கொரோனாவின் அச்சுறுத்தலும், மக்கள் எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியும்!

Report Print Gokulan Gokulan in கட்டுரை
206Shares

இன்று நாம் எங்கு நிற்கிறோம், எங்கே போகப்போகிறோம் இன்றைய நெருக்கடிக்குள் இதுபற்றி சிந்திப்பதும் செயற்டுவதும் மிக அவசியமானது.

தேசிய பொருளாதாரக் கொள்கையின் கீழான அரசாங்கத்தின் பொருளாதார அமுலாக்கல் இலங்கையின் வெவ்வேறு பிரதேசங்களில் நெருக்கடி நிலைக்கேற்ப வேறுபட்டுக் காணப்படுகிறது.

நாளாந்த வாழ்வுக்கான உணவும், அதன்கிடைப்பு நிலையும், அதன் விநியோக மையங்களும் சுறுசுறுப்பாக இயங்கினாலும் அதை கொள்வனவு செய்யும் நுகர்வோரது கொடுக்கல் வாங்கலுக்கான பணமும், அதன் கிடைப்பு நிலையும் பல குழப்பங்களை ஏற்படுத்தியிருப்பதை பத்திரிகைகள் வாயிலாக அறியமுடிகின்றது.

அவரவர் தொழில் நிலைகளுக்கேற்ப நாளாந்த, மாதாந்த வருமான வேறபாடுகள் வாழ்கைமுறை வேறுபாடுகளையும், வாழ்க்கைத்தர வேறுபாடுகளையும் குறிப்பிட்ட ஒரு கிராமத்திலோ அல்லது பிரதேசத்திலோ காணக்கூடியதாகவுள்ளது இங்கு எல்லா மக்களதும் நாளாந்த வாழ்வை தீர்மானிக்கும் காரணிகளை இன்றைய காலகட்டத்தில் பிரித்தறிவதற்கான வாய்ப்பு அதிகமாகவுள்ளது.

அன்றாட உணவும் அடுத்த வேளைக்கான உணவும் நிச்சயப்படுத்தப்படுவதே வாழ்வின் முதல் இலக்காக இருக்கும் குடும்பங்களின் வாழ்க்கை எக்காலத்திலும் நிச்சயமற்றதொன்றாக இருப்பது இயல்பானதொன்று.

இது நாடுகளின் பொருளாதாரத்தில் தொடர்ந்திருப்பது ஆரோக்கியமானதல்ல. உறுதியான பொருளாதாரக் கட்டமைப்பொன்றினூடாக இந்நிலை மாற்றியமைக்கப்பட வேண்டும். அதுவே பொருளாதார நீதி.

இந்நெருக்கடி நிலையில் நுகர்வோர் தெரிவுக்கு சந்தர்ப்பமில்லாததோடு நுகர்வோர் தெரிவை சாதகமாக்கிக் கொள்ளும் உற்பத்தியாளருக்கும், உற்பத்திசெய்யும் சந்தர்ப்பத்தையும் மறுப்பதாக அமைந்துவிடுகிறது.

இது நெருக்கடிக்கால அரச கட்டளைப் பொருளாதாரமாக மாறியிருக்கிறது. இது தவிர்க முடியாததாக இருக்கிறது. இந்நிலை தொடர்ந்தால் மக்கள் ஜனநாயகத்தில் மக்களின் அடிப்படை மனித உரிமை மறுப்பாக அமைந்துவிடும்.

இதுவே வினைத்திறனற்ற பொருளாதார நடத்தைக்கு வழிசமைத்துவிடும். இது ஒரு அவசர காலநிலையில் மக்களின் அடிப்படைத் தேவையை நிறைவு செய்வதற்காக எடுக்கப்பட்ட தற்காலிக ஏற்பாடாயின் இயல்பு நிலைக்கு திரும்பும்போது பழைய நிலைக்கு பொருளாதாரம் செயற்பாடுகள் வருவது என்பது இலகுவானதொன்றல்ல.

எல்லா செயற்பாடும் புதியவடிவம் பெறக்கூடிய சந்தர்ப்த்திற்கான வாய்ப்பே அதிகம் உண்டு. இத்தகைய சூழலில் உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தல் பங்கீட்டு போக்குவரத்து சார்பாக தோற்றம் பெறும் வேலைவாய்ப்பும் நிறுவன ரீதியாக அல்லாமல் தேவைக்கு ஏற்றவகையில் உருவாகும் சந்தர்ப்பங்களே உண்டு.

