இலங்கையை குறிவைக்கும் இந்தியா

Report Print Subathra in கட்டுரை

கொழும்பில் உள்ள தாஜ் சமுத்ரா விடுதியில் கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி இந்தியா தூதரகத்தின் ஏற்பாட்டில் “இந்தியாவின் பாதுகாப்பு உற்பத்திகள் ”என்ற தொனிப்பொருளில் கருத்தரங்கு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்தியாவில் பாதுகாப்பு உற்பத்தித் துறையில் ஈடுபட்டுள்ள 10 முன்னணி நிறுவனங்கள் பங்கேற்றிருந்தன.

இந்தக் கருத்தரங்கில் பங்கேற்றிருந்த இந்தியாவின் பாதுகாப்புத் தளபாட உற்பத்தி நிறுவனங்கள், தமது உற்பத்திகளில் சிலவற்றை காட்சிப்படுத்தியிருந்தன.இன்னும் சில நிறுவனங்கள் தமது உற்பத்திகள் குறித்த விளக்கப்படங்களை காட்சிப்படுத்தியிருந்தன.

பாதுகாப்புச் செயலர் மேஜர் ஜெனெரல் கமல் குணரத்ன, இராணுவ , கடற்படை, விமானப்படைத் தளபதிகள், பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படை உயர் அதிகாரிகள் 100 பேருக்கு மேல், இந்தக் கருத்தரங்கில் பங்கேற்றிருந்தனர்.

இந்திய தூதரகத்தின் பாதுகாப்பு பிரிவினால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்தக் கருத்தரங்கின் இரண்டாவது கட்டத்தில், இலங்கை பாதுகாப்பு அதிகாரிகளுக்கும், இந்திய பாதுகாப்பு உற்பத்தி நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கும் இடையில், பேச்சுக்கள் மற்றும் கலந்துரையாடல்களும் இடம்பெற்றிருந்தன.

இந்தியா தனது பாதுகாப்பு தளபாட ஏற்றுமதியை அதிகரிக்கும் இலக்குடன் செயற்படுகின்ற நிலையிலேயே, இந்த கருத்தரங்கு ஒழுங்கு செய்யப்ப்படிருக்கிறது.

2017- 2018 காலப்பகுதியில், இந்தியா 4,682 கோடி ரூபாவுக்கு (INR) பாதுகாப்பு உற்பத்திகளை ஏற்றுமதி செய்திருந்தது. இது 2018- 2019, காலபப்குதியில், 10,500கோடி ரூபாவாக அதிகரித்தது.

2024ஆம் ஆண்டில், 35 ஆயிரம் கோடி ரூபாவுக்கு பாதுகாப்பு உற்பத்திகளை ஏற்றுமதி செய்யும் இலக்கை நிர்ணயத்திருக்கிறது இந்தியா.

இலங்கை, அமெரிக்கா, சிங்கப்பூர், ஜேர்மனி, இஸ்ரேல், ஸ்பெய்ன், சவூதி அரேபியா, பின்லாந்து உள்ளிட்ட 42 நாடுகளுக்கு பாதுகாப்புத் தளபாடங்களை ஏற்றுமதி செய்வதற்கான அனுமதிகளை இந்திய நிறுவனங்கள் பெற்றிருகின்றன.

இந்தியாவின் பாதூகாப்புத் தளபாட உற்பத்தி அண்மைக்காலங்களில் வேகமாக வளர்சி கண்டு வருகின்றது.

அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், இஸ்ரேல் போன்ற நாடுகளின் முன்னணி போர் விமானங்கள், ஹெலிகொப்டர்கள், ஆட்டிலறி பீரங்கிகள், தாக்குதல் படகுகள், ஏவுகணைகள் உள்ளிட்டவற்றை தனித்தோ, கூட்டாகவோ, உள்நாட்டில் தயாரிக்ககூடிய உரிமங்களையும் இந்தியா பெற்றிருக்கிறது.

இவற்றின் நவீன போராயுதங்களை இந்தியா ஏற்றுமதி நோக்கில் தயாரிக்க முடியாது. சொந்த தேவைக்காகவே தயாரிக்க முடியும்.

இந்தியா தனது சொந்த தயாரிப்பான ஆயுதங்கள், தளபாடங்களின் ஏற்றுமதியை அதிகரிக்கவே திட்டமிட்டிருக்கிறது.

