மட்டக்களப்பில் தங்கள் பிரதிநிதித்துவத்தை இழந்த முஸ்லீம்கள்!

Report Print Gokulan Gokulan in கட்டுரை

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் பிரதிநிதித்துவம் பறி போகிறது என்ற கவலை பெரும்பாலான தமிழ் மக்களிடம் காணப்படுகிறது. தமிழ் பிரதிநிதித்துவம் பறி போவதற்கு வேறு இனமக்கள் காரணமல்ல. தமிழர்கள் தான் காரணம்.

தமிழர்கள் மத்தியில் எழுந்துள்ள இக்கவலையை போல 1970ஆம் ஆண்டு முஸ்லீம் மக்கள் பெரும் கவலையடைந்தார்கள்.

1970ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட 4 உறுப்பினர்களும் தமிழர்கள்தான். முஸ்லீம் மக்களுக்கு அத்தேர்தலில் ஒரு பிரதிநிதி கூட இல்லாமல் போய் விட்டது.

1970ஆம் ஆண்டு தேர்தல் தொகுதி அடிப்படையில் நடைபெற்றது.

தமிழர்கள் நூறு வீதம் வாழும் பட்டிருப்பு தொகுதியில் ஐக்கிய தேசியக்கட்சியை சேர்ந்த எஸ்.தம்பிராசா வெற்றி பெற்றிருந்தார். தமிழரசுக்கட்சியை சேர்ந்த மு.இராசமாணிக்கம் தோல்வியடைந்திருந்தார்.

கல்குடா தொகுதியில் ஐக்கிய தேசியக்கட்சியை சேர்ந்த கே.டபிள்யூ.தேவநாயகம் வெற்றி பெற்றிருந்தார். தமிழரசுக்கட்சி சார்பில் போட்டியிட்ட பி.மாணிக்கவாசகம் தோல்வியடைந்திருந்தார்.

இரண்டு இனங்கள் வாழும் தொகுதிகள் இரண்டை அங்கத்தவர் தொகுதிகளாக காணப்பட்டது.

கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு பொத்துவில், மூதூர் இரட்டை அங்கத்தவர் தொகுதிகள்.

மட்டக்களப்பு இரட்டை அங்கத்தர் தொகுதியில் முதலாவது உறுப்பினராக தமிழரும், இரண்டாவது உறுப்பினராக முஸ்லீமும் தெரிவாவது வழமை. இரண்டை அங்கத்தவர் தொகுதியின் நோக்கமும் அதுதான்.

ஆனால் 1970ஆம் ஆண்டு தேர்தலில் முஸ்லீம் மக்களின் வாக்குகள் பிரிந்ததால் மட்டக்களப்பு இரட்டை அங்கத்தவர் தொகுதியில் தெரிவு செய்யப்பட்ட இருவரும் தமிழர்கள்.

மட்டக்களப்பு தொகுதியின் முதலாவது நாடாளுமன்ற உறுப்பினராக தமிழரசுக்கட்சியை சேர்ந்த செல்லையா இராசதுரை தெரிவு செய்யப்பட்டார். இரண்டாவது நாடாளுமன்ற உறுப்பினராக சுயேச்சையாக போட்டியிட்ட இராஜன் செல்வநாயகம் வெற்றி பெற்றார்.

ஐக்கிய தேசியக்கட்சியில் மாக்கான் மார்காரும், சிறிலங்கா சுதந்திரக்கட்சியில் ஏ.ரகுமானும் போட்டியிட்டனர். இவர்கள் இருவரும் முஸ்லீம் வாக்குகளை பிரித்ததால் முஸ்லீம்களுக்கு கிடைக்க வேண்டிய இரண்டாவது நாடாளுமன்ற உறுப்பினர் பிரதிநிதித்துவம் கிடைக்காமல் போனது.

இரட்டை அங்கத்தவர் தொகுதியின் நோக்கமே அந்த ஆண்டு தேர்தலில் நிறைவேறாமல் போய்விட்டது.

