ஆழ ஊடுருவும் படையணி.. ஆபத்தான படைப்பிரிவு

Report Print Subathra in கட்டுரை
604Shares

சர்வதேச ரீதியாக இராணுவ மாற்றம் பாதுகாப்புத் தொடர்பான தகவல்கள், ஆய்வுகளை வெளியிடும், ஆவணப்படுத்தல்களைச் செய்யும், militaryranks.info என்ற இணையத்தளம், அண்மையில் ஒரு தரப்படுத்தல் பட்டியலை வெளியிட்டுள்ளது.

உலகின் மிக ஆபத்தான விசேட படைப்பிரிவுகள் (Most Dangerous Special Forces In The World) என்ற தரப்படுத்தல் பட்டியலே அது. இதில் 10 விசேட படைப்பிரிவுகள் இடம்பெற்றுள்ளன.

முதலிடத்தில் இருப்து அமெரிக்க கடற்படையின் விசேட கொமாண்டோ படைப்பிரிவின் சீல் (SEAL, இரண்டாவது இடத்தில், ரஷ்ய ஆயுதப்படைகளின் விசேட நடவடிக்கைப் படைகள் தரப்படுத்தப்பட்டுள்ளது.

மூன்றாவது இடத்தில் இருப்பது LRRP எனப்படும் இலங்கை இராணுவத்தின் விசேட படைப்பிரிவின் ஆழ ஊடுருவும் படையணி. LRRP என்றும் அழைக்கபபட்ட இந்தப் படைப்பிரிவுதான் உலகின் மூன்றாவது மிக ஆபத்தான் விசேட படைப்பிரிவு என்று வகைப்படுத்தப்பட்டிருக்கின்றது.

கிறீன் பரட்ஸ், பாம்பு தின்னிகள் உள்ளிட்ட பெயர்களால் அழைக்கப்படும் அமெரிக்க இராணுவத்தின் விசேட படைப்பிரிவு நான்காவது இடத்தில் இருக்கின்றது.

பிரித்தானியாவின் எஸ்.ஏ.எஸ் எனப்படும் விசேட விமான சேவைகள் பிரிவு ஐந்தாமிடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது.

அதற்கடுத்து இஸ்ரேலின் Sayeret Matkal படைப்பிரிவு ஆறாவது இடத்திலும் பிரான்ஸின் National Gendarmerie Intervention Group ஏழாமிடத்திலும், ஸ்பெய்னின் unidadde Operaciones Especiales படைப்பிரிவு எட்டாமிடத்திலும், இந்தியாவின் மார்கோஸ் என் அழைக்கப்படும் கடற்படையின் மெரைன் கொமாண்டோ படைப்பிரிவு ஒன்பதாவது இடத்திலும் பாகிஸ்தானின் மெரூன் பெரட்ஸ் அல்லது பிளாக் ஸ்ரோக்ஸ் என அழைக்கப்படும் பாகிஸ்தான் இராணுவ விசேட சேவைகள் குழு பத்தாமிடத்திலும் தரப்படுத்தப்பட்டுள்ளன.

உலகின் மிக ஆபத்தான் விசேட படைப்பிரிவுகளை உள்ளடக்கிய இந்தப் பட்டியிலில் இரண்டு விடயங்கள் முக்கியமானவை.

ஒன்று உலகின் மிகப்பெரிய இமராணுவத்தைக் கொண்டுள்ள சீனாவின் விசேட படைப்பிரிவுகள் எவையும் முதல் 10 இடங்களுக்கு வரவில்லை.

இரண்டாவது இலங்கை இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படையணி அதற்குப் பயிற்சி அளித்த நாடுகளின் படைப்பிரிவுகளை முந்திக் கொண்டு மூன்றாவது இடத்துக்கு வந்திருக்கின்றது.

