இந்திய பிரதமர் நரேந்திரமோடிக்கு பிரான்சிலிருந்து ஈழத்தமிழனின் ஓர் திறந்த மடல்

Report Print S.V Kirubaharan S.V Kirubaharan in கட்டுரை

கடந்த பல தசாப்தங்களாக, எம்மில் பலர், இலங்கை தீவில் வாழும் எமது உடன்பிறப்புகளான சகோதர சகோதரிகள், இளைஞர்கள், குழந்தை செல்வங்கள் யாவும், ஓர் அமைதியான சமாதானமான சூழலில், எமது அரசியல் அபிலாசைகளை உள்ளடக்கிய ஓர் நிரந்தர அரசியல் தீர்வை பெற்று, தமிழீழமெனும் எமது தாயக பூமியான, இலங்கை தீவின் வடக்கு,கிழக்கு பிரதேசங்களில், தமிழீழ மக்களெனும் அடையாளத்துடன், வாழ வேண்டுமென்ற நோக்கத்துடன் கொள்கையுடன், எமது வாழ்க்கையின் பெரும் பகுதியை தொடர்ச்சியாக அர்ப்பணித்து செயற்பட்டு வருகிறோம்.

இன்றைய பல நாடுகளின் ஆட்சி மொழிகளும், சரித்திரம் படைத்ததுள்ள சில நாடுகளும், உலகில் உதயமாவதற்கு பல ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் முன்பு தமிழ் மொழி நடைமுறையிலிருந்தது என்பதை, உலகின் சரித்திரம் ஏற்று கொண்டுள்ளது.

இந்தியாவின் பிரதம மந்திரியாகிய நீங்கள், தமிழ் மொழியின் சரித்திரத்தை வரலாற்றை, சிறிலங்காவின் பௌத்த சிங்கள அரசியல் தலைவர்களிற்கு மேலாக நன்கு அறிந்துள்ளீர்களென்பதை நாம் அறிவோம். ஐ.நா.பொதுச் சபையில் இறுதியாக ஆற்றிய உரையில், நீங்கள் தமிழ் கவிஞர் கணியன் பொன்கூர்த்தநாரின், “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற கூற்றை கூறியிருந்தமை, எம்மை மிகவும் பெரும் மகிழ்ச்சியில் ஆற்றியிருந்தது.

இலங்கை தீவில் வாழும் தமிழீழ மக்களாகிய எமது சரித்திரம், அரசியல் போராட்டங்கள் பற்றி நீங்கள் நன்கு அறிந்துள்ள காரணத்தினால், இவை பற்றி விபரமாக இங்கு கூறுவதை தவிர்த்து கொள்கிறேன்.

இலங்கை தீவில் வாழும் தமிழீழ மக்களாகிய நாம் மொழி, கலை, கலாச்சாரம், சமயம், சமூதாயம் ஆகிய விடயங்களில், இந்தியாவுடன் மிக நெருங்கிய உறவை கொண்டுள்ளோம். எமது கவிஞர்கள், அறிஞர்கள், தத்துவவாதிகள் இவற்றை “தொப்புள் கொடி உறவு” எனவும் விபரிப்பார்கள்.

மிக சுருக்கமாக, 1505ம் ஆண்டு முதல் 1948ம் ஆண்டு வரை போத்துகீசர், ஒல்லாந்தர், பிரித்தானியர் ஆகிய மூன்று வேறுபட்ட கலோனித்துவ ஆட்சியாளர்கள்,இலங்கை தீவை ஆட்சி செய்தனர்.

1505ம் ஆண்டு முதல் 1658 ஆண்டு வரை போத்துகீசரும், 1658 முதல் 1795 ஒல்லாந்தரும் இலங்கை தீவை ஆட்சி செய்துள்ள காலப்பகுதிகளில், தமிழ் சிங்களவர்களுருடைய மூன்று வேறுபட்ட இராட்சியங்களை தனித் தனித்தனியாகவே ஆட்சி செய்தனர்.

இவர்களை தொடர்ந்து, 1795ம் ஆண்டு இலங்கை தீவை தமது ஆட்சிக்கு உட்படுத்திய பிரித்தானியர்களும், 1833ம் ஆண்டு வரை, அதாவது, ஏறக்குறைய முப்பத்தி எட்டு (38)ஆண்டுகள், தமிழ் சிங்கள இராட்சியங்களை தனித் தனித்தனியாகவே ஆட்சி செய்தனர்.

