மட்டக்களப்பு - காயான்குடா கிராமத்தில் குடிநீருக்காக போராடும் மக்களின் குமுறல்கள் எப்போது தீர்க்கப்படும்

Report Print Rusath in கட்டுரை
148Shares

ஆதி காலத்தில் மக்கள் காடுகளிலும், சேரிப்புறங்களிலும், வாழ்ந்து வந்தார்கள், பின்னர் காலம் செல்லச் செல்ல தேவைகள் அதிகரிக்க, அதிகரிக்க, சற்று ஊர்ந்து சென்று ஒன்று கூடி வாழப்பழகிக் கொண்டார்கள், காலப்போக்கில் அவ்வாறான இடங்கள் 'ஊர் 'என அழைக்கலாயிற்று.

பின்னர் அங்கு ஊர்களில் கூடி வாழ்ந்த மக்கள், நாரீக மாற்றங்களும், சேவைகளும், சேவைகளும், வசதி வாய்ப்புக்களும், அதிகரிக்க அதிகரிக்க, ஊரிலிருந்த மக்கள் சற்று நகர்ந்து வாழத் தொடங்கினார்கள், காலப்போக்கில் அவ்வாறான இடங்கள் 'நகர்' என அழைக்கலாயிற்று.

இவ்வாறு மக்கள் மெல்ல மெல்ல தமது பரிணாம வளர்ச்சிப் போக்கை காலத்திற்கு ஏற்ப அமைத்துக் கொண்டு வாழ்ந்து வருகின்றார்கள்.

ஆனாலும் இன்னும் இவ்வாறான பல்வேறுபட்ட பகுதிகள், கிராமங்கள், கிராமங்களாகவேதான் எதுவித வளர்ச்சிப்போக்குகள் இன்றியிருந்து வருவதையும் அவதானிக்க முடிகின்றது

காலத்திற்கு காலம் வருகின்ற மக்கள் பிரதிநிதிகளும் அவர்களால் இயன்ற சிற்சில உதவிகளை இவ்வாறான கிராமங்களுக்கு சில ஒதுக்கீடுகளை மேற்கொண்டு வந்தாலும் அவ்வாறான உதவிகளால் அக்கிராமங்கள் தன்னிறைவு அடைந்துவிட்டது என தீர்மானித்துவிட முடியாது.

இந்நிலையில் கடந்த யுத்த காலத்திலும், பின் தெடர்ந்த சுனாமி, மற்றும் இயற்கை அனர்த்தங்கள் மத்தியிலும் உள்ளூர் மற்றும் சர்தேச தன்னார்வ தொண்டர் நிறுவனங்களும் இவ்வாறான வறுமைக்குட்பட்ட கிராமங்களை அடையாளம் கண்டு பல அடிப்படை தேவைகளைப் பூர்த்தி செய்து வந்தன.

இடைப்பட்ட காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து பல சர்வதேச தன்னார்வ தொண்டர் அமைப்புக்கள் வெளியேறியதை அடுத்து அவர்களினால் முன்னெடுக்கப்பட்டு வந்த சேவைகளும் தடைப்படலாயிற்று.

எது எவ்வாறு அமைந்தாலும் நாட்டுக்குள் நாட்டிலுள்ள அரசாங்கமும், அதிகாரிகளும், இவ்வாறான மக்களின் துன்ப துயரங்களை முடிந்தளவேனும் துடைத்தெறிய வழிசமைக்க வேண்டியதும் கடப்பாடாகும்.

மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பற்று (செங்கலடி) பிரதேச செயலாளர்பிரிவுக்கு உட்பட்ட கொடுவாமடு கிரமசேவையாளர் பிரிவில் உள்ளடங்கும் கிராமமே காயங்குடா எனும் கிராமமாகும்.

இக்கிராமம் கடந்த காலங்களில் ஏற்பட்ட யுத்த காலத்தில் பெரிதும் பாதிக்கப்பட்டு முற்றாக இடம்பெயர்ந்து மீண்டும் மீளக் குடியமர்ந்த தற்போது அவர்களின் வாழ்வை முன்னோக்கிக் கொண்டு வரும் இந்நிலையிலும் இன்னும் பல சவால்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருவதாக அந்த மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இவ்விடயம் குறித்தே இக்கட்டுரையில் ஆராய்கின்றோம்.

செங்கலடியிலிருந்து சுமார் 04 கிலோ மீற்றர் தொலைவில் பதுளை வீதியை அண்டிய பகுதியில் அமைந்துள்ளதே கொடுவாமடு கிராமசேவையாளர் பிரிவுக்குபட்ட காயான்குடா எனும் கிராமமாகும்.

