அமெரிக்காவுக்கு இடமளிக்குமா அரசாங்கம்?

Report Print Subathra in கட்டுரை
527Shares

அமெரிக்க பாதுகாப்பு செயலர் மார்க் எஸ்பர், செப்ரெம்பர் 30ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசுவதற்கு இரண்டு நாட்கள் முன்னதாக பசுபிக் நாடாகிய பலோவ்வுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார்.

இலங்கையில் தென்பகுதிக்கு நேர் கிழக்காக இந்தோனேசியா, சிங்கப்பூர், புருணை, பிலிப்பைன்ஸ் போன்றவற்றுக்கு அப்பால், பப்புவா நியுகினியாவுக்கு வடக்காக இருப்பது தான் பாலோவ் குடியரசு.

இது சுமார் 340 தீவுகளை கொண்ட ஒரு தேசம். இதன் மொத்த குடித்தொகை வெறும் 20 ஆயிரத்துக்குள் தான் இருக்கிறது. பெரிய தீவான - சுமார் 60 சதுர கி.மீ பரப்பளவுள்ள தலைநகர் கோர்ஓர் (Koror) இல், அதிகபட்சம் 12 ஆயிரம் பேர் வரை வசிக்கிறார்கள்.

இரண்டு சிறிய தீவுகளைக் கொண்ட ஒரு சதுர கிலோமீற்றர் கூட பரப்பளவைக் கொண்டிராத பாலோவ்வின் 16ஆவது மாகாணமான ஹடோஹோபி (Hatohobei) இல், 25 பேர் மாத்திமே வசிக்கிறார்கள்.

சுயாட்சி பெற்ற குடியரசு நாடாக இருந்தாலும், அமெரிக்க டொலர் தான் புழக்கத்தில் உள்ளது. இங்கு தனியான இராணுவம் இல்லை, இதன் பாதுகாப்பு அமெரிக்காவிடமே இருக்கிறது.

இங்குள்ளவர்கள் 500 பேர் அமெரிக்க படைகளில் பணியாற்றுகிறார்கள். 3000 ஆண்டுகளாக கிழக்காசிய குடியேற்றவாசிகள் வாழ்ந்து வரும் இந்த நாட்டை, 16ஆம் நூற்றாண்டில் ஸ்பானியர்கள் கண்டுபிடித்தனர்.

அதன் பின்னர், ஸ்பானியர்கள், ஜேர்மனியர்கள், ஜப்பானியர்கள் என்று கைமாறு இப்போது அமெரிக்கர்களிடம் இருக்கிறது இந்த நாடு.

முதலாம், இரண்டாம் உலகப் போர்களின் போது கடும் உயிர்ச் சேதங்கள் நிகழ்ந்த இடங்களில் இதுவும் ஒன்று. இங்கு அமெரிக்காவின் தளம் இல்லை. ஆனால் அமெரிக்க இராணுவத்தின் மறை முகமான பிரசன்னம் இருக்கிறது.

அமெரிக்க பாதுகாப்புச் செயலர் மார்க் எஸ்பர் இங்கு பயணத்தை மேற்கொண்டிருந்த போது பாலோவ் அரசாங்கம் அவரிடம் தென்சீனக் கடலில் சீனாவின் ஆதிக்கத்தை முறியடிக்க தமது நாட்டில் நிரந்தர தளத்தை அமெரிக்கா அமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது.

பாலோவ்வில் மார்க் எஸ்பர் பயணம் மேற்கொண்டிருந்த போது அங்கு பணியாற்றும் CAT எனப்படும் Civic Action Teams உடன் கலந்துரையாடியிருந்தார். அப்போது அவர் பாலோவ்வுக்கு வெளியே இத்தகைய குழுக்களை அனுப்புவதற்கான வாய்ப்புகள் குறித்து பேசியிருக்கிறார்.

ஏன் இவ்வாறான குழுக்களை ஏனைய நாடுகளுக்கு அனுப்பக்கூடாது என்று மில்டரி டைம்ஸுக்கு (Military Times) இற்கு வழங்கிய செவ்வி ஒன்றில் கேள்வியும் எழுப்பியிருக்கிறார்.

முதலில் CAT எனப்படும் Civic Action Teams பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். CAT எனப்படுவது அமெரிக்க படைகளின் ஒரு அங்கம் தான். பொறியியலாளர்கள் போன்ற துறைசார் வல்லுனர்களை கொண்ட ஒரு குழு.

பாலோவ் குடியரசில் 50 ஆண்டுகளாக CAT குழுக்கள் இங்குகின்றன. ஆனால் நிலையாக அல்ல. அமெரிக்க இராணுவம், கடற்படை, விமானப்படை என மாறி மாறி இங்கு பொறியியலாளர் குழுக்களை அனுப்புகின்றன.

6 மாதங்களுக்கு இங்கு தங்கியிருக்கும் இந்தக் CAT குழுக்கள், தீவில் கட்டடங்களை அமைத்தல், பழுது பார்த்தல், பாலங்களை அமைத்தல், மருத்துவ முகாம்களை நடத்துதல் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை வழங்குவதுடன், தீவில் உள்ளவர்களுக்கு தொழில் சார் பயிற்சிகளையும் அறித்து வருகிறது.

இது பாலோவ் மக்களுடன் இணைந்து கொள்வதற்காக அவர்கள் மத்தியில் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்காக அமெரிக்க படைகளால் கையாளப்படும் ஒரு வழிமுறை.