துரதிஸ்டவசமாக, ‘இலகுவான நிர்வாக ஆட்சிமுறை’ என்ற காரணத்தை கூறி, இலங்கை தீவில் தனித்து விளங்கிய தமிழர் இராட்சியம், 1883ம் ஆண்டு சிங்கள இராட்சியங்களுடன் இணைக்கப்பட்டது. இதுவே இலங்கை தீவில், தமிழீழ மக்களது சோக கதையின் ஆரம்பம்.

இவற்றை தொடர்ந்து, 1948ம் ஆண்டு இலங்கை தீவிற்கு பிரித்தானியர் சுதந்திரம் கொடுத்த வேளையில், தமிழீழ மக்களின் எந்தவித ஒத்தாசையுமின்றி, முழு இலங்கைதீவின் ஆட்சி அதிகாரத்தை, எண்ணிக்கையில் பெரும்பான்மையாக விளங்கும் பௌத்த சிங்களவர்கள் கையில் ஒப்படைத்தனர். அன்றிலிருந்து இன்று வரை, இனவெறி அடிப்படையில், மிகவும் மோசமாக பாகுபாடு காட்டி கோவலமாக தமிழ் மக்களை இவர்கள் நடத்துகின்றனர்.

அன்றிலிருந்து, தமிழீழ மக்களது தாயகமான வடக்கு கிழக்கு மாகாணங்களில், சிங்கள குடியேற்றங்களையும்,பௌத்தமயமாக்கலையும் ஆரம்பித்து, நாளுக்கு நாள் தமிழீழ மக்களின் பாரிய நிலப்பரப்பை பறிமுதல் செய்து வருவதுடன், தமிழீழ மக்களை தினமும் சொல்லனா துன்பங்களிற்கு ஆளாக்கி வருவதனால், அங்கு வாழும் மக்கள், ஓர் அடிமை வாழ்விற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இலங்ககை தீவில் எமது முப்பது வருடகால சாத்வீக போராட்டத்திற்கு,சிங்கள பௌத்த ஆட்சியாளர்களினால் இழைக்கப்பட்ட வன்முறைகள் ஒடுக்குமுறைகள், எமது ஆயுத விடுதலை போராட்டத்திற்கு வித்திட்டது என்பதை, “தொப்புள் கொடி உறவின்” அயலவர் என்ற அடிப்படையில், நீங்கள் நன்கு அறிவீர்கள். இங்கு இந்தியா ஆற்றிய பங்கு குறித்து விரிவாக எதுவும் குறிப்பிட வேண்டியதில்லை.

வடக்கு கிழக்கு வாழ் மக்கள் சிந்திய இரத்தம், 1987ம் ஆண்டு இலங்கை,இந்தியா ஒப்பந்தம் உருவாகுவதற்கு காரணியாக அமைந்தது என்பது யதார்த்தம். ஆனால், சிங்கள பௌத்த ஆட்சியாளர்கள், கபட நோக்கில் திட்டமிட்டு, நடாத்திய நாடகங்கள், இறுதியில் தமிழீழ மக்களிற்கும், இந்தியாவிற்குமிடையில் ஓர் பாரிய கொந்தளிப்பை பகமையை இடைவெளியை உருவாக்கியது என்பதை உலகறியும்.

சிறிலங்காவின் கபடங்களை அறியாது, இரு பகுதியினராலும் தவறுகள் இழைக்கபட்டது. வழிமுறையில் சிங்கள பௌத்த ஆட்சியாளர்கள் மிக நன்றாக பயனடைந்துள்ளனர் என்பதை யாரும் மறுக்க முடியாது.

மிகவும் உக்கிரமாக யுத்தம் நடைபெற்ற வேளையில், இந்தியாவின், அதாவது இந்தியா காங்கிரஸ் கட்சியின் உதவியை சிறிலங்கா ஆட்சியாளர்கள் நாடி யுத்தம் முடிவு பெற்றதும், ‘இலங்கை,இந்தியா ஒப்பந்தத்தின் மூலம் உருவான 13ம் வது திருத்த சட்டம் அல்ல, அதற்கு மேல் நாம் தமிழ் மக்களிற்கு ஓர் அரசியல் தீர்வை முன் வைப்போம்’, என்ற பொய்யான வாக்குறுதியுடன், இந்தியாவிடமிருந்து சகல உதவிகளையும் பெற்று கொண்டனர். அதே வாக்குறுதியுடன் சர்வதேசத்தின் உதவிகளையும் பெற்றனர்.

