மாமனிதர் நடராஜா ரவிராஜிற்கு பின்னான தலைமைத்துவ வெற்றிடம்

Report Print Dias Dias in கட்டுரை

தென்மராட்சி பச்சைப் பசேல் என்ற வயல்களும் தோட்டங்களும், கடல் வளமும் நிறைந்த செழிப்பான ஒரு பிரதேசம். 60 கிராம அலுவலர் பிரிவுகளையும், மூன்று பலநோக்கு கூட்டுறவுச் சங்க தலைமைக் காரியாலயங்களையும் கொண்ட, யாழ்.குடாநாட்டின் நுழைவு வாயில் பிரதேசம் என கட்டுரையாளர் இனியவள் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,

சாவகச்சேரி பிரதேச சபை , சாவகச்சேரி நகரசபை என மக்கள் பிரதிநிதிகளின் ஆளுகைக்கான இரண்டு உள்ளூராட்சி சபைகளைக் கொண்ட பிரதேசம்.

யுத்தகாலப் பகுதியில் விடுதலைப் போருக்கென கொள்கை மறவர்கள் பலரை, ஈழவிடுதலைப் போருக்கு ஈன்ற பிரதேசம். கேடிஸ், கில்மன், குணா, தினேஸ் என்னும் தமிழ்ச்செல்வன், பாப்பா, ஆஞ்சநேயர் என அழைக்கப்படும் இளம்பருதி, வீமன், ஐயா அண்ணன், தீபன், விநாயகம் .... என நீண்ட வீரமறவர்களை தந்த, விடுதலை வீறுகொண்ட சமூகம் வாழ்ந்த பிரதேசம் தென்மராட்சிப் பிரதேசம்.

தென்மராட்சிப் பிரதேசத்தின் நாவற்குழியை சேர்ந்த அருள் எனும் போராளி இந்திய இராணுவத்திற்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார் என இந்திய தூதுவர் டிக்சித் தனது நூலொன்றில் குறிப்பிட்டுள்ளார்.

80-96 காலப்பகுதியிலும் இடப்பெயர்வுகளின் போதும் குடாநாட்டின் ஏனைய பகுதி மக்களை ஆதரித்த ஒரு பிரதேசம். அதை குடா நாட்டில் வாழும் மக்கள் பலர், இன்றும் நன்றியோடு நினைவு கூருகிறார்கள்.

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் அவர்களின் மாணவனான திரு.ம.க.வேற்பிள்ளை போன்ற தமிழ் வளர்த்த பெரியார்கள் வாழ்ந்த பிரதேசம் தென்மராட்சியாகும்.

மட்டுவில் பகுதியில் வாழ்ந்த திரு.ம.க.வேற்பிள்ளையிடம், கருணாநிதி மற்றும் MGR ஆகியோரின் ஆசிரியரான திரு.தண்டபாணி தேசிகர், மட்டுவில்-சரசாலை பகுதிகளில் தங்கியிருந்து தமிழ் கற்றார் என்பது வரலாறு.

தென்மராட்சியில் பல கண்ணகி அம்மன் கோவில்கள் அமைந்துள்ளன. இது தொடர்பாக சுவை நிறைந்த பல கருத்துக்கள் மக்கள் மத்தியில் நிலவுகின்றன. இந்தியா சென்ற மன்னன் கஜபாகு, தனது கணவனுக்காக நீதி கேட்ட பெண், கண்ணகியின் சரித்திரத்தினால் ஈர்க்கப்பட்டு, அவள் சிலம்புகளில் ஒன்றை பெற்றுக் கொண்டு இலங்கை வந்தான் என்றும், அந்தச் சிலம்போடு கஜபாகு மன்னன் பயணித்த இடங்களே இன்று வரணி - சிட்டிவேரம் கண்ணகை அம்மன் ஆலயம், மட்டுவில் பன்றி தலைச்சி கண்ணகி அம்மன் கோயில், வேலம்பிராய் கண்ணகி அம்மன் ஆலயம் என கண்ணகியை கௌரவிக்கும் ஆலயங்களாக விளங்குகின்றன என்றும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றார்கள்.

பெண்களை கௌரவிப்பதிலும் அவர்களுக்கு மரியாதை தருவதிலும் தென்மராட்சி மக்கள் பின்னிற்பதில்லை என்பதற்கு இதையும் ஓர் சான்றாக கொள்ளலாம்.

