ஒரு கல்லில் பல மாங்காய்களை விழுத்தும் தந்திரம்!

Report Print Tamilini in கட்டுரை

முன்னாள் இராணுவ அதிகாரியும், முன்னாள் பாதுகாப்புச் செயலாளருமான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது அரசின் சிவில் நிர்வாகக் கட்டமைப்பையும் கூட இராணுவப் பாணிக்கு மாற்றி வருகின்றார் என்ற குற்றச்சாட்டு வலிமையாகி வருகின்றமை தெரிந்தது தான்.

35ற்கும் மேற்பட்ட சிவில் நிர்வாகப் பதவிகளுக்கு ஓய்வு பெற்ற – அல்லது சேவையில் இருக்கின்ற படை அதிகாரிகளை நியமித்து, இராணுவக் கட்டமைப்புப் போன்றதாக அரச நிர்வாகத்தை மாற்றி வருகின்றார் அவர் என்பது வெளிப்படையானது.

இராணுவ விவகாரத்தில் “ஒரு கல்லில் பல மாங்காய்களை விழுத்தும்’ மற்றொரு கைங்கரியத்தை மிகத் தந்திரமாக – மிக சாமர்த்தியமாக – மிக நுட்பமாக – அவர் முன்னெடுக்கின்றார்.

வட மாகாணத்தில் இருந்து – யாழ்.மாவட்டம் மற்றும் வன்னிப் பெருநிலப்பரப்பில் இருந்து – 9 ஆயிரம் பேரை இராணுவத்துக்கு ஆள் திரட்டுவதாகக் காட்டிச் சேர்த்துக் கொள்ளும் அவரின் நடவடிக்கை இப்படி ஒரு கல்லில் பல மாங்காய்களை விழுத்தும் தந்திரம் தான்.

இலங்கை இராணுவத்தைப் பொறுத்தவரை அதனைத் தமிழ் மக்கள் தங்களின் இராணுவமாகவோ, தமது தேசத்தின் இராணுவமாகவோ நோக்கும் நிலைமை இதுவரை இல்லை. அதனை சிங்கள இராணுவமாகவும், தமது தேசத்தை அடக்கி, ஆக்கிரமித்துள்ள இராணுவமுமாகவே அவர்கள் பார்க்கின்றார்கள்.

இலங்கை இராணுவத்தின் இதுவரை காலமான ஆள் திரட்டலும், அதன் நடவடிக்கைகளும் தமிழர்களின் இந்தக் கருத்து நிலைப்பாட்டை உறுதிப்படுத்துபவையாகவே எப்போதும் இருந்து வந்திருக்கின்றன.

இலங்கை இராணுவத்தில் உள்ள தமிழர்களின் எண்ணிக்கையை எடுத்துப் பார்த்தால் அதனை “சிங்கள இராணுவம்’ என்று தமிழர்கள் ஒட்டு மொத்தமாகக் கருதுவதின் அர்த்தம் அப்பட்டமாகும்.

இலங்கை இராணுவம் ஒன்றிரண்டு வீதம் கூடத் தமிழர்களைத் தனது படைக்குள் சேர்க்கவில்லை. அதுவும் அதிகாரிகள் தரத்தில் தமிழர்கள் உள்வாங்கப்படுவதேயில்லை என்று கூறலாம்.

ஆகவே, அப்படி “சிங்கள இராணுவம்’ என்ற பெயரெடுத்த தரப்பின் “லேபிளை’ மாற்றியமைக்கும் நடிப்பாக 9 ஆயிரம் வடக்குத் தமிழர்களை இராணுவத்துக்குத் திரட்டும் படம் காட்டப்படவிருக்கின்றது.

இத்தகைய ஆள் திரட்டல் மூலம் இலங்கை இராணுவத்தில் தேசிய இன விகிதாசாரம் சரிவரக் கடைப்பிடிக்கப்படுகின்றது என்பதைக் காட்டுவதற்கான முன் முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது.