இலங்கை இராணுவத்தின் விசேட படைப்பிரிவுக்கு குறிப்பாக ஆழ ஊடுருவும் அணிக்குப் பயிற்சி அளித்த கிறீன் பெரட்ஸ் எனப்படும் அமெரிக்க இராணுவத்தின் விசேட படைப்பிரிவு நான்காவது இடத்திலேயே தரப்படுத்தப்பட்டிருக்கின்றது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை இராணுவம் பெற்ற வெற்றியில், LRRP எனப்படும் ஆழ ஊடுருவும் படையணியின் பங்கு முக்கியமானது.

1986ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தில் கொமாண்டோ படைப்பிரிவின் ஒரு அங்கமாக விசேட படைப்பிரிவு 2 அதிகாரிகளையும் 38 படையினரையும் கொண்டதாக உருவாக்கப்பட்டது.

எனினும் இந்த விசேட படைப்பிரிவின் முக்கிய அங்கமாக உள்ள ஆழ ஊடுருவும் படைப்பிரிவு என தனியாக செயற்பட ஆரம்பித்தது, 1997ஆம் ஆண்டில்தான்.

பரந்தனில் தான் இதன் செயற்பாடுகள் தொடங்கப்பட்டன. அப்போது கிளிநொச்சியில் இருந்த இராணுவத் தளத்தை புலிகளின் தாக்குதலில் இருந்து பாதுகாப்பதற்கு இந்த அணியின் செயற்பாடுகள் தேவைப்பட்டன.

இந்த அணி புலிகளின் பகுதிகளுக்கள் நுழைந்து தாக்குதல்களை நடத்தி வந்த போதும் 1998ஆம் ஆண்டு புலிகளிடம் கிளிநொச்சி படைத்தளம் வீழ்ச்சியடைவதை இந்த அணியினால் தடுக்க முடியவில்லை.

அதற்குப் பின்னர் வவுனியாவில் இருந்து வன்னியின் தென்முனையிலும் ம்டக்களப்பிலும் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் ஊடுருவித் தாக்கத் தொடங்கியது ஆழ ஊடுருவும் படையணி.

மூன்றாவது கட்ட ஈழப்போரின் இறுதிக் காலகட்டத்திலயே புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் அச்சுறுத்தலுக்குரிய ஒரு படைப்பிரிவாக இது மாறியது.

அதற்கு முக்கியமான காரணம் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும் விமானப்படை அணியை உருவாக்கியவருமான கேர்ணல் சங்கர் ஆழ ஊடுருவும் படையணியினரினால் கொல்லப்பட்டதுதான்.

புதுக்குடியிருப்பில் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தங்குமிடங்களில் ஒன்றுக்கு மிக அருகில் தான் அந்த தாக்குதல் நடத்தப்பட்டது. அது புலிகளுக்கு இன்னும் அதிர்ச்சியைக் கொடுத்திருந்தது.

நான்காவதுகட்ட ஈழப்போரில் ஆழ ஊடுருவும் படையணி இன்னும் கூடுதல் பலத்துடன் வளர்ச்சி பெற்றிருந்தது. அப்போதைய இராணுவத் தளபதி சரத் பொன்சேகா அதனை நவீனமயப்படுத்துவதில் சமாதான காலத்தில் முக்கிய கவனம் செலுத்தியிருந்தார்.

LRRP அணியைக் கொண்டு அவர் புலிகளின் பின்தளக் கட்டமைப்பை சீர்குலைப்பதில் கவனம் செலுத்தினார். போர் ஒன்றில் பின்தளக் கட்டமைப்பின் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது.

அதில் குழப்பங்கள் ஏற்பட்டாலோ, அதற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டாலோ, முன்னரங்க நிழலைகளில் வெற்றிகளைப் பெற முடியாது.

பின்தளத்தில் இருந்து தான் போர் வழிநடத்தப்படும். போருக்கான திட்டமிடல்கள் செய்யப்படும். போருக்குத் தேவையான ஆயுத தளபாடங்களும் ஏனைய விநியோகங்களும் ஒழுங்கமைக்கப்படும். போருக்குத் தேவைப்படும் வீரர்கள் பயிற்றுவிக்கப்பட்டு தயார்ப்படுத்தப்படுவார்கள்.

