யார் பக்கம் வீசும் அனுதாபக் காற்று...?

Report Print Habil in கட்டுரை

கொரோனாவினால் கொஞ்சம் பரபரப்பு அடங்கியிருந்த வடக்கு அரசியல் களம், இப்போது சூடுபிடிக்கத் தொடங்கி விட்டது.

இந்தமுறை பொதுத் தேர்தலில் கட்சிகளுக்குக் கிடைக்கக் கூடிய ஆசனங்களின் எண்ணிக்கையை மதிப்பீடு செய்ய முடியாதளவுக்கு, போட்டிச் சூழல் தென்படுவதால், எல்லாக் கட்சிகளுமே, தமக்கும் ஆசனம் கிடைக்கும் என்ற கனவில் இருக்கின்றன.

தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் தனித்தனியாக பிரிந்து போட்டியிடுகின்ற சூழல், ஆரோக்கியமற்றதாக கருதப்படுகின்ற போதும், இனி அது தவிர்க்க முடியாத ஒரு போராகவே மாறி விட்டது.

இந்தநிலையில் ஒருவரை ஒருவர் எந்தளவுக்கு சேறடிக்க முடியுமோ அந்தளவுக்கு நாறடிக்கத் தயாராகி விட்டனர்.

வழக்கம் போலவே, மாவீரர்கள், விடுதலைப் போராட்டம், விடுதலைப் புலிகள், தேசியத் தலைவர், முன்னாள் போராளிகள், அரசியல் கைதிகள் போன்ற ஆயுதங்களை தமிழ் அரசியல் கட்சிகள் கையில் எடுத்து விட்டன.

தேர்தல் வந்து விட்டாலே, எல்லா அரசியல் கட்சிகளுக்கும் விடுதலைப் போராட்டத்தின் மீது பற்று வந்து விடுகிறது.

மற்ற நேரங்களில் விடுதலைப் போராட்டத்தை விமர்சித்து மாட்டிக் கொள்பவர்களும் கூட, தேர்தல் வந்து விட்டால், அதற்கு தலைவணங்கத் தயாராகி விடுகிறார்கள்.

இதனை விட இன்னொரு விடயமும் உள்ளது. எல்லோருமே தம்மை மிகப்பெரிய தேசியப் பற்றாளராகவும், விடுதலையை நேசிப்பவர்களாகவும், கருதிக் கொண்டிருக்கிறார்கள்.

மற்றவர்கள் எல்லோரும் தமக்கு கீழ்நிலையில் இருப்பவர்கள் என்பது இவர்களின் நினைப்பு. வடக்கு, கிழக்கில் உள்ள பலருக்கு இவ்வாறானதொரு நோய் இருக்கிறது. அரசியல்வாதிகளும் அதற்கு விதிவிலக்குக் கிடையாது.

தம்மைவிட, விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவளித்த வேறு விசுவாசிகள் யாரும் கிடையாது என்றும், தமக்குத் தான் எல்லாம் தெரியும் என்பது போலவும் நடந்து கொள்பவர்கள் பலர். இது 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய அவலம் என்றே கூறலாம்.

தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் போல நடந்து கொள்கிறார்கள். அது இந்த தேர்தலிலும் எதிரொலிக்கத் தான் செய்கிறது. இவர்கள், இலகுவாக மற்றவரைத் துரோகியாக அடையாளப்படுத்துகிறார்கள். தங்களை மிகப் பெரிய தியாகியாக உருவகப்படுத்திக் கொள்கிறார்கள்.

தேர்தலில் போட்டியிடும் கட்சிகள், வேட்பாளர்களை நோக்கி ஆரோக்கியமான விமர்சனங்களை முன்வைக்கவோ, முறையான திட்டங்களை வெளிப்படுத்தவோ திராணியற்றவர்கள் தான் குறுக்குவழியில், இவ்வாறானஅரசியல் இலாபம் தேட முனைகிறார்கள்.

இவ்வாறான ஒரு சூழலில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் முக்கியமான பெண் வேட்பாளர்கள் சிலர் மல்லுக் கட்ட ஆரம்பித்திருப்பது, பிரசாரக் களத்தை சூடேற்றியிருக்கிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில், சாவகச்சேரி தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தி, வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளவர் சசிகலா ரவிராஜ்.

