தமிழரசுக் கட்சியே அதிகூடிய ஆசனங்களைப் பெறும்! தேர்தல் நிலவரம் பற்றி சிரேஸ்ட ஊடகவியலாளரின் ஆழமான பார்வை!

Report Print Gokulan Gokulan in கட்டுரை

இலங்கையில் 1977ஆம் ஆண்டுக்கு முன்னைய காலத்தில் 5ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆட்சி மாற்றத்தையே மக்கள் விரும்பினார்கள் என்பதுதான் தேர்தல் வரலாறு.

ஆனால் 1977ஆம் ஆண்டுக்கு பின்னர் இந்த நிலைமை மாறி ஐக்கிய தேசியக்கட்சி தொடர்ச்சியாக 17ஆண்டுகள் ஆட்சி செய்ததையும் அதன் பின்னர் 1994ஆம் ஆண்டுக்கு பின்னர் அடுத்து வந்த இரு தேர்தல்களில் சிறிலங்கா சுதந்திரக்கட்சி ஆட்சியை கைப்பற்றியதையும் நாம் அறிவோம்.

தென்னிலங்கையை பொறுத்தவரை எந்த கட்சி ஆட்சியை கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்புகளுடன் மக்கள் தேர்தல்களை சந்தித்த காலம் போய் இந்த கட்சிதான் பாராளுமன்ற ஆட்சியை கைப்பற்றும் என்ற நம்பிக்கையோடு இலங்கை மக்கள் இம்முறை தேர்தலை சந்திக்கின்றனர்.

மாவட்ட விகிதாசார தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை எந்த கட்சியும் எக்காலத்திலும் பெற முடியாது. தான் கொண்டு வந்த அரசியல்யாப்பை யாரும் மாற்றி விடக் கூடாது என்ற ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் தந்திரத்தின் விளைவுதான் அது. மூன்றில் இரண்டு பெரும்பான்மை எந்த கட்சியும் பெறக் கூடாது என்பதற்காகவே ஜே.ஆர்.ஜெயவர்த்தனா தொகுதி ரீதியான தேர்தல் முறையை இல்லாமல் செய்து மாவட்ட ரீதியான தேர்தல் முறையை 1978ஆம் ஆண்டு புதிய அரசியல் யாப்பில் அறிமுகப்படுத்தினார்.

ஜே.ஆர்.ஜெயவர்த்தனா மாவட்ட விகிதாசார தேர்தல் முறையை கொண்டு வந்ததற்கு இன்னொரு காரணமும் கூறப்பட்டது. 1977ஆம் ஆண்டு தொகுதி ரீதியான தேர்தல் நடத்தப்பட்ட போது சிறிலங்கா சுதந்திரக்கட்சி படுதோல்வியடைந்து ஐக்கிய தேசியக்கட்சிக்கு அடுத்த நிலையில் தமிழர் விடுதலைக் கூட்டணி ஆசனங்களை எடுத்ததால் எதிர்க்கட்சி தலைவர் பதவி தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு கிடைத்தது. அந்த நிலை மீண்டும் வரக் கூடாது என்பதற்காகவே ஜே.ஆர். மாவட்ட விகிதாசார தேர்தலை கொண்டுவந்ததாகவும் கூறப்படுகிறது.

அப்படியானால் கடந்த முறை தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி கிடைத்ததே என உங்களின் பலர் கேட்கலாம்.

கடந்த முறை ஐக்கிய தேசியக்கட்சிக்கு அடுத்த நிலையில் கூடிய ஆசனங்களை சிறிலங்கா சுதந்திரக்கட்சிதான் பெற்றது. சிறிலங்கா சுதந்திரக்கட்சியும் ஆளும் தரப்பாக மாறியதால் அதற்கு அடுத்த நிலையில் இருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்கப்பட்டது. மாவட்ட விகிதாசார தேர்தலில் முதலாம் இரண்டாம் இடங்களுக்கு தென்னிலங்கை சிங்கள கட்சிகளால் தான் வர முடியும்.

