ஆட்டம் காண வைக்கும் கொரோனா அலை

Report Print Sathriyan in கட்டுரை

இலங்கைத் தீவு பொருளாதார ரீதியாக மேலும் பலவீனமான நிலையை அடைந்திருக்கின்ற சூழலில் தான், கொரோனாவின் இரண்டாவது அலை தனது ஆட்டத்தை ஆரம்பித்திருக்கிறது.

இப்போது நிலவுவது, இரண்டாவது அலையே இல்லை என்றும், இன்னமும் சமூகத் தொற்றாக மாறவில்லை என்றும் விஞ்ஞானபூர்வமான விளக்கங்களை அரச அதிகாரிகள் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், முதல் அலையை விட மூர்க்கத்தனமானதாக இப்போதைய அலை காணப்படுகிறது.

நாட்டில் நிலைமை படுமோசமான கட்டத்தை அடைந்து கொண்டிருக்கிறது என்பதை சாதாரண மக்களால் ஊகிக்க முடிகிறது, உணர முடிகிறது.

முதல் அலை தாக்கிய போது, நாடு பொருளாதார ரீதியாக பலவீனமான நிலையில் இருந்தது.

அந்நியச் செலவாணிக் கையிருப்பு தேய்ந்து போயிருந்தாலும், சமாளிக்கக் கூடிய நிலையில் அரசாங்கம் காணப்பட்டது.

ஆனால் இப்போது மிகமோசமான பொருளாதாரச் சூழலுக்குள் தான், இரண்டாவது அலையின் உக்கிர தாண்டவத்தை எதிர்கொள்கிறது இலங்கை.

முதல் அலையின் போது ஆங்காங்கே தொற்றுக்கள் கண்டுபிடிக்கப்பட்டதால், முடக்க நிலையில் இருந்த போதும், உற்பத்தித் துறையினால் ஓரளவுக்காவது இயங்க கூடிய நிலை காணப்பட்டது.

இதனால் நாட்டின் உற்பத்திகள் பெரியளவில் பாதிக்கப்பட்டதாக கூற முடியாது, அது உள்நாட்டு நிரம்பல் மற்றும் வெளிநாடுகளுக்கான ஏற்றுமதிகளுக்கு கை கொடுத்தது.

ஆனால், இரண்டாவது அலை, நாட்டின் உற்பத்தித் துறையையும், ஒட்டு மொத்தமாக முடக்கிப் போடும் அளவுக்கு தீவிரமானதாக மாறியிருக்கிறது.

ஏற்றுமதி வருமானத்தை அதிகரிப்பதே இப்போதைய அரசாங்கத்தின் பிரதான பொருளாதார உத்தியாக உள்ள நிலையில், உற்பத்தித் துறை தடங்கலின்றி இயங்கிக் கொண்டிருந்தால் தான், அந்த இலக்கை எட்ட முடியும்.

கொரோனாவுக்குப் பின்னர், சுற்றுலாத் தொழிற்துறை முற்றாக செயலிழந்து விட்ட நிலையில், இலங்கைக்கு முக்கியமாக அந்நியச் செலவாணியை பெற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தது ஆடை ஏற்றுமதி துறை.

அதற்குத் தான் இப்போது பேரிடி விழுந்திருக்கிறது.

மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பரவிய தொற்று கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் பல தொழிற்சாலைகளுக்குப் பரவியது.

இதனால், நாட்டின் ஆடை உற்பத்தி துறை பெரும் பாதிப்பைச் சந்தித்திருக்கிறது.

இந்த துறை சார்ந்த பெரும்பாலான நிறுவனங்கள் மூடப்பட்டுக் கிடக்கின்றன. ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை வீடுகளுக்கு அல்லது தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

இதனால் ஒரு பக்கத்தில் உற்பத்தி பாதிப்பு ஏற்படுகிறது. இன்னொரு பக்கம் ஏற்றுமதி வருவாய் இழப்பு ஏற்படுகிறது. மற்றொரு பக்கம், வேலையிழப்பு நிலையும் எதிர்கொள்ளப்படுகிறது.

பொருளாதார ரீதியான இந்த இழப்பு அடுத்து வரும் பல மாதங்களுக்குத் தொடரக் கூடிய சூழல் உள்ளது.

அதுபோன்று முதல் அலையின் போது, கடற்றொழிலாளர்களால், மீன்பிடிக்கவும், அதனை விற்கவும் ஏற்றுமதி செய்வதற்குமான பொறிமுறைகளில் பாதிப்பு இருக்கவில்லை.

பேலியகொட மீன்சந்தை கொத்தணியில் தொடங்கிய தொற்று அந்த துறையை முற்றாகவே படுக்கச் செய்துள்ளது.

பிடிக்கப்பட்ட இலட்சக்கணக்கான கிலோ மீன்களை சந்தைப்படுத்த முடியாத நிலைக்கு மீனவர்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

இதனால் அவர்களினதும், மீன் வியாபாரத்தை தொழிலாக கொண்டவர்களினதும், குடும்பங்கள் நிர்க்கதியாகியுள்ளனர்.