இதனால் கூலி சம்பளங்கள் உரியளவில் இல்லாமல் அன்றாட சூழ்நிலைக்கேற்பதாக வழங்குவதாக அமைந்துவிடும். அரசாங்கம் தனது கூலிக்கொள்கையை வலியுறுத்தினாலும் முறைசாராததும் நிறுவன ரீதியற்றதுமான தொழில்களில் தொழிலாளர் உறுதியான கூலியையோ, சம்பளத்தையோ பெறமுடியாது.

பலசந்தர்ப்பங்களில் தொழில்கள் நடைபெறுவதற்கான சூழ்நிலை இல்லையென குறிப்பிட்டு வேலைவாய்பு இல்லையென திருப்பி அனுப்பப்படும் சூழ்நிலையே அதிகம் காணப்படும். இதனால் தொழில் வாய்பை இழந்த தொழிலாளிக் குடும்பங்கள் வறுமைக்குள் தள்ளப்படுவதையே காணக்கூடியதாகவுள்ளது.

இம்மக்களது பிரச்சினையைத்தீர்க்க நிவாரணங்கள் வழங்கி அவர்களை தங்கி வாழ்வோராக அடையாளப்படுத்துவதே இறுதித்தீர்வாக அமைந்துவிடுகின்றது.

சீராக கட்டமைக்கப்பட்ட பொருளாதாரங்களில் சாதாரண நிலைகளில் தொழிலாளர்களுக்கான காப்புறுதி திட்டங்களூடாக வேலை தேடும் காலங்களிலும் இடர்காலத்திலும் காப்புறுதி வருமானத்தைப் பெறக்கூடியதான ஏற்பாடுகள் இருப்பதால் தொழிலாளர் சமூகத்தில் கௌரவமாக நடாத்தப்படுவதோடு தங்கியிருப்போர் என்ற வகைப்படுத்தலிருந்தும் விடுபடுகின்றனர்.

தனியார்துறை நிறுவனங்கள் பல சமயாசமய தொழில்வாய்ப்பினை வழங்கி இச்சிக்கலில் இருந்து விலகிச் செல்கின்றன. இது வறுமையையும் பட்டினிச்சாவையும் எற்படுத்திவிடும்.

ஏற்கனவே சேமிப்பை வைத்திருப்பவர்களும் சொத்து உடையவர்களும் இன்றைய பேரிடரிலிருந்து தப்பினாலும் இது தற்காலிகமானதே கொரோனாவின் தாக்கத்தால் உலகப்பொருளாதாரமே ஈடாடிக் கொண்டிருப்பதால் உலகின் பல தொழில்துறைகள் மூடவேண்டிய கட்டத்திற்கு வந்துள்ளதை அபிவிருத்தியடைந்த நாடுகளில் காணக்கூடியதாக உள்ளது.

கப்பல் சேவைகள், விமான சேவைகள், வங்கிச் சேவைகள், வர்த்தக சேவைகள் முடங்கிப்போகும் சூழ்நிலை காணப்படுகிறது.

இதனால் இறக்குமதி, ஏற்றுமதி மந்தமடைவதோடு உலகின் உற்பத்திமட்டங்களிலும் வீழ்ச்சி காணப்படும்.

இது உலகின் வர்த்தகத்தில் பாதிப்பை ஏற்படுத்துவதால் இலங்கை போன்ற சிறிய நாடுகளால் இவ்வாறான சவால்களை எவ்வாறு எதிர் கொள்ளமுடியும் என்பது விடைகாண முடியாததொன்றாக இருக்கும். அரசியல் வாதிகளாலும் விடைசொல்லமுடியாது என்பதே யதார்த்தம்.

கொடிய நோய்த் தொற்றிலிருந்தும் அதிகளவான இறப்பிலிருந்தும் மக்களைக் காப்பாற்றும் முக்கிய கடமையை செய்துவரும் அரசாங்கம் மக்களிற்கான உணவை வழங்கி பட்டினிச்சாவிலிருந்து காப்பாற்றும் பாரிய பணியின் மத்தியில் மக்களை உற்பத்தியில் ஈடுபட வைப்பதும் பொரும் சவாலாக உள்ளது.