ஒட்டுமொத்தத்தில் போரின் வெற்றியில் தீர்க்கமான பங்கை பின்தளக் கட்டமைப்பே வகிக்கின்றது. போர்முனை எப்போதும் இயங்கு நிலையில் இருப்பதில்லை முன்னரங்கில் எப்போதும் போர் நடந்து கொண்டிருப்பதில்லை. பெரும்பாலான காலங்கிளல் அது அமைதியாகவே இருக்கும். வெறும் கண்காணிப்புக்கள் மாத்திரம் நடந்து கொண்டிருக்கும்.

ஆனால் பின்தளம் அவ்வாறில்லை. அது தொடர்ச்சியாக இயங்கிக் கொண்டிருக்கும். அதன் இயக்கம் எப்போது நின்று போகின்றதோ அப்போதே முன்னரங்க நிலை செயலிழந்து விடும். 1995இல் விடுதலைப் புலிகள் யாழ்ப்பாணக் குடாநாட்டைக் கைவிட்டு பின்வாங்கியதற்கு முக்கிய காரணம் பின்தளக் கட்டமைப்பை அவர்களால் பேண முடியாமல் போனது.

அதனை அவர்கள் வன்னிக்கு நகர்த்தி பலப்படுத்திக் கொண்டனர். அங்கு பின்தளக் கட்டமைப்பை பாதுகாப்பாக வைத்திருப்பதில் சுமார் 5 ஆண்டுகளுக்கு அவர்களுக்கு பெரிதாக எந்தப் பிரச்சினையும் இருக்கவில்லை.

ஆனால் 2000ஆம் ஆண்டு நிலைமை மாறத் தொடங்கியது. ஆழ ஊடுருவும் படையணி பின்தளக் கட்டமைப்பை குறிவைக்கத் தொடங்கியது.

குறிப்பாக முக்கிய தளபதிகளை குறிவைக்க காடுகள் வழியாக அலைந்து திரிந்தது. ஆங்காங்கே கிளைமோர் தாக்குதல்களை நடத்தியது.

மன்னார், பூநகரி வீதி, மாங்குளம் மல்லாவி வீதி, மாங்குளம் ஒட்டுச்சுட்டான் வீதி, ஒட்டுச்சுட்டான் - புதுக்குடியிருப்பு வீதி என்பன மாத்திரமின்றி பரந்தன் புதுக்குடியிருப்பு வீதி கூட அச்சுறுத்தலுக்குரியவையாக மாறின.

மூன்றாம் கட்ட ஈழப்போரின் இறுதிக் காலக்கட்டத்தில் கேர்ணல் சங்கர், லெப். கேர்ணல் கங்கை அமரன் உள்ளிட்ட புலிகளின் தளபதிகள் ஆழ ஊடுருவும் படையணியினரால் கொல்லப்பட்டனர். மேலும் பிரிகேடியர்களான ஜெயம், பால்ராஜ், தமிழ்ச்செல்வன், சொர்ணம் போன்றவர்கள் கூட கிளைமோர் தாக்குதல்களில் இருந்து மயிரிழையில் உயிர்த்தப்பியிருந்தனர்.

நான்காவது கட்ட ஈழப்போர் தொடங்கியதும் ஆழ ஊடுருவும் படையணி இன்னும் தீவிரமாக செயற்பட்டது.

இராணுவப் புலனாய்வுத்துறை பொறுப்பாளர் கேர்ணல் சார்ள்ஸ் வடபோர் முனை தளபதிகளில் ஒருவரான லெப்.கேர்ணல் மகேந்தி உள்ளிட்ட பல தளபதிகள் இந்த படையணியின் தாக்குதல்களில் உயிரிழந்தனர்.

இதனால் மன்னார், வவுனியா முன்னரங்க போர் நிலைகளுக்கு புலிகளின் தளபதிகள் செல்வது கூட தடைப்பட்து.