இதன் மூலம் இந்தியா தனது பொருளாதார பலத்தை பெறுவதற்கும், முன்னணி ஆயுத ஏற்றுமதி நாடு என்ற அடையாளத்தை பெறுவதற்கும் விரும்புகிறது.இந்தியா இன்று உலகின் வல்லமை மிக்க நாடுகளில் ஒன்றாக மாறியிருந்தாலும், தனது சொந்த தேவைக்கான ஆயுத தளபாடங்களில் 45 தொடக்கம் 50 வீதமானவற்றை மாத்திரமே உள்நாட்டில் தயாரிக்கிறது.

ஏனையவற்றை ரஷ்யா, அமெரிக்கா, பிரான்ஸ், இஸ்ரேல் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்தே இறக்குமதி செய்து வருகின்றது.

இந்தியா தனது ஆயுத தேவையின் பாதியை வெளிநாடுகளில் தங்கியிருந்தாலும், முன்னணி ஆயுத ஏற்றுமதி நாடுகளின் வரிசையில் இடம்பிடிப்பதன் மூலம், ஒரு அடையாளத்தை பெறுவதற்கும் விரும்புகிறது.

அவ்வறான நோக்கத்தை அடைவதற்குத்தான், இலங்கை போன்ற நாடுகளுக்கான பாதுகாப்பு உற்பத்தி ஏற்றுமதிகளின் மீது இந்தியா கண் வைத்திருக்கிறது.

இலங்கையின் தற்போதைய அரசாங்கம், தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுகின்றதாக இருப்பது இந்தியாவுக்கு வசதியானது.

ஏற்கனவே, இந்தியாவிடமிருந்து இலங்கை, போர்க்கப்பல்களையும், பாதுக்காப்புடன் தொடர்புடைய பல்வேறு கருவிகளையும் , இறக்குமதி செய்து வருகின்றது.

இந்த நிலையில், இலங்கைக்கு மேலும் பாதுகாப்பு கருவிகளை ஏற்றுமதி செய்யும் நோக்கிலேயே, கொழும்பில் இந்திய பாதுகாப்பு உற்பத்தி நிறுவனங்களின் கருத்தரங்கு ஒழுங்கு செய்யப்படிருந்தது.

இந்தியா 11ஆவது பாதுகாப்பு கண்காட்சியை கடந்த பெப்ரவரி மாதம் முதல் வாரம், லக்னோவில் நடத்தியிருந்தது.

இதில், இலங்கையிலிருந்து பாதுகாப்புச் செயலர் மேஜர் ஜெனெரல் கமல் குணரத்ன, இராணுவத்தளபதி லெப்.ஜெனெரல் சவேந்திர சில்வா ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது, இந்தியா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் பாதுகாப்புத் தளபாட ஏற்றுமதி நிறுவனங்களுடன் பேச்சுக்களையும் நடத்தியிருந்தனர்.

இதற்க்குப் பின்னர், இந்தியா மிகக் குறுகிய காலத்திலேயே, இலங்கையில் பாதுகாப்பு கருத்தரங்கு,கண்காட்சி ஒன்றை ஒழுங்கு செய்திருப்பது இலங்கையைக் கவரும் நோக்கிலேயே ஆகும்.

அதுவும், இலங்கையின் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச பதவியேற்ற பின்னர், புதுடில்லிக்கு மேற்கொண்டிருந்த பயணத்தின் போது, இலங்கைக்கு 450 மில்லியன் டொலர் கடனுதவியை அறிவித்திருந்தார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி.

இந்த கடனுதவியில், 50 மில்லியன் டொலர், இலங்கையின் புலனாய்வு திறனை உயர்த்தும், நோக்கில் பாதுகாப்பு தளபாடங்களை கொள்வனவு செய்வதற்காகவே ஒதுக்கப்பட்டிருந்தது.

அந்த நிதியை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து இன்னமும் முடிவெடுக்கப்பட்டதாக தகவல்கள் இல்லை.

பெரும்பாலும், அந்த கடனுதவியைக் கொண்டு இந்தியாவிலிருந்தே பாதுகாப்புத் தளபாடங்களைக் கொள்வனவு செய்ய வேண்டியிருக்கலாம்.