பலதரப்பட்ட அறிஞர்களாலும் முற்போக்கு சித்தனையாளர்களாலும் வளர்க்கப்பட்டு, யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பின், இன்று அபிவிருத்திப் பாதையில் பயணிக்க வேண்டிய மற்றும் பயணித்துக் கொண்டிருக்கும் எழில் மிகுந்த பல கிராமங்களை தன்னகத்தே கொண்ட ஒரு பிரதேசம் தென்மராட்சி.

ஆனால் இன்று அப்பகுதிகளில் வாழும் இளைஞர் மற்றும் யுவதிகளுக்கு ஒரு சிறந்த அரசியல் தலைமைத்துவம் உள்ளதா? சரியான பாதையில் அவர்கள் வழி நடத்தப்படுகிறார்களா? என்ற கேள்வியை நாம் நிதானமாக ஆற அமர்ந்திருந்து எம்மிடத்தில் நாமே கேட்போமானால், இல்லை என்ற பதிலே எமக்கு கிடைக்கும்.

அர்ப்பணிப்புடன் செயற்படக் கூடிய பலர் தற்போது களத்தில் இல்லை. அவர்கள் தந்திரமாக அல்லது வஞ்சகமாக ஓரம் கட்டப்பட்டுள்ளார்கள்.

அபிவிருத்திக்கான அனுசரணைகள் நாம் விரும்பியோ விரும்பாமலோ இரு பிரதான வழிகளிலேயே எமக்கு கிடைக்கிறது ஒன்று அரசிடமிருந்து கிடைக்கிறது, மற்றையது புலம்பெயர் உறவுகளிடமிருந்து கிடைக்கிறது.

இவற்றில் அரசினூடாக கிடைக்கும் அபிவிருத்தி அனுசரணையானது, குறித்த ஒரு கட்சியினூடாகவோ அல்லது நேரடியாக மத்திய அரசிடமிருந்தோ கிடைக்கிறது. எது எவ்வாறிருப்பினும் அபிவிருத்திப் பணிகளில், கட்சிகள் கணிசமான அளவு செல்வாக்குச் செலுத்துகின்றன.

இவ் அபிவிருத்திப் பணிகளை சரியாக முன்னெடுத்துச் செல்ல நேர்மை மிக்க, மக்களால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு தலைமை அவசியம்.

அந்நாட்களில், மறைந்த கௌரவ.V.N.நவரத்தினம், மறைந்த கௌரவ.குமாரசாமி, மாமனிதர் நடராஜா ரவிராஜ் போன்ற பண்பு மிக்க அரசியல் தலைவர்களால் வழிநடத்தப்பட்ட பிரதேசம், கற்ற அதிபர்கள் ஆசிரியர்கள், கல்வியலாளர்கள் சமூக பிரக்ஞை உள்ள பெரியவர்களால் வழிநடத்தப்பட்ட கட்சி, அன்றைய தமிழரசுக் கட்சியின் இரண்டாம் நிலைத்தலைவர்களில் மிக முக்கியமானவராக கருதப்பட்ட கொடிகாமம் ஐயா அண்ணன் என அழைக்கப்பட்ட, பாரளுமன்ற உறுப்பினர் கௌரவ.நவரத்தினம் அவர்களின் வலது கரமாக இருந்த மறைந்த கௌரவ.வேலு ஐயாக்குட்டி, போன்றோரால் வளப்படுத்தப்பட்ட அரசியல் தலைமைத்துவத்தைக் கொண்ட கட்டமைப்பு, இன்று ஒரு பொறுப்புள்ள தலைமைத்துவம் இன்றி செயற்படுகிறது.

திரு.அருந்தவபாலனிடமிருந்து பதவியை தட்டிப் பறித்தவர் தமிழரசுக் கட்சியின் தென்மராட்சித் தலைமைக்கு பொருத்தமானவரா? பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்களை ஆதரிக்கும் அவரால் ஒரு நல்ல தலைமைத்துவத்தை வழங்க முடியுமா? என்ற கேள்விகள் மக்கள் மத்தியில் நிலவுவது யாவரும் அறிந்ததே.