ஆனால், 2009ம் ஆண்டு மே மாதம் யுத்தம் முடிந்ததும், இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் சிறிலங்கா நிறைவேற்றியது கிடையாது.

யுத்தம் முடிவுற்ற வேளையில், அன்றைய சிறிலங்கா அரசிற்கு, பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மட்டுமல்லாது, ஜனதிபதி நிறைவேற்று அதிகாரங்களையும் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடதக்கது.

துரதிஸ்டவசமாக இந்தியாவின் முன்னைய அரசு, சிறிலங்காவிற்கு எந்தவித அழுத்தத்தையும் பிரயோகிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். காரணம், இறுதி யுத்தத்தில் இந்தியாவின் பங்களிப்பு விடயமாக, அன்று சிறிலங்கா இந்தியாவை மிரட்டி வந்துள்ளது என அறிந்தோம்!

நாம் இன்று, இலங்கைதீவில் உறவுகளை, மக்களை, நிலத்தை, கலை கலாச்சாரத்தை, ஆன்மீகம் போன்றவற்றை சிங்கள பௌத்தவாதிகளிடம் இழந்து அனாதைகளாக்கபட்டுள்ளோம். வீராப்புடன் வெற்றி நடை போடும் சிங்கள பௌத்த அரசுகள், தொடர்ந்து எமது தாயகபூமியான வடக்கு கிழக்கில் சிங்களமயம், பௌத்தமயம், இராணுவமயம், குடியேற்றங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

யுத்தம் முடிந்து இன்று பதினொரு வருடங்களாகியும், இந்தியாவிற்கும் சர்வதேசத்திற்கு சிறிலங்காவினால் கூறப்பட்ட இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு என்பதில், எந்தவித முன்னேற்றங்களும் ஏற்படவில்லை.

இவ்விடயம் சம்பந்தமாக, எமது மக்கள் பிரதிநிதிகளினாலும்,வேறுபட்ட சமய சமூக அமைப்புகளினாலும்,சிங்கள பௌத்த அரசுகளிற்கு முன்வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்,மனுக்கள் யாவும் அலட்சியம் செய்யப்பட்டு, அவை ‘செவிடன் காதில் ஊதிய சங்காக’ காணப்படுகிறது.

உண்மையை பேசுவதனால், சிங்கள பௌத்த அரசுகளிற்கு, அரசியல் தீர்வை முன்வைக்கும் நோக்கம் இன்று நேற்று அல்ல, கடந்த ஏழு தசாப்தங்களிற்கு மேலாச இல்லையென்பதே உண்மை.

உங்களிற்கும், உங்களது முன்னைய அரசிற்கும், தாம் 13வது திருத்த சட்டத்தை முழுதாக அமுல்படுத்துவோமெனகொடுத்த வாக்குறுதிகளை, இவர்கள் விசமத்தனமாகஅலட்சியம் செய்கிறார்கள் என்பதே உண்மை.

1948ம் ஆண்டு முதல், வடக்கு கிழக்கில் வாழும் தமிழீழ மக்களினால், நடாத்தப்பட்ட முப்பது வருடகால சாத்வீக போராட்டத்திற்கான காரணியையும், ஆயத போராட்டத்திற்கான காரணிகளையும், இவர்கள் இன்று மாசு படுத்தி திரிவுபடுத்தி, இவ் போராட்டங்களின் உண்மை தன்மைகளை மூடி மறைந்து, உலகிற்கு கற்பனை கதைளை கூறி வருகின்றனர்.

தமிழீழ மக்களாகிய எமது போராட்டங்கள் கல்வி, வேலைவாய்ப்பு அற்று, வறுமை கோட்டின் கீழ் வாழும் சமூக பிரச்சினை போன்று, பிற நாட்டவர்களிற்கு,இன்று இவர்கள் காண்பிக்க முற்படுகிறார்கள்.

