அமெரிக்காவின் அழைப்பு - ஏன்?

Report Print Subathra in கட்டுரை
1403Shares

அமெரிக்கப் பாதுகாப்பு செயலர் மார்க் எஸ்பர் கடந்த வாரம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்.

பொதுத் தேர்தலுக்குப் பின்னர் அமெரிக்கத் தரப்பில் இருந்து இலங்கை அரசாங்கத்தின் உயர்நிலைத் தலைவர் ஒருவருடன் முதல்முறையாக நடத்தப்பட்டிருக்கின்ற உரையாடல் இது.

கொரோனா தொற்று பரவத் தொடங்கியிருந்த காலகட்டத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன், அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தொலைபேசியில் தொடர்பு கொண்ட பேசியிருந்தார்.

அப்போது கொரோனாவை எதிர்கொள்வதற்காக, இலங்கைக்கு செயற்கை சுவாசக் கருவிகளை வழங்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்வந்துள்ளார் என்ற செய்தியையும் அவர் பரிமாறியிருந்தார்.

கொரோனா கிட்டத்தட்ட கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ள நிலையில் தான் அமெரிக்காவில் இருந்து 200 செயற்கை சுவாசக் கருவிகள் இருந்த வாரம் இலங்கைக்கு வந்து சேர்ந்திருக்கின்றன.

இந்தச் சூழலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் அமெரிக்காவின் பாதுகாப்புச் செயலாளர் நடத்தியுள்ள கலந்துரையாடல் மிக முக்கியமானது.

இந்த கலந்துரையாடலில் பல விடங்கள் பேசப்பட்டுள்ளன. முதலாவது, வழக்கம்போல சம்பிரதாயபூர்வமான விடயங்கள்.

வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வது, நலம் விசாரிப்பது இதில் உள்ளடங்கும். பொதுத்தேர்தலையும் கொரோனாவையும் வெற்றிகரமாக எதிர்கொண்டுள்ளமைக்கு அமெரிக்க தரப்பில் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தான் பல சிங்கள, ஆங்கில ஊடகங்கள் முன்னிலைப்படுத்தியிருந்தன. பொதுவாக இராஜதந்திர கலந்துரையாடல்களின் போது, வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொள்வது வழக்கம்.

அதற்காக வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வதற்காகவே, இந்த கொலைபேசி அழைப்பு மேற்கொள்ளப்பட்டது என்று அர்த்தம் கொள்ள முடியாது.

அவ்வாறாயின் பொதுத்தேர்தல் முடிந்ததும் வாழ்த்து கூறியிருக்கலாம். கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு முன்னரே கொரோனாவை எதிர்கொள்வதில் இலங்கை ஓரளவுக்கு வெற்றி கண்டு விட்ட நிலையில் அப்போதே வாழ்த்துக்களை கூறியிருக்கலாம்.

தேர்தல் முடிந்து கிட்டத்தட்ட நான்கு வாரங்கள் கழித்து கொரோனா கட்டுக்குள் வந்த இரண்டு, மூன்று மாதங்களுக்கு பின்னர் வாழ்த்துக்கூற அமெரிக்க பாதுகாப்புச் செயலர் தொலைபேசி அழைப்பு எடுத்தார் என்றால் அது நம்பக்கூடிய விடயமன்று.

இந்தக் கலந்துரையாடலில் இன்னொரு விடயத்தை அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் வலியுறுத்தியுள்ளார் என்று அமெரிக்க பாதுகாப்பு திணைக்கள அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

அதற்குத் தான் தமிழ், ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்திருந்தன. நல்லிணக்கம், மனித உரிமைகள் போன்றவற்றை முன்னேற்றுமாறு அமெரிக்க பாதுகாப்புச் செயலர் வலியுறுத்தினார் என்பதே அது.

அமெரிக்க அரசின் உயர்மட்ட இராஜதந்திரிகள் தமது சந்திப்புகள், பேச்சுகளின் போதெல்லாம், இதனையும் வலியுறுத்துவதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கின்றனர்.

இது ஒரு முக்கியமான விடயமே என்றாலும் இதுவே இந்தப் பேச்சுக்களின் முதன்மையான விடயமாக இருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் ஜனநாயக ரீதியான ஆட்சி மாற்றத்தை மதிக்க வேண்டிய நிலையில் அமெரிக்கா இருக்கிக்கிறது.

மூன்றில் இரண்டு பங்கு மக்களின் ஆதரவுடன் இந்த அரசாங்கம் பதவிக்கு வந்திருக்கிறது. மக்கள் கொடுத்துள்ள இந்த ஆணையை மதிக்க வேண்டிய கடப்பாடு அமெரிக்காவுக்கு இருக்கிறது.

