கிழக்கு பல்கலைக்கழகத்திலிருந்து கடத்திச் செல்லப்பட்ட 174 தமிழர்களுக்கு என்ன நடந்தது? - இரா.துரைரத்தினம்

Report Print Gokulan Gokulan in கட்டுரை

- இரா.துரைரத்தினம்

கிழக்கு மாகாணத்தில் 1980களின் பின்னர் தமிழ் கிராமங்கள் மீது தாக்குதல் நடத்தி அவர்களை வெளியேற்றும் நடவடிக்கை தொடர்ச்சியாக இடம்பெற்று வந்தது. 1990ஆம் ஆண்டு யூன் மாதத்தின் பின்னர் தமிழ் மக்கள் மீதான படுகொலை உச்சக்கட்டதை அடைந்தது. 1990ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் திகதி கிழக்கு பல்கலைக்கழக அகதி முகாமில் 158 பொதுமக்களும் செப்டம்பர் 23ஆம் திகதி 16பொதுமக்களும் கடத்தி செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.

1990ஆம் ஆண்டு கிழக்கில் நடந்த படுகொலைகளை நினைவு கூருமுகமாக செப்டம்பர் 5ஆம் திகதியை தமிழ் இன உயிர்கொலை நாளாக மட்டக்களப்பு பொது அமைப்புக்களான கிழக்கு பல்கலைக்கழக சமூகம், மற்றும் கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம், அரசசார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியம் மட்டக்களப்பு தமிழர் மறுமலர்ச்சி கழகம் ஆகியன பிரகடனப்படுத்தி இருந்தன.

1990ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் மீது சிறிலங்கா இராணுவத்தினரும், இராணுவத்தினருடன் இணைந்து செயல்பட்ட புளொட் போன்ற ஒட்டுக்குழுக்களும், ஜிகாத் முஸ்லீம் பயங்கரவாத குழுக்களும் வகைதொகை இன்றி படுகொலைகளை நடத்தி வந்தன.

கிழக்கு மாகாணத்தில் நடந்த படுகொலைகளின் பெருந்தொiயானவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்களில் கிழக்கு பல்கலைக்கழக அகதி முகாம் படுகொலையும் ஒன்றாகும்.

1990ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் திகதி கிழக்கு பல்கலைக்கழக அகதி முகாமிலிருந்து 158இளைஞர்களும், செப்டம்பர் 23ஆம் திகதி 16 இளைஞர்களும் சிறிலங்கா இராணுவத்தினரால் கடத்திச்செல்லப்பட்டனர். இராணுவத்தினரால் கடத்திச்செல்லப்பட்ட இவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என நம்பபடுகின்ற போதிலும் இவர்களின் சடலங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால் இவர்கள் காணாமல் போனவர்களாகவே கருதப்படுகின்றனர்.

றிசாட் டயஸ் அல்லது கப்டன் முனாஸ் என்று அழைக்கப்படும் இராணுவ புலனாய்வுப்பிரிவு அதிகாரி தலைமையில் கப்டன் பாலித, கப்டன் குணரத்னா, புளொட் மோகன், முஸ்லீம் ஜிகாத் குழுவைச்சேர்ந்த மேஜர் மஜீத் உட்பட இராணுவ குழு ஒன்றே இம்மனித கடத்தலை செய்ததாக நீதியரசர் பாலகிட்ணர் தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1990ல் விடுதலைப்புலிகளுக்கும் சிறிலங்கா அரசாங்கத்திற்கும் போர் நிறுத்தம் முறிவடைந்து யுத்தம் ஆரம்பமானதை தொடர்ந்து மட்டக்களப்பிலிருந்து வாளைச்சேனை வரையான மக்கள் பாதுகாப்பு தேடி கிழக்கு பல்கலைக்கழகத்தில் தஞ்சம் அடைந்திருந்தனர்.

இக்கடத்தல் சம்பவம் நடைபெற்ற வேளையில் அம்முகாமில் 55ஆயிரம் பொதுமக்கள் தங்கியிருந்தனர்.

சம்பவ தினம் காலை 6மணிக்கு முன்னரே அகதி முகம் இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டது.