அமெரிக்காவின் முப்படைகளையும் சேர்ந்த CAT குழுக்கள், இங்குள்ள மக்களை மகிழ்விக்கும் பல்வேறு செயற்பாடுகளிலும் ஈடுபடுகின்றன. அதாவது வாகனங்களை இலவசமாக பழுது பார்த்துக் கொடுப்பது, விளையாட்டு மைதானங்களை அமைப்பது, இரவில் சினிமா படங்களை திரையிட்டுக் காட்டுவது, வானொலி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதிலும் கூட இந்த குழுக்கள் ஈடுபடுகின்றன.

குறைந்த செலவில் இராஜதந்திரத்தை செயற்படுத்துவதற்கான மிகப்பெரிய சொத்து என்று இவர்களை வர்ணித்திருக்கிறார் மார்க் எஸ்பர்.

ஏனைய நாடுகளிலும் இதுபோன்ற CAT குழுக்களை சுழற்சி முறையில் ஈடுபடுத்துவதற்கு அமெரிக்கா விரும்புகிறது. அமெரிக்காவின் இந்தோ பசுபிக் கட்டளைப் பீட மூலோபாயத்தின் ஒரு பகுதியாக இந்த குழுக்களை பயன்படுத்தலாம் என்று அமெரிக்கா கருதுகிறது.

ஜப்பானிலும், தென்கொரியாவிலும் உள்ள நிரந்தரத் தளங்களுக்கு அப்பால் அமெரிக்காவின் மூலோபாய நலன்களைப் பேணுகின்ற ஒரு அம்சமாக இவற்றை கையாள முனைகிறது.

இதனை இந்தோ பசுபிக் கட்டளை பீடத்தின் அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியிருக்கிறார். நிலையான தளங்களை வைத்திருப்பதற்கு பதிலாக இந்தோ பசுபிக்கில் அமெரிக்காவின் பிரசன்னம் இல்லாத நாடுகளில் இந்த CAT குழுக்கள் ஊடுருவக் கூடும் என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

அவ்வாறு CAT குழுக்கள் நுழையக் கூடிய நாடுகளில் ஒன்றாக இலங்கையும் குறிப்பிடப்பட்டுள்ளது. பங்களாதேஸ், கம்போடியா, இலங்கை அல்லது இந்தோனேசியா ஆகிய நாடுகளில் அமெரிக்காவின் CAT குழுக்களின் பிரசன்னம் எதிர்பாக்கப்படுகிறது.

50 ஆண்டுகளாக பாலோவ்வை அமெரிக்கா தனது பிடியில் வைத்திருந்தாலும் அங்கு இப்போது தான் தளத்தை அமைப்பதற்கு அடித்தளம் போடுகிறது.

அதேவேளை அமெரிக்காவின் பிரசன்னம் இல்லாத நாடுகளில் CAT குழுக்களை அனுப்பி மூலோபாய ரீதியாக தனது ஆதிக்கத்தை விரிவுப்படுத்த முனைகிறது. இதற்கு இலங்கை இடம்கொடுக்குமா என்ற கேள்விக்கு அடுத்து வருவோம்.

அமெரிக்க பாதுகாப்புச் செயலர், பாலோவ்வுக்குப் பயணம் மேற்கொண்டு அங்கு செயற்படும் CAT குழுக்களை ஏனைய நாடுகளிலும் ஈடுபடுத்துவதற்கான யோசனை குறித்து ஆராய்ந்து கொண்டு தான் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் கலந்துரையாடியிருக்கிறார். CAT குழுக்களை இலங்கையில் ஈடுபடுத்துவது குறித்து இதன்போது பேசப்பட்டதா என்று தெரியாது.

ஆனால் ஏற்கனவே அமெரிக்காவின் பசுபிக் கட்டளை பீடம் CAT போன்ற வேறு சில குழுக்களை தற்காலிகமாக இலங்கையில் செயற்படுத்துவதற்கான நகர்வுகளை முன்னெடுத்திருக்கிறது.

பசுபிக் கட்டளைப் பீடத்தினால் மனிதாபிமான உதவிப் பணிகள், மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. அதுமாத்திரமன்றி அனர்த்த காலங்களில் பொது மக்கள் தங்கக்கூடிய எல்லா வசதிகளையும் உள்ளடக்கிய பாடசாலைகளை வடக்கு, கிழக்கில் அமைக்கும் யோசனையையும் பசுபிக் கட்டளை பீடம் முன்னர் முன்வைத்தது.

ஆனால் அமெரிக்காவின் இந்த திட்டத்திற்கு முன்னைய மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் இணங்கவில்லை.

இப்போது கூட CAT குழுக்களை இலங்கைக்குள் ஊடுருவ அரசாங்கம் அனுமதிக்குமா என்பது சந்தேகம் தான். எனினும் அதற்கு அமெரிக்கா அழுத்தங்களை கொடுக்கக்கூடும்.

இறைமை, சுதந்திரதம் பற்றி அதிகளவில் பிரச்சாரங்களை முன்னெடுத்து ஆட்சியைப் பிடித்த அரசாங்கம் அமெரிக்காவின் CAT குழுக்களை இங்கு அனுமதிக்க இணங்கினால் பெரும் சர்ச்சைகள் வெடிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.