இந்தியாவின் பராமரிப்புத் தளம்

Report Print Subathra in கட்டுரை

இந்தியா தனது பாதுகாப்புத் தளபாட ஏற்றுமதி சந்தைகளில் ஒன்றாக இலங்கையை மாற்றுவதற்கு திட்டமிட்டு வருகின்றது என்பதை கடந்தவார பத்தியில் குறிப்பிட்டிருந்தோம்.

”இலங்கையை குறிவைக்கும் இந்தியா ” என்ற தலைப்பில் எழுதப்பட்ட அந்த பத்தியில் கூறியிருந்த விடயங்களை வலுப்படுத்தும் வகையிலான செய்தி ஒன்று புதுடெல்லியிலிருந்து கிடைத்திருக்கின்றது.

இந்தியாவின் முன்னணி பாதுகாப்புத் தளபாட உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நிறுவனமான , ஹிந்துஸ்தான் , ஏரோநொட்டிக்கல் நிறுவனம் (HAL) தமது பராமரிப்புத் தளங்களை (maintenance bases) இலங்கை உள்ளிட்ட நான்கு நாடுகளில் நிறுவத்திட்டமிட்டுள்ளது என்பதே அந்தச் செய்தி.

இலங்கை, மலேஷியா, வியட்நாம், இந்தோனேஷியா ஆகிய நான்கு நாடுகளையும் தான், இந்தியாவின் அரசுத்துறை நிறுவனமான HAL இப்போது குறிவைத்திருக்கிறது.

இந்த நிறுவனம் கொழும்பில் கடந்த மாதம் இந்திய தூதரகத்தின் பாதுகாப்பு பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட, பாதுகாப்பு உற்பத்தி நிறுவனங்களில் கண்காட்சி மற்றும் கருத்தரங்கில் பங்கேற்கவில்லை.

அது ஆச்சரியமான விடயமாக கடந்த வாரம் இந்தப் பத்தியில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இந்தியாவின் விமான தயாரிப்பு துறையில் முக்கிய நிறுவனமாக இருக்கும் HAL, இலங்கை விமானப்படையின் தேவைகளை நிறைவேற்றக்கூடிய பாதுகாப்புத் தளபாடங்களை உற்பத்தி செய்கிறது.

இவ்வாறான நிறுவனம், எதற்காக கொழும்பு கண்காட்சியை தவிர்த்தது என்ற கேள்வி பரவலாக இருந்தது.

இந்தநிலையில் தான், HAL நிறுவனம் ஆயுத தளபாட விற்பனைக்கு அப்பால், இலங்கை உள்ளிட்ட நாடுகளில் விநியோக அல்லது பராமரிப்புத் தளங்களை நிறுவுகின்ற திட்டத்தை கொண்டிருக்கிறது என்பது இப்போது உறுதியாகியிருக்கின்றது. HAL நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளரும் தலைவருமான ஆர்.மாதவன்,இதனை உறுதி செய்திருக்கிறார்.

இலங்கை உள்ளிட்ட நான்கு நாடுகளில், விநியோக தளங்களை அமைப்பது குறித்து தமது நிறுவனம் ஆராய்ந்து கொண்டிருப்பதாக அவர் கூறியிருக்கிறார்.

இந்த நான்கு நாடுகளும் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட இராணுவ விமானங்கள்,ஹெலிகொப்டர்களை பயன்படுத்திக் கொண்டிருப்பவை. அந்த விமானங்கள் தற்போது மோசமான நிலையில், பாவனையில் இருந்து அகற்ற வேண்டிய நிலையில் இருக்கின்றன.

இந்த நாடுகளுக்கு இந்திய தயாரிப்பாக போர் விமான மற்றும் ஹெலிகொப்ட்டர்களை விற்க வாய்ப்புள்ளது என்பதை, அவர் மறைக்காமல் கூறியிருக்கின்றார்.

HAL நிறுவனம் ’தேஜஸ்’ போர்விமானம், ’ருத்ரா’ தாக்குதல் ஹெலிகொப்டர், ’துருவ்’ இலகு போக்குவரத்து ஹெலிகொப்டர் ஆகியனவற்றை தயாரித்து வழங்கி வருகின்றது.

இந்த விமானங்கள்,ஹெலிகளை தென்கிழக்காசிய,மேற்காசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் திட்டத்தை இந்திய அரசாங்கம் கொண்டிருகின்றது.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் 5 பில்லியன் டொலர் பாதுகாப்பு ஏற்றுமதி இலக்கை எட்ட வேண்டும் என்றும், அதற்காக இந்தியாவின் முக்கிய இராணுவ தளபாட உற்பத்தியாளர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என்றும் கடந்த மாதம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கூறியிருந்தார்.

இவ்வாறானதொரு நிலையில்தான், மலேஷியா, வியட்நாம்,இந்தோனேஷியா மற்றும் இலங்கையில் பராமரிப்பு வசதிகளை உருவாக்குவது குறித்து ஆலோசித்து வருகிறோம் என தெரிவித்திருகிறார் HAL நிறுவனத்தின் தலைவர் ஆர்.மாதவன்.

இந்த நான்கு ஐரோப்பிய நாடுகளில் பராமரிப்பு வசதிகளை அமைப்பதில், HAL நிறுவனம் கவனம் செலுத்தி வருகிறது.ஆயுத தளபாடங்களை விற்பனை செய்வதற்கும், விற்பனைக்கு பிந்திய சேவைகளுக்கும் இத்தகைய வசதிகள் முக்கியமானதாகும்.

