ஐ.நாவை கைகழுவுமா இலங்கை?

Report Print Subathra in கட்டுரை

“உலகம் ஒரு பொதுவான மற்றும் முன்னொரு போதும் இல்லாத அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ள நேரத்தில், அரசுகளின் இறைமை சமத்துவத்திற்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கும், பிராந்திய ஒருமைப்பாட்டை மதிக்கும், அவற்றின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாத, ஐக்கிய நாடுகள் சபையே எங்களுக்குத் தேவை என்பதில் நான் உறுதியாக உள்ளேன்.” என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கூறியிருக்கிறார்.

ஐ.நா 75 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, நடந்த உயர்மட்டக் கூட்டத்தில் உரையாற்றிய போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக, ஜனாதிபதி இந்தக் கூட்டத்தொடரில் பங்கேற்க முடியாது போனது. முன்கூட்டியே பதிவு செய்யப்பட்ட அவரது உரையே, ஐ.நா பொதுச்சபையில் வெளியிடப்பட்டது.

ஜனாதிபதியின் இந்த உரையில், ஐ.நாவைப் பகைத்து கொள்ளக் கூடிய தொனி தென்படாவிடினும், தூர நிற்க வேண்டும் என்று விநயமான முறையில் கேட்டுக் கொள்ளும் வகையில், அமைந்திருக்கிறது.

நாடுகளின் உள்விவகாரங்களில் ஐ.நா தலையிடாமல் இருக்க வேண்டும் என்று அதிகாரத் தொனியில் கூறாமல், அவ்வாறு தலையிடாத ஒரு ஐ.நா சபையையே எதிர்பார்ப்பதாக அவர் கூறியிருக்கிறார்.

நாங்கள் எதைச் செய்தாலும், கண்டுகொள்ளாத ஒரு ஐ.நா சபையாக இருக்க வேண்டும்- என்ற எதிர்பார்ப்பை ஜனாதிபதி வெளிப்படையாக சொல்லியிருக்கிறார்.

இந்த விவகாரத்தை ஜனாதிபதி ஐ.நாவின் முன்பாக கொண்டு சென்றிருப்பதற்கு காரணம் இருக்கிறது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கும், இலங்கை அரசாங்கத்துக்கும் இடையிலான உறவுகளின் எதிர்காலம் எவ்வாறானதாக இருக்கப் போகிறது என்பது இன்னமும் கேள்விக்குரியதாகவே இருக்கிறது.

ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில், முன்வைக்கப்பட்ட 30/ 1 தீர்மானம் மற்றும் அதன் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கத்துக்கு வழங்கப்பட்ட காலஅவகாசம் இப்போது முடிவுக் கட்டத்தை நெருங்கியிருக்கிறது.

முன்னைய அரசாங்கம் இந்தக் கடப்பாடுகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்த போதும், அதனை சரியாகச் செய்யவில்லை.

அண்மையில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பசெலெட் அம்மையாரும் சரி, ஐ.நாவின் சிறப்பு அறிக்கையயாளர்களும் சரி, வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இலங்கை அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படவில்லை என்று கூறியிருக்கிறார்கள்.

இனி உள்நாட்டுப் பொறிமுறைகளை நம்பிக் கொண்டிருப்பதில் பயனில்லை என்பதையும் அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.

வரும் பெப்ரவரியில் தொடங்கப் போகும் பேரவையின், அடுத்த கூட்டத்தொடரில், இலங்கைக்கு மிகப்பெரிய சிக்கல் காத்திருக்கிறது.

Why the UN's 75th general assembly could be worse than the world's worst Zoom meeting | United Nations | The Guardian

30/ 1 தீர்மானத்தில் உறுதியளிக்கப்பட்ட கடப்பாடுகளை நிறைவேற்ற முடியாது என்றும், அதனை நிறைவேற்றுவது நாட்டின் அரசியலமைப்பை மீறுவதாக இருக்கும் என்றும் அரசாங்கம் ஏற்கனவே ஜெனிவாவில் அறிவித்து விட்டது.

இலங்கை அரசாங்கத்தின் இந்த தீர்மானம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளையும், அனுசரணை நாடுகளையும் ஏமாற்றத்துக்குள்ளாக்கியிருக்கிறது.

இந்த நாடுகள் அடுத்த கட்டம் குறித்து தீர்மானிக்க வேண்டிய கட்டத்துக்குள் தள்ளப்பட்டிருக்கின்றன.

இலங்கை அரசாங்கம் 30/ 1 தீர்மானத்தை நடைமுறைப்படுத்தப் போவதில்லை என்று கூறி விட்ட பின்னர், அந்த தீர்மானத்தின் உள்ளடக்கத்தை செயற்படுத்துவதில் எவ்வாறு செயலாற்றுவது என்று முடிவெடுக்க வேண்டிய நிலையில் இருக்கின்றன.

இது அனுசரணை நாடுகளைப் பொறுத்தவரையில் கடினமானதொரு சூழல் தான்,

ஆனால், அதனை விட சிக்கலான சூழலை இலங்கை அரசாங்கம் எதிர்கொள்கிறது.

ஐ.நாவுடன் விட்டுக் கொடுக்காத ஒரு போக்கைக் கடைப்பிடிப்பதற்கான வியூகத்தை அரசாங்கம் வகுக்கத் தொடங்கியிருக்கிறது.

ஐ.நாவில் இலங்கையைக் காப்பாற்றக் கூடிய வகையிலான ஒரு புறக்கவசத்தை ஏற்படுத்திக் கொள்வதில் அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கிறது.

