லண்டனில் தொடங்கிய போர்க்குற்ற விசாரணை.. .

Report Print Subathra in கட்டுரை

சில முக்கியமான நிகழ்வுகள், விடயங்கள் கூட பரபரப்பான செய்திகள், சூழல்களுக்குள் ஊடக கவனிப்பை பெறாமல் போய் விடுவதுண்டு. இந்த ஆண்டில் இலங்கையுடன் தொடர்புடைய குறிப்பாக குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய இரண்டு விடயங்கள் அவ்வாறுதான் கவனத்தை இழந்துள்ளன.

கடந்த பெப்ரவரி மாதம் 27ஆம் திகதி உலகமெங்கும் கொரோனா தொற்று பற்றிய பரபரப்புக்குள் சிக்கியிருந்த போது 87 வயதான பிரித்தானியாவின் முன்னாள் இராணுவ அதிகாரியான லெப்.கேணல் பிரையன் பற்றியின் மரணம் பற்றிய செய்தி வெளியுலகத்துக்கு கிடைக்கவில்லை.

அந்தச் செய்தி வெளியே வருவதற்கு கிட்டத்தட்ட மூன்று மாதங்களாகின. அதுபோலவே பொதுத் தேர்தலுக்குப் பிந்திய பரபரப்பில் நாடு இருந்த போது இன்னொரு செய்தியும் இலங்கை ஊடகங்களில் குறிப்பாக தமிழ் ஊடகங்களில் அதிக கவனத்தைப் பெறவில்லை.

1980களில் இலங்கையில் பிரித்தானிய கூலிப்படைகளின் போர்க்குற்றங்கள் தொடர்பாக பிரித்தானியாவின் மெட்ரோபொலிட்டன் பொலிஸார் விசாரணைகளைத் தொடங்கியிருந்தனர் என்பதே அந்த செய்தி.

இந்தச் செய்திக்கும் கொரோனா தொற்று பரபரப்பில் அமுங்கிப் போன பிரித்தானிய இராணுவ அதிகாரி லெப்.கேணல் பிரையன் பற்றியின் மரணம் தொடர்பான செய்திக்கும் நெருங்கிய தொடர்புகள் உள்ளன.

இலங்கையில் பிரித்தானிய கூலிப்படைகளுக்கு தலைமை தாங்கியவர்தான் லெப்.கேணல் பிரையன் பற்றி. 1984ஆம் ஆண்டு அவர் இலங்கையில் விசேட அதிரடிப்படைப் பிரிவுக்கு பயிற்சிகளை அளித்தது தொடக்கம் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் நடவடிக்கைகளுக்கு நிபுணத்துவ உதவிகளை வழங்கியது, வழிநடத்தியது வரை அவரது பங்களிப்பு இருந்திருக்கின்றது.

1980களின் தொடக்கத்தில் பிரித்தானியாவின் தனியார் இராணுவ அமைப்பாக கீனி மீனி சேவை இலங்கையில் கூலிப்படைகளாகச் செயற்பட்டிருந்தது.

கே.எம்.எஸ் என்ற இந்த அமைப்பில் பிரித்தானிய இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற அதிகாரிகள் அங்கம் வகித்தனர்.

இவர்கள் மலேசியா, இந்தோனேசியா, நிக்கரகுவா, இலங்கை போன்ற பல நாடுகளில் கிளர்ச்சி முறியடிப்பு தொடர்பாக பயிற்சிகளை அளிப்பவர்களாக நேரடியாக தாக்குதல்களில் ஈடுபடுபவர்களாக, உத்திகளை வகுத்துக் கொடுப்பவர்களாக உள்நாட்டுப் போர்களில் பங்கெடுத்துள்ளனர்.

இலங்கையிலும் இவர்கள் விசேட அதிரடிப்படையினருக்கு பயிற்சிகளை அளிப்பதில், இராணுவத்தினருக்கு பயிற்சிகளை அளிப்பதில் மாத்திரமின்றி ஹெலிகொப்டர்களின் துணை விமானிகளாகவும் போர் நடவடிக்ககைளில் நேரடியாக பங்கேற்பவர்களாகவும் இருந்திருக்கின்றார்கள்.

1984இற்கும் 1988இற்கும் இடைப்பட்ட காலத்தில் இந்த கூலிப்படைகள் இலங்கைப் படையினருடன் இணைந்து செயற்பட்ட காலத்தில் இடம்பெற்ற பல்வேறு படுகொலைகள் தான் இப்போது கவனத்தைப் பெற்றிருக்கின்றன.

பிரித்தானியாவின் கீனி மீனி கூலிப்படைகளில் போர்க்குற்றங்கள் தொடர்பாக பிரித்தானிய ஊடகவியலாளரான பில் மில்லர் ஒரு நூலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

அந்த நூலில் இலங்கையில் பிரித்தானியா கூலிப்படைகள் பங்கெடுத்திருந்த பல போர்க்குற்றங்கள் குறித்த குற்றச்சாட்டுக்களையும் முன்வைத்திருந்தார்.

