ஜெனிவா மனித உரிமை சபையின் 46வது கூட்டத்தொடர் தமிழீழ மக்களிற்கு சாதகமாக அமையும்!

Report Print S.V Kirubaharan S.V Kirubaharan in கட்டுரை

நியூயோர்க்கில் உள்ள ஐ.நா. பொதுச்சபையில், கடந்த 13ம் திகதி, ஐ.நா.மனித உரிமை சபையின் 2021ம் ஆண்டு முதல் மூன்று வருடங்களிற்கு அங்கத்துவத்திற்கான பதினைந்து வெற்றிடங்களிற்கு தேர்தல் நடைபெற்றுள்ளது.

இதன் அடிப்படையில் மனித உரிமைகளை மோசமாக மீறும் நாடுகள் சிலவும் வெற்றிபெற்றுள்ளன.

இவ்விடயத்திற்கு விபரமாக செல்லும் முன், ஐ.நா. மனித உரிமை சபையின் நாற்பத்தி ஏழு நாடுகளிற்கான அங்கத்துவம் எப்படியாக பிரிக்கப்பட்டுள்ளது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இதன் அடிப்படையில் ஆசியா பசுபிற்கு (13) பதின்மூன்று நாடுகளும், ஆபிரிக்காவிற்கு (13) பதின்மூன்று நாடுகளும், லத்தின் அல்லது தென் அமெரிக்கா கரிபியாவிற்கு (8) எட்டு நாடுகளும், மேற்கு ஐரோப்பிய மற்றவற்றிற்கு (7) ஏழு நாடுகளாகவும், கிழக்கு ஐரோப்பவிற்கு (6) ஆறு நாடுகள் என்ற அடிப்படையில் அங்கத்துவம் பிரிக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் தற்பொழுது, அதாவது 2020ம்ஆண்டு டிசம்பர் மாதம் வரை ஐ.நா. மனித உரிமை சபையில் அங்கத்துவம் வகிக்கும் நாடுகளை நாம் கவனத்தில்கொள்ள வேண்டும்.

இதில் - ஆசியா பசுபிக் நாடுகளாவன (13) : ஆப்கானிஸ்தான் (2020), கட்டார் (2020) நேபலாம் (2020) ,பாகிஸ்தான் (2020), பாரேன் (2021) ,பாங்களாதேஸ் (2021) பிஜீ (2021) ,இந்தியா (2021), பிலிப்பைன்ஸ் (2021), இந்தோனேசியா (2022) ,ஜப்பான் (2022) மாசல்தீவுகள் (2022) ,கொரியகுடியரசு - தென்கொரிய (2022).

ஆபிரிக்கா நாடுகளாவன (13) : அங்கோலா (2020),கொங்கோ ஜனநாயக குடியரசு (2020), நைஜீரியா (2020) ,செனகல் (2020) ,புக்கினோபாசோ (2021), கமரோன் (2021) ,ஏரித்தீரியா (2021) ,சோமலீயா (2021), ரோகோ (2021) ,லிபியா (2022), மொறிற்ரானியா (2022), நாபிபீயா (2022) சுடான் (2022).

லத்தின் அல்லது தென் அமெரிக்க கரிபியா நாடுகளாவன (8) : சிலி (2020), பேரு (2020), மெக்சிக்கோ (2020) ,ஆஜன்ரீனா (2021), பாமாஸ் (2021) ,உருகுவே (2021), பிறேசில் (2022) ,வெனிசுலா (2022).

மேற்கு ஐரோப்பிய மற்றைய நாடுகளாவன (7) : அவுஸ்திரேலியா (2020), ஸ்பெயின் (2020), அவுஸ்திரியா (2021 டென்மார்க் (2021) ,இத்தாலி (2021), ஜெர்மனி (2022), நெதர்லாந்து (2022), கிழக்கு ஐரோப்பிய நாடுகளாவன (6) : சுலோவாக் (2020) யூக்கிறேன் 2020) புல்கேரியா (2021) செக் குடியரசு (2021) ஆர்மேனியா (2022) போலாந்து (2022).

பதினைந்து புதிய அங்கத்தவர்கள்

இதன் அடிப்படையில், ஆசியா நாடுகளில் நான்கு நாடுகளும், ஆபிரிக்கா நாடுகளில் நான்கு நாடுகளும், லத்தின் அல்லது தென் அமெரிக்க கரிபியா நாடுகளில் மூன்று நாடுகளும், மேற்கு ஐரோப்பிய மற்றைய நாடுகளில் இரு நாடுகளும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இரு நாடுகளும் 2020ம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் தமது அங்கத்துவத்தை இழக்கின்றனர்.

