ஜெனிவாவில் பலம்பெறும் இலங்கை

Report Print Subathra in கட்டுரை

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு புதிதாக 15 உறுப்பு நாடுகளை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் நடத்தப்பட்ட இந்த இரகசிய வாக்கெடுப்பில், ஆசிய நாடுகளுக்கான பிரிவில் இருந்து, பாகிஸ்தான் உஸ்பெகிஸ்தான், நேபாளம், சீனா ஆகிய நான்கு நாடுகளும் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றன.

ஆபிரிக்க நாடுகளுக்கான பிரிவிலிருந்து, ஐவரிகோஸ்ட், காபோன், மலாவி, செனகல் ஆகிய நான்கு நாடுகளும் தெரிவாகியிருக்கி்ன்றன.

கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கான பிரிவிலிருந்து ரஷ்யாவும் யுக்ரேனும் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றன.

இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் குழுவில் இருந்து மெக் ஸிகோ, கியூபா, பொலிவியா ஆகிய நாடுகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

மேற்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்து பிரிட்டனும் பிரான்ஸும் மீண்டும் தெரிவாகியிருக்கின்றன.

அடுத்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதியில் இருந்து, இந்த நாடுகள் பேரவையின் உறுப்பு நாடுகளாக பணியாற்ற உள்ளன.

ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு, சீனா, கியூபா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் தெரிவு செய்யப்பட்டு இருப்பதற்கு அமெரிக்கா கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

மனித உரிமை மீறல்களில் ஈடுபடுகின்ற இந்த நாடுகள்,ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அங்கத்துவம் வகிப்பது மோசமான முன்னுதாரணம் என்று அமெரிக்க இராஜாங்கச் செயலர் மைக் பொம்பியோ குறிப்பிட்டிருக்கிறார்.

இவ்வாறானதொரு பேரவையில் அங்கத்துவம் வகிக்காமல் அமெரிக்கா வெளியேறியது சரியான முடிவு தான் என்பதை இது காட்டியிருக்கிறது என்றும் அவர் கூறியிருக்கிறார்.

அதுபோல சீனா, பாகிஸ்தான், கியூபா, ரஷ்யா போன்ற நாடுகள் ஐநா மனித உரிமைகள் பேரவைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதை, இஸ்ரேலும் கடுமையாக சாடியுள்ளது.

Times of israel நாளிதழில் வெளியாகியுள்ள ஒரு கட்டுரையில், இந்தமுறை ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள 15 நாடுகளில், 13 நாடுகளும் மோசமான மனித உரிமை மீறல்கள் உடன் தொடர்பு பட்டவை தான் என்று குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.

பிரான் ஸும் பிரிட்டனும் மாத்திரமே பேரவையில் அங்கத்துவம் வகிப்பதற்கு தகுதியான நாடுகள் என்றும் இஸ்ரேலிய நாளிதழ் சுட்டிக்காட்டியிருக்கிறது.

இஸ்ரேலுக்கு எதிராக அடுத்தடுத்து கொண்டு வரப்பட்ட தீர்மானங்களால், வெறுப்படைந்து அந்த நாடு மனித உரிமைகள் பேரவையிலிருந்து வெளியேறிவிட்டது.

இஸ்ரேல் மீதான தொடர் நடவடிக்கைகளை கண்டித்தே, அமெரிக்காவும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இருந்து வெளியேறியமை நினைவிருக்கலாம்.

இவ்வாறானதொரு சூழ்நிலையில், அமெரிக்காவுக்கு எதிரான ரஷ்யா, சீனா, கியூபா போன்ற பல நாடுகள் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் ஆதிக்கம் செலுத்தும் நிலை உருவாகியிருக்கிறது.

இந்தநிலையானது இலங்கை விவகாரங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதே. ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், இலங்கை தொடர்பான தீர்மானங்களை கொண்டு வருவதில் அமெரிக்காவே முக்கிய பங்காற்றியது.

2012 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை கொண்டு வரப்பட்ட அனைத்து தீர்மானங்களிலும், அமெரிக்காவின் பங்கு குறைத்து மதிப்பிட முடியாதது.

அதன் தலைமையிலேயே தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன. கடைசியாக கொண்டு வரப்பட்ட தீர்மானத்துக்கு அமெரிக்கா அனுசரணை வழங்கி இருக்கவில்லை. அப்போது அமெரிக்கா பேரவையில் இருந்து வெளியேறி விட்டது.

பிரித்தானியா, ஜேர்மனி, கனடா உள்ளிட்ட நாடுகள் தான் பிரதான அனுசரணை நாடுகளாக இருந்து இந்த தீர்மானத்தை கொண்டு வந்திருந்தன.

எனினும், அமெரிக்காவுக்கு இணையாக இந்த நாடுகளால் சர்வதேச நாடுகளின் ஆதரவை பெற்றுக் கொள்ளக்கூடிய வாய்ப்புகள் குறைவு. இலங்கை தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், இலங்கை அரசாங்கம் தனது கடமைகளை நிறைவேற்றுவதற்கு கொடுக்கப்பட்ட காலஎல்லை வரும் மார்ச் மாதத்துடன் நிறைவு பெறுகிறது.

