கோவிட்-19: இலங்கையும் அதன் எதிர்காலமும்..

Report Print Nehru Gunaratnam Nehru Gunaratnam in கட்டுரை

எப்போதும் ஒரு நாட்டில் கொவிட்-19 வைரஸ் தொற்றின் போது முதலில் நாட்டிற்கு வெளியில் இருந்து வந்தவர்களே நோய்த் தொற்றுடையவர்களாக அடையாளம் காணப்படுவார்கள். பின்னர் அவர்களுடன் ஏதோ விதத்தில் தொடர்புபட்டவர்கள் நோய்த் தொற்றாளர்களாக அடையாளப்படுத்தப்படுவர்.

இவர்களை கடந்து நோய்த் தொற்று இடம்பெறுகிறதா? என்பது தொடர்ந்தும் அதீத கவனத்தில் கொள்ளப்படும். பொதுவாக மூன்றாம் நாலாம் வாரங்களில், அவ்வாறான தொற்றுடையவர்கள் சமூகத்தில் இருந்து அடையாளம் காணப்படுவது சாத்தியமாகும்.

அதன் பின்னர் அது எவ்வளவு தூரம் அந்நாட்டின் மக்களிடையே பரவ ஆரம்பித்துள்ளது என்பதை, அறிந்து கொள்ள எங்கெல்லாம் நோய்த்தொற்று அதிகம் அடையாளம் காணப்படுகிறதோ, அங்கெல்லாம் அதிக சோதனைகளை செய்வதினூடாக சாத்தியமாகும்.

அவ்வாறு செய்யப்படுமானால், அவ்வாறான இடங்களை முன்கூட்டியே அடையாளம் கண்டு, ஏனைய பகுதிகளில் இருந்து அவற்றை தனிமைப்படுத்துவதினூடாக பரவலான நோய்த்தொற்று பரம்பலைத் தடுத்து விடமுடியும்.

இல்லையேல், நோய்த் தொற்று அந்நாட்டின் பல பகுதிகளுக்கும் ஓரிருவர் மூலம் சென்றுவிட்டாலே, அது பெரும் பரம்பலுக்கு பின்னர் வழிகோலிவிடும். இது தான் இன்று பல நாடுகள் எதிர்கொள்ளும் சவால் நிலையாகும்.

இதையே முதலில் ஒருவர் மூலம், இருவர் அல்லது மூவருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டால், அவ்வாறு பரப்பப்படும் நோய்த்தொற்று முதல் மாத முடிவில் 244 பேரையும், அதுவே இரண்டாம் மாத முடிவில் 59604 பேரையும் தொற்றும் வாய்பிருக்கும் என்று, பலமுறை என் பதிவுகளில் குறிப்பிட்டிருந்தேன்.

இவ்வாறான பரம்பல் அதிகரிப்பை அதீத கவனத்தில் கொண்டியங்கும் அரசுகள், அந்த பரம்பல் வேகத்தை கட்டுக்குள் வைத்து நகர முடியும். ஆனால் தனது மூன்றாவது வாரத்தில் உள்ள இலங்கை, தற்போதே சமூகப் பரம்பலை அதிகரித்த எண்ணிக்கையில் ஏற்கனவே வெளிப்படுத்தியுள்ள நிலையில், அது பரந்த சோதனைகளை செய்ய வேண்டும் என இத்துறைசார் வல்லுனர்கள் இலங்கை அரசை வலியுறுத்துகின்றனர்.

ஆனால் இலங்கை அம்முன்னெடுப்பை இதுவரை செய்யவில்லை எனவும் விசனம் தெரிவிக்கின்றனர். கீழே உள்ள வரைபின் மூலம், ஏனைய நாடுகள் இலங்கைக்கு தரும் பாடம் என்ன என்பதை அவர்கள் கோடிட்டுக் காட்டுகின்றனர்.

இதில் குறிப்பிட்டுள்ள ஏனைய நாடுகளான அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், ஜேர்மனி, இங்கிலாந்து என்பன தமது எட்டாவது வாரத்தின் பல்வேறு நாட்களிலும், தென்கொரியா தனது 9ஆவது வாரத்திலும், தற்போது உள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தனது மூன்றாவது வாரத்திற்குள் பயணிக்கும் இலங்கையின் பயணம், கொவிட்-19 விடயத்தில் எவ்வாறு அமையப்போகிறது என்பதே, வருகின்ற நாட்கள் வாரங்கள் சொல்லப்போகும் செய்தியாகும்.

வெறும் ஊரடங்கு மாத்திரம் சாதித்துவிடுமா? இல்லையேல், அதையும் கடந்து வல்லுனர்கள் வலியுறுத்துவது போல் பல நடவடிக்கைகள் சமகாலத்தில் முன்னெடுக்கப்பட்டேயாக வேண்டுமா? சமூகப்பரம்பல் ஏற்கனவே வெளிப்பட்டுள்ள நிலையில், அவ்வப்போது ஊரடங்கை தளர்த்தி, மக்களை வெளியில் கொண்டு வந்து, நெருக்கமாக கூடலுக்கு அனுமதித்து, நோய்த் தொற்று பரம்பலுக்கு வழியமைத்துவிட்டு, பின்னர் அடைத்துவிடுவது சரியான முறைமையா? என்பதெல்லாம் வரும் வாரங்கள் வெளிப்படும் விடயங்கள் என்றாலும், அவ்விடயங்கள் கூட வெளிப்படைத்தன்மையுடன் அணுகப்படுமா? என்பதும் பெரும் கேள்வியே?