அந்த கிராம மக்கள் தமது வாழ்வைக் கொண்டு நடாத்துவதற்கு தற்கால நவீன யுகத்திலும் பல சொல்லொணாத் துயரங்களை எதிர்கொண்டு வாழ்ந்து வருவதாக தமது ஆதங்கங்களைத் தெரிவிக்கின்றனர்.

எங்களுக்கு குடிநீர் இல்லாமலுள்ளது இதனால் நாம் தினமும் பல அவஸ்த்ததைகளுக்குள் வாழ்ந்து வருகின்றோம் எமக்கு குழாய்க் கிணறு அல்லது கிணறு போன்றவற்றையாவது அமைத்துத்துத் தருமாறு கேட்கின்றோம். இக்கிராமத்திற்கு வந்து நங்கள் சுமார் 50 வருடங்களுக்கு மேலாகின்றது

அன்றிலிருந்து இன்றுவரையில் இவ்வாறுதான் குடிநீருக்காக அலைந்து திரிகின்றோம். சிலவேளைகளில் நாம் குளிக்காமலும் இருந்துள்ளோம், ஏன்தான் இந்த ஊருக்கு வந்து குடியேறினோம் என நினைக்கத் தோணுகின்றது, என தனது ஆதங்கத்தைத் தழுதழுத்த குரலில் தெரிவித்தார், 76 வயதுடைய சிவசுந்தரம் பாக்கியம்.

இந்நிலையில் காயான்குடா கிராமத்தைச் சேர்ந்த ஜீவாகரன் யுனித்திரா அவரது கிராமத்தைப் பற்றித் தெரிவிக்கையில்,

எமது கிராமம் வறட்சியின் பிடியில் வாழ்ந்து வருகின்றது குடிக்கவோ, குளிக்கவோ, மலசலகூடங்களுக்குப் பயன்படுத்தவோ தண்ணீர் இல்லாமலுள்ளது.

எமது கிராமத்திற்கு சற்றுத் தொலைவில் குளம் ஒன்று உள்ளது. அதிலும் நீர் வற்றியுள்ளது. சிறிதளவு நீர் அக்குளத்தில் தற்போது உள்ளது அதில் அட்டைகள் அதிகம் உள்ளன.

அந்த தண்ணீரைப் பயன்படுத்த முடியாதுள்ளது. பிரதேச சபையினால் எமக்கு 8 நாட்களுக்கு ஒருதடவை பவுசர் மூலம் தண்ணீர் தருகின்றார்கள், அதுவும் ஒழுங்காக கிடைப்பதில்லை.

குழாய் மூலமான குடிநீர் பல இடங்களில் வழங்கப்படுவதாக நாம் அறிகின்றோம். அதனைக்கூட எமக்கு யாரும் பெற்றுத்தருகின்றார்கள் இல்லை. எமது பிள்ளைகள் அதிகாலையில் எழுந்து மிக நீண்ட தூரம் வயல் வெளிகளைக் கடந்துதான் குளிப்பதற்குப் போகவேண்டும்.

அதன்பின்னர் காலை 8 மணிக்கும் பின்னர்தான் பாடசாலைக்குச் செல்ல வேண்டிய சூழல் உள்ளது. எமக்கு குடி தண்ணீரை ஏற்படுத்தித்தந்தால் அவர்களுக்கு பெரும் புண்ணியம் கிடைக்கும்.

குழாய் மூலமான குடிநீர் எமக்கு தருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றார்கள். ஆனால் இன்னும் அது நடைபெறவில்லை என அவர் தனது ஆதங்கத்தைத் தெரிவித்தார்.

இது இவ்வாறு இருக்க எமது கிராமத்தில் 135 குடும்பங்கள் உள்ளன. அதிலே சுமார் 50 பேருக்குத்தான் கல்வீடுகள் உள்ளன, ஏனைய அனைவரும் தகரக் கொட்டகையில்தான் வாழ்ந்து வருகின்றார்கள். தற்போது வாழ்ந்து வரும் தகரக் கொட்டகைகளும் பழுதடைந்துள்ளன.

யுத்தத்திற்கு முன்னர் நாம் வாழ்ந்து வந்த மண் வீடுகளும் செல் வீச்சில் உடைந்து விட்டன. தற்போது எமது மக்கள் வாழும் ஒரு அறையைக் கொண்ட தகரக் கொட்டகைக்குள் இருந்து கொண்டுதான் பிள்ளைகளின் படிப்பு, தூக்கம், சமயல், எல்லாம் அதற்குள்ளேதான் இருந்து வருகின்றது.