திரு.அருந்தவபாலன் கட்சியை விட்டு வெளியேறியது ஒரு தவறான முடிவாகும். அந்த முடிவு ஆளுமையற்ற ஒரு தலைமை தென்மராட்சியில் உருவாக காரணமாக அமைந்தது. இன்று எத்தனை பண்புள்ள படித்தவர்கள் குறித்த தலைமையின் தலையீடுகள் காரணமாக மனஉளைச்சலிற்கு ஆளாகி எதுவும் பேசாமல் ஒதுங்கி நிற்கிறார்கள்.

மாமனிதர் நடராஜா ரவிராஜ் அவர்கள் மக்களால் நேசிக்கப்பட்ட நேர்மையுள்ளம் கொண்ட ஒரு அரசியல்வாதியாக தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பிரகாசித்தார். அப்படிப்பட்ட ஒரு தலைமையை நாம் எதிர் பார்ப்போமானால், தமிழரசுக் கட்சியின் தென்மராட்சி தலைமை சீரமைக்கப்பட வேண்டியது அவசியம். அதற்குரிய தார்மீக பொறுப்பும் கடமையும் நம் ஒவ்வொருவருக்கும் உண்டு.

இந்த சீரமைப்பு பணியில் படித்த பண்புள்ளவர்கள் உள்வாங்கப்பட வேண்டும். அதற்கு திருமதி.சசிகலா ரவிராஜ் அவர்கள் பொருத்தமானவர் என்பது மறுக்க முடியாத ஓர் உண்மை.

திருமதி.சசிகலா ரவிராஜ் அவர்கள் ஆரம்ப கல்வியை சாவகச்சேரி டிறிபேர்க் கல்லூரியிலும் உயர் கல்வியை வேம்படி மகளிர் கல்லூரியிலும் பயின்று,யாழ் பல்கலைகழகத்துக்கு தெரிவு செய்யப்பட்டார். அங்கு விஞ்ஞானமாணிப் பட்டத்தை பூர்த்தி செய்த அவர், தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் திரு.ஸ்ரீசற்குணராஜா அவர்களின் மாணவி என்பதும் குறிப்பிடத்தக்கது.

பல்கலைக்கழக நாட்களில் திருமதி.மதிவதனி பிரபாகரன் அவர்களினால் முன்னெடுக்கப்பட்ட உண்ணாவிரதப் போராட்டத்தில் பல்கலைக்கழக மாணவர் குழுவோடு பங்கேற்று தனது ஆதரவை வெளிப்படையாக வழங்கியிருந்தார்.

அமைதியான சுபாவம் கொண்ட அவர், தனது கணவரைப் போலவே, சகலரையும் அரவணைத்து செல்லும் மனப்பாங்கு உடையவர். சிங்கள மொழியை சரளமாக பேசக்கூடியவர். தமிழினத்துக்காக உரிமைக்குரல் கொடுக்கும் யாவரும் ஒரு அணியில் சேர வேண்டும் என்ற வாஞ்சை உடையவர்.

அத்தோடு, வலிந்து காணாமல் ஆக்கப்படோரின் உறவினர் ஒழுங்கு செய்திருந்த பேரணியிலும், தியாக தீபம் திலீபனை நினைவு கூர்ந்து ஒழுங்கு செய்யப்பட்டிருந்த அடையாள உணவு தவிர்ப்பிலும் கலந்து கொண்டு மக்கள் மீது தான் கொண்ட கரிசனையை நிரூபித்திருந்தார்.

தேர்தல் காலங்களில் பலர் அவரை தவறாக வழிநடத்த முயன்ற போதும் கணவரின் பாதையிலேயே செல்வேன் என தெளிவாக கூறியிருந்தார். இதனால் உருவான இடையூறுகளையும் சவால்களையும் ஒரு பெண்ணாக துணிச்சலுடன் எதிர்கொண்டார்.

தேர்தல் முடிவுகளை அதிகாலை வரை தாமதப்படுத்தி தமது Plan B யை அரங்கேற்றியவர்களுக்கு எதிராக வழக்கு தொடரும்படி பலரும் திருமதி.சசிகலா ரவிராஜிடம் வேண்டுகோள் விடுத்திருந்தனர். ஆயினும், இத்தனை ஆண்டுகள் ஆகியும் தனது கணவர் மாமனிதர் ரவிராஜின் படுகொலை தொடர்பான வழக்கிற்கு நீதி கிடைக்கவில்லை இதற்கு மட்டும் நீதி கிடைத்து விடவா போகிறது என்று கூறி, வழக்கு தொடர்வதினால் நீதி கிடைக்கப் போவதில்லை என்ற தனது உறுதியான முடிவை அறிவித்தார், திருமதி.சசிகலா ரவிராஜ்.