இராணுவத்தில் தமிழர்களுக்கு இடம்கொடுத்தாலும் தச்சன், மேசன் என்ற உடலுழைப்புத் தொழிலாளிகள் நியமனம் தான். கடை நிலை ஊழியர் பதவி நிலை தான்.

60 ஆயிரம் ரூபா என்ற சம்பள ஆசையைக் காட்டினால், பெரும் எண்ணிக்கையில் தமிழ் இளைஞர்கள் இராணுவத்தில் கடை நிலையிலும் சேர்வார்கள் என்று கோட்டாபய அரசு நம்புகின்றது.

அப்படி இளைஞர்கள் சேர்ந்து கொண்டால், தமிழ்த் தேசியம், அந்தத் தேசியத்தின் அடையாளமான தனித்துவமான மொழி, கலாசாரம், விழுமியங்கள், பண்பாடு, வாழிடம், வாழ்க்கை முறை போன்றவை பற்றிய ஈடுபாடுகளையும் தீவிரத்தையும் தமிழர்களின் இளம் தலைமுறை மறந்து விடும்.

மறந்து விடுவது மட்டுமல்லாமல், சிங்கள இராணுவம் என்ற யதார்த்தக் கட்மைப்புக்குள் தமிழ் இளைஞர் சமுதாயம் ஒன்றித்துக் கலந்து, கரைந்து விடும், அதனால் தமிழ்த் தேசியம் என்ற தனித்துவமான சிந்தனைப் போக்கு தமிழர்கள் மத்தியில் – அவர்களின் மூளை மையத்திலிருந்து – நிரந்தரமாக அடிபட்டுப் போகும் என்று கோட்டா அரசு எண்ணுகின்றது போலும்.

ஜி.சீ.ஈ. (சாதாரண தரம்) சித்தியடையாத – வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் – ஒரு லட்சம் பேருக்கு உடனடியாக அரச நியமனம் வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டு அந்தப் பணியை அரசு ஆரம்பித்துள்ளது. ஆனால், வடக்கு, கிழக்கில் மட்டும் அந்த நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளது.

இந்தப் பதவிகளுக்காக ஏற்கனவே தெரிவு செய்யப்பட்ட – வடக்கு, கிழக்கைச் சேர்ந்த – சுமார் 24 ஆயிரம் பேர் இதனால் ஏமாற்றமடைந்து விசனத்தின் உச்சத்தில் உள்ளனர்.

ஒரு லட்சம் பேருக்கான அரச நியமனங்கள் வழங்கும் விடயத்தில் ஓரம் கட்டி ஒதுக்கப்பட்ட வடக்கு இளைஞர்களை இராணுவத்தில் மேசன் மேலை, தச்சு வேலை தரலாம் என்று கூறிச் சமாளிக்க முடியும் என ஆளும் தரப்புக் கருதுகின்றது.

மேற்படி ஒரு லட்சம் பேருக்கு அரச நியமனங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் வடக்கு மாகாணத்தில் மட்டும் சுமார் 13ஆயிரம் பேருக்கு அரச நியமனம் வழங்கப்பட வேண்டும். வேலை வாய்ப்பில் தமிழர் தாயகத்தை ஒதுக்கித் தனது இனப்பாகுபாட்டுப் பரவணித் திட்டத்தை சிங்களம் முன்னெடுக்கின்றது என்ற குற்றச்சாட்டை சமாளிக்கும் விதத்தில் இப்போது அவர்களுக்கு இராணுவத்தில் தச்சன், மேசன் என்ற கடைநிலை ஊழியப் பதவிகளை வழங்கிக் காய் நகர்த்துகின்றது சிங்களம்.

60 ஆயிரம் ரூபா சம்பளம் என்பதால் வேலையற்ற தமிழ் இளைஞர்கள் அள்ளுப்படுவர் – சிங்கள இராணுவ ஆள்திரட்டலுக்குள் தமிழ்த் தேசியம் அடியுண்டு முற்றாகக் கரைந்து போகும் என்ற பேராபத்தைப் புரியாமல்…!