யதார்த்தம் உண்மை என்னவெனில், இலங்கைதீவின் சுதந்திரத்தை தொடர்ந்து, வேறுபட்ட சிங்கள பௌத்த அரசுகள், பேச்சுவார்த்தை, உடன்படிக்கை, ஒப்பந்தங்கள் என்ற சாட்டு போக்கில், நேரம் காலத்தை கடத்துவதையே தமது தலையாய கடமையாக கொண்டுள்ளனர்.

தற்பொழுது தமிழ் அரசியல் தலைவர்களின் அரசியல் வழிமுறைகள், முழு தவறான பாதையில் சென்றுள்ளதாக, ஓர் புதிய கற்பனை கதையையும் ஆரம்பித்துள்ளானர்.

இவர்கள் தமிழீழ மக்களையும், தமிழீழ தலைமையையும், தொடர்ந்து ஏமாற்றி வந்துள்ளமைக்கு, பல உதாரணங்கள் இருந்த பொழுதிலும், சிங்கள தலைவர்களிற்கும் தமிழ் தலைவர்களிற்குமிடையில் கைச்சாத்தாகி, சிங்கள தலைவர்களினால் தன்னிச்சையாக கிழித்து எறியப்பட்ட 1957 பண்டா-செல்வா; 1965 டட்லி-செல்வா ஒப்பந்தங்கள் நல்ல சான்றாகவுள்ளன.

1987ம் ஆண்டு கைச்சாத்தான இலங்கை,இந்தியா ஒப்பந்தம், வேறு பல போர்நிறுத்தங்கள் யாவும், தமிழர்களது தாயக பூமியான வடக்கு கிழக்கில் மேலும் சிங்களமயம், பௌத்தமயம், இராணுவமயம், சிங்கள குடியேற்றம் ஆகியவற்றை வெற்றியாக மேற்கொள்வதற்கே இவர்கள் பாவித்துள்ளனர்.

இதன் ரகசியம் என்னவெனில், வடக்கு கிழக்கு பிரதேசங்கள் முற்று முழுதாக சிங்களமயம், பௌத்தமயம் ஆக்கப்பட்ட பின்னர், தமிழீழ மக்களிற்கு ஓர் நிரந்தர அரசியல் தீர்வை முன்வையுங்கள் என்ற வேண்டுகோளை, யாரும் முன்வைக்க வேண்டிய நிலை ஏற்றபடாது என்ற நம்பிக்கை, இவர்களை குடி கொண்டுள்ளது.

போர் முடிந்துள்ள காரணத்தினால், தமிழீழ மக்களது சரித்திரம் அரசியல் உரிமை என்பவை யாவும் அலட்சியம் செய்யப்பட்டு, தேசிய அடையாளத்துடன் விளங்கிய தமிழீழ மக்களை, இன்று சிறுபான்மை என்ற பதம் கொண்டே அழைக்கின்றனர்.

உண்மை என்னவெனில், தமிழீழ மக்களாகிய நாம், சிங்களவர்கள் போன்று ஒரு தேசிய இனம். சிங்களவர்கள் எண்ணிக்கையில் கூடுதலாக காணப்படுவதால், இவர்கள் இலக்கத்தில் பெரும்பான்மை. தேசியத்திற்கான வரவிலக்கணக்கத்தில், தமிழீழ மக்கள் அடங்குகிறார்கள்என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

அத்துடன், ‘தமிழ் மக்களாகிய நாம், சிங்கள மக்கள் ஐயம் கொள்ளும் வகையில் எதையும் முன்னெடுக்கபடாது’எனவும், நாம் நாட்டின் மேம்பாடு வளர்ச்சி என்பது பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டுமென்ற புதிய புதிய படலங்களை ஆரம்பித்துள்ளனர்.

இவற்றை வேறு விதமாக கூறுவதனால், இவர்களை பொறுத்தவரையில், தமிழீழ மக்களிற்கான அரசியல் தீர்வு என்பது, நாட்டின் மேம்பாடும் வளர்ச்சியுமே.

எமக்கு மிக நீண்டகாலமாக சிங்கள பௌத்த அரசுகளினால் இழைக்கப்பட்ட அரசியல் தீங்குகள் குறைபாடுகள், எமது தாயக பூமி சூறையாடப்பட்டு வருவது, போர்குற்றம், இன அழிப்பு, மனித உரிமை மீறல்கள் யாவற்றையும் நாம் மறந்து, ஓர் அடிமை இனமாக வாழ பழகி கொள்ள வேண்டும் என்பதே இவர்களது சிந்தனையும் வேண்டுகோளும்.

