நாளை மாணவர்களுக்கு நடக்கவிருக்கும் கொரோனா பரிசோதனை

Report Print Tamilini in கட்டுரை

இலங்கையில் மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர்ந்த அனைத்து பாடசாலைகளும் நேற்றைய தினம் கல்வி நடவடிக்கைக்காக மீண்டும் திறக்கப்பட்டது.

அதிலும், தரம் 6 முதல் தரம் 13 வரையான பாடசாலை வகுப்பு மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்காக நேற்று ஆரம்பிக்கப்பட்டன.

ஆனால் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை கவனத்திற்கொண்ட கல்வி அமைச்சு , தனிமைப்படுத்தப்பட்டோரின் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பக்கூடாது என அறிவுறுத்தவில்லை போலும்.

இருப்பினும் இக் கொரோனா பரவல் காலத்தில் இவ்வாறு அவசரப்பட்டு பாடசாலைகள் ஆரம்பிக்கும் முறைமை சாதகமாக இல்லை என குற்றஞ்சாட்டிய ஆசிரியர் சங்கங்கள் மாணவர்களின் வருகை குறைவாக காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டியது.

ஆனாலும், நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்றைய தினம் பாடசாலைகளுக்கு மாணவர்களின் வருகை சற்று அதிகரித்திருந்ததாக தெரியவந்துள்ளது.

இதேவேளை, சுகாதார நடைமுறைகளுக்கு புறம்பாக பாடசாலை மாணவர்களை ஏற்றி சென்ற பேருந்துகளின் சாரதிகள் காவல்துறையினரால் எச்சரிக்கப்பட்டனர்.

கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காக சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் பாடசாலைக்கு சமூகமளித்துள்ளனர்.

இதனை அறிந்ததும், பாடசாலையில் கல்வி நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மாணவர்களை, கொரோனா அச்சத்தால் அவர்களின் பெற்றோர் இடைநடுவில் வீடுகளுக்கு அழைத்துச்சென்ற சம்பவமும் இன்று தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், யாழ்.அரியாலையில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பத்திலிருந்து மாணவி ஒருவர் பாடசாலைக்கு சென்றுள்ளார்.

குறித்த மாணவியின் தந்தை ஒரு பஸ் சாரதி எனவும், அவருடைய பேருந்தில் பயணம் செய்த ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் பஸ் ஓட்டுனர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இந்நிலையில் அவருடைய மகள் நேற்று பாடசாலைக்கு சென்ற நிலையில், சுகாதார பிரிவினரின் கவனத்திற்கு குறித்த விடயம் கொண்டு செல்லப்பட்டதைத் தொடர்ந்து குறித்த மாணவி வீட்டுக்கு அனுப்பபட்டு வீட்டிலேயே தங்கவைக்கப்பட்டுள்ளார்.

அதேபோன்று, காலி மாவட்டத்திலும் நேற்றைய தினம் பாடசாலைக்கு வந்த ஒரே குடும்பத்ததை சேர்ந்த இரண்டு மாணவர்களின் பெற்றோருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும், அம்பலங்கொட திலகபுர பிரதேசத்தை சேர்ந்த பாதுகாப்பு பிரிவு உறுப்பினர் ஒருவர் வீட்டிற்கு வந்த நிலையில், வீட்டிலேயே சுய தனிமைப்படுத்தப்பட்டதாக அம்பலங்கொட பொது சுகாதார பரிசோதர் தெரிவித்துள்ளார். ஆனாலும், நேற்றைய தினம் பாடசாலைகள் திறக்கப்பட்டமையால் அவரது பிள்ளைகள் பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அம்பலாங்கொடை பகுதியில் உள்ள பிரபல பாடசாலைகள் இரண்டிலுள்ள 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் பெற்றோர்களின் பிள்ளைகள் பாடசாலைக்கு சென்றுள்ளதால், நாளைய தினம் இந்த பிள்ளைகளுக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ள நிலையில் அதன் முடிவுகளுக்கமைய மேலதிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளது என தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

எனவே, ஆடைத் தொழிற்சாலைகள், மீன் சந்தை, சிறைச்சாலைகள், பொலிஸ் பிரிவு என அனைத்தினூடாகவும் பரவிய கொரோனா கொத்தணி, எதிர்வரும் நாட்களில் பாடசாலை மாணவர்களுக்கிடையேயும் உருவாகாது என்பதற்கு என்ன சாத்தியம்.....!