யாழ். மாவட்டம் பெண் பிரதிநிதித்துவத்தை தக்க வைத்துக்கொள்ளுமா? - இரா.துரைரத்தினம்

Report Print Gokulan Gokulan in கட்டுரை

இலங்கையில் பெண்கள் அரசியலில் ஈடுபட வேண்டும் என்றும் பெண்களுக்கு அரசியல் கட்சிகள் போதிய இடம் கொடுக்க வேண்டும் என பெண்களின் உரிமைகளுக்காக பேசிவரும் அமைப்புக்கள் கோரிக்கை விடுத்து வருகின்ற போதிலும் பெண்களின் அரசியல் ஈடுபாடு, அல்லது பெண்களுக்கு தமது கட்சிகளில் போதிய இடம் கொடுப்பதும் மிக குறைவாக காணப்படுகிறது.

இலங்கையின் சனத்தொகையிலும் சரி, வாக்காளர் எண்ணிக்கையிலும் சரி, பெண்களின் விகிதம் அதிகமாக இருக்கின்ற போதிலும் அரசியலில் 5வீதமான பெண்களே ஈடுபடுகிறார்கள்.

பெண்கள் அரசியலில் ஈடுபட முன்வராததற்கு பிரதான காரணமாக நாகரீகமான அரசியல் ஒன்று இல்லை, அடிதடி அரசியலும் ஒருவரை ஒருவர் சேறு பூசும் அரசியலுமே முதன்மையாக இருப்பதால் அதற்குள் பெண்கள் வர அச்சம் அடைகிறார்கள் என பெண்களின் உரிமைக்காக போராடும் அமைப்பு ஒன்றைச்சேர்ந்த பல்கலைக்கழக பெண் விரிவுரையாளர் ஒருவர் தெரிவித்திருந்தார்.

தொகுதி ரீதியான தேர்தல் நடைபெற்ற காலத்தில் யாழ். மாவட்டத்தில் பிரதான கட்சிகளில் பெண்கள் போட்டியிட்டதாக தகவல்கள் இல்லை. மாவட்ட ரீதியான தேர்தல் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் கூட 2004ஆம் ஆண்டுக்கு பின்னர்தான் வேட்பாளர் பட்டியலில் ஒருவர் அல்லது இருவரை இணைத்துக் கொள்ளும் போக்கு காணப்படுகிறது. சில கட்சிகள் பெண்களை தமது வேட்பாளர்களாக நிறுத்திய போதிலும் அவர்களை வெற்றிபெற வைக்கும் அளவிற்கு முன்னிலைப்படுத்தி வெற்றி பெற வைப்பதற்கு முயற்சிப்பதில்லை. தமது கட்சிக்கு வாக்கு சேர்க்கும் கருவியாகவே சில கட்சிகள் பெண் வேட்பாளர்களை பயன்படுத்துகின்றன.

சுவிட்சர்லாந்து போன்ற நாடுகள் பெண்களுக்கான வாக்குரிமையை வழங்குவதற்கு முதலே இலங்கையில் பெண்களுக்கான வாக்குரிமை வழங்கப்பட்டிருக்கின்ற போதிலும் இலங்கை அரசியல் என்பது நாகரீகமான ஒன்றல்ல என்ற நியாயமான அச்சம் பெண்களிடம் காணப்படுகிறது. இதனால் அவர்கள் அரசியலுக்கு வர தயக்கம் காட்டுகின்றனர்.

சுவிட்சர்லாந்தில் பெண்களுக்கான வாக்குரிமை வழங்கப்பட்டு சிறிது காலத்திலேயே பெண்கள் அரசியலில் ஈடுபடும் போக்கு அதிகரித்து வந்திருக்கிறது. இன்று பாராளுமன்றத்திலும் சரி அமைச்சரவையிலும் சரி சுவிட்சர்லாந்தில் பெண்களின் வீதமே அதிகமாகும். ஜனாதிபதி நீதி அமைச்சு போன்ற உயர்பதவிகளில் பெண்களே உள்ளனர்.