பொதுஜன பெரமுன கட்சியை சேர்ந்த ஒருவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட நிலையில் அதுவும் தமிழ் முஸ்லீம் மக்களின் ஆதரவின்றி தனியே தென்னிலங்கை சிங்கள மக்களின் வாக்குகளால் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஐனாதிபதி தெரிவு செய்யப்பட்டிருக்கும் நிலையில்இ ஐக்கிய தேசியக்கட்சி இரண்டாக பிளவு பட்டு பலவீனப்பட்டிருக்கும் நிலையில் பொதுஜன பெரமுன கட்சியே ஆட்சி அமைக்க கூடிய அறுதிபெரும்பான்மை ( 113ஆசனங்கள் ) ஆசனங்களை பெற்று ஆட்சி அமைப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் முடிந்த பின்னர் மூன்றில் இரண்டு பெரும்பான்மையான 150 ஆசனங்களை சிறிலங்கா சுதந்திரக்கட்சியிலிருந்தும் ஐக்கிய தேசியக்கட்சியிலிருந்து கட்சி தாவப்போகும் உறுப்பினர்களை கொண்டும் பெற்றுக்கொள்வார்கள்.

இம்முறை றிசாத் பதியுதீன் போன்றவர்களை அமைச்சரவையில் கோத்தபாயா சேர்த்துக்கொள்ள மாட்டார் என எதிர்பார்க்கப்படுகிறது. உதிரியாக இருக்கும் முஸ்லீம் கட்சிகளில் வெற்றி பெறுபவர்களை இணைத்து கொள்வதே அவர்களின் திட்டமாகும்.

கொழும்பு உட்பட தென்னிலங்கையில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பொதுஜன பெரமுன கட்சியே கூடிய ஆசனங்களை பெற்றுக்கொள்ளும்.

காலாகாலமாக ஐக்கிய தேசியக்கட்சியின் கோட்டையாக இருந்த கொழும்பு மாவட்டத்தை கூட அக்கட்சி இம்முறை இழக்க உள்ளது.

அதேபோல வடக்கு கிழக்கில் அம்பாறைஇ திருகோணமலை தவிர்ந்த யாழ்ப்பாணம்இ வன்னிஇ மட்டக்களப்பு ஆகிய மூன்று மாவட்டங்களிலும் கூடிய வாக்குகளை பெறப்போவது தமிழ் தேசியக் கூட்டமைப்புத்தான்.

யாழ். மாவட்டம்.

1977ஆம் ஆண்டு 11 நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்டிருந்த யாழ். மாவட்டத்தில் இடப்பெயர்வு மற்றும் சனத்தொகை வீழ்ச்சி காரணமாக காலத்துக்கு காலம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு தற்போது 7 உறுப்பினர்களே தெரிவு செய்யப்படுகின்றனர்.

மாவட்ட விகிதாசார தேர்தல் அறிமுகப்படுத்தப்பட்ட போது மாவட்டங்களில் உள்ள தொகுதிகளின் எண்ணிக்கையை கணக்கில் எடுத்து போனஸ் ஆசனமும் வழங்கப்பட்டே அம்மாவட்டத்திற்கான ஆசனங்கள் வழங்கப்பட்டது.

ஆனால் யாழ் மாவட்டத்தில் 11தொகுதிகள் இருக்கின்ற போதிலும் தற்போது 7 உறுப்பினர்களே தெரிவு செய்யப்படுகின்றனர். இதற்கு காரணம் அம்மாவட்டத்தின் சனத்தொகை வீழ்ச்சியாகும்.

கடந்த முறை தமிழ் தேசியக் கூட்டமைப்பு 5 ஆசனங்களையும் ஈ.பி.டி.பிஇ மற்றும் ஐக்கிய தேசியக்கட்சி தலா ஒவ்வொரு ஆசனங்களையும் பெற்றுக்கொண்டன.

இம்முறை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வாக்குகள் பிரிக்கப்பட கூடிய வாய்ப்புக்கள் உள்ளன. கடந்த முறை தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் போட்டியிட்ட சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எவ். பிரிந்து சென்று முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையிலான அணியுடன் சேர்ந்திருக்கிறார்கள்.