எமது கிராமத்தில் பாடசாலைக்குச் செல்லும் வீதி மிக நீண்ட காலமாக பழுதடைந்து கிடைக்கின்றது. தேர்தல் காலத்தில் மாத்திரம் வாக்கு கேட்பதற்கு மாத்திரம் வருகின்றார்கள் பின்னர் வருகின்றார்கள் இல்லை என தெரிவிக்கின்றார் தவராசா திருச்செல்வி.

செங்கலடிப் பகுதியை அண்டிய மக்கள் ஏறாவூர், குடியிருப்பு, உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்து, மக்கள் ஆரம்பகாலத்தில் காயான்குடா பகுதிக்கு வந்து காடு வெட்டி, பயிர்செய்து சிறிய சிறிய குடிசைகள் அமைந்து வாழ்ந்து வந்துள்ளார்கள், பின்னர் காலப்போக்கில் பலரும் பல இடங்களிலுமிருந்து வந்து குடியேறி தற்போது ஊராக மாறியுள்ளது.

ஆரம்ப காலத்திலிருந்ததைவிட அக்கிராமம் தற்போது முன்னேறியுள்ளது. ஆனாலும் இன்னும் தீர்க்கப்படாத பல பிரச்சனைகள் இருந்து கொண்டேதான் உள்ளன.

ஒழுங்கான வீடுவாசல் இல்லை, பலரும் பலமுறை வந்து பல வாக்குறுதிகளைக் வழங்கி விட்டுத்தான் செல்கின்றார்கள். இதனால் இதுவரைக்கும் நாம் எதனையும் பயனாக அனுபவித்தது இல்லை.

குறைந்தது எமது வீதியைக்கூடப் புனரமைத்துத் தருகின்றார்கள் இல்லை. மிகவும் வேதனையாக உள்ளது என அக்கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனினும் எமது கிராமத்தில் அதிகம்பேருக்கு மலசலகூட இல்லை இதனால் நாங்கள் பல சுகாதார சீர்கேடுகளையும் எதிர் கொண்டு வருகின்றோம்.

செங்கலடி, மட்டக்களப்பு நகரிலுள்ள மக்களைப்போல வாழ்வதற்கு எமக்கு ஆசைதான். ஆனால் எமக்கு அடிப்படைப் பிரச்சினையாகவுள்ள பல பிரச்சினைகள் இன்னும் தீர்வுகாணப்பட வில்லையே.

என்ன செய்வது நாம், வேறு இடங்களுக்கு குடியேறிப் போகலாம். ஆனால் இந்த கிராமத்தை விட்டு விட்டு போக முடியாதுள்ளது. தொழில் ரீதியாகவும், நாம் பாரிய பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றோம்.

காலத்திற்குக் காலம் வயலில் கூலிவேலை, கல்வெட்டுதல், எமது கிராமத்திற்கு சற்று தொலைவில் சிறிய குளம் ஒன்று உள்ளது. அதிலும் தற்போது நீர் வற்றியுள்ளது.

அக்குளத்தைப் புனரமைத்து பெரியதாக்கினால்கூட எமக்கு அதனை வைத்துக் கொண்டு தோட்டங்கள் செய்து எமது வாழ்வாதாரத்தை மேம்படுத்தலாம்.

எமது கிராமத்தில் முன்பை விட தற்போது படிப்பிலும் பிள்ளைகள் ஆர்வமாகவுள்ளார்கள், சாதாரண தரம், உயர்தரம் கற்றவர்கள் அதிகம் பேர் உள்ளார்கள்,

ஆனால் அவர்கள் அனைவரும் எதுவித தொழில் வாய்ப்புக்கள் இன்றி வீட்டிலிருக்கின்றார்கள். எப்படியாவது மிகவும் கஸ்டப்பட்டு உழைத்து பிள்ளைகளின் படிப்பு செலவு, உடை, மருத்துவ செலவு, மற்றும் உணவுக்கும்தான் எம்மால் வருமானத்தை ஓரளவு ஈட்டலாம், வீடு கட்டுவதற்கு எம்மால் இயலாதுள்ளது. எமது வீடு யுத்தகாலத்தில் செல்வீச்சில் முற்றாக சேதமடைந்துள்ளது.