ஆனால் இலங்கை போன்ற நாடுகளில் அரசியலில் ஈடுபடும் பெண்களின் வீதம் 5வீதத்தை தாண்டவில்லை.

தென்னிலங்கையில் அரசியலில் ஈடுபடும் பெண்களின் வீதம் அதிகரித்து வருகின்ற போதிலும் வடக்கு கிழக்கில் இந்த வீதம் குறைவாகவே காணப்படுகிறது. நூறு வீதம் தமிழர்கள் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகக் கூடியதாக இருக்கும் யாழ். மாவட்டத்தில் பெண் வேட்பாளர்களின் நிலை பற்றி ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

எனது தேடலின் அடிப்படையில் யாழ். மாவட்டத்தில் முதன் முதலாக 2004ஆம் ஆண்டுதான் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் திருமதி பத்மினி சிதம்பரநாதன் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டார்.

நாடாளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரன் அவர்களின் மறைவிற்கு பின்னர் 2010 மற்றும் 2015ஆம் ஆண்டுகளில் ஐக்கிய தேசியக்கட்சியில் போட்டியிட்ட விஜயகலா மகேஸ்வரன் யாழ். மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டார்.

இலங்கையை பொறுத்தவரை பெரும்பாலான பெண்களின் அரசியல் பிரவேசம் என்பது தமது கணவனின் மறைவிற்கு பின்னராகத்தான் இருக்கிறது. இலங்கையின் முதற்பெண் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கா, முதல் பெண் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா முதல் இம்முறை யாழ். மாவட்டத்தில் தமிழரசுக்கட்சியில் போட்டியிடும் திருமதி ரவிராஜ் வரை கணவரின் மறைவிற்கு பின்னரான அரசியல் பிரவேசமாகவே உள்ளது.

2004ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக பெண்களை தமது பிரதிநிதியாக நாடாளுமன்றத்திற்கு அனுப்பிய யாழ்ப்பாண மாவட்டம் இம்முறையும் பெண் ஒருவரை தமது பிரதிநிதியாக நாடாளுமன்றம் அனுப்புமா? இம்முறை தேர்தலில் போட்டியிடும் பெண்களில் யாருக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்பதை பார்ப்போம்.

யாழ். மாவட்டத்தில் 7 ஆசனங்களுக்காக 19 அரசியல் கட்சிகள் 14 சுயேச்சைக்குழுக்களிலிருந்து 330 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஆசனங்களை பெறலாம் என நம்பபடும் பிரதான கட்சிகளும் இம்முறை பெண் வேட்பாளர்களை நிறுத்தியிருக்கின்றன.

இலங்கை தமிழரசுக்கட்சி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஷ், ஈ.பி.டி.பி ஐக்கிய தேசியக்கட்சி ஆகிய கட்சிகள் பெண் வேட்பாளர்களை நிறுத்தியிருக்கின்ற போதிலும் இந்த பெண்களில் எத்தனை பேர் வெற்றி வாய்ப்பை பெறுவார்கள் என்றால் ஒருவர் அல்லது இருவரைத்தான் சொல்ல முடியும்.

முக்கிய அரசியல் கட்சிகளில் போட்டியிடும் பெண் வேட்பாளர்களின் விபரம்.

1.திருமதி சசிகலா ரவிராஜ். தமிழரசுக்கட்சி.

2.விஜயகலா மகேஸ்வரன். ஐக்கிய தேசியக்கட்சி.

3.அனந்தி சசிதரன். தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி

4.மீரா அருள்நேசன். தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி.

5.வாசுகி சுதா அகில இலங்கை தமிழ் காங்கிரஷ்

6.ஞான குணேஸ்வரி அகில இலங்கை தமிழ் காங்கிரஷ்

7.பவதாரணி ராசசிங்கம். சிறிலங்கா சுதந்திரக்கட்சி.

8.ஸ்ரீதாரணி ஈ.பி.டி.பி.