மேலும் சுமந்திரன் உட்பட தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டோர் யாவருக்கும், சமூக ஊடகங்கள் வழியாக வாழ்த்துக்களை, பெருந்தன்மையோடு தெரிவித்திருந்தார் மாமனிதரின் மனைவி.

தென்மராட்சியின் தற்போதைய தலைமை தொடர்பாக மக்கள் மத்தியில் கூட நல்லவிதமான அபிப்பிராயங்கள் கிடையாது. உள்ளூராட்சி சபைகளில் உறுப்பினராக உள்ள பலரும் கூட,தமக்கும் தம்மைச் சார்ந்தவர்களுக்கும் பங்கம் ஏற்பட்டுவிடக்கூடாது என கருதுவதால் பேசாமடந்தையர்களாக இருக்கிறார்கள். இந்த விடயத்திற்கு உதாரணமாக சாவகச்சேரி பிரதேச சபை உபதவிசாளர் மயூரன் மீதான வழக்கையும் குறிப்பிடலாம்.

இருந்தும் அண்மையில் சாவகச்சேரி சிவன் கோவில் உண்ணாவிரத நிகழ்வில் பங்கேற்க கூடாது என அழுத்தம் கொடுக்கப்பட்ட போதும், சாவகச்சேரி தவிசாளர் திரு.வாமதேவன் அதனை மறுத்து நிகழ்வில் பங்கேற்றார்.

அரசியல் பொதுவாழ்வில் ஈடுபடுபவர்களுக்கு, அரசியலில் மட்டுமல்ல, சுயவாழ்விலும் சுய ஒழுக்கம் அவசியம். அது தற்போது இல்லை.

இப்படிப்பட்ட ஒரு தலைமையை ஆதரிப்பதன் மூலம் பிரதேச சபையில் போட்டியிடுவதற்கு ஆசனம் கிடைக்கும் என நினைக்கும் இளையவர்கள், அந்த தலைமைத்துவத்தின் கீழ் வெற்றி பெற முடியுமா என்பதோடு மேலும் இரண்டு விடயங்களை புரிந்து கொள்ள வேண்டும். ஒன்று சரியான ஒரு தலைமைத்துவத்தால் தாம் வழிநடத்தப் படுகிறோமோ என்பது, இரண்டாவது அவரது ஆதரவுத்தளமும் மக்கள் மத்தியில் அவருக்குள்ள நலினமான செல்வாக்கும் உங்களை மக்கள் மத்தியில் பிரகாசிக்க செய்யுமா, என்பது.

எமது மக்கள் அபிவிருத்தி எனும் தேவைக்கு அப்பால் நேர்மையும் பண்புமிக்கவர்களையுமே தேடுகிறார்கள், ஆதரிக்கிறார்கள்.

இது தொடர்பாக கட்சி ஒரு முடிவுக்கு வரட்டும் எமக்கென்ன என்று நினைத்து இன்றைய இளம் சந்ததியினர் வாழாவிருந்தால், சில வருடங்களில் ஊழலாலும் முறைகேடுகளாலும் நிறைந்த ஒரு சமூகத்தையும் தலைமைத்துவதையும் எதிர்கொள்ள நேரிடும்.

சிறந்த பண்புகளை உடையவர்களை இன்றைய இளம் சந்ததியினர் தேர்ந்தெடுக்க வேண்டும். அப்பாவிப் பசுக் கூட்டத்தினுள் ஊடுருவும் ஓநாய்கள் போன்று, மக்கள் மத்தியில் ஊடுருவி, தாம் சரியானவர்கள் என நிரூபிக்க முனையும் நபர்களிடமிருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ளவேண்டும்.

அவர்களிடம் மயங்கிப் போகாது விழிப்புடன் இருந்தால் மட்டுமே நேர்மைமிக்க நல்லதொரு தலைமைத்துவத்தை மீண்டும் அதிகாரத்திற்கு கொண்டுவர முடியும்.