இவ்வாறான நிலையில், இலங்கையின் ஆயுத ஏற்றுமதி சந்தையின் மீது இந்தியாவின் பாதுகாப்பு உற்பத்தி நிறுவனங்கள் கண் வைத்திருப்பது ஆச்சரியமில்லை.

அதேவேளை, இலங்கையும் தேசிய பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கின்ற நிலையில், நவீன போர்த் தளபாடக் கொள்வனவில் ஆர்வம் கொண்டிருகிறது.

குறிப்பாக, இலங்கை விமானப்படை தற்போது பலமிழந்து போயிருக்கிறது.விடுதலைப்புலிகளுடனான போர்காலத்தில் மிகப்பலமான நிலையில் இருந்த விமானப்படையிடம் தற்போது, போர் விமானங்கள் இல்லை.

கிபிர், மிக் -27 போர் விமானங்களின் செயற்பாட்டுக்காலம் முடிந்த நிலையில், கட்டையில் ஏற்றப்பட்டு விட்டன.

தற்போது சீனாவின் எவ்7 போர் விமானங்களை மாத்திரமே நம்பியிருக்கிறது இலங்கை விமானப்படை.

பாகிஸ்தானிடமிருந்து ஜே.எவ் 17 ரக போர் விமானங்களை வாங்க இலங்கை திட்டமிட்டிருந்த போதும், அதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்து, அந்த கொள்வனவு உடன்பாட்டை தடுத்து விட்டது.

இந்தியா அந்த போர் விமானக் கொள்வனவை தடுத்தமைக்கு, முக்கியமான காரணம், இந்தியாவின் சொந்த தயாரிப்பான தேஜஸ் போர் விமானங்களை இலங்கைக்கு விற்கத் தயாராக இருப்பதேயாகும்.

இந்தியாவின் முக்கியமான பாதுகாப்புத் தளபாட உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான HALதான், இந்த போர் விமானங்களைத் தயாரிக்கின்றது.

இலங்கைக்கு தேஜஸ் போர் விமானங்களை விற்பதற்க்கு இந்தியா முன்னர் ஆர்வம் காட்டிய போதும், தற்போதும் அதே நிலைப்பாட்டில் தான் உள்ளதா என்று தெரியவில்லை.

ஏனென்றால்,இந்திய தூதரகத்தின் பாதுகாப்பு பிரிவினால் நடத்தப்பட்ட கருத்தரங்கில் பங்கேற்றிருந்த இந்திய பாதுகாப்பு உற்பத்தி நிறுவனங்களில், HAL இடம்பெற்றிருக்கவில்லை.

எவ்வாறாயினும் இலங்கையின் விமானப்படை, கடற்படை, இராணுவம் ஆகியவற்றுக்கு மாத்திரமன்றி விசேட அதிரடிப்படை ஆகியவற்றுக்கும் தேவையான பாதுகாப்புத் தளபாடங்களை ஏற்றுமதி செய்வதில் இந்தியா உறுதியாக இருக்கிறது.

போர்க்காலத்தில் இலங்கையின் பாதுகாப்புத் தளபாட தேவைகளின் பெரும் பகுதியை சீனா, பாகிஸ்தான்,ரஷ்யா போன்ற நாடுகளே ஈடு செய்து வந்தன.எனினும் போர் முடிவுக்கு வந்த பின்னர்,இந்தியா அந்த இடத்தை நிரப்புவதற்கு போட்டி போட ஆரம்பித்திருக்கிறது.

இலங்கை கடற்படைக்கு ஆழ்கடல் ரோந்துக்கப்பல்களைக் கட்டிக்கொடுத்த இந்தியா, தனது சொந்த தயாரிப்பான டோனியர் கண்காணிப்பு விமானங்களை விற்கவும் விருப்பம் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

கொழும்பில் இந்தியாவின் பாதுகாப்பு உற்பத்தி நிறுவனங்களின் கருத்தரங்கை நடத்தியதன் மூலம், இலங்கைக்கான ஏற்றுமதி கதவுகளை இன்னும் அகலத் திறப்பதற்கான சமிக்ஞைகளை இந்தியா வெளிப்படுத்தியிருக்கிறது.

இந்தியாவின் இந்த முடிவு சீனாவுக்கும், பாகிஸ்தானுக்கும் எதிர்மறையான சமிக்ஞைகளையே கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.