அதற்காக அவர்கள் கவச வாகனங்களை பயன்படுத்தும் நிலையும் ஏற்பட்டது. இதன்மூலம் புலிகளின் தளபதிகளுக்கும் களமுனையில் இருந்த போராளிகளுக்கும் இடையிலான நெருக்கம் குறைக்கப்பட்டது.

இது உளவியல் ரீதியாக முன்னரங்க நிலையில் இருந்து போராளிகளைப் பலவீனப்படுத்தியது. அவர்கள் தனிமைப்பட்டது போன்ற உணர்வை அடைந்தனர்.

அத்துடன் முன்னரங்க நிலைகளுக்கான விநியோகங்களும் இந்த அணியினரால் அடிக்கடி குழுப்பப்பட்டது.

அதைவிட பின்தளக் கட்டமைப்பில் இருந்து புலிகளின் தலைமை மற்றும் தளபதிகளால் தாக்குதல்களை திட்மிட்டு செயற்படுத்துவதிலும் சிரமங்கள் எதிர்கொள்ளப்பட்டன.

இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதி விரிவடைய விரிவடைய இந்த நிலைமை இன்னும் மோசமடைந்தது.

இறுதிப் போர் கிளிநொச்சியைக் கடந்த பின்னர் புலிகளின் பின்தள கட்டமைப்பு கிட்டத்தட்ட முற்றிலுமாகவே சீர்குலைந்து போனது.

தாக்குதல்களை திட்டமிட்டு ஒருங்கிணைக்கும் செயற்பாடுகள் அதற்குத் தேவையான விநியோகங்களை மே்றகொள்ளும் எல்லாக் கட்டமைப்புக்களுமே சீர்குலைந்தன.

அதனால் தான் ஓமந்தையில் இருந்து மாங்குளம், ஒட்டுச்சுட்டான் வரையான பெரும் பிரதேசம் புலிகளால் கைவிடப்பட்டது.

1997 - 98 இல் இந்தப் பிரதேசத்தை தக்க வைத்துக் கொள்ளவும் 1999இல் மீளக் கைப்பற்றவும் புலிகள் பெரும் போரை நடத்தினர். அதற்காக பெரும் விலைகளையும் கொடுத்தனர். அரச படைகளுக்கும் பேரழிவுகளை ஏற்படுத்தினர்.

நபான்காவது கட்ட ஈழுப்போரில் இந்த பகுதிகள் சண்டையின்றியே வீழ்ச்சியடைந்தது. அதுபோலத்தான் நாகர்கோவில் முகமாலை கிளாலி முன்னரங்க நிலைகளும் புலிகளால் கடைசி நேரத்தில் கைவிடப்பட்டன.

கிளிநாச்சி பின்தள கட்மைப்பு வீழ்ச்சி கண்டதும் புலிகள் இந்த முன்னரங்க நிலைகளை சண்டையின்றி கைவிட்டு பின்வாங்கினர்.

இந்த முன்னரங்கையும் ஆனையிறவையும் கைப்பற்றுவதற்கும் தக்கவைப்பதற்கும் புலிகள் மிகப்பெரிய சமர்களை நடத்தியிருந்தனர். அதற்காகவே பல்லாயிரம் பேர் உயிரிழக்கவும் நேரிட்டது.

அப்போது அவர்களுக்கு பின்தளக் கட்டமைப்பு பலமாக இருந்தது. அதனால் முன்னரங்கில் இலகுவாக சண்டையிட முடிந்தது.

பின்தளக் கட்டமைப்பு பலமிழந்து போனபோது இந்த முன்னரங்க நிலைகள் தானாகவே வீழ்ச்சி கண்டன.

அவ்வாறு பின்தளக் கட்டமைப்பை ஆட்டம் காணச் செய்வதில் இராணுவத்தின் விசேட படைப்பிரிவுக்கு முக்கிய பங்கு இருந்தது.

அந்த காத்திரமான பங்குதான் ஆழ ஊடுருவும் படையணியை உலகின் மிக ஆபத்தான படைப்பிரிவாக தரப்படுத்தக் காரணமாகியிருக்கின்றது.