மீன் ஏற்றுமதியும் இப்போது கேள்விக்குள்ளாகியிருக்கிறது.

இந்த நிலை எவ்வளவு காலத்துக்கு நீடிக்கும் என்று கூற முடியாது.

ஆனால் அவ்வளவு இலகுவாக இந்த நெருக்கடியில் இருந்து மீள முடியாது என்பதை உணர முடிகிறது.

சுனாமிக்குப் பின்னர் ஏராளமானோர் கடலுணவுகளை சாப்பிடுவதை தவிர்த்தனர். சுனாமியின் போது கடலில் மிதந்து வந்த சடலங்களை கண்டவர்களால் நீண்ட காலத்துக்கு மீன்களைச் சாப்பிட முடியவில்லை.

அந்த அச்சத்தில் இருந்து அவர்கள் மீளுவதற்கு நீண்ட காலம் தேவைப்பட்டது.

அதுபோலத் தான், பேலியகொட மீன்சந்தை கொத்தணியும் மீன் நுகர்வோரை மிரள வைப்பதாக இருக்கிறது.

இந்த அச்சத்தில் இருந்து மீள்வதற்கு நீண்ட காலம் செல்லலாம்.

இது ஒட்டுமொத்த நாட்டினதும் இந்த துறை சார்ந்த தொழில்களை நம்பியிருப்போர் மற்றும் நிறுவனங்களையும் நடுத்தெருவுக்கு கொண்டு வரும் சூழலை ஏற்படுத்தியிருக்கிறது.

முதலாவது அலையின் போது, நாட்டின் பொருளாதார இலக்குகள் பெரும்பாலும் பாதிக்கப்படவில்லை.

மொத்த வர்த்தகம் தடையின்றி நடந்து கொண்டிருந்தது. துறைமுகப் பணிகளில் தடங்கல்கள் ஏற்படவில்லை.

ஆனால் இப்போது அப்படியில்லை.

மொத்த வர்த்தக மையம் கூட, முடங்கிப் போகின்ற நிலை தோன்றியிருக்கிறது.

புறக்கோட்டை மொத்த வர்த்தகச் சந்தை பாதிப்பைச் சந்தித்திருக்கிறது. இது சில்லறை வர்த்தகத்தையும் பாதிக்கக் கூடிய சூழலை ஏற்படுத்தும்.

இறக்குமதிகளும் கூட சிக்கலை எதிர்கொண்டுள்ளன. ஏனென்றால் துறைமுக பணியாளர்களும், சுங்க அதிகாரிகளும் கூட தொற்றுக்கு உள்ளாகியிருக்கிறார்கள். தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

இந்த நிலையானது, சீரான இறக்குமதி மற்றும் சுங்க நடைமுறைகளில் தடங்கல்களை ஏற்படுத்தும்.

இவ்வாறான சிக்கல்கள் ஏற்படும் போது, சில்லறை வியாபாரி மூலம் சாதாரண மக்களை சென்றடையும் பொருட்களின் சுழற்சியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

இது ஒரு புறத்தில் தட்டுப்பாடு, விலை உயர்வு, கறுப்புச் சந்தை போன்றவற்றை ஏற்படுத்தக் கூடிய ஆபத்தைக் கொண்டிருக்கிறது.

அதேவேளை, மற்றொரு புறத்தில், இந்த துறையை சார்ந்த ஏராளமானோர் வருமான இழப்பைச் சந்திக்க வேண்டிய சூழலும் ஏற்படும்.

இவ்வாறான நெருக்கடிக்கு முகம் கொடுக்கும் மக்களுக்கான உதவிகளை வழங்குவதில் அரசாங்கமும் பங்களிக்க முடியாமல் போகும்.

ஏனென்றால் அரசாங்கமே வங்குரோத்து நிலையில் தான் இருக்கிறது. சேவைத் துறையினருக்காக செலவிடும் தொகையும் அதிகரித்து விட்டது,

இவ்வாறான நிலையை அரசாங்கம் நினைத்துக் கூடப் பார்த்திருக்காது. இந்த நிலையில் இருந்து மீள்வதற்கான உடனடித் திட்டங்களும் அரசாங்கத்திடம் இருப்பதாகத் தெரியவில்லை

முதல் அலையில் தப்பியவர்களைக் கூட கொரோனா இரண்டாவது அலை எப்படி அள்ளிக் கொண்டு போகிறதோ, அதுபோலத் தான், முதல் அலையில் பொருளாதார ரீதியாகத் தப்பியவர்களும் கூட, இரண்டாது அலைக்குள் அகப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த அலை ஓயும் போது, உயிரிழப்புகளுக்கு அப்பால், பெரும பொருளாதார இழப்புகளும் மிஞ்சியிருக்கும்

அதனை ஈடுகட்டுவதற்கே அரசாங்கம் அடுத்த சில ஆண்டுகள் கடுமையாக போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்படலாம்.