9.உமா சந்திரா பிரகாஷ் ஐக்கிய மக்கள் சக்தி

இது தவிர சுயேச்சைக்குழுக்களிலும் சில பெண்கள் போட்டியிடுகின்றனர். இச்சுயேச்சைக்குழுக்கள் அனைத்தும் 5வீதத்திற்கு குறைவான வாக்குகளையே எடுக்க இருப்பதால் அவர்கள் பற்றிய விபரங்கள் இங்கே தவிர்க்கப்பட்டிருக்கிறது.

சில அரசியல் கட்சிகள் பெண் வேட்பாளர்களை நிறுத்தியிருக்கின்ற போதிலும் அவர்கள் வெற்றிபெறக் கூடிய வாக்கு வங்கி உள்ளவர்களா என்பது கேள்விக்குறியாகும். யாழ். மாவட்டத்தை பொறுத்தவரை அதிக ஆசனங்களை பெறப்போகும் தமிழரசுக்கட்சியை தவிர ஏனைய கட்சிகள் ஒரு ஆசனம் அல்லது இரு ஆசனங்களை மட்டும் தான் பெறுவார்கள். அதில் விருப்பு வாக்கில் பெண் வேட்பாளர்கள் வெற்றி பெறுவது இயலாத ஒன்றாகவே காணப்படுகிறது.

விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியில் போட்டியிடும் அனந்தி சசிதரன், மீரா அருள்நேசன், அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சியில் போட்டியிடும் வாசுகி சுதா, ஞான குணேஸ்வரி, சிறிலங்கா சுதந்திரக்கட்சியில் போட்டியிடும் பவதாரணி, ஈ.பி.டி.பியில் போட்டியிடும் ஸ்ரீதாரணி ஆகியோருக்கு வெற்றி வாய்ப்பு கிடையாது. இந்த பெண் வேட்பாளர்கள் தமது கட்சிகளுக்கு வாக்கு சேர்க்கும் கருவிகளாகத்தான் இருப்பார்கள்.

ஐக்கிய தேசியக்கட்சி இம்முறை ஒரு ஆசனத்தை பெறுவது சாத்தியமில்லை என பரவலாக சொல்லப்படுகிறது. அப்படி வெற்றி பெற்றால் அக்கட்சியிலிருந்து விஜயகலா மகேஸ்வரனே வெற்றி பெறுவார்.

இம்முறையும் தமிழரசுக்கட்சி தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பே அதிக வாக்குகளை பெற்று வெற்றி பெற்று கூடிய ஆசனங்களை பெறும் என நம்பபடுகிறது. கடந்த தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெற்ற வாக்கை விட சற்று குறைவான வாக்குகளை பெற்றாலும் யாழ். மாவட்டத்தில் அதிக ஆசனங்களை பெறப்போகும் கட்சியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பே உள்ளது

யாழ். மாவட்டத்திலிருந்து இம்முறை தமிழரசுக்கட்சியிலிருந்து தெரிவு செய்யப்பட இருப்பவர்களில் ஒருவராக திருமதி சசிகலா ரவிராஜ் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருமதி சசிகலா ரவிராஜ் அவர்களுக்கு பலமான அரசியல் பின்புலம் ஒன்று உண்டு. தென்மராட்சியில் அவரின் கணவர் மதிப்பு மிக்க அரசியல் தலைவராக திகழ்ந்திருந்தார். தமிழரசுக்கட்சியில் உள்ள ஏனைய வேட்பாளர்கள் பெண் வேட்பாளரான சசிகலா ரவிராஜ் அவர்களுக்கும் ஒரு வாக்கை வழங்குமாறு கோரியிருப்பது போன்ற சாதக நிலைகள் அவருக்கான வெற்றி வாய்ப்புக்கு வழி வகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து கொழும்பில் சுட்டுக்கொல்லப்பட்ட நடராசா ரவிராஜ் அவர்களுக்கு சாவகச்சேரி தொகுதியில் கணிசமான ஆதரவு உண்டு. அது தவிர அவர் சில காலம் யாழ். மாநகரசபை முதல்வராகவும் பணியாற்றினார்.