மாண்புமிகு பிரதமர் அவர்களே, சிறிலங்காவினால் தற்பொழுது கூறப்பட்டு வரும், ‘ பிராந்திய நடுநிலமை’ என்பது, உங்களையும் சர்வதேசத்தையும் ஏமாற்றுவதற்கான திட்டம் என்பதே உண்மை.

இங்கு மீண்டும், நேரம் காலத்தை கடத்துவதையே தமது தலையாய கடமையாக கொண்டுள்ளனர் என்பது தெளிவாகிறது. காரணம், இவர்களது உற்ற நண்பனான சீனா, ஏற்கனவே சிறிலங்காவில் ஓர் நிரந்தர தளத்தை அமைத்துள்ளார்கள் என்பது உலகறிந்த உண்மை.

தற்பொழுது ஆட்சியுள்ளவர்களுடைய ஆசீர்வாதம் அனுசரணையுடன், 2017ம் ஆண்டு, முன்னைய சிறிலங்கா அரசிடமிருந்து, அம்பாந்தோட்டை துறைமுகமும், 15,000 ஏக்கா நில பரப்பை, சீனா தொன்னூற்று ஒன்பது ஆண்டு குத்தகையில் பெற்றுள்ளார்கள் என்பதை யாரும் மறைக்க முடியாது. படிப்படியாக வடபகுதியில் உள்ள கச்சதீவும், சீனாவிற்கு தாரை வார்த்து கொடுக்கப்படவுள்ளது.

உண்மை என்னவெனில், சிங்கள பௌத்த அரசுகளும், தென்பகுதியின் பெரும்பாலான மக்களும், இந்தியாவிற்கு மேலாக, சீனா பாகிஸ்தனின் உறவை விரும்புகிறார்கள் என்பதை, நாம் சரித்திர ரீதியாக காணலாம். இவற்றிற்கு பல அடிப்படை காரணிகளும் உள்ளன என்பதை நீங்கள் அறிவீர்கள்.

துரதிஸ்டவசமாக, எம்மிடையே சில கவலைகள் காறைகள் நிறைந்த நினைவுகள் உள்ளது என்பது உண்மை. இவை யாவும் சிங்கள பௌத்தவாதிகளினால் கபடமாக கையாளப்பட்டவை என்பதை நாம் மனதில் கொள்ளும் அதேவேளை, தமிழீழ மக்களது நிரந்தர அரசியல் தீர்விற்கு இந்தியாவின் பங்களிப்பு மிக முக்கியமானது.

இறந்த, நிகழ், எதிர்காலம் என்பவை, எமக்குள்ளான ஒற்றுமை ஐக்கியம் என்பவற்றுடன், இணைந்த நகர்வுகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றன.

தமிழீழ மக்களின் இரத்தத்தினால் உருவான இலங்கை,இந்திய உடன்படிக்கை மூலம் உருவான, 13வது திருத்த சட்டம் என்பது, இன்று வரை முழு வடிவம் பெற்றது கிடையாது. இவ் உடன்படிக்கையின் பிரகாரம் ஏற்பட்ட உயிர் இழப்புக்கள், உடமையிழப்புக்களென நாம் பட்டியலிடும் அதேவேளை, 13வது திருத்த சட்டத்தை முழுதாக நடைமுறை செய்யாது.

சிங்கள பௌத்த அரசுகள் இழுத்தடிப்பதை இந்தியா ஒரு பொழுதும் அனுமதிக்ககூடாது. இந்தியா சார்பாக பேச்சுவார்த்தைக்கு முன்வருபவர்களை,சிறிலங்கா அரசுகள், மிக இலகுவாக கையாள முடியுமென்ற எண்ணத்தை இறுக்கமாக கொண்டுள்ளனர்.

ஆரம்பத்தில், ஜீ. பார்த்தசாரதி போன்ற இந்தியா பிரதிநிதிகள் “வடக்கு கிழக்கு வாழ் மக்களின் பாதுகாப்பு, சமூக பொருளாதாரத்திற்கு இந்தியா அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டுமென்ற அடிப்படையில்” பேச்சுவார்த்தைகளை நடத்திய காரணத்தினால், இவர்களை சிறிலங்கா அரசு பேச்சுவார்த்தையிலிருந்து திட்டமிட்டு அந்நியப்படுத்தியதை நாம் நினைவூ கொள்ள வேண்டும்.

