புதிய தளபதியின் இலக்கும் சிக்கலும்

Report Print Subathra in கட்டுரை

புதிய விமானப் படைத் தளபதியாக பொறுப்பேற்றுள்ள எயர் மார்ஷல் சுதர்சன பத்திரன, விமானப்படையை வலுப்படுத்துவதற்கான, நான்கு இலக்குகளை அறிவித்திருக்கிறார்.

முதலாவது, நாட்டின் இறைமை, பிராந்திய ஒருமைப்பாடு ஆகியவற்றை உறுதிப்படுத்தும் வகையில், விமானப் படையின் ஆற்றலைப் பலப்படுத்துவது.

இரண்டாவது, கடல்சார் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது,

மூன்றாவது, ஆளில்லா விமானங்களின் அணியைப் பலப்படுத்துவது.

நான்காவது இயற்கை அனர்த்தங்களின்போது மீட்பு மற்றும் உதவி நடவடிக்கைகளில் ஈடுபடும் திறனை அதிகரிப்பது.

இவற்றில் முதல் மூன்றும், தேசிய பாதுகாப்புடனும், நான்காவது மீட்பு மற்றும் உதவி வழங்கலுடன் தொடர்புபட்ட விடயங்களாகும். அத்துடன் அவர் இன்னொரு விடயத்தை இந்தக் கூட்டத்தில் நினைவுபடுத்தியிருக்கிறார்.

விமானப்படையிடம் உள்ள போர் விமானங்கள், போக்குவரத்து விமானங்கள், ஹெலிகொப்டர்கள் என மூன்று வகையான விமானங்கள் இருக்கின்ற நிலையில், போர் விமானங்களின் அணி பலவீனமான மட்டத்தில் இருக்கிறது என்பதை அவர் உறுதிப்படுத்தியிருக்கிறார்.

பத்து ஆண்டுகளுக்கு முந்திய நிலையுடன் ஒப்பீடு செய்யும்போது இப்போது போர் விமானங்களின் அணி மிகவும் பலவீனமான நிலையில் இருக்கின்றது என்பதுதான் உண்மை. அதுவும் விமானப்படையின் 15 வகையான விமானங்களில் 3500 மணி நேரங்கள் பறப்பில் ஈடுபட்ட ஒரு விமானியின் தலைமையில் (எயர் மார்ஷல் சுமங்கல டயஸ்) இருந்து விமானப்படை விடுபட்டபோதுதான் இந்த நிலை காணப்படுகிறது.

1990களின் தொடக்கத்தில், போர் விமானங்களின் அணி உருவாக்கப்பட்டபோது எவ்7 போர் விமானங்களை இயக்குவதற்காக அதில் உள்வாங்கப்பட்ட 6 விமானிகளில் ஒருவராக இருந்த விமானப்படையில் உள்ள எவ்7, கிபிர், மிக் போர் விமானங்களை இயக்கிய அனுபவம் கொண்டவரின் கையில் இருந்து, விமானப்படைத் தளபதி பதவி கைமாறும் கட்டத்தில் தான் இந்த நிலை காணப்படுகிறது.

போர் உச்சநிலையில் இருந்தபோது விமானப்படையிடம் போதிய போர் விமானங்கள் இருந்தன. ஆனால் போதியளவு, அனுபவம் கொண்ட விமானிகள் இருக்கவில்லை.

இதனால் சில கட்டங்களில் ஓய்வின்றி விமானிகள் பணியாற்ற வேண்டிய நிலையும் காணப்பட்டது. இப்போது நிலைமை தலைகீழாக உள்ளது.

போர் விமானங்களை இயக்ககூடிய மிகத் திறமையான விமானிகள் போதுமானளவில் இருக்கின்றார்கள். ஆனால் போதியளவு போர் விமானங்கள் இல்லை என்று புதிய விமானப்படைத் தளபதி எயர் மார்ஷல் சுதர்சன பத்திரன கூறியிருக்கிறார்.