திருமதி சசிகலா ரவிராஜ் அவர்கள் சாவகச்சேரி டிறிபேர்க் கல்லூரி வேம்படி மகளிர் கல்லூரி ஆகியவற்றிலும் பின்னர் யாழ். பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானமாணிப் பட்டப்படிப்பையும் பூர்த்தி செய்தார்.

33 ஆண்டுகள் கொழும்பில் தனியார் பெண்கள் பாடசாலை ஒன்றில் ஆசிரியையாக கடமையாற்றினார்.

பல்கலைக்கழகத்தில் படிக்கும் காலத்திலேயே அரசியல் விடயங்களில் ஈடுபாடு கொண்டிருந்த இவர் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் மனைவி மதிவதனி அவர்கள் உட்பட சில மாணவிகள் பங்கேற்ற உண்ணாவிரதப் போராட்டத்திலும் பங்குபற்றியிருந்தார்.

யாழ். மாவட்டத்தில் போட்டியிடும் பெண் வேட்பாளர்களில் மிக அமைதியான சுபாவம் கொண்ட திருமதி சசிகலா ரவிராஜ் அவர்கள் கல்வி மற்றும் மொழி புலமை மிக்கவராக திகழ்கிறார்.

ஒற்றுமை என்பது வீட்டில் அல்லது குடும்பத்தில் இருந்து ஆரம்பித்து தேசம் நோக்கி கடந்து செல்லவேண்டும். இதிலே சில விட்டுக்கொடுப்புக்களையும் சகிப்புத்தன்மையையும் புரிந்துணர்வையும் நாம் கொண்டிருக்க வேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பாகும் என கூறும் திருமதி சசிகலா ரவிராஜ் அவர்கள் தனது கணவர் விட்டு சென்ற பணிகளை தொடர்வதே தனது இலட்சியம் என கூறுகிறார்.

யாழ். மாவட்டத்தில் பெண் பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்பட வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டிருக்கும் பெண்கள் அமைப்புக்கள் வெற்றி பெறப்போகும் கட்சியில் உள்ள பெண் வேட்பாளருக்கு வாக்களித்து வெற்றி பெற வைப்பதன் மூலமே பெண் பிரதிநிதித்துவத்தை தக்க வைத்துக்கொள்ள முடியும். வெற்றி பெற முடியாத கட்சிக்கு அல்லது பெண் வேட்பாளர் அந்த கட்சியின் மூலம் வெற்றி பெறவே மாட்டார் என தெரிந்து கொண்டு அவர்களுக்கு வாக்களிப்பது பிரயோசனமற்ற வாக்காகவே அது மாறும்.

எனவே யாழ் மாவட்டத்தில் பெண்கள் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய வேண்டியது இன்றியமையாததாகும். அந்த பெண் வேட்பாளர்களில் அதிக ஆசனங்களை பெறப்போகும் கட்சியின் வெற்றி வேட்பாளராக திருமதி சசிகலா ரவிராஜ் அவர்கள் திகழ்கிறார் என்பது பலரது அபிப்பிராயமாகும்.

பெண்களின் விகிதாசாரத்திற்கு ஏற்ப பெண்கள் தெரிவு செய்யப்படுவது மிகக்குறைவாக இருக்கின்ற போதிலும் ஆகக்குறைந்தது யாழ். மாவட்டத்தில் உள்ள பெண்கள் தமது பிரதிநிதியாக ஒருவரையாவது தெரிவு செய்ய வேண்டிய பொறுப்பில் உள்ளனர்.

2004ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக 16 ஆண்டுகளாக யாழ். மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர் நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார்.

இம்முறையும் யாழ் மாவட்டத்திலிருந்து ஆளுமை மிக்க பெண் ஒருவர் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட வேண்டும். இது யாழ். மாவட்டத்தில் உள்ள பெண்களின் கைகளில் தான் தங்கியுள்ளது.

( இரா.துரைரத்தினம் )