அதற்காகவே, மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் சட்டமா அதிபராகவும் பின்னர் உயர்நீதிமன்ற தலைமை நீதியரசராகவும் இருந்த, மொகான் பீரிஸ் நியூயோர்க்கில் உள்ள ஐ.நாவுக்கான நிரந்தர பிரதிநிதியாக அனுப்பப்படவுள்ளார்.

இவர் ஏற்கனவே, சட்டமா அதிபராக இருந்த காலகட்டத்தில், ஜெனிவாவில் பலமுறை இலங்கை மீதான குற்றச்சாட்டுகளை நிராகரிப்பதற்கான பயணங்களை மேற்கொண்டிருந்தவர்.

சர்வதேச அரங்கில் இலங்கையைக் காப்பாற்றுகின்ற வகையில் செயற்படக் கூடியவர்.

இன்னொரு பக்கத்தில் ஜெனிவாவில் உள்ள ஐ.நாவுக்கான தூதுவராக மூத்த ஊடகவியலாளர் சந்திரபிரேம நியமிக்கப்படவுள்ளார்.

போரில் மனித உரிமைகள் மீறப்படவில்லை, பயங்கரவாதத்துக்கு எதிரான போரே நடத்தப்பட்டது, என்று எழுத்துக்களின் மூலம் போர் நடத்திக் கொண்டிருந்தவர் சந்திரபிரேம.

போர்க்குற்றச்சாட்டுகளை நிராகரிப்பதலும், இலங்கைப் படையினரைக் காப்பாற்றுவதிலும், ‘கோட்டாவின் போர்’ என்ற நூலை வெளியிட்டு, அவரைக் கதாநாயகனாக உயர்த்துவதிலும் முக்கிய பங்கு வகித்தவர்.

அதற்கான வெகுமதியாக மாத்திரம் இந்த பதவி கொடுக்கப்படவில்லை.

இலங்கையின் நிலைப்பாட்டை உறுதியாக வெளிப்படுத்தக் கூடிய ஒருவர் என்பதாலும் தான் அவர் ஜெனிவாவுக்கு அனுப்பப்படுகிறார்.

கடந்த ஜூன் மாதம் இலங்கை ஐ.நா மனித உரிமைகள் பேரவை தீர்மானத்துக்கு வழங்கிய இணை அனுசரணையில் இருந்து விலகி விட்டது.

இந்த நிலையில், அடுத்த போருக்கு தயார்படுத்தும் காலமாக தான் இதனை கருத வேண்டும். அடுத்த ஆண்டு தொடக்கத்தில், இலங்கை ஜெனிவாவில் கடும் சவாலை எதிர்கொள்ளப் போகிறது.

அங்கு கடும் அழுத்தங்கள் கொடுக்கப்படும் அல்லது புதிய தீர்மானம் கடுமையானதாக முன்வைக்கப்படும். அவ்வாறான நிலையில் இலங்கை எத்தகைய முடிவை எடுக்கும் என்பது தான் கேள்வி.

கடந்த வாரத்துக்கு முந்திய வாரம், அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில், அமைச்சரவைப் பேச்சாளரான கெஹலிய ரம்புக்வெல்லவிடம், இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நியாயமற்ற முறையில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன என்றும், அதனால் பேரவையில் இருந்து இலங்கை வெளியேறப் போகிறது என்றும் கூறியிருந்தார்.

ஜெனிவா தீர்மான இணை அனுசரணையில் இருந்து விலகிக் கொண்டது அதற்கான முதற்படி தான் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

அடுத்த நாள் நாளிதழ்களில், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இருந்துர இலங்கை வெளியேறப் போகிறது என்ற செய்தி வெளியானதும், அரசாங்க தகவல் திணைக்களம் ஒரு அவசர அறிக்கையை வெளியிட்டது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இருந்து வெளியேறும் முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை, அமைச்சர் ரம்புக்வெல்ல கூறியதை ஊடகங்கள் தவறாகப் புரிந்து கொண்டு விட்டன என்று அதில் கூறப்பட்டிருந்தது.

உண்மையில் அந்தக் கருத்தை வெளியிட்ட அமைச்சர் தான், அதனை நிராகரித்திருக்க வேண்டும். அவர் அதனைச் செய்யாமல், தகவல் திணைக்கள பணிப்பாளரைக் கொண்டு மறுப்பை வெளியிட்டிருந்தார்.

அதாவது, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அதிகளவு அழுத்தங்களைக் கொடுத்தால் வெளியேறும் நிலையில் தான் இலங்கை இருப்பதாக தெரிகிறது.

அதற்கான முன்னோட்டமாக இந்த செய்தி பகிரப்பட்டிருக்கலாம். அல்லது ஒரு முன்னெச்சரிக்கை கொடுக்கப்பட்டிருக்கலாம். எதுஎவ்வாறாயினும், ஐ.நாவைக் கையாளும் விடயம் என்பது இலங்கைக்கு சிக்கலானதாகவே இருக்கப் போகிறது.

தற்போதைய அரசாங்கம், வெளிநாடுகளுடனான உறவுகளைக் கையாளும் விடயத்தில் தடுமாற்றங்களைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது.

அதுவும் ஐ.நா விடயத்தில் அதன் போக்கு எவ்வாறானதாக இருக்கும் என்பதை இன்னும் சில மாதங்களிலேயே தெரிந்து கொள்ள முடியும்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஐ.நாவை தூர விலகி நிற்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டது, இதனை அடிப்படையாக வைத்து தான்.

ஆனால், அதனை அவர் அமெரிக்க ஜனாதிபதியைப் போல உறுதியாக சொல்ல முடியவில்லை.

பதுங்கிப் பதுங்கித் தான் கூறவேண்டிய நிலையில் இருக்கிறார். இதுவே இலங்கையின் பலவீனத்தைக் காட்டிக் கொடுத்திருக்கிறது.