படுகொலை செய்யப்பட்ட மாமனிதர் ரவிராஜின் மனைவியான இவர், முதல் முறையாக தேர்தல் களத்துக்கு வந்திருக்கிறார்.

இவர் அண்மையில் யாழ்ப்பாணத்தில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தி, அரசியலில் தாம் களமிறங்கியதற்கான நோக்கங்கள் குறித்து விளக்கமளித்திருந்தார்.

வடக்கில் உள்ள, கணவனை இழந்த 87 ஆயிரம் பெண்களில், ஒருவராக, அவர்களை பிரதிநிதித்துவம் செய்யும் ஒருவராகவே தான் அரசியலுக்கு வந்திருப்பதாகவும், அவர் கூறியிருப்பது, யாழ்ப்பாண தேர்தல் களத்தில் உள்ள ஏனைய சில பெண் வேட்பாளர்கள் மத்தியில் பீதியை தோற்றுவித்திருப்பதாகவே தெரிகிறது.

சசிகலா ரவிராஜின் செய்தியாளர் சந்திப்பை அடுத்து, ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் உமாசந்திரா பிரகாஸ், ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தி, 10 ஆண்டுகளாக 87 ஆயிரம் கணவனை இழந்த பெண்களா இருக்கிறார்கள் என்று கேள்வி எழுப்பியதுடன், இதுபற்றிய புள்ளிவிபரங்களை இதுவரை பிரதிநிதிகளாக இருந்தவர்கள் வெளிப்படுத்த வேண்டும் என்றும் கூறினார்.

அத்துடன், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் சார்பில், போட்டியிடும் அனந்தி சசிதரன், தன்னைப் போலவே, சசிகலா ரவிராஜை தமிழரசுக் கட்சி கறிவேப்பிலையாகப் பயன்படுத்துவதாக குற்றம்சாட்டியிருக்கிறார்.

நேரடியாக சசிகலா ரவிராஜை தாக்க முனையாமல், தமிழரசுக் கட்சியின் மீது தாக்குதலை தொடுத்து, அவரைப் பலவீனப்படுத்தும் உத்தி இது.

யாழ்ப்பாண மாவட்டத்தில், கூட்டமைப்பில் போட்டியிடும் சசிகலா ரவிராஜ், ஐதேகவில் போட்டியிடும். விஜயகலா மகேஸ்வரன், ஆகியோர் தமது கணவனை பறிகொடுத்தவர்கள்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான நடராஜா ரவிராஜ் மற்றும் தியாகராஜா மகேஸ்வரன் ஆகியோர் கொழும்பில் வைத்தே படுகொலை செய்யப்பட்டனர்.

அதுபோலவே தமிழ் மக்கள் தேசிய கூட்டணி சார்பில் போட்டியிடும் அனந்தி சசிதரன், இறுதிப் போரில் இராணுவத்தினரிடம் சரணடைந்த தனது கணவனை இன்னமும் தேடிக் கொண்டிருப்பவர்.

ஏழு ஆசனங்களைக் கொண்ட யாழ்ப்பாண மாவட்டத்தில், இந்த மூன்று பெண் வேட்பாளர்களும் தமது ஆசனத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக கடுமையாக போராட வேண்டிய நிலையில் இருக்கிறார்கள்.

இவர்களில் விஜயகலா மகேஸ்வரன் ஏற்கனவே இரண்டு முறை நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டவர். இந்தமுறை அவருக்கு வாய்ப்புக் கிட்டுமா என்ற கேள்வி இருக்கிறது.

அனந்தி சசிதரன், நாடாளுமன்ற தேர்தல் களத்துக்குப் புதியவர். ஆனால் 2013இல் வடக்கு மாகாணசபைத் தேர்தலில், 87,770 விருப்பு வாக்குகளைப் பெற்று பெரும் வெற்றியைப் பெற்றவர்.

எனினும், அதற்குப் பின்னரான அவரது அரசியல் செயற்பாடுகள் திருப்திகரமானதாக இருந்ததா என்ற கேள்விகள் உள்ளன.