ஆனால் ஐ.நா.மனித உரிமை சபையில் அங்கத்துவம் வகிக்கும் ஒரு நாடு விரும்பினால், மீண்டும் ஒரு மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக இரண்டாவது தடவை மட்டுமே அங்கத்துவம் வகிக்க முடியும். இதற்கு அவர்கள் ஐ.நா.பொதுச் சபையின் தேர்தலில் பங்கு கொண்டு வெற்றிகொள்ள வேண்டும்.

தற்பொழுது கடந்த 13ம் திகதி, ஐ.நா. பொது சபையினால், ஐ.நா.மனித உரிமை சபையில் 2021 ம் ஆண்டு முதல் மூன்று வருடங்களிற்கு அங்கத்துவத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட பதினைந்து அங்கத்தவர்கள் யார் யாரென பார்வையிடுவோம்.

ஆசியா பசுபிக் நாடுகள் என்ற அடிப்படையில் : பாகிஸ்தான், நேபலாம், சீனா, யூபிக்ஸ்தான் ஆகிய நாடுகளில் பாகிஸ்தான், நேபலாம் ஆகிய இரு நாடுகளும் தமது இரண்டாவது தடவைக்குதேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

ஆபிரிக்க நாடுகள் என்ற அடிப்படையில் : செனகல், கொட்துவார் - ஐவிரிகோஸற், கபோன், மலாவி ஆகிய நாடுகளில் செனகல் தனது இரண்டாவது தடவைக்கு தேர்தெடுக்கப்பட்டுள்ளது.

லத்தின் அல்லது தென் அமெரிக்க கரிபியா நாடுகள் என்ற அடிப்படையில் : மெக்சிக்கோ, பொலீவியா, கியூபா ஆகிய நாடுகளில் - மெக்சிக்கோ மீண்டும் தனது இரண்டாவது தடவைக்கு தேர்தெடுக்கப்பட்டுள்ளது.

மேற்கு ஐரோப்பிய மற்றைய நாடுகள் என்ற அடிப்படையில் : பிரான்சும், பிரித்தானியாவும் தேர்தல் இன்றி தெரிவாகியுள்ளன.

கிழக்கு ஐரோப்பிய என்ற அடிப்படையில் : யூக்கிறேன், ராசியா ஆகிய நாடுகளில்- யூக்கிறேன் மீண்டும் தனது இரண்டாவது தடவைக்கு தேர்தெடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தடவை தெரிவாகியுள்ள பதினைந்து நாடுகளில், பல நாடுகள் மனித உரிமையை கடுமையாக மீறும் நாடுகளென, பல சர்வதேச மனித உரிமை அமைப்புக்களினால் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது உண்மை. ஆனால் இப்படியான நாடுகள் மனித உரிமை சபைக்கு தெரிவாகியிருப்பது இது முதற்தடவையாக அல்ல. இங்கு தான் ஐ.நா. பொது சபை ஒர் அரசியல் கலப்பு கொண்டது என்பது நிருபணமாகிறது.

இரு வருட கால அவகாசம் முடிவடைகிறது

நிற்க, அடுத்து நாங்கள் ஆராய வேண்டிய விடயமாவது, 2021ம் ஆண்டு மார்ச் மாதம், அதாவது அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஐ.நா.மனித உரிமை சபையின் 46வது கூட்ட தொடருடன், சிறிலங்கா அரசிற்கு மனித உரிமை சபையினால் கொடுக்கப்பட்ட இரு வருட கால அவகாசம் முடிவடையவுள்ளது. இந்நிலையில், சிறிலங்கா விடயத்தில் மனித உரிமை சபையின் அங்கத்துவ நாடுகள் எவ்வாறாக நிலைமையை கையாழுவார்கள் என்பதே இப்பொழுது பலரிடம் எழும் கேள்வி.

இங்கு நாம் கவனத்தில்கொள்ள வேண்டிய முக்கிய விடயங்கள் என்னவெனில், முதலாவதாக சிறிலங்கா தமது இணை அனுசரனையில் விலகியுள்ளதுடன், சிறிலங்காவில் கடந்த ஜனாதிபதி அத்துடன் பாராளுமன்ற தேர்தல்களுடன், அங்கு ஜனநாயகத்தை குழிதோண்டி புதைப்பதற்கான வழிவகைகளை கையாழப்படுவதை சர்வதேச சமுதாயம் கவனத்தில் கொள்கிறது. அத்துடன் சீனா, கியூபா,ஈரான்,பாகிஸ்தான் போன்ற உலகில் மிக மோசமான மனித உரிமை மீறல்களை கொண்ட நாடுகளுடன் சிறிலங்கா வெளிப்படையாக கைகோர்த்து நிற்கிறது.