தென்னிலங்கை கட்சிகளுக்கு மற்றும் காலத்திற்கு காலம் ஆளும் கட்சிகளுடன் சேர்ந்திருக்கும் தமிழ் குழுக்கள் ஆகியவற்றிற்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட வாக்காளர்கள் தமிழரசுக்கட்சி போன்ற தமிழ் கட்சிகளுக்கு வாக்களிப்பது வழமை.

ஆனால் அப்படிப்பட்ட எண்ணம் கொண்ட வாக்காளர்கள் அனைவரும் இம்முறை தமிழரசுக்கட்சிக்கு வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்க முடியாது. இந்த வாக்குகள் விக்னேஸ்வரன் அணிஇ மற்றும் கஜேந்திரகுமார் அணிகளுக்கு செல்வதற்கும் வாய்ப்புக்கள் உண்டு.

எந்த தேர்தல்களிலும் இல்லாத அளவிற்கு இம்முறை அனைத்து கட்சிகளும் தமிழரசுக்கட்சியை குறிவைத்தே தாக்கி வருகின்றன. குறிப்பாக தமிழரசுக்கட்சியில் போட்டியிடும் சுமந்திரன் தோற்கடிக்கப்பட வேண்டும் என கோரி வருகின்றன. எனினும் கடந்த தேர்தலை விட இம்முறை தமிழரசுக்கட்சி வேட்பாளர்களின் பிரசாரம் தீவிரமாக இருந்ததையும் அவதானிக்க முடிந்தது.

இத்தகைய சூழலில் தமிழரசுக்கட்சிக்கு கடந்த பொதுத்தேர்தலை விட சற்று குறைவான வாக்குகளே அளிக்கப்படலாம்.

தமிழரசுக்கட்சி கடந்த முறை 5ஆசனங்களை பெற்ற போதிலும் இம்முறை 4ஆசனங்களையே பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஈ.பி.டி.பி, மற்றும் விக்னேஸ்வரன் அணி தலா ஒவ்வொரு ஆசனங்களை பெற்றுக்கொள்வார்கள். மிகுதியாக உள்ள ஒரு ஆசனத்தை அங்கஜன் தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக்கட்சி, அல்லது கஜேந்திரகுமாரின் அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சி பெற்றுக்கொள்ளும்.

கடந்த பொதுத்தேர்தலில் ஒரு ஆசனத்தை பெற்ற ஐக்கிய தேசிய கட்சிக்கு இம்முறை வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.

வன்னி மாவட்டம்.

ஆறு ஆசனங்களை கொண்ட வன்னி மாவட்டத்தில் கடந்த பொதுத்தேர்தலின் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு 4 ஆசனங்களையும் ஐக்கிய தேசியக்கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆகியன தலா ஒவ்வொரு ஆசனங்களையும் பெற்றுக்கொண்டன.

கடந்த முறை தமிழ் தேசியக்கூட்டமைப்பின் மூலம் வெற்றி பெற்ற சிவசக்தி ஆனந்தன் இம்முறை விக்னேஸ்வரன் அணியில் போட்டியிடுகிறார்.

இம்முறை தமிழ் தேசியக் கூட்டமைப்பு 3ஆசனங்களையே பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. றிசாத் பதியுதீன் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி, மற்றும் பொதுஜன பெரமுன தலா ஒரு ஆசனத்தை பெறலாம்.

மிகுதியாக உள்ள ஒரு ஆசனத்தை விக்னேஸ்வரன் தலைமையிலான அணி பெற்றுக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது

திருகோணமலை மாவட்டம்.

2000ஆம் ஆண்டு எத்தகைய நெருக்கடியை எதிர்நோக்கி இருந்ததோ அந்த நிலை இம்முறை வரலாம் என கூறப்படுகிறது. திருகோணமலை மாவட்டத்தில் சனத்தொகை அடிப்படையில் தமிழர்களின் விகிதாசாரமே அதிகம் என கூறப்பட்டாலும் 4 ஆசனங்களில் ஒரு ஆசனத்தையே பெறக்கூடிய சூழல் காணப்படுகிறது. 2000ஆம் ஆண்டு தமிழ் கட்சிகள் பிரிந்து நின்று போட்டியிட்டதால் தமிழர் தாயகத்தின் தலைநகர் என சொல்லப்படும் திருகோணமலையில் ஒரு ஆசனத்தை கூட பெற முடியாமல் போய்விட்டது.