முன்னர், கிபிர், மிக்27, எவ்7 என டசின் கணக்காக போர் விமானங்களைக் கொண்டிருந்த விமானப்படையிடம் இப்போது செயற்பாட்டு நிலையில் இருப்பது, வெறுமனே நான்கு போர் விமானங்கள் தான்.

ஒரு கிபிர் போர் விமானமும், மூன்று எவ்7 போர் விமானங்களும் தான் இப்போது பயன்படுத்தக்கூடிய நிலையில் விமானப்படையிடம் இருக்கின்றன.

இப்போதைய சூழ்நிலையில், புற எதிரிகள் என யாரும் இல்லாத சூழலில் விமானப்படைக்கு போர் விமானங்கள் அவசியமில்லை.

ஆனால் ஒரு நாடு என்று பார்க்கும்போது அதற்கான அடிப்படைத் தேவையான போர் விமானங்களில் வலுவைக் கொண்டிருக்க வேண்டும்.

அவ்வாறான குறைந்தபட்ச பலத்தைக் கூட இலங்கை கொண்டிருக்கவில்லை.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் பல துல்லியமான தாக்குதல்களை நடத்திய திறமையான விமானிகளைக் கொண்டிருந்தபோதும் அவர்களுக்குத் தீனி போடக்கூடிய வகையில் போர் விமானங்கள் இல்லை என்பதே உண்மை.

இந்த நிலைமைக்கு முக்கியமான காரணம், பிராந்திய அதிகாரத்துவ மோதல்கள் தான்.

சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னரே இலங்கை விமானப்படையின் போர் விமான அணியைப் பலப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

அப்போது சீனாவின் தொழில்நுட்பத்தில் பாகிஸ்தான் தயாரிக்கும் JF17 Thunder விமானங்களைக் கொள்வனவு செய்வதற்கு முடிவு செய்யப்பட்டது.

8 தொடக்கம் 12 வரையான இந்த வகை விமானங்களைக் கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவையின் ஒப்புதலும் பெறப்பட்டு இதற்கான உடன்பாட்டில் பாகிஸ்தார் பிரதமர் நவாஸ் ஷெரீப் கொழும்பில் கையெழுத்திடவும் திட்டமிட்டிருந்தார்.

ஆனால் கடைசி நேரத்தில் அந்த உடன்பாடு பாகிஸ்தானிடம் இருந்து கைநழுவிப் போனது. அதற்கு முழுக் காரணம் இந்தியா தான்.

இந்தியா அந்தப் போர் விமான உடன்பாட்டை எதிர்த்தது.

இலங்கை விமானப்படைக்கு பாகிஸ்தானிடம் இருந்து போர் விமானங்கள் கொள்வனவு செய்யப்படுவதை புதுடெல்லி விரும்பவில்லை.

இராஜதந்திர அழுத்தங்களின் மூலம் அந்த உடன்பாடு தடுத்து நிறுத்தப்பட்டது.

அப்போது, இலங்கைக்கு அச்சுறுத்தல் இல்லாதநிலையில், இவ்வாறான போர் விமானங்கள் அவசியமில்லை. தேவைப்படும்போது இந்தியா உதவும் என்றொரு காரணம் புதுடெல்லி தரப்பில் முன்வைக்கப்பட்டது.

அதாவது போர் விமானங்களின் தேவைக்காக அதன் பாதுகாப்புக்காக இந்தியாவை நம்பியிருக்கும் நிலைக்கு இலங்கையை தள்ளுவது புதுடெல்லியின் ஒரு நோக்கமாக தென்பட்டது.

இன்னொன்று JF17 Thunder போர் விமானங்களுக்கு இணையாக இந்தியா தயாரிக்கின்ற தேஜஸ் போர் விமானங்களை இலங்கைக்கு விற்பனை செய்வது, இதற்கான பேச்சுக்கள் நடத்தப்பட்டிருந்தன.