வடக்கு மாகாண சபையில் அமைச்சர் பதவியையும் வகித்த அனந்தி சசிதரன் இப்போது, விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசிய கூட்டணியில் களமிறங்கியிருக்கிறார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து அவர் பெற்ற விருப்பு வாக்குகளை விட, கூடுதல் வாக்குகளைப் பெற்றுக் காண்பிக்க வேண்டிய கட்டாயம் அவருக்கு இருக்கிறது.

இல்லாவிட்டால், அவர் கடந்த முறை கூட்டமைப்பில் போட்டியிட்டதால் தான், அந்தளவுக்கு வாக்குகளைப் பெற முடிந்தது என்ற விமர்சனங்களை கண்டிப்பாக எதிர்கொள்ள நேரிடும்.

இவ்வாறான ஒரு பின்புலத்தில் கூட்டமைப்பின் புதுமுக வேட்பாளராக களமிறங்கியிருக்கும் சசிகலா ரவிராஜ், தனது ஆசனத்தை உறுதிப்படுத்திக் கொள்ள முனைகிறார்.

அதற்காக அவர் இரண்டு வியூகங்களை முன்வைத்திருக்கிறார். ஒன்று சாவகச்சேரி தொகுதியை பிரதிநிதித்துவம் செய்யும் ஒருவர், கடந்த இரண்டு நாடாளுமன்றங்களில் இல்லாதிருந்த குறையை நீக்கவேண்டும் என்று அவர் கோரியிருக்கிறார்.

இது, தென்மராட்சிப் பிரதேச மக்களை கவரக் கூடிய ஒரு பிரசார உத்தி என்பதில் சந்தேகம் இல்லை. அடுத்து, பெண் வேட்பாளராகவும், அதுவும் பாதிக்கப்பட்ட சமூகத்தில் இருந்து வரும் ஒருவராகவும் அவர் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள முனைகிறார்.

இது பாதிக்கப்பட்ட சமூகம் அதிகமுள்ள யாழ்ப்பாண வாக்காளர்கள் மத்தியில், எடுபடக் கூடிய இன்னொரு விடயம். ஆனால், விஜயகலா மகேஸ்வரன், அனந்தி சசிதரன், ஆகியவர்களும் கூட போரினால் பாதிக்கப்பட்டவர்கள் தான். எனவே அனுதாப வாக்குகளை அள்ளுவதற்கு இந்தப் பொது அணுகுமுறை கைகொடுக்குமா என்ற சந்தேகங்கள் உள்ளன.

ஆனால், விஜயகலா மகேஸ்வரனும் அனந்தி சசிதரனும் அரசியலுக்கு பழமையானவர்கள், அவர்கள் அரசியல் பரப்பில் விமர்சனங்களையும் எதிர்கொண்டு வந்தவர்கள்.

சசிகலா ரவிராஜ் அவ்வாறான விமர்சனங்களை எதிர்கொண்டவரில்லை. அதனை விட, அவரது கணவன் ரவிராஜ் குற்றச்சாட்டுகள் எதிலும் சிக்கிக் கொள்ளாதவர், வடக்கிலுள்ள மக்கள் மத்தியில் அதிக மதிப்பையும் பெற்றவர்.

இது சசிகலா ரவிராஜ் பக்கம் அனுதாபக் காற்று அதிகம் வீசுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தலாம்.

யாழ்ப்பாணத்தில் இருந்து குறைந்தது ஒரு பெண் வேட்பாளராவது நாடாளுமன்றம் செல்ல வேண்டும் என்ற கருத்து வலுப்பெற்றிருக்கின்ற சூழலில், இவர்கள் மூவரில் யாருக்கு அந்த வாய்ப்புக் கிட்டும் என்ற கேள்விக்கு வாக்காளர்கள் தான் பதிலளிக்க வேண்டும்.

இந்த தேர்தலில் பெண் வேட்பாளர்கள் ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்ளும் கலாசாரத்தில் இருந்து விடுபட்டு, ஆரோக்கியமான அரசியல் நிலைப்பாடுகள், திட்டங்களை முன்வைத்து பிரசாரத்தில் இறங்கினால் அது வரவேற்புக்குரிய ஒன்றாக இருக்கும்.