சம்பவ தினம் கொம்மாதுறை இராணுவ முகாம் பொறுப்பதிகாரி கப்டன் களுவாராச்சி தலைமையிலான இராணுவத்தினருடன் மட்டக்களப்பு நகரில் இருந்து வந்த இராணுவ புலனாய்வுப்பிரிவு அதிகாரிகளும் அங்கு வந்திருந்தனர்.

கிழக்கு பல்கலைக்கழக அகதி முகாமுக்கு பொறுப்பாக பேராசிரியர் மனோ சபாரத்தினம், பேராசிரியர் த.ஜெயசிங்கம், கலாநிதி வேலுப்போடி சிவலிங்கம் ஆகியோர் இருந்தனர். அகதி முகாமுக்குள் நுழைந்த இவர்கள் தம்மை யார் என அறிமுப்படுத்தி கொண்டதாக அகதி முகாமுக்கு பொறுப்பாக இருந்தவர்களில் ஒருவரான பேராசிரியர் த.ஜெயசிங்கம் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளிக்கும் போது தெரிவித்தார்.

காணாமல் போனோர் பற்றி விசாரிக்க நியமிக்கப்பட்ட நீதியரசர் கே.பாலகிட்ணர் தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் 83பேர் சாட்சியமளித்தனர்.

அங்கு வந்த இராணுவ அதிகாரிகள் தாம்மை யார் என அறிமுகப்படுத்திக் கொண்டனர் என பேராசிரியர் ஜெயசிங்கம் தெரிவித்தார்.

இவர்களுடன் முகத்தை மூடிக்கட்டிய தலையாட்டிகள் என கூறப்படும் 5பேர் இராணுவ உடையுடன் கதிரையில் அமர்த்தப்பட்டிருந்தனர்.

அகதி முகாமில் இருந்த அனைவரும் மைதானத்திற்கு வருமாறு அழைக்கப்பட்டனர். பெண்கள் தனியாகவும் ஆண்கள் தனியாகவும் பிரிந்து நிற்குமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

ஆண்கள் அனைவரும் வயது அடிப்படையில் மூன்று வரிசையாக நிறுத்தப்பட்டனர்.

12வயதிருந்து 25வயதுடையவர்கள் முதலாவது வரிசையிலும் 26வயதிலிருந்து 40வயதுவரையானவர்கள் இரண்டாவது வரிசையிலும் 40வயதிற்கு மேற்பட்டவர்கள் மூன்றாவது வரிசையிலும் நிறுத்தப்பட்டனர்.

இவர்கள் முகத்தை மூடிக்கட்டிய தலையாட்டிகளின் முன்னால் ஒவ்வொருவராக நிறுத்தப்பட்டனர். முகத்தை மூடி கட்டியிருந்தவர்கள் தலையை ஆட்டினால் அவர்கள் கைது செய்யப்பட்டனர். அதேபோன்று தலையாட்டிகளின் பின்னால் நின்ற முஸ்லீம்களும் சிலரை காட்டினர்.

இவ்வாறு தலையாட்டிகளால் அல்லது முஸ்லீம்களால் காட்டப்பட்ட 158பேர் கைது செய்யப்பட்டு அங்கு ஏற்கனவே தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்த பஸ்ஸில் ஏற்றி கொண்டு செல்லப்பட்டனர்.

பஸ்ஸில் கொண்டு செல்லப்பட்டவர்கள் மட்டக்களப்பு மாவட்ட எல்லைப்பகுதியில் உள்ள இராணுவ முகாம் ஒன்றில் வைத்து படுகொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக மட்டக்களப்பு சமாதான குழு பாதுகாப்பு அமைச்சு உட்பட பல மட்டங்களில் முறையிட்ட போது அப்போது பாதுகாப்பு செயலாளராக இருந்த எயர்மார்சல் பெர்னாண்டோ அனுப்பிவைத்த பதிலில் செப்டம்பர் 5ஆம் திகதி 32பேரை மட்டும் விசாரணைக்காக கைது செய்யததாகவும் அவர்கள் அனைவரும் 24மணிநேரத்திற்குள் விடுதலை செய்யப்பட்டு விட்டார்கள் என தெரிவித்திருந்தார்.