ஆனால் தேஜஸ் போர் விமானங்களின் சில தொழில்நுட்ப முன்னேற்றங்கள் போதுமானளவில் இல்லாததால் அவற்றைக் கொள்வனவு செய்ய இலங்கை விமானப்படை தயங்கியது.

ஆனால் இப்போது தேஜஸ் போர் விமானங்களில் கூடுதல் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன.

இந்த நிலையில் புதிய போர் விமானங்களைக் கொள்வனவு செய்வது விமானப்படைத் தளபதியின் இலக்காக இருந்தாலும் அதனை எவ்வாறு செயற்படுத்துவது என்ற குழப்பம் உள்ளது.

இந்தியாவின் போர் விமானங்களைப் புறக்கணித்து பாகிஸ்தானிடம் அவற்றை வாங்கமுடியாது. அதுபோல சீனாவிடம் சென்றாலும் தற்போதைய நிலையில் முரண்பாடுகள் தீவிரமாகும்.

இவை எல்லாவற்றையும் விட்டுவிட்டு தற்போதைய அரசாங்கத்தின் முக்கிய புள்ளிகளுக்கு நெருக்கமான உக்ரேன், ரஷ்ய நிறுவனங்களின் பக்கமும் திரும்ப முற்படலாம். ஆனால் அதற்குத் தேவையான நிதி இப்போது அரசாங்கத்திடம் இல்லை.

தற்போதுள்ள நெருக்கடியான சூழலில் போர் விமானங்களின் கொள்வனவுக்காக நிதியை பெருமளவில் ஒதுக்க முடியாமல் இருக்கிறது அரசாங்கம்.

அதுபோன்றே, ஆளில்லா விமானங்களின் அணியைப் பலப்படுத்தும் திட்டமும் தற்போதைய விமானப்படைத் தளபதியிடம் உள்ளது. இறுதிக்கட்டப் போரில் போர் விமானங்களின் பங்கை விட ஆளிக்கா விமானங்களின் பங்குதான் முக்கியமானதாக இருந்தது.

அவற்றில் இருந்து கிடைத்துக் கொண்டிருந்த மெய்நிகர் படங்களின் மூலம்தான், இராணுவ அணிகள் நகர்த்தப்பட்டன. ஆட்டிலறிகள், மோட்டார்கள் ஒருங்கிணைக்கப்பட்டன. புலிகளின் வியூகங்கள் உடைக்கப்பட்டன.

தற்போது போர் இல்லாவிட்டாலும், இலங்கைக்கு பெரியதொரு பாதுகாப்புச் சவால் உள்ளது.

இலங்கையின் பரப்பளவை விட 60 மடங்கு பெரிய கடல் எல்லை இலங்கையிடம் உள்ளது. அதனைப் பாதுகாக்க, ஏனைய கண்காணிப்பு விமானங்களை விட, ஆளில்லா விமானங்கள் அதிகம் பயனளிக்கக் கூடியவை. வாங்குவதற்கும் அவற்றை இயக்குவதற்கும் செலவுகள் குறைவு. எனவே ஆளில்லா விமானங்களைக் கொண்டு பாதுகாப்படி உறுதிப்படுத்த விமானப்படைத் தளபதி திட்டமிட்டிருக்கலாம்.

ஆனாலும் இதேநிலை நீடிக்குமானால் இன்னும் சில ஆண்டுகளில் இப்போதுள்ள போர் விமானங்களும் ஓய்வுநிலைக்கு சென்றுவிடும்.

அப்போது போர் விமானங்களின் விமானிகள் வேலையே இல்லாமல் போய்விடும். ஓய்வின்றி மின்னல் வேகத்தில் பறந்தவர்கள், விமானத்தில் படுத்துக் கிடக்கும் நிலை வந்துவிடும்.