இந்த அரசாங்கம் பதவிக்கு வந்துள்ளதில் அமெரிக்காவுக்கு விருப்பம் இல்லாமல் இருக்கலாம், அல்லது தமக்கு ஏற்றதல்ல என்ற கருத்து இருக்கலாம்.

அதனை ஒரு புறத்தில் வைத்து விட்டு அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்த அரசாங்கத்துடன் எவ்வாறு பணிப்பது தான் கவனம் செலுத்த வேண்டும்.

அது தான் பொதுவான இராஜதந்திர அணுகுமுறை. அமெரிக்கா இந்த விடயத்தில் இன்னும் கூடுதலாகவே முன்நோக்கி செயற்படக்கூடிய நாடு.

அவ்வாறான நிலையில் மனித உரிமைகள், நல்லிணக்கத்தை முன்னேற்றுமாறு கூறுவதற்காக அமெரிக்க பாதுகாப்புச் செயலர் தொலைபேசி அழைப்பை எடுத்தார் என்பது பெரிய நகைச்சுவை தான். பொதுவாக, மனித உரிமைகள், நல்லிணக்கம் போன்ற விவகாரங்களை பாதுகாப்பு திணைக்களம் கையாள்வதில்லை.

இதுவும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயம். மனித உரிமைகள் விவகாரத்தை வைத்து இலங்கை அரசுக்கு கடும் அழுத்தங்களை கொடுத்த காலத்தில் கூட அமெரிக்கா இவ்வாறான அழைப்பை எடுத்திருக்கவில்லை என்பது இங்கு குறிப்பிட்டுக் கூற வேண்டிய இன்னொரு விடயம்.

எனவே மனித உரிமைகள் நல்லிணக்கம் ஆகியவற்றை வலியுறுத்தவே அமெரிக்க பாதுகாப்புச் செயலர் தொலைபேசி அழைப்பை எடுத்திருந்தார் என்று நம்பினால், அது முட்டாள்தனம் தான்.

இந்த தொலைபேசி உரையாடலின் போது பேசப்பட்ட ஏனைய சில விடயங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை. அவை தான் முக்கியமானவையும் கூட.

“எல்லா நாடுகளினதும் இறைமையை உறுதி செய்யும் வகையில் சுதந்திரமான வெளிப்படையான இந்தோ - பசுபிக்கை உறுதிப்படுத்தும் வகையில் தமது பகிரப்பட்ட கடப்பாடு குறித்து இரண்டு நாடுகளின் தலைவர்களும் கலந்துரையாடினர். இது முதல் விடயம்.

பொதுவான இருதரப்பு பாதுகாப்பு முன்னுரிமைகளை மீளாய்வு செய்த இரு தலைவர்களும், இராணுவ தொழில்மயமாக்கல், பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளைக் குறித்தும் ஆலோசனை நடத்தியுள்ளனர். இது இரண்டாவது விடயம்.

இருதரப்பு பாதுகாப்பு உறவுகளை விரிவுபடுத்துவதற்கும், பகிரப்பட்ட நலன்களை மேம்படுத்துவதற்கும் தங்கள் உறுதிப்பாட்டை இரண்டு நாடுகளின் தலைவர்களும் வெளிப்படுத்தினர். இது மூன்றாவது விடயம்.

இந்த மூன்றும் இந்தோ - பசுபிக் பிராந்தியத்தில், அமெரிக்காவின் பாதுகாப்பு நலன்களுடன் தொடர்புடைய விவகாரங்கள்.

இதனை மையப்படுத்தியே அமெரிக்க பாதுகாப்புச் செயலரின் உரையாடல்கள் இடம்பெற்றிருக்கின்றன. முக்கியமான விடயமும் இதுதான்.

இந்த உரையாடல் நிகழ்ந்து இரண்டு நாட்களின் பின்னர் கடந்த முதலாம் திகதி அமெரிக்க பாதுகாப்புத் தலைமையகமான பென்டகனின் அறிக்கை ஒன்று வெளியாகியது.

அது சீனாவின் ஆயுத பலம் எவ்வாறு அமெரிக்காவுக்கு அச்சுறுத்தலாக மாறிக் கொண்டிருக்கிறது என்பதை விபரிக்கும், ஒரு அறிக்கை.

200 பக்கங்களைக் கொண்ட அந்த அறிக்கையில் இன்னும் ஒரு தசாப்தத்தில் சீனா தனது அணுவாயுத பலத்தை இரண்டு மடங்காக அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்தோ - பசுபிக் பிராந்தியத்தில் சீனாவின் கடற்படை பலம் எந்தளவுக்கு விரிவாக்கம் பெறும் என்பது குறித்தும் கூறப்பட்டுள்ளது.

சீனா தனது முதலாவது கடல் கடந்த தளத்தை 2017ஆம் ஆண்டு ஜிபோட்டியில் அமைத்த பின்னர் மேலும் பல தளங்களை அமைக்கத் திட்டமிடுவதாக கருதப்படுகிறது.