ஒரு அளவான வீடு கட்டுவதாயின் குறைந்தது 10 இலட்சமாவது தேவை. அந்த அளவிற்கு எம்மால் வருமானத்தைப் பெறமுடியாதுள்ளது. தொழில் வாய்ப்புக்கள் நன்றாக இருந்தால் இதனைய யாரிடமும் கேட்கவேண்டியதில்லை.

எம்மிடம் வருபவர்கள் அனைவரிடமும் வீடு, மலசலக்கூடம், வீத புனரமை, குடிநீர் போன்ற தேவைகளைப் பூர்த்தி செய்து தருமாறு கோரிக்கை விடுக்கின்றோம். ஆனால் இற்றைவரையில் அது நடைபெறுகின்றதில்லை என கயல்ராஜன் திருமாலா விபரித்தார்.

இது இவ்வாறு இருக்க அக்கிராமத்தில் குழாய் கிணறு ஒன்று 6 வருடகாலமாக பழுதடைந்து தூர்ந்துபோய் கிடந்தது அக்கிராம மக்களின் கோரிக்கைக்கிணங்க இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக கிளையின் தலைவர் தம்பிப்போடி வசந்தராசாவின் அயராத முயறசியின் பலனாக ஒந்த ஒரு குழாய் கிணறு புனரமைக்கப்பட்டு திருத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

அந்த கிராமத்திற்கே குடி நீர் வழங்கும் குழாய் கிணறாக அது தற்போது காணப்பட்டு வருகின்றது. தற்போதைய கடும் உஸ்ணமாக வறட்சிக்காலத்திலும் அந்த குழாய் கிணற்றிலும் நீர் ஊறுவது மிகவும் குறைவகாகத்தான் இருந்து வருவதாக அந்த கிராம மக்கள் தெரிவிக்கின்றார்.

இதிலிருந்து கிடைக்கும் நீர் எமது கிராம மக்களுக்குப் போதாதுள்ளது. அக்கிராமத்திற்கு சற்று தொலைவிலுள்ள குளத்தின் அருகே பாரிய ஒரு கிணறு அமையப்பெறும் பட்சத்தில் அதிலிருந்தாவது அந்த கிராமம் குடி நீர் பிரச்சினையை ஓரளவேனும் தீர்வு கிடைக்கும் என அந்த மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

நாளாந்தம் ஒரு லட்சம் லீற்றர் குடிநீர் நாம் நீர்தாங்கிகள் மூலம் வழங்கி வருகின்றோம். ஆனலும் மக்கள் இன்னும்; குறைகூறிக் கொண்டுதான் இருக்கின்றார்கள்.

எம்மிடம் வாகன வசதிகள் போதாது இருந்த போதிலும், நாங்கள் பல முயற்சிகள் செய்து செயற்பட்டு வருகின்றோம். வீதி புனரமைப்பது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர், வீதி அபிவிருத்தி திணைக்களம், வீதி அபிவிருத்தி அதிகாரசபை, உள்ளிட்டோருக்கு அறிவித்துள்ளோம்.

வீதி மின் விளக்குளை ஆங்காங்கே பொருத்தியுள்ளோம் என ஏறாவூர் பற்று பிரதேச சபையின் தவிசாளர் நாகமணி கதிரவேல் தெரிவித்தார்.

எனினும் நகர்புறங்களிலிருந்து வாழ்ந்து வரும் மக்கள் வீட்டுக்குள்ளேயே குழாய் மூலமான சுத்தமான குடியநீர், வசதி வாய்ப்புக்களுடன் கூடிய கல்வீடு, மலசலக்கூடம், உள்ளிட்ட அனைத்து வசதி வாய்ப்புர்க்களையெல்லாம் கொண்டு அனுபவித்து வரும் இந்நிலையில் காயான்குடா கிராம மக்கள் பெரும் வசதி வாய்ப்பு வாழ்வை எதிர்பார்க்கவில்லை,

குறைந்தது அரசாங்கத்தினால் அமுல்ப்படுத்தப்படும், குழாய் மூலமான சுத்தமான குடிநீர், குடியிருக்க வீடு மலசலக்கூடம், தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்துதல் போன்ற அடிப்படை வசதிகளையே அந்த கிராம மக்கள் எதிர்பார்த்திருக்கின்றார்கள்.

மக்கள் பிரதிநிதிகளும், அரச அதிகாரிகளும், காயான்குடா கிராம மக்கள் மீதும் கரிசனை செலுத்த வேண்டும் என்பதையே அக்கிராம மக்கள் எதிர்பார்க்கின்றார்கள்.