இம்முறையும் தமிழரசுக்கட்சிஇ விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணிஇ அகில இலங்கை தமிழ் காங்கிரஷ்இ ஈ.பி.டி.பி என பல தமிழ் கட்சிகள் போட்டியிடுகின்றன. தமிழ் வாக்குகள் பிரிவதற்கு சந்தர்ப்பம் உண்டு. எனினும் அங்கு ஒரு ஆசனம் கிடைத்தால் அது தமிழரசுக்கட்சிக்குத்தான் கிடைக்கும். இல்லை என்றால் திருகோணமலை மாவட்டத்தில் இரண்டு சிங்களவர்களும் இரண்டு முஸ்லீம்களும் தெரிவாவதற்கு வழிவகுத்த பெருமை விக்னேஸ்வரன்இ மற்றும் கஜேந்திரகுமார் தரப்புக்களையே சேரும்.

மட்டக்களப்பு மாவட்டம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த பொதுத்தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மூன்று ஆசனங்களையும் சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஷ், ஐக்கிய தேசியக்கட்சி ஆகியன தலா ஒவ்வொரு ஆசனங்களையும் பெற்றுக்கொண்டன. தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒரு இலட்சத்து 27ஆயிரம் வாக்குகளை பெற்று முதல் சுற்றிலேயே 3 ஆசனங்களை பெற்றுக்கொண்டது. கடந்த தேர்தலின் போது தமிழ் வாக்குகள் பெரிய அளவில் பிரிக்கப்படவில்லை.

இம்முறை தமிழ் கட்சிகள் என தமிழரசுக்கட்சிஇ ரி.எம்.வி.பி, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி ( விக்னேஸ்வரன் அணி) தமிழர் விடுதலைக்கூட்டணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் ஆகிய கட்சிகளும் ஏனைய கட்சிகள் சுயேச்சைக்குழுக்கள் என 250க்கு மேற்பட்ட தமிழர்கள் போட்டியிடுகின்றனர்.

முஸ்லீம் தரப்பில் சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஷ், ஹிஸ்புல்லா தலைமையிலான ஐக்கிய மக்கள் சமாதான கூட்டமைப்பு, அமிர்அலி தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன.

கடந்த பொதுத்தேர்தலை விட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரசாரம் விரிவு படுத்தப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.

1.எட்டு வேட்பாளர்களும் தனித்தனியாக மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பிரசாரங்களில் ஈடுபட்டனர்.

2.மட்டக்களப்பு மாநகரமுதல்வர் சரவணபவன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் தலைமையில் மாவட்டத்தின் பல பாகங்களிலும் வீட்டு சின்னத்திற்கு வாக்களிக்குமாறு பொதுவான பிரசாரத்தை மேற்கொண்டனர்.

3.தமிழரசுக்கட்சியின் வாலிபமுன்னணி தனியாக பிரசாரத்தை மேற்கொண்டது.

4.ஜனநாயக போராளிகள் கட்சி தனியாக பிரசாரத்தில் ஈடுபட்டது.

5.வாக்குகளை சேர்க்க கூடிய வேட்பாளர்களும் இம்முறை நிறுத்தப்பட்டிருந்தனர்.

இந்த காரணங்களால் தமிழரசுக்கட்சியின் வாக்கு வங்கியில் பெரிய அளவில் வீழ்ச்சி ஏற்படும் என சொல்வதற்கு இல்லை. தமிழ் மக்கள் தேசியக் கூட்டணிஇ தமிழர் விடுதலைக் கூட்டணிஇ அகிய இலங்கை தமிழ் காங்கிரஷ் மற்றும் சுயேச்சைக்குழுக்கள் மொத்தமாக சுமார் 30ஆயிரத்திற்கு குறையாத வாக்குகளை எடுப்பார்கள் என்பதை மறுப்பதற்கும் இல்லை.

