இராணுவ மயமாக்கப்படும் இலங்கை

Report Print Subathra in கட்டுரை

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவியேற்ற, கடந்த 25ஆம் திகதியுடன் 100 நாட்கள் நிறைவுக்கு வந்த நிலையில் அவரது 100 நாள் செயற்பாடுகள் குறித்த அறிக்கை ஒன்று ஜனாதிபதி செயலகத்தின் ஊடகப் பிரிவினால் வெளியிடப்பட்டிருந்தது.

அந்த அறிக்கையில் ஒன்பது மாகாணங்களிலும் பாதுகாப்புத் தொடர்பான விசேட பொறுப்பை இராணுவத்துக்கு வழங்கும் வரத்தமானி வெளியிடப்பட்டதும் ஒரு சாதனையாக சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருந்த காலத்தில் இருந்து பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் இராணுவத்தினரை பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவத்துவதற்கு அனுமதி அளிக்கும் வகையில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டு வருகிறது.

ஒரு மாதமே செல்லுபடியாகக் கூடிய இந்த உத்தரவை தற்போதைய அரசாங்கமும் புதுப்பித்து வருகிறது. இதனை ஒரு சாதனையாக குறிப்பிட்டிருக்கின்ற அரசாங்கம் சிவில் நிர்வாகப் பணிகளில் இராணுவத்தினரின் தலையீட்டுக்கு அதிக இடமளிக்கப்பட்டிருப்பது குறித்து வேறெந்த விடயத்தையும் குறிப்பிடவில்லை.

ஜனாதிபதி செயலகத்தின் அறிக்கை வெளியிடப்பட்ட நாளன்று, கொழும்பு நகர வீதிகளில் போக்குவரத்தை இலகுபடுத்தும் செயற்பாடுகளில் இராணுவப் பொலிஸாரை ஈடுபடுத்தும் திட்டம் செயற்பாட்டுக்கு வந்தது. அடுத்தடுத்த நாட்களிலேயே விமானப்படை மற்றும் கடற்படையினரும் வீதி போக்குவரத்தை கட்டுப்படுத்தும் பணிக்கு அமர்த்ப்பட்டனர்.

காலை 6 மணி தொடக்கம் 10 மணி வரையிலும் மாலையில் 4 மணி தொடக்கம் 7 மணி வரையிலும் கொழும்பு நகர வீதகளில் இராணுவப் பொலிஸார் போக்குவரத்து கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வாகன ரோந்துப் பணிகளிலும் அவர்கள் ஈடுபடுகின்றனர்.

இந்தச் செயற்திட்டத்தின் மூலம் கொழும்பு நகர வீதிகளில் ஆயுதம் தரிக்காத இராணுவத்தினரின் பிரசன்னம் மீண்டும் அதிகரித்திருக்கின்றது.

கொழும்பு நகரம், காலையிலும் மாலையிலும் போக்குவரத்து நெரிசலால் திணறிக் கொண்டிருப்பது அனைவரும் அறிந்த விடயம் தான். அதிகரித்து வரும் வாகன நெரிசலும் சனத்தொகையும் மாத்திரமின்றி தலைநகரை நோக்கி குவிந்து வரும் மக்களின் இடப்பெயர்வும் கூட இதற்கு முக்கிய காரணங்களாகும்.

இந்தப் போக்குவரத்து நெரிசலைக்கு குறைத்து இலகுபடுத்துவதற்காகவும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்கான திட்டங்களை செயற்படுத்துவதற்கும் அமெரிக்கா எம்.சி.சி கொடையின் மூலம் உதவ முன்வந்திருந்தது.

அந்த எம்.சி.சி கொடையை பெற்றுக் கொள்ள தற்போதைய அரசாங்கம் மறுத்து வருகின்றது.

