து துப்பாக்கிச் சூடு நடத்துவதும் அவ்வளவாக பலனளிக்காது.

அவ்வாறான சந்தர்ப்பங்களில் மறை விடங்களின் மீதோ, அல்லது வெளிப்படையான இலக்குகளின் மீதோ, போத்தலுக்குள் அடைக்கப்பட்ட கிரனைட்டுக்களை வீசும் தொழில்நுட்பத்தை இலங்கைப் படையினருக்கு கற்றுக் கொடுத்திருந்தனர் கீனி மீனி கூலிப்படையினர்.

இந்தக் குண்டுகளை மேலிருந்து கீழ்நோக்கி செங்குத்தாக வீச முடியும். ஓரளவுக்கு இதனை துல்லியமாக செய்யலாம். இவை தமிழ்ப் பகுதிகளில் ஜாம் போத்தல் குண்டுகள் என்றே அறியப்பட்டிருந்தன. ஏனென்றால் வீசப்பட்ட எந்தவொரு குண்டையும் யாரும் முழுமையாகப் பார்க்க முடியாது.

வானில் இருந்து வீசப்பட்ட குண்டு கீழே விழுந்ததும், அது அடைக்கப்பட்டிருந்த கண்ணாடிப் போத்தல் உடைந்துவிடும். சில வேளைகளில் குண்டு வெடிக்காமல் போனாலும் கண்ணாடிப் போத்தல் முழுமையாக கிடைக்காது.

கண்ணாடிகள் தான் சிதறிக் கிடக்கும். எனவே தான் அது ஜாம் போத்தலில் அடைக்கப்பட்டதாக இருக்கலாம் என்ற சந்தேகம் இருந்தது. ஜாம் போத்தல் குண்டு என்றே அந்தக் காலகட்டத்தில் அழைக்கப்பட்டது.

ஆனால் அந்தக் குண்டுகள் ஜாம் போத்தலுக்குள் அடைக்கப்பட்டிருக்கவில்லை என்ற உண்மை பல தசாப்தங்களுக்குப் பின்னர் அதனை அறிமுகப்படுத்தியவர்களால் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றது.

கண்ணாடியிலான மதுக்குவளைகளையே கிரனைட்டுகளை வீசுவதற்காக பயன்படுத்தியதாக கீனி மீனி அதிகாரிகள் சாட்சியம் அளித்திருக்கின்றார்கள்.

கிரனைட்டின் பாதுகாப்பு ஊசியை அகற்றி விட்டு வைன் குவளைக்குள் வைத்து அதனை நிலத்தில் வீசியதாகவும் அந்தக் குவளை நிலத்தில் விழுந்து உழைந்ததும் குண்டு வெடிக்கும் வகையில் அந்த நுட்பம் பயன்படுத்தப்பட்டதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

1985 தொடக்கம், 87 வரை கொழும்பில் உள்ள பிரித்தானிய தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக இருந்தவர் லெப்.கேர்ணல் Richard Holworth.

தற்போது பிரான்ஸில் வசிக்கும் இவர் இந்த வைன் கிளாஸ் தந்திரம் பயன்படுத்தப்படுவதை நான் அறிந்திருந்தேன். நான் திருகோணமலைக்குச் சென்று மதிய உணவு சாப்பிட்ட போது அங்கு வைன் கிளாஸ்கள் எதுவும் இருக்கவில்லை என்று கூறியிருக்கின்றார்.

இலங்கையில் போர் முடிவுக்கு வந்து ஒரு தசாப்தம் கடந்த பின்னர் இதுபோன்ற பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வர ஆரம்பித்திருக்கின்றன.

இந்த போர் யுக்தி தமிழ்ப் போராளிகளுக்கு எதிராக மாத்திரம் பயன்படுத்தப்படவில்லை. பெண்களும், குழந்தைகளும் கூட பாதிக்கப்பட்டனர் என்றும் அவர்கள் மீதும் கண்மூடித்தனமாகப் பயன்படுத்தப்பட்டது என்றும் சான்றுகள் முன்வைக்கப்படுகின்றன.

இந்தச் சான்றுகள் போரின் போது பன்படுத்தப்பட்ட மோசமான யுக்திகளை மாத்திரமின்றி அதனைக் கற்றுக் கொடுத்த கூலிகளையும் அம்பலப்படுத்தியிருக்கின்றன.