இச்சம்பவம் நடந்து மூன்று நாட்களின் பின் செப்டம்பர் 8ஆம் திகதி கிழக்கு பல்கலைக்கழக அகதி முகாமுக்கு அப்போது இராணுவ தளபதியாக இருந்த ஹரி சில்வா சென்றிருந்தார். அப்போது அகதி முகாமுக்கு பொறுப்பாக இருந்த பேராசிரியர் மனோ சபாரத்தினம், பேராசிரியர் ஜெயசிங்கம் ஆகியோர் இராணுவத்தினர் கைது செய்து கொண்டு சென்ற 158பேரின் நிலமை பற்றி கேட்டனர். அதற்கு பதிலளித்த இராணுவத்தளபதி 158பேரும் குற்றவாளிகள் அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டு விட்டது. அவர்கள் பற்றி இனி பேசக்கூடாது என எச்சரிக்கும் தொனியில் தெரிவித்தார்.

இதன் பின்னர் செப்டம்பர் 23ஆம் திகதியும் அங்கு வந்த இராணுவத்தினர் மேலும் 16 இளைஞர்களை கைது செய்து கொண்டு சென்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதியரசர் கி.பாலகிட்ணர் தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழுவில் அகதி முகாமுக்கு பொறுப்பாக இருந்தவர்கள் உட்பட நேரில் கண்ட சாட்சிகள் 83பேர் சாட்சியமளித்தனர்.

அந்த அகதி முகாமில் இருந்த 45ஆயிரம் மக்கள் முன்னிலையிலேயே இந்த 158பேரும் இராணுவத்தினரால் கொண்டு செல்லப்பட்டனர்.

இந்த ஆணைக்குழு அறிக்கையில் பொதுமக்கள் வழங்கிய சாட்சிகளின் அடிப்படையில் இராணுவத்தினரே 5ஆம் திகதி 158பேரையும், 23ஆம் திகதி 16பேரையும் கைது செய்து கொண்டு சென்றனர் என தெரிவித்திருந்தது. இந்த கடத்தலில் ஈடுபட்ட இராணுவத்தினரும் புளொட் மற்றும் முஸ்லீம் ஜிகாத் குழுவும் பதில் கூற வேண்டும் என்றும் கடத்தப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்ற உண்மை நிலை அறியப்பட வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கிழக்கு பல்கலைக்கழக அகதி முகாமை நிர்வாகித்து வந்த பேராசிரியர் மனோ சபாரத்தினம், கலாநிதி சிவலிங்கம், கலாநிதி ஜெயசிங்கம் ஆகியோரில் இன்று கலாநிதி ஜெயசிங்கம் மட்டுமே வாழும் சாட்சியாக உள்ளார். தற்போது கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக இருந்து ஓய்வு பெற்றிருக்கும் ஜெயசிங்கம் இச்சம்பவம் பற்றி 1996ஆம் ஆண்டு பாலகிட்ணர் தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழுவிலும் 2004ஆம் ஆண்டு காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவிலும் சாட்சியமளித்தார்.

காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது என காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். காணாமல் போனவர்கள் அங்கிருக்கிறார்கள், இங்கிருக்கிறார்கள் என அலைந்து திரியும் அவலமே தொடர்கிறது. உண்மைகள் வெளிப்படுத்தப்பட வேண்டும் என பேராசிரியர் ஜெயசிங்கம் தெரிவித்தார்.

கிழக்கு பல்கலைக்கழக படுகொலை நடந்த செப்டம்பர் 5ஆம் திகதியை தமிழின படுகொலை நாள் என பிரகடனப்படுத்தி வருடாவருடம் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.

கிழக்கு பல்கலைக்கழக சம்பவம் நடந்து சரியாக நான்கு தினங்களின் பின்னர் 1990 செப்டம்பர் 9ஆம் திகதி மட்டக்களப்பு சத்துருக்கொண்டானில் மிகப்பெரிய இனப்படுகொலை நடைபெற்றது.

( இரா.துரைரத்தினம் )