நாட்டின் இறைமை சுதந்திரத்துக்கு ஆபத்து என்று கூறி சிங்கள மக்களைத் திருப்திப்படுத்தும் கருத்துக்களை வெளியிட்டு அமெரிக்காவுடன் உடன்பாட்டில் கையெழுத்திட மறுத்து வரும் அரசாங்கம் போக்குவரத்தை சீர்படுத்தும் திட்டத்தில் இராணுவத்தினரைக் களமிறக்கியிருக்கின்றது.

கொழும்பு போக்குவரத்து நெரிசல் கொழும்பு வாழ் மக்களுக்கும் அன்றாடத் தேவைகளின் நிமித்தம் கொழும்பு வரும் மக்களுக்கும் பெரும் இடர்ப்பாடாகவே இருந்து வருகின்றது.

இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுகாண அரசாங்கத்துக்கு வழியில்லாத நிலையில் படையினர் மூலம் போக்குவரத்து ஒழுங்குபடுத்தலை மேற்கொள்ள முடிவு செய்துள்ளது. போக்குவரத்து பொலிஸார் செய்ய வேண்டிய வேலை இதுவாக இருந்தாலும் கொழும்பு நகரில் போக்குவரத்தை இலகுபடுத்தும் வேலைத் திட்டத்துக்கு தேவையானளவு பொலிஸார் போதாக்குறையாக இருக்கக் கூடும்.

இந்த விடயத்தில் பொலிஸாரின் கோரிக்கைக்கமைய இராணுவப் பணியில் அமர்த்தப்பட்டதாக தெரியவில்லை.

பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்துக்க அமைய இராணுவத்தினரை பாதுகாப்பில் ஈடுபடுத்த முடியும். அதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்கின்றது. ஆனாலும் பொலிஸ் தரப்பின் கோரிக்கைக்கு அமைவாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரியவில்லை.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆலோசனையின் பேரில் இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சவேந்திர சில்வாவின் வழிகாட்டலுக்கு அமையவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவே செய்தி அறிக்கைகளில் கூறப்பட்டிருக்கின்றது.

பொலிஸாரின் மூலமும் ஏனைய சிவில் அதிகாரிகளின் மூலமும் தீர்க்கப்பட வேண்டிய காரியங்களை இராணுவத்தினரைக் கொண்டு கையாளுகின்ற போக்கு தற்போதைய அரசாங்கத்தில் அதிகரித்திருக்கின்றது. எல்லா மட்டங்களிலும் இராணுவத்தினரின் தலையீடுகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.

கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் ஆயுதங்களுடன் இளைஞர்கள் ஒன்று கூடுவதாக கிடைத்த தகவல் ஒன்றின் பேரில் விடுதி ஒன்றுக்கு நுழைந்து தேடுதல் நடத்திய இராணுவத்தினர் 41 இளைஞர்களை கைது செய்திருந்தனர். இது போன்ற போக்கு வடக்கில் அதிகரித்து வருகிறது.

வடக்கில் இருந்து தென்பகுதிக்கு செல்லும் வாகனங்கள் அண்மைக்காலமாக சோதனையிடப்பட்டு வருகின்றன. தெற்கில் இவ்வாறான சோதனைகள் இடம்பெறுவதில்லை.

வடக்கிலுள்ள மக்கள் இராணுவ சோதனைக்குப் பழக்கப்பட்டவர்கள் என்பதால் இதனை ஒரு பெரிய விடயமாக அவர்களும் எடுத்துக் கொள்ளவில்லை. தமிழ் மக்களின் பிதிநிதிகள் என்று கூறுவோரும் கண்டு கொள்ளவில்லை.

வெறும் எதிர்ப்பு, அறிக்கை, கண்டனங்களுடன் அவர்களின் காரியம் முடிந்து போனதாகவும் கருதுகின்றனர்.

கஞ்சா கடத்தலை தடுப்பதற்காக என்றொரு காரணத்தை முன்வைத்து இந்த சோதனைச் சாவடிகள் நியாயப்படுத்தப்படுகின்றன. அரசியல்வாதிகள் அதிகாரிகள் தமது பதவி நிலை செல்வாக்கைப் பயன்படுத்தி சோதனைச் சாவடிகளில் இறங்கி நடக்காமல் தப்பி விடுகின்றனர்.