இம்முறையும் தமிழரசுக்கட்சி முதல் சுற்றிலேயே மிக இலகுவாக 3 ஆசனங்களை பெறும் என்றே நம்பபடுகிறது.

மிகுதி இரண்டு ஆசனங்கள் யாருக்கு என்பதுதான் கேள்வி.

இந்த இரண்டு ஆசனங்களையும் சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஷ், ரி.எம்.வி.பி, ஐக்கிய மக்கள் சமாதான கூட்டமைப்பு, ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய நான்கு கட்சிகளில் இரண்டு கட்சி பெற்றுக்கொளளும்.

அம்பாறை மாவட்டம்.

90ஆயிரம் தமிழ் வாக்குகளை கொண்ட அம்பாறை மாவட்டத்தில் கடந்த காலங்களில் ஒரு தமிழ் பிரதிநிதி தெரிவு செய்யப்படுவது வழமை. ஆனால் இம்முறை தமிழ் பிரதிநிதித்துவம் பறிபோய் விடுமா என்ற அச்சம் அம்மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

தமிழ் கட்சிகள் என தமிழரசுக்கட்சிஇ கருணா தலைமையில் தமிழர் மகாசபைஇ அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் ஆகியன போட்டியிடுகின்றன. தமிழ் காங்கிரஷ் கட்சிக்கு அங்கு அறவே செல்வாக்கு இல்லை. சுமார் 500 வாக்குகளைத்தான் அவர்கள் பெறுவார்கள். ஆனால் தமிழரசுக்கட்சிஇ தமிழர் மகாசபை ஆகிய இரு அணிகளுக்கும் சமமான பலம் காணப்படுகிறது. ஒரு பிரதிநிதியை பெறுவதற்கு 40ஆயிரத்திற்கு மேற்பட்ட வாக்குகள் தேவை. அம்பாறை மாவட்டத்தில் 70ஆயிரம் தமிழர்களே வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 70ஆயிரம் வாக்குகள் இரண்டாக பிரிந்தால் அம்பாறையில் தமிழ் பிரதிநிதித்துவத்தை பெற முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

முஸ்லீம் அரசியல்வாதிகளான ஹரிஸ், அதாவுல்லா ஆகியோரின் இனவாத பேச்சு அம்பாறையில் உள்ள தமிழ் மக்களை கருணாவின் பக்கம் கொண்டுபோய் சேர்த்திருக்கிறது. தமிழ் முஸ்லீம் என்ற இனமுரண்பாட்டின் உச்சக்கட்டம் கருணாவுக்கு சாதகமாகவும் அமையலாம். கருணா போன்ற ஒருவர் தங்கள் பிரதிநிதிகளாக வந்தால் தான் தங்கள் பிரதேசத்தை காப்பாற்றிக்கொள்ள முடியும் என கல்முனை இளைஞர் சேனை அமைப்பை சேர்ந்தவர்கள் கூறுகின்றனர்.

வடக்கு கிழக்கில் கடந்த பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி 14 ஆசனங்களையும் இரு தேசியப்பட்டியல் ஆசனங்களையும் பெற்றுக்கொண்டது.

இம்முறை மாவட்ட ரீதியில் 11 ஆசனங்களையும் தேசிய பட்டியலில் இருந்து ஒரு ஆசனத்தையுமாக ஆகக்கூடியது 12 ஆசனங்களைத்தான் தமிழரசுக்கட்சியினால் பெற முடியும்.

2004ஆம் ஆண்டு 22 பாராளுமன்ற உறுப்பினர்களை பெற்றுக்கொண்ட தமிழரசுக்கட்சி தற்போது 12 ஆசனங்களை பெறுவதற்கே பெரும்பாடு படவேண்டியிருக்கிறது.

இந்த பின்னடைவுகளுக்கு என்ன காரணம்? இது பற்றி தேர்தல் முடிந்ததும் விரிவாக பேசலாம்.

( இரா.துரைரத்தினம் )