மாண்புமிகு பிரதமர் அவர்களே, நேரம் காலம் உருண்டு ஓடி சரித்திரம் மாற்றி அமைக்கப்படுகின்றது என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். ஆகையால் என்னால் இங்கு கூறப்படும் விடயங்கள், தமிழீழ மக்களது நலன்களை மட்டுமன்றி, இந்தியாவின் நலன் நட்புறவை மனதில் கொண்டவை.

ஆகையால், உலக ஒழுங்கை மனதில் கொண்டு, நீதி, நியாயமான ஜனநாயகத்தின் அடிப்படையில், தமிழீழ மக்களது இரத்தத்தினால் உருவாக்கப்பட்ட இலங்கை,இந்தியா ஒப்பந்தந்தை, உரிய முறையில், நீங்கள் நடைமுறைப்படுத்துவதன் மூலம், தமிழீழ மக்கள், தமது அரசியல் அபிலாசைகளை உள்ளடக்கிய ஓர் நிரந்தர சமாதானத்தை, நிச்சயம் பெற்று கொள்ள முடியும் என்பதை, இங்கு வேண்டுகோளாக மனுவாக உங்களிற்கு முன் வைக்கிறேன்.

இங்கு கூறப்பட்டுள்ள விடயங்களை, இன்று நேற்று அல்ல, ஒரு தசாப்தங்களிற்கு மேலாக, எனது தமிழ் ஆங்கில கட்டுரைகளில் எழுதி வந்துள்ளேன் என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

முக்கிய குறிப்பு:– உலக சரித்திரம், அனுபவங்கள் எமக்கு கூறும் செய்தி என்னவெனில், போராடும் ஒரு இனம், தமது நிலப்பரப்பு கலை கலாச்சாரம் சமூகம் போன்றவற்றை, முதலில் தக்க வைத்து பாதுகாக்க வேண்டும். ஸ்கோட்லாந்து, வேல்ஸ், வட அயலார்ந்து போன்ற பல இன விடுதலை போராட்டங்களின் அரசியல் நிலைப்படுகள், இதற்கு நல்ல ஊதாரணங்களாக விளங்குகின்றன.

அன்றும் இன்றும் என்றும், தமிழீழ மக்கள் இந்தியாவை அணுகுவதை சிங்கள பௌத்த அரசுகள் விரும்பவில்லை என்பது, சரித்திரம் எமக்கு தந்த பாடம் அனுபவம். இதன் அடிப்படையில், தமிழீழ மக்கள், இந்தியாவை அணுகுவதை விரும்பாத ஒவ்வொரு தமிழனும் - இவ் சிந்தனை கொண்ட அரசியல்வாதி எனப்படுவோரும்,ஆய்வாளர் எனப்படுவோரும், சிங்கள பௌத்த அரசுகளின் கொள்கைக்கு, தமது மசவாசான நசுக்கான நட்பு உறவின் அடிப்படையில், துணைபோகிறார்கள்என்பதை யாரும் மறைக்க மறுக்க முடியாது. இவர்களது பின்ணனிகளை ஆராய வேண்டிய கடமை, ஒவ்வொரு ஈழத்தமிழர்களிற்கும்உண்டு.

13வது திருத்த சட்டத்தை முழுதாக நடைமுறை செய்ய வேண்டும் என்பதன் பொருள், வெளிவாரீயான சுயநிர்ணய கொள்கையை கைவிட வேண்டுமென பொருள்படுவதல்லா. விதண்டாவாதிகள்தமது வியாபாரத்திற்காகபத்தையும் பலதையும் கூறுவது தவிர்க்க முடியாதவொன்று.

உண்மை என்னவெனில், இப்படியான மசவாசன கபட சிந்தனை கொண்ட அத்தனை நபரும் - இலங்கைதீவில் வடக்கு கிழக்கில் வாழும் ஈழத்தமிழர், அடியோடு அழிய வேண்டும் என்பதற்காகவே தமது செயற்பாடுகளை மேற்கொள்கிறார்கள்என்பது வெட்ட வெளிச்சம்.

(முற்றும்)

You My Like This Video