சாதாரண மக்கள் தான் அவதிக்குள்ளாகின்றனர். கஞ்சா என்பது வடக்கிற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது இதனைக் காரணம் காட்டினால் யாரும் வாயைத் திறக்க முடியாது என்பது அரசாங்கத்துக்கும் படைத்தரப்புக்கும் நன்றாகவே தெரியும்.

எனவே இந்தச் சந்தர்ப்பத்தை சாட்டாக வைத்துக் கொண்டு வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல வடக்கில் மீண்டும் சோதனைக் சாவடிகளை உருவாக்கியிருக்கின்றது அரசாங்கம்.

அதுபோலவே கொழும்பிலுள்ள மக்களுக்கு போக்குவரத்து நெரிசல் ஒரு பெரும் தலைவலியான விடயம். அதனை தீர்ப்பது என்றால் அவர்கள் எதற்கும் கைத்தூக்கத் தயாராக இருப்பார்கள்.

அந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அரசாங்கம் கொழும்பில் இராணுவத்தினரை பணியில் ஈடுபடுத்தியிருக்கின்றது.

தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுப்பது என்பது அரசாங்கத்தின் பிரதான கொள்கைத் திட்டமாக இருக்கலாம். ஆனால் அரசாங்கத்தின் தற்போதைய போக்கு நாட்டை இராணுவ மயப்படுத்துவதாகவே உள்ளது.

முக்கியமான அரச பதவிகளில் முன்னாள் இராணுவ அதிகாரிகள் பணியில் அமர்த்தப்பட்டிருக்கின்றார்கள். மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, மேஜனர் ஜெனரல் நந்தமல்லவராச்சி, மேஜர் ஜெனரல் கே.பி.எகொடவெல, மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய, மேஜர் ஜி.ஏ.சந்திரசிறி, ஜெனரல் தயா ரத்நாயக்க, அட்மிரல் ஜெயநாத் கொலம்பகே உள்ளிட்ட பல முன்னாள் இராணுவ, கடற்படை அதிகாரிகள் சிவில் நிர்வாக கட்டமைப்புக்களில் முக்கிய பதவிகளில் அமர்த்தப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

இது இராணுவ ஆட்சி நடக்கின்ற ஒரு நாட்டைப் பிரதிபலிப்பதாகவே இருக்கின்ற நிலையில் தான் போக்குவரத்து ஒழுங்குபடுத்தலிலும் இராணுவத்தை ஈடுபடுத்தியிருக்கின்றது அரசாங்கம்.

இது நாடு இராணுவ மயப்படும் நிலையை நோக்கி நகர்வதையே வெளிப்படுத்தியிருக்கின்றது. ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பச்லெட் கூட இந்த நிலை குறித்து கவலை வெளியிட்டிருக்கின்றார்.

பாதுகாப்பு அமைச்சின் கீழ் அல்லது ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகளின் கீழ் மக்களின் செயற்பாடுகளை நகர்த்துகின்ற இலங்கை அரசாங்கத்தின் சமீபத்திய போக்கு குறித்து கவலையடைவதாக அவர் பேரவையில் கூறியுள்ளார்.

நாட்டை இராணுவ மயப்படுத்தும் இந்தப் போக்கு நாட்டு மக்களால் எந்தளவுக்கு ஏற்றுக் கொள்ளப்படும் என்பது பற்றியோ சர்வதேச சமூகத்தினால் எவ்வாறு பார்க்கப்படும் என்பது பற்றியோ அரசாங்கம் அக்கறை கொள்ளவில்லை.

இராணுவப் பின்னணி கொண்ட ஜனாதிபதியின் தலைமையில் உள்ள ஒரு அரசாங்கத்தில் இதுபோன்ற செயற்பாடுகள் ஆச்சரியமல்ல என்பது இப்போது நிரூபணமாகியிருக்கின்றது.