உயிர்த்த ஞாயிறு தாக்குதலை மக்கள் இன்னும் மறக்கவில்லை...

Report Print V.T.Sahadevarajah in கட்டுரை
136Shares

முழு இலங்கைத் திருநாட்டையே உலுக்கிய உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் ஒரு வருடமாகிறது.

கொழும்பு, மட்டக்களப்பு, நீர்கொழும்பு பிரதேச தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகள் போன்றவற்றை இலக்கு வைத்து சஹ்ரான் குழுவினர் என்றழைக்கப்படும் ஒரு தீவிரவாத கும்பலால் நடாத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் சுமார் 260 பேர் பரிதாபமாகப் பலியானார்கள். கோடிக்கணக்கான சொத்துக்கள் சேதமாயின.

குறிப்பாக தமிழ் கிறிஸ்தவர்களை இலக்கு வைத்து தமிழ் ஆராதனை நிகழ்த்தப்பட்ட தேவாலயங்களில் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்பட்டது.

அத்தாக்குதலில் பலியான குடும்பங்களின் உறவுகள், ஏன் ஒட்டுமொத்த கிறிஸ்தவ மக்களும் இந்த தாக்குதல் சம்பவம் பற்றி இன்னும் மறக்கவில்லை.

அவர்கள் மனங்களில் அன்றைய தினம் இடம்பெற்ற தாக்குதல் அதனைத் தொடர்ந்த மரணங்கள் அடக்க நிகழ்வுகள் சோக அலறல்கள் வேதனைகள் என்பன இன்றும் நிழலாடுகின்றன.

உயிர்த்த ஞாயிறு ஆராதனையில் கொல்லப்பட்ட அந்த உயிர்களை கர்த்தர் ஏற்றுள்ளார். எனவே யாரும் எந்த வன்முறையிலும் ஈடுபடத்தேவையில்லை மன்னியுங்கள் என்ற உயர்தத்துவத்தை உரிய வேளையில் கூறி பெருங்கலவரத்தை தடுத்த இலங்கையின் அதிமேற்றிராணியார் மல்கம் ரஞ்சித் ஆண்டகை அவர்களையும் இத்தருணத்தில் மறக்கமுடியாது.

ஆண்டகையின் அந்த வார்த்தைகளுக்கு இலங்கையின் ஒட்டுமொத்த கிறிஸ்வ சமுகமும் கட்டுப்பட்டு அமைதியையும் பொறுமையையும் கடைப்பிடித்து ஏனைய சமூகங்களுக்கு முன்மாதிரியாக நடந்துகொண்டமை பாராட்டுக்குரியது.

ஓராண்டு நிறைவில்....

அந்த துர்ப்பாக்கிய சம்பவம் இடம்பெற்ற பின்பு முழு இலங்கையும் ஒருவித பதற்றத்துக்குள்ளாகியதும் தொடர்ந்து நாட்டின் பல பாகங்களிலும் அந்த தீவிரவாதக் கும்பலின் உறுப்பினர்கள் கைதுசெய்யப்பட்டமையும் துப்பாக்கிகள் வெடிபொருட்கள் பரவலாக கண்டுபிடிக்கப்பட்டமையும் ஊடகங்களில் பிரதான இடங்களை பிடித்தன.

தொடர்ந்து பாடசாலைகள் இழுத்து மூடப்பட்டமையும் ஊரடங்கு உத்தரவு பரவலாக அமுல்படுத்தப்பட்டமையும் அனைவரும் அறிந்த விடயங்களே.

நாட்டில் ஒருவித பீதி ஒருசில மாதங்கள் நீடித்தன. பின்னர் பாடசாலைகளுக்கு இராணுவ பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு திறக்கப்பட்டன. அதனுடன் இணைந்து பல பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன.

கிழக்கில் குறிப்பாக மட்டக்களப்பு சீயோன் தேவலாயத்தில் இடம்பெற்ற தற்கொலைத் குண்டுத்தாக்குதலில் 31 பேர் பலியாகினர். அவர்களுள் 6 பேர் அம்பாறை மாவட்ட பொத்துவில் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள்.

இந்தநிலையில் அக் கொடுர தாக்குதல் இடம்பெற்று ஒரு வருடமாகின்ற இந்த நாளில் அதற்கான நினைவுகூரும் நிகழ்வுகளைக்கூடச் செய்யவேண்டாமென அதிமேற்றிராணியார் அவர்கள் மீண்டும் ஒரு வேண்டுகோளை விடுத்திருப்பது பாராட்டுக்குரியது.

கொரோனா நெருக்கடி நிலைமை காரணமாக இத்தீர்மானத்தை அவர் விடுத்திருக்கிறார். அதன் காரணமாக தேவாலயம் சென்று அந்த அஞ்சலி நினைவு கூரும் நிகழ்வை நடத்தாமல் அவரவர் வீடுகளில் சமூக இடைவெளி உள்ளிட்ட கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை கடைப்பிடித்து எளிமையாக அனுஷ்டிக்கவுள்ளனர்.

கிறிஸ்தவ சமூகத்தினரின் உணர்வலைகளை அறியச்சென்றபோது அவர்கள் இன்னும் அப்பீதியிலிருந்தும் வேதனையிலிருந்தும் இன்னும் விடுபடவில்லையென்பது தெரிகிறது.

இது தொடர்பில் கல்முனை பாஸ்ரர் வண்.கிருபைராசாவிடம் கேட்டபோது அவர் கீழ்க்கண்டவாறு கூறியுள்ளார்.