இருந்தபோதும் வறிய நாடுகள் தமது பாரம்பரிய தொழில்நுட்பத்துடனான பிழைப்பூதிய உற்பத்திமுறைக்கு திரும்பவேண்டிய சந்தர்ப்பங்கள் ஏற்படுகின்றது.

விவசாயம், மீன்பிடி, சிறுகைத்தொழில், குடிசைக் கைத்தொழில், கால்நடைவளர்ப்பு, உணவு பதனிடுதல் போன்ற குடும்ப தொழில்களில் புத்தாக்க செய்முறைகளையும் (Invention, innovation, value addition) பெறுமதிசேர் உற்பத்தி நுட்பங்களையும் புகுத்தி விரைவான பொருளாதார செயற்பாட்டில் ஈடுபடவேண்டியது மிக அவசியமானது.

இதற்கு மக்கள் அனைவரும் தங்களைத் தயார்ப்படுத்த வேண்டும். தமிழர்களாகிய எமக்கு இது புதிதல்ல. எங்கள் வாழ்வியல் வடிவமே இதுதான்.

பழைய உற்பத்தி நுட்பத்தை நிலம், நீர், கடல், விலங்கு வேளாண்மை, தொழில்களில் உச்சவளப் பயன்பாட்டைத் தரக்கூடிய வகையில் மாற்றி அமைத்து தற்சார்பு நிலையில் அதாவது புதிய முறையில் யாரிடமும் தங்கி நிற்காது பழைய பிழைப்பூதிய நிலைக்கு திரும்பவும் செல்லாமல், புதியதும் உறுதியானது மன மாற்று வழிமுறை ஒன்றை தெரிவு செய்வதே இன்றைய சவாலை எதிர்கொள்ள நாம் முன்வைக்கும் முன்மொழிவுகளாகும்.

எங்கள் பாரம்பரிய உற்பத்தி நுட்பத்தில் மனித உழைப்பு முக்கியமானது. குறிப்பாக குடும்ப உழைப்பின் பயன்பாட்டில் குடும்பத்தில் உள்ள சகலரும் வயது மற்றும் அனுபவ வேறுபாடுகளுக்கேற்ப தங்கள் பங்களிப்பை வழங்குவர். இதில் பெண்கள், சிறுவர்களும் உள்ளடங்குவர். இங்கு செயற்படாத உழைப்பைக் காணமுடியாது.

நவதாராளமய பெருளாதாரத்தில் உட்புகுந்த முதலீடு, இலாபம், வட்டிக்கடன், நுண்நிதி கடன் அட்டை, சிறிய நடுத்தர கைத்தொழில் முதலீடுகள், வெளிநாட்டு நேரடி முதலீடுகள், பல்தேசியக் கம்பனிகளின் வர்தக நடவடிக்கைகள், கடன் அட்டை போன்றவை பொருளாதாரத்தை விரைவுபடுத்தியது.

இச்செயற்பாட்டில் மாட்டிக்கொண்ட வறிய நாடுகளின் மக்கள் படும் அவலங்கள் துன்பங்கள் அளவிடமுடியாததொன்றாக இருப்பது இன்று காணக்கூடியதொன்றாவுள்ளது.

கொரோனா வைரஸூற்குள் சிக்கித்தவிக்கும் மக்கள் தாங்களே தங்களைக் காப்பாற்ற வழிமுறைகளைத் தேடவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.

எப்படி எம்முன்னோர்கள் கொள்ளை கோதாரி கொலரா போக்கறுந்து போகும் நோய்களிலிருந்தும் பிரதேச ரீதியான பொருளாதாரத் தடையிலிருந்தும் தப்பிப்பிழைத்து வந்தனரோ அதேபோல் இன்று நாமும் தப்பிப்பிழைக்கும் survival economy பொருளாதார முறைக்கூடாக தற்சார்பு நிலையில் சுயம்சார்ந்து வாழ்வதே இன்நெருக்கடிக்கு தீர்வாக அமையும்.

வி.பி.சிவநாதன்

பொருளியல் பேராசிரியர்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்