குறிப்பாக,தேஜஸ் போர் விமானங்களை விற்பனை செய்வதிலேயே HAL நிறுவனம ஆர்வம் கொண்டுள்ளது.

இலங்கை விமானப் படையிடம் உள்ள பெரும்பாலான கிபிர்,மிக்போர்விமானக்கள் காலாவதியாகி விட்ட நிலையில், பாகிஸ்தானிடமிருந்து,விமானப்படைக்கு ஜே.எவ் 17 போர் விமானங்களை கொள்வனவு செய்வதற்கு முற்பட்டது, இந்தியாவே அந்த கொள்வனவை தடுத்திருந்தது.

அத்துடன் இலங்கைக்கு தேஜஸ் போர் விமானங்களை வழங்கத் தயாராக இருப்பதாகவும் இந்தியா அறிவித்திருந்தது.

இது தொடர்பான உத்தியோகபூர்வமற்ற பேச்சுக்கள் நடத்தப்பட்டபோதும், இன்னமும் இறுதியான முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில்தான், தேஜஸ் போர் விமானம் போன்ற தமது உற்பத்தியான போர்த்தளபாடங்களை பராமரிப்பதற்கான தளத்தை இலங்கையில் அமைக்கும் திட்டத்தைக் கொண்டிருக்கிறது இந்தியா.

இதன் மூலம், தேஜஸ் போர் விமானம் போன்ற தமது தயாரிப்புக்களை இலங்கைக்கு விற்கப் போவது பெரும்பாலும் உறுதியாகிவிட்டது.

இலங்கையிடம் வேறு எந்த HAL நிறுவனத்தின் போர்விமானங்களும் கிடையாது.எனவே, இலங்கையில் பராமரிப்புத் தளத்தை, அமைக்க வேண்டிய தேவை HAL நிறுவனத்துகுக் கிடையாது.

முதலில் பரமாரிப்புத் தளத்தை அமைத்து விட்டு,இலங்கைக்கு போர் விமானங்களை விற்கலாம் என்று போடப்படும் கணக்கு எந்தளவுக்கு சரியானதென கூறமுடியாது.

அதேவேளை, இலங்கையில் தமது பராமரிப்புத் தளத்தை, அமைப்பதற்கு இந்தியா மட்டும் தான் முற்படுகிறது என்றில்லை.

ஏற்கனவே, திருகோணமலை சீனக்குடாவில், விமானங்களைப் பழுதுபார்க்கும், புதுப்பிக்கும் தளம் ஒன்றை அமைக்க சீனா முற்பட்டிருந்தது.

மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் பதவியிலிருந்த போது சீனா மேற்கொண்ட அந்த முயற்சியை இந்தியாதான் தடுத்து நிறுத்தியது.

இலங்கை விமானப்படையில் சீனப்போர் விமானங்கள் அதிகளவில் இருக்கும் நிலையில், இலங்கையில் பராமரிப்புத்தளத்தை அமைக்கும் அந்த நாட்டின் முடிவு அர்த்தமுடையதாக இருந்தது.

அதுபோலவே, வவுனியா விமானப்படைத்தளத்தில் விமானப் பராமரிப்புத் தளம் ஒன்றை அமைக்க ர்ஷ்யாவும் விருப்பம் வெளியிட்டிருந்தது. அதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவிக்காவிட்டாலும், இலங்கை அரசாங்கம் அனுமதி அளிக்கவில்லை.

இலங்கை விமானப்படையிடம் ரஷ்ய விமானங்கள் பல இருக்கும் நிலையில்,அந்த நாடு விமானப் பாராமரிப்புத்தளத்தை அமைக்க முற்பட்டதிலும் ஆச்சரியமில்லை.

ஆனால் இந்தியத் தயாரிப்பு விமானங்கள் எதுவும், இலங்கையில் பயன்பாட்டில் இல்லாத நிலையில், இலங்கையில் பராமரிப்புத்தளத்தை அமைக்க இந்திய நிறுவனம் முற்படுகிறது.

இதற்கு இலங்கையின் தற்போதைய அரசாங்கம் எந்தளவிற்கு சாதகமான பதிலைக் கொடுக்கும் என்று தெரியவில்லை.

ஆனால்,இலங்கை விமானப்படைக்கு போர் விமானங்களும் தேவைப்படுகிறது. இந்தியாவின் தயவும்,உதவிகளும் தேவைப்படுகின்றன.

இவ்வாறானதொரு நிலையில் இந்தியாவின் கோரிக்கைக்கு கொழும்பு தலைசாய்க்க வேண்டிய நிலை வரலாம்.

எவ்வாறாயினும், இலங்கையில் பராமரிப்புத்தளத்தை இந்தியா அமைத்துகொண்டால்,அது மெல்ல மெல்ல இந்தியவைன் பாதுகாப்பு தளபாடங்களின் பயன்பாட்டு வலைக்குள் இலங்கையை கொண்டுவந்துவிடும்.

இந்தியா விரிக்கின்ற இந்த வலை,கொழும்பின் தற்போதைய அரசாங்கத்துக்கு சிக்கலை ஏற்படுத்தக்கூடியதாக இருப்பினும்,அதிலிருந்து தப்பிக்க வேறெந்த வழியும் இருப்பதாக தெரியவில்லை.