சிறிலங்காவின் இவ் நிலைபாட்டை, சர்வதேச சமுதாயம் எப்படி கண்கொண்டு பார்க்கும் என்பதுடன்,எப்படியான நிலைபாட்டை கொள்ளும் என்பதை நாம் ஆராய வேண்டும். காரணம், 2015ம் ஆண்டு வரை மகிந்த ராஜபக்சவின் ஆட்சி காலத்தில் நிலவிய நிலைமைகளிற்கு பல மடங்கு மேலாக, தற்போதைய கோட்டபாயவின் ஒரு வருட கால ஆட்சி,ஜனநாயக வழிமுறைகளிற்கு படிப்படியாக சாவுமணியடித்து வருவதை சர்வதேச சமுதாயம் என்றும் கவனத்தில் கொள்கிறது. அத்துடன், வடக்கு,கிழக்கு வாழ் மக்களின் அரசியல் ,பொருளாதார ,சமூக வாழ்க்கையின் பின்னடைவுகளையும் சர்வதேச சமுதாயம் கவனத்தில் கொள்ள தவறவில்லை.

இந்நிலையில், எதிர்வரும் மனித உரிமை சபை கூட்டத்தொடரில், ஓர் கடுமையான தீர்மானம் சிறிலங்கா மீது முன் வைப்பது தவிர்க்க முடியாத ஒன்றாகவுள்ளது. இதில் என்னென்ன விடயங்கள் உள்ளடக்கப்படலாம் என்பது ஒரு பக்கம் இருக்க, இத்தீர்மானத்திற்கு அங்கத்துவ நாடுகளின் ஆதரவு எப்படியாக இருக்கும் என்பதில், ஐ.நா. நிலைமைகளை ஆழமாக சரியாக புரியாத பலர் பீதி கொள்வதில் எந்த தவறுமில்லை.

சிலர் - சீனா, ரஸ்யா, கியூபா ,பாகிஸ்தான் மனித உரிமை சபையில் அங்கத்துவ நாடுகளாக உள்ளதை எண்ணி கலக்கம் கொள்கிறார்கள். இவர்கள் புரியாத உண்மை என்னவெனில், இந்நாடுகள் மனித உரிமை சபையில் அங்கம் வகிக்கும் வேளையிலேயே, சிறிலங்கா மீது அடுத்து அடுத்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன என்பதை நாம் மறக்ககூடாது.

இதேவேளை இத் தீர்மானங்களை அமெரிக்காவே முன்மொழிந்து வெற்றிகண்டுள்ளது என்பது யதார்த்தம். ஆனால் அமெரிக்கா தற்பொழுது மனித உரிமை சபையில் அங்கம் வகிக்கவில்லை என்பது சிலரது விவாதமாகவுள்ளது. என்னை பொறுத்த வரையில் இவர்கள் ஐ.நா.வின் உள்வீட்டு விடயங்கள் புரியாதவர்களென்றே கூறுவேன்.

அமெரிக்கா சிறிலங்கா விடயத்தில் அக்கறை

காரணம், அமெரிக்கா மனித உரிமை சபையில் அங்கத்துவம் வகித்தார்களோ இல்லையோ, அவர்கள் நிச்சயம் சிறிலங்கா விவகாரங்களில் விசேடமாக மனித உரிமை விடயங்களில் நல்ல கரிசனையாகவுள்ளனர். இதற்கு பல பல உதாரணங்கள் இருந்த போதிலும், சுருக்கமாக கூறுவதனால், சிறிலங்காவிற்கு இரு வருட அவகசம் கொடுக்கும் வேளையில், அமெரிக்காவின் பின்ணனியிலேயே யாவும் நகர்த்தபட்டது என்பதை எத்தனை பேர் அறிவார்கள்?

அடுத்து அமெரிக்காவின் மனித உரிமை சபையின் பிரசன்னம் என்பது – குடியரசு கட்சியை சார்ந்தவர் ஜனாதிபதியாக திகழும் வேளையில் மனித உரிமை சபையிலிருந்து விலகுவதும், ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி காலத்தில், மனித உரிமை சபையில் வெளிப்படையாக அங்கத்துவம் பெறுவதுமே அமெரிக்காவின் போக்காகவுள்ளது.

இந்த அடிப்படையில், அடுத்த நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், ஜனநாயக கட்சியை சார்ந்தவர் வெற்றி பெற்றால், அமெரிக்கா நிச்சயம் மனித உரிமை சபையில் தமது செயற்பாடுகளை வெளிப்படையாக நகர்த்தும் எதிர்காலத்தில் சிறிலங்கா மீது ஐ.நா.மனித உரிமை சபையில் சமர்ப்பிக்கபடும் தீர்மானத்திற்கு, குறைந்தது இருப்பத்து ஐந்து முதல் இருபத்து ஏழு நாடுகளின் வாக்குகளால் (25-27) நிச்சயம் வெற்றி பெறும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

இது பற்றி ஆய்வு செய்ய விரும்பியவர்கள் யாவரும் - முன்னைய தீர்மானங்கள் மீதான வாக்களிப்புக்கள், தற்போதைய நாற்பத்தி ஏழு நாடுகளின் அங்கத்துவம், சிறிலங்காவின் தற்போதைய நிலைபாடு போன்ற பல விடயங்களை கவனத்தில்கொள்ள வேண்டும்.