பெப்ரவரி- மார்ச் மாதங்களில் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அடுத்த கூட்டத்தொடரில், இலங்கை தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து அனுசரணை நாடுகள் தீர்மானிக்க வேண்டிய நிலையில் இருக்கின்றன.

இலங்கைக்கு எதிரான கடுமையான தீர்மானத்தை முன்வைப்பதா? அல்லது இந்த விவகாரத்தை ஐ.நா பாதுகாப்புச் சபைக்கு கொண்டு செல்வதா என்று தீர்மானிக்க வேண்டிய ஒரு கட்டத்துக்கு, அனுசரணை நாடுகள் வரவேண்டிய நிலை காணப்படுகிறது.

தற்போதைய அரசாங்கம் ஜெனிவா தீர்மானங்களுக்கு இணங்கிச் செயற்படப் போவதில்லை என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டது. இவ்வாறான நிலையில் பேரவையில், இலங்கை விவகாரத்தை அப்படியே தூக்கிக் குப்பைக்குள் போடுவது அல்லது கடும்போக்கில் இறங்குவது என இரண்டு தெரிவுகள் தான் இருக்க முடியும்.

முதலாவது தெரிவு அவ்வளவு சாத்தியமற்றது என்பதால், இரண்டாவது தெரிவான கடுமையான தீர்மானத்தை முன்னெடுப்பது அல்லது பாதுகாப்புச் சபைக்கு கொண்டு செல்வதுதான் அனுசரணை நாடுகளின் பிரதான தெளிவாக இருக்கக் கூடும்.

இங்குதான் இலங்கைக்கு சாதகமான சூழல் இப்போது உருவாகியிருக்கிறது. பேரவையின் உறுப்பு நாடுகளாகும், ரஷ்யா, சீனா, பாகிஸ்தான், கியூபா ஆகியன இலங்கையுடன் மிகநெருங்கிய நட்புறவை கொண்டவை. மனித உரிமை மீறல்களைப் பற்றி கவலை கொள்ளாதவை.

இலங்கை இலங்கைக்கு எதிராக மேற்கொள்ளப்படக் கூடிய எந்தவொரு சர்வதேச நகர்வையும், தடுப்பதற்கு தயங்காதவை. இலங்கைக்கு எதிரான தீர்மானங்களை அமெரிக்கா கொண்டு வந்த போதெல்லாம், இந்த நான்கு நாடுகளும் இலங்கையை காப்பாற்றுவதற்காக வரிந்து கட்டிக் கொண்டு செய்யப்பட்டது வரலாறு.

அதனை மேவித் தான் அமெரிக்கா தனது செல்வாக்கின் மூலம் இலங்கை தொடர்பான தீர்மானங்களை முன்வைத்து வந்தது. இப்போது அமெரிக்கா பேரவையில் இல்லை. ஆனால் அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்கக் கூடிய பிரிட்டன், பிரான்ஸ் போன்ற நாடுகள் பேரவையில் அங்கம் வகிக்கின்றன.

அந்த நாடுகளின் தலைமையில் இலங்கைக்கு எதிரான கண்டன தீர்மானங்களை கொண்டு வரும்போது, அதனை தோற்கடிப்பதற்கு ரஷ்யா, சீனா, பாகிஸ்தான், கியூபா போன்ற நாடுகள் விடாப்பிடியான நிலைப்பாட்டில் இருக்கும் என்பதில் ஐயம் இல்லை.

அதுபோல இந்த விவகாரத்தை ஐ.நா. பாதுகாப்புச் சபைக்கு கொண்டு சென்றால் கூட, சீனா தங்களை பாதுகாக்கும் என்று இலங்கை உறுதியாக நம்புகிறது.

சீனாவுக்கான புதிய தூதுவராக நியமிக்கப்பட்டிருக்கும் பாலித கொஹன்ன இதனை வெளிப்படையாகவே கூறியிருக்கிறார். சர்வதேச அரங்கில் பக்கத் துணையாக இருப்போம் என்று சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகள் கொடுத்திருக்கும் வாக்குறுதி, ஐ.நா மனித உரிமைகள் பேரவை நகர்வுகளை அடிப்படையாக கொண்டவை தான்.

இவ்வாறான சூழலில், கடுமையான சவாலை சந்திக்க போவது பாதிக்கப்பட்ட தரப்பினரான தமிழர்கள் தான்.

சர்வதேச சக்திகளின் அதிகாரப் போட்டிகளுக்கு ஊடாக தன்னைக் காப்பாற்றிக் கொள்வதில் இலங்கை உறுதியாக இருக்கும் நிலையில், அதற்கு முண்டு கொடுக்கும் நாடுகள் ஜெனிவாவில் பலமடைவது தமிழர்களைப் பொறுத்தவரையில் துரதிஷ்டம் தான்.