குறிப்பாக 1985ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 2ஆம் திகதி கிளிநொச்சி, பிரமந்தனாறு கிராமத்தில் ஹெலிகொப்டர்களில் சென்று இறங்கிய இராணுவத்தினரால் 16 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், 1987 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27ஆம் திகதி மட்டக்களப்பு கொக்கட்டிச்சேலை இறால் பண்ணைக்கள் 85 தமிழ்ப் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஆகியவற்றில் பிரித்தானிய கூலிப்படைகளின் நேரடியான பங்கு தொடர்பாக குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டிருக்கின்றன.

இவை தவிர வேறு பல இராணுவ நடவடிக்கைகளிலும் இவர்கள் பங்கேற்றதாக ஊடகவியலாளர் பில் மில்லரால் சாட்சியங்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.

இதற்குப் பின்னர் தான் பிரித்தானியாவில் உள்ள தமிழ் அமைப்பு ஒன்று கூலிப்படைகளில் போர்க்குற்றங்கள் குறித்த விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்று ஐ.நாவிடம் முறையிட்டது.

ஐ.நா சபையில் கூலிப்படைகள் தொடர்பான ஐ.நா செயலணி ஒன்று இயங்குகின்றது. உலகின் பல்வேறு நாடுகளில் கூலிப்படைகள் அல்லது தனியார் இராணுவங்கள் செயற்படுகின்றன.

இலங்கையில் கூட அவ்வாறான கூலிப்படைகள் இருக்கின்றன. சர்வதேச கடலில் பயணிக்கும் கப்பல்களுக்கு பாதுகாப்பு அளிப்பது, கேந்திர நிலையங்களுக்கு பாதுகாப்பு அளிப்பது போன்ற பணிகளில் இந்த கூலிப்படைகள் அல்லது தனியார் பாதுகாப்பு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.

கீனி மீனி போன்ற பிரித்தானிய கூலிப்படைகள் கிளர்ச்சி ஒழிப்பு போன்ற உத்திகளை வகுத்துக் கொடுக்கின்ற பயற்சி அளிக்கின்ற பணிகளிலும் ஈடுபட்டு வந்துள்ளன.

கீனி மீனி என்ற அமைப்பு இப்போது இல்லை. ஆனால் அதிலிருந்து உருவாக்கப்பட்ட சலாடின் செக்யூரிட்டி என்ற கூலிப்படை அமைப்பு இப்போதும் செயற்படுகின்றது.

இந்த அமைப்பு பயிற்சிகளை அளித்தல், பாதுகாப்பு வழங்குதல், தொழிநுட்ப உதவிகளை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை வழங்குகின்றது.

இவ்வாறான கூலிப்படைகளின் நடவடிக்கைகள் குறித்து அவற்றின் மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்து ஆராய்வதற்கு ஐ.நா செயலணி ஒன்று இயங்குகின்றது.

அந்த செயலணியிடம் தான் கே.எம்.எஸ் கூலிப்படையின் போர்க்குற்றங்கள் குறித்து தமிழ் அமைப்பினால் முறையிடப்பட்டது.

அந்த ஐ.நா செயலணி இந்த விவகாரத்தை பிரித்தானியாவிடம் கொண்டு சென்றது.

இதன் அடிப்படையில்தான் பிரித்தானியாவின் மெட்ரோபொலிட்டன் பொலிஸார் விசாரணைகளை தொடங்கியுள்ளதாக ஜெனிவாவில் உள்ள ஐநா அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தியிருக்கின்றார்கள் பிரித்தானிய இராஜதந்திரிகள்.

இந்த விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளதை மெட்ரோபொலிட்டன் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ள போதிலும் மேலதிக விபரங்கள் எதையும் அவர்கள் வெளிப்படுத்தவில்லை என்று ஊடகவியலாளர் பில் மில்லர் உறுதிப்படுத்தியிருக்கின்றார்.

இலங்கையில் புதிய அரசாங்கம் பதவிக்கு வந்துள்ள நிலையில் பிரித்தானிய கூலிப்படைகள் பற்றிய விசாரணைகள் அங்கு தொடங்கப்பட்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்த விடயமாக உள்ளது.

தமிழர் தரப்பு போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற போர்க்குற்றங்களை மட்டுமே மையப்படுத்தி போர்க்குற்ற விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.

ஆனால் பிரித்தானியாவில் தொடங்கப்பட்டுள்ள விசாரணைகள் அதற்கு முந்தியவை.

வெளிப்படுத்தக் கூடிய உண்மைகள் இறுதிக்கட்டப் போர்க்கலாத்தில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் குறித்த விசாரணைகளையும் வலுப்படுத்தக் கூடியதாகும்.

ஆனால் என்ன பிரித்தானிய பொலிஸாரின் விசாரணைகளில் உள்ளது உள்ளபடி வெளிச்சத்துக்கு கொண்டு வரப்பட வேண்டும். இல்லையேல் இதுவும் வெறும் குற்றச்சாட்டாகவே முடிந்து போய் விடும்.