அடுத்து, சிறிலங்காவை ஐ.நா. மனித உரிமை சபையின் தீர்மானம் மூலம் பாதுகாப்பு சபைக்கு அனுப்பினாலும், அங்கு சீனா ,சிறிலங்கா விடயத்தில் அக்கறை கொள்ளுமென விவாதம் செய்பவர்கள், சுடானுடன் மிக நட்பாக பாரிய வர்த்தகத்தில், விசேடமாக எண்ணெய் வியாபாரத்தில் ஈடுபட்ட சீனா, சுடான் ஜனாதிபதி ஓமார் எல் பாசீரை பாதுகாப்பு சபை, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு சிபாரிசு செய்த வேளையில், சீனா என்ன செய்துள்ளது என்பதை படித்து அறிந்து கொள்ள வேண்டும்.

எம்மை பொறுத்த வரையில், எமது பாரிய அனுபவங்களின் அடிப்படையில், எதிர்காலத்தில் ஜெனிவா மனித உரிமை சபையில்,சிறிலங்கா மீது கொண்டு வரப்படும் தீர்மானம், எந்த தடையுமின்றி நிறைவேறும்.

ஆகையால், சிறிலங்கா மீதான எதிர்கால தீர்மானம் ஐ.நா. மனித உரிமை சபையில் வெற்றி பெறுவதற்கு புலம் பெயர் வாழ் தமிழர், செயற்பாட்டாளர்கள் சகல அமைப்புக்களின் பங்குடன், வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களதும், அவ்விடயத்தில் உள்ள மனித உரிமை செயற்பாட்டாளர்கள், காணாமல் போனோரது பெற்றோர், உறவினர்களினது பங்களிப்பு மிக மிக முக்கியம்.

காய்க்கும் மரத்திற்கு கல் எறியா?

‘காய்க்கும் மரத்திற்கு கல் எறியானால்’, நூற்று கணக்கான தூரம் மணித்தியாலய கணக்கு பிரயாணம் செய்து, சட்டத்துக்கு முரணாக கபடமாக ஜெனிவாவில் உள்ள ஐ.நா. விற்குள் நுழைந்து, யாருமே இல்லாத மண்டபத்திற்குள், தமது வாணிபத்திற்கு தடையாகவுள்ளவர்கள் பற்றி, மணித்தியாலய கணக்காக விமர்சித்து பதிவு செய்து, தமது முகநூலில் வெளியிடும் பொழுது, அவர்கள் கல் எறியும் நபர்கள் யாவரும் என்ன ‘மரங்கள்? காய்க்காத மரத்திற்கு கல் எறிபவர்களானால் இவர்கள் நிச்சயம் பைத்தியகாரராக இருக்க வேண்டும்.

சில அர்ப்ப மனிதர்களது விருப்பம் என்னவெனில், தமக்கு ‘ச.வி.கிருபாகரனுடன்’ பிரச்சினையென கூறி, தமக்கு ஒரு தகமை பெற்று கொள்வதுடன், தமது வாணிபத்திற்கான பிரச்சாரத்தை மேற்கொள்கிறார்கள் என்பதே உண்மை. ச. வி. கிருபாகரனின் விண்ணப்பங்களை ஐ.நா. ஏற்குமளவிற்கு, கிருபாகரன் ஐ.நா.வில் செல்வாக்கு பெற்றுள்ளார் போல் தெரிகிறதே! சிலர் புசத்தும் பொழுது தமது வாயால் சில உண்மைகளை ஏற்பதையிட்டு மகிழ்ச்சி கொள்ள வேண்டியுள்ளது.

ஐ.நா.மனித உரிமை வேலை திட்டங்களை அறவே தெரியாதவர்களுக்கு ஓர் இரு நிமிட உரையும், நிரந்த அடையாள அட்டையும் தான் மனித உரிமை செயற்பாடாகும். அத்துடன் மனித உரிமை சபை மூலம் தமிழீழத்தை பெற்று கொடுக்க போகிறார்களாம்! இது கின்னஸ் சாதனையில் பதிவு செய்ய வேண்டிய மாபெரும் குசும்பு. என்ன செய்வது, ‘பேய் காட்டபடுபவன் இருக்கும் வரை, பேய்காட்டுபவர்களும் இருப்பார்கள்’ என்பது முது மொழி. எதிர்வரும் மார்ச் மாதம் தலை மறைவாக போபவர்கள் யார் யார் என்பதை தமிழீழ மக்கள், புலம் பெயர் வாழ் மக்கள் அறியும் காலம் மிக தூரத்தில் இல்லை.