ஏற்கனவே சில சீன ஊடகங்கள் அது பற்றிய செய்திகளை வெளியிட்டன. எனினும் அது அதிகாரபூர்வமானது அல்ல என்று சீனா அப்போது சமாளித்திருந்தது. அந்த அறிக்கையை உறுதிப்படுத்தும் வகையில் அமெரிக்க பாதுகாப்பு திணைக்களத்தின் அறிக்கை அமைந்திருந்தது.

கடல்கடந்த தளங்களை அமைப்பதற்கான சீனாவின் திட்டம் குறித்த இந்த அறிக்கையில் விபரிக்கப்பட்டுள்ளது.

இலங்கை, மியன்மார், தாய்லாந்து, சிங்கப்பூர், இந்தோனேசியா, பாக்கிஸ்தான், ஐக்கிய அரசு எமிரேட்ஸ், கென்யா, சீஷெல்ஸ், தன்சானியா, அங்கோலா மற்றும் தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளிலேயே தள வசதிகளை ஏற்படுத்திக் கொள்வது குறித்து சீனா பரிசீலிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் பென்டகன் அறிக்கை கூறுகிறது.

இலங்கையை சீனா தனது தளமாக மாற்றிக் கொள்ளும் என்ற அச்சம் அமெரிக்காவுக்கு இருக்கிறது. இவ்வாறான உலகளாவிய சீன இராணுவ வலையமைப்பு, அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகளில் தலையீடு செய்யக்கூடும் என்றும் பென்டகன் எச்சரித்திருக்கிறது.

இலங்கை போன்ற நாடுகளில் சீனா தளம் அமைத்து விடாதபடி தடுப்பதற்கான ஒரு வழிமுறையாகத் தான் அமெரிக்க பாதுகாப்பு செயலரின் தொலைபேசி உரையாடலைக் குறிப்பிடலாம்.

இந்தோ - பசுபிக் பிரந்தியத்தில் உள்ள நாடுகளின் இறைமைக்கு மதிப்பளிக்கும் வகையில் இந்தப் பிராந்தியத்தில் கப்பல்களின் போக்குவரத்தை சுதந்திரமாகவும் வெளிப்படையாகவும் அனுமதிக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்துகிறது.

தென்சீனக் கடலுக்கு சீனா உரிமை கோருகிறது. இது ஒரு பிரச்சினை. இந்தியப் பெருங்கடலில் சீனக் கடற்படையின் ஆதிக்கத்துக்கு முடிவுகட்டுவது இன்னொரு பிரச்சினை. இவற்றை கருத்தில் கொண்டு தான் அமெரிக்கா காய்களை நகர்த்துகிறது.

அதற்காகவே அமெரிக்கா இலங்கையுடன் கடல்சார் ஒத்துழைப்பு, பயங்கரவாத எதிர்ப்பு போன்ற விடயங்களில் நெருங்கி செயற்படத் தயார் என்று கூறி வருகிறது.

எது எவ்வாறாயினும் இலங்கை கடற்படையை இந்தளவுக்கு வலிமையானதாக மாற்றியதில் அமெரிக்காவின் பங்கை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது.

இரண்டு பாரிய ஆழ்கடல் ரோந்துக் கப்பல்களையும், “புஷ் மாஸ்டர்” பீரங்கிகளையும் கடற்படைக்கு அமெரிக்கா கொடுத்திருக்கிறது.

இலங்கை கடற்படையின் மரைன் படைப்பிரிவிற்கு பயிற்சியளித்து, உருவாக்கி, அதற்குத் தேவையான ஆயுத தளபாடங்களையும் வழங்கியிருக்கிறது. தொடர்ச்சியாக இலங்கைக் கடற்படையுடன் கூட்டுப் பயிற்சிகளை நடத்திக் கொண்டிருக்கிறது.

இது இலங்கையை சீனா தனது வசதிக்கேற்ப பயன்படுத்திக் கொள்ள இடமளிக்காத வகையில் தடுக்கின்ற ஒரு நகர்வு.

எந்த ஆட்சி வந்தாலும் இந்த விடயங்களில் அமெரிக்க ஒத்துழைப்பை தொடர்வதில் உறுதியாக இருக்கிறது. அது தான் இந்தத் தொலைபேசி உரையாடல் உணர்த்தியிருக்கிறது.

அதற்காக நல்லிணக்கம், மனித உரிமைகள் விவகாரங்களை அமெரிக்கா முற்றாக மறந்து விட்டது என்று கணக்கும் போடக் கூடாது.

அதனை மனதில் வைத்துக் கொண்டு தான் எல்லா நகர்வுகளையும் முன்னெடுக்கிறது என்று மிகையான எதிர்பார்ப்பையும் வளர்த்துக் கொள்ளவும் கூடாது. ஏனெனில் இது ஒரு சர்வதேச அரசியல்.