1970ஆம் ஆண்டு தேர்தலில் மட்டக்களப்பு தொகுதியிலிருந்து இரு தமிழர்களும், கல்குடா பட்டிருப்பு தொகுதிகளிலிருந்து தலா ஒரு உறுப்பினருமாக 4 தமிழர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.

அதன் பின்னர் 1977ஆம் ஆண்டு மட்டக்களப்பு இரட்டை அங்கத்தவர் தொகுதியில் முதலாவது நாடாளுமன்ற உறுப்பினராக செல்லையா இராசதுரை அவர்களும் இரண்டாவது உறுப்பினராக பரீத் மீரா லெப்பை அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.

மாவட்ட விகிதாசார தேர்தல் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் 5 உறுப்பினர்களை கொண்ட மட்டக்களப்பு மாவட்டத்தில் வாக்காளர் வீதத்தின் படி 4 ஆசனங்கள் தமிழர்களுக்கு கிடைக்க வேண்டும். ஒரு ஆசனம் முஸ்லீம்களுக்கு கிடைக்க வேண்டும்.

ஆனால் 1989ஆம் ஆண்டு, 2004ஆம் ஆண்டு தேர்தல்களில் மட்டும் இந்த இலக்கு எட்டப்பட்டிருந்தது.

இந்த இரண்டு தேர்தல்களும் நடைபெற்ற சூழல் வேறு. 1989ஆம் ஆண்டு முழுக்க முழுக்க இந்திய இராணுவத்தின் ஆதிக்கத்தில் நடைபெற்ற தேர்தல்.

2004ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் விடுதலைப்புலிகளின் ஆதிக்கத்தில் நடைபெற்றது.

1989ஆம் ஆண்டு தமிழ் கட்சிகள் என இரு தரப்பு மட்டுமே போட்டியிட்டன. ஒன்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் கட்சியின் கீழ் இந்திய இராணுவம் அமைத்த கூட்டு. இரண்டாவது ஈரோஸ் நிறுத்திய சுயேச்சை குழு. வேறு தமிழ் கட்சிகள் போட்டியிடவில்லை.

2004ஆம் ஆண்டு தமிழ் கட்சி என தமிழ் தேசியக்கூட்டமைப்பு மட்டுமே போட்டியிட்டது. தமிழ் வாக்குகள் பிரிக்கப்படவில்லை.

இதனால் 1989 மற்றும் 2004ஆம் ஆண்டுகளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 4தமிழர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.

இது தவிர 1994, 2000, 2001, 2010, 2015, ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் 3தமிழர்களும் 2 முஸ்லீம்களும் தெரிவு செய்யப்பட்டனர்.

தமிழ் பிரதிநிதித்துவம் இழக்கப்பட்டதற்கு முக்கியமாக இரண்டு காரணங்கள் கூறப்படுகிறது.

1.தமிழ் மக்களின் வாக்களிப்பு வீதம் குறைவாக இருப்பது.

2.தமிழர்களின் வாக்குகள் பிரிக்கப்படுவது.

இந்த இரண்டு காரணங்களையும் தமிழ் மக்கள் கவனத்தில் எடுத்து செயல்பட்டால் மட்டுமே மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் பிரதிநிதித்துவத்தை தக்க வைத்து கொள்ள முடியும்.

வாக்களித்து எனக்கு என்ன நன்மை என விதண்டாவாதம் பேசி சுயநலத்தோடு இருப்பவர்கள் மட்டக்களப்பு நகரப்பகுதியில அதிகம். இதனால் மட்டக்களப்பு நகர் என கருதப்படும் புளியந்தீவு, கோட்டைமுனை பகுதிகளில் வாக்களிப்பு 50வீதத்திற்கு மேல் செல்வதில்லை.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் வாக்குகளை பிரிப்பதற்கு என்று இம்முறையும் பல கட்சிகளும் சுயேச்சைக்குழுக்களும் களமிறக்கப்பட்டிருக்கின்றன.

இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர்கள் இம்முறை தங்கள் பிரதிநிதித்துவத்தை தக்க வைத்து கொள்வார்களா?

இரா.துரைரத்தினம்.