மக்களைப் பொறுத்தவரை இன்னும் பய பீதியில்தானுள்ளனர். தேவாலயத்தில் கூடுகின்ற போது மற்றுமொரு தாக்குதல் இடம்பெற்றுவிடுமோ என்று அஞ்சுகின்றனர்.

ஓராண்டு நிறைவின்பின்னர் மற்றுமொரு தாக்குதல் சம்பவத்திற்கு திட்டமிட்டுள்ளது அம்பலத்திற்கு வந்ததாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் நேற்றுமுன் தினம் கூறியுள்ளார்.

ஏலவே பல நூறு உயிர்களைப் பலிகொடுத்து அந்த ரணகளம் ஆறுமுன்பு மற்றுமொன்றா? என்று அவர்கள் மேலும் பீதியடைந்துள்ளனர்.

அந்த வேதனைகளை வலிகளை சுமந்திருக்கின்ற அதேவேளை ஓராண்டு நிறைவு நினைவு நிகழ்வுகளை மனத்தின் படி ஆலயத்தில் நடத்தமுடியாத துர்ப்பாக்கிய நிலை நிலவுவது மேலும் வேதனையளிக்கின்றது.

சம்பவம் இடம்பெற்று ஒரு வருடமாகின்ற போதிலும் இன்னும் அரசாங்கம் நீதியான தீர்வினைத் தரவில்லை என்பது வேதனையாகவுள்ளது. இன்னும் உரிய தரப்பினரை கண்டுபிடிக்கவுமில்லை.

தண்டனை வழங்கவுமில்லை. இந்தவாரத்தில் மட்டும் ஒப்புக்கு ஓரிருவரைக் கைது செய்துள்ளனர். கடந்த ஆட்சிக்காலத்தில் இத்தாக்குதல் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட தேவாலயங்கள் மற்றும் சிலவீடுகள் திருத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.

காட்டிக்கொடுத்த சிலருக்கு பாராட்டு பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன. இதுதவிர தாக்குதல் நடத்தியவர்கள் கைதுசெய்யப்பட்டு நீதியான விசாரணை நடத்தி சட்டத்தின்முன் நிறுத்தப்படவில்லை.

கிறிஸ்தவ சமுகத்தை திருப்திப்படுத்தும் வகையில் எவ்வித பரிகாரமும் மேற்கொள்ளப்படவில்லை என்பது கவலைக்குரியது.

அதனிடையில் இதனை இனவாத கண்ணோட்டத்தில் பார்க்கத்தலைபட்டுள்ளனர். தாக்குதலுக்கான சூத்திரதாரிகள் சம்பந்தப்பட்டவர்கள் எந்தச்சாதியாகவிருந்தாலும் எந்த மதத்தினராகவிருந்தாலும் சட்டத்தின்முன் சமமானவர்கள்.

அவர்கள் தண்டிக்கப்படவேண்டியவர்கள். எனவே இதுவிடயத்தில் இன மத ரீதியிலான பார்வை அவசியமில்லை.

எனவே ஓராண்டு கழிந்த பின்பாவது பாதிக்கப்பட்ட கிறிஸ்தவ சமூகம் திருப்பதியடையும் வண்ணம் அரசாங்க உரிய நடவடிக்கையை மேற்கொளள்ள வேண்டும் என்பது ஆதங்கமாகும் என்று கூறியுள்ளார்.

அதேவேளை காரைதீவு எய்ம்ஸ் தேவாலயத்தின் போதகர் வண.ஏஸ்.கிறிஸ்தோபர் இது குறித்து கூறுகையில்;

அந்த தாக்குதலை எமது மக்கள் இன்னும் மறக்கவில்லை. அவர்கள் மனங்களிலிருந்து அதனை எளிதில் அகற்றிவிட முடியாது. ஆழப்பதிந்துள்ளது.

அவர்கள் மரித்த வேதனை துன்பம் துயரம் ஒரு புறம் அதன் ஓராண்டுநினைவு நிகழ்வைக்கூட நடத்த முடியாதது மற்றுமொரு துன்பியல் நிகழ்வாகும்.

மட்டு.தேவலாயத்தில் குண்டுத்தாக்குதலுக்கிலக்காகி அண்மையில் மரணித்த ஒரு சகோதரியுடன் மொத்தமாக 31பேர் மரணித்திருப்பது தெரிந்ததே.

இன்று நாம் அம்பாறை மாவட்டத்திலிருந்து சீயோன் தேவாலயத்திற்குச் சென்று மரித்த ஆறுபேர் சார்பில் பொத்துவிலில் பிரதான மாவட்ட நினைவுகூர் வைபவத்தை நடாத்த திட்டமிட்டிருந்தோம்.

எனினும் ஆண்டகையின் வேண்டுகோளுக்கமைவாகவும் கொரோனா நிலை காரணமாகவும் அதனைச் செய்யவில்லை.

எது எப்படியிருப்பினும் இன்றைய நாள் எமது வாழ்வில் மறக்கமுடியாது என்பது மட்டும் உண்மையென்பதை பலத்த வலிகளுடனும் வேதனைகளுடனும் தெரிவிக்கிறேன் என்று கூறியுள்ளார்.

ஆம். ஒட்டுமொத்த கிறிஸ்தவ மக்கள் மட்டுமல்ல முழு மனிதகுலமும் அவர்களோடு இணைந்து மரித்த ஜீவன்களின் ஆத்ம சாந்திக்காய் பிரார்த்திப்பதே இன்றுள்ள ஒரேவழி.