தமிழீழ, உலகப் போர் வரலாறும்.... நினைவேந்தல்களும்....!

Report Print Tamilini in கட்டுரை

தமிழினத்துக்காக நம் மைந்தர்கள் போராடி தியாகிகளாகி, போராட்டமும் மெளனிக்கப்பட்டு 11 வருடங்களை நெருங்கிக்கொண்டிருக்கும் போதும் தமிழர்களுக்கு இன்னமும் விடிவு கிடைக்கவில்லை. இனியும் கிடைக்குமோ என்பது ஐயமே.

இந்நிலையில் நம்மினத்திற்காக தம்முயிர்களை மாய்த்த மறவர்களான மாவீரச் செல்வங்களை நினைவு கூருவதற்கு இலங்கை நாட்டில் எவ்வளவு தடைகள்...

எம்மினத்துக்காக தியாகிகளாக மறைந்தவர்களுக்கான சின்னங்களான துயிலுமில்லங்கள் அடியோடு அழிக்கப்பட்டிருந்தாலும் நினைவுகூருவதையும் எம் மனங்களிலிருந்து அழிக்க பலவழிகளில் பலவருடங்களாக முயற்சித்த இலங்கை அரசு இவ்வருடமும் முனைப்பு எடுத்துள்ளது.

இருப்பினும் கொரோனாவுக்கு பயந்து இம்முறையும் அடக்க நினைத்தாலும் வீரத்தமிழர்கள் நெஞ்சை நிமிர்த்தி நமக்கான உரிமையை விட்டு விலகமாட்டார்கள். நம் மறவர்களை ஒரு அரை மணி நேரமெனினும் நினைவு கூர்ந்திடுவர்.

மாவீரச் செல்வங்களை இழந்த வீரப் பெற்றோர்களும், சகோதரர்களும், மொத்த உறவுகளும் அவர்களை நினைவு கூருவதற்கு என்ன தடை... யாரால் தடை செய்யமுடியும், ஏன் தடை செய்யணும் என்பதுதான் எழுத்தாளனாக எனக்குள் எழும் கேள்வியாக இருக்கின்றது.

உலக வரலாறுகள் என்ன சொல்கின்றது என்ன என்பது கூடவா இலங்கை அரசின் தற்போதைய ஜனாதிபதிக்கு தெரியாமல் இருக்கும்...?

ஆம், 1971ம் ஆண்டுமுதல் 1991ம் ஆண்டுவரை அதாவது 20 வருடங்களாக இராணுவத்தில் பற்பல உயர்பதவிகளை வகித்தவருக்கு தெரியாதா போர் என்றால் என்ன, போரில் இறந்தவர்களை என்ன செய்தல் வேண்டும், எதிரியானாலும் இறந்தவர்களின் உடலை என்ன செய்ய வேண்டும், அவர்களின் சின்னங்களை அழிப்பது சரியா.... இப்படி இன்னும் எத்தனையோ சொல்லிக்கொண்டே போகலாம்.

இருப்பினும், பல தடவைகள் விடுதலைப் புலிகளின் துயிலுமில்லங்களை இலங்கை அரசு அழித்தார்கள், மீண்டும் உருவாக்கிய போதும் மீண்டும் மீண்டும் அழித்தார்கள். அப்படியே ஒருநாள் விடுதலைப் புலிகளையும் அழித்தார்கள். அதன் பின் முற்றாக புலிச் சின்னங்களை நாட்டில் முற்றாக அடையாளமேயின்றி அழித்தார்கள். ஆனாலும் இனத் துவேசம் கொண்டவர்களால் நினைவுகூருவதையும் சகித்துக்கொள்ள முடியாமல் சட்டத்தை கையிலெடுத்து நீதிமன்றத்தினூடாக தடை உத்தரவு பிறப்பித்துள்ளனர். மீறியும் நினைவுகூரும் பட்சத்தில் கைதாவார் என பயமுறுத்தல் வேறு.

இது நிற்க, சங்க காலத்திலேயே களத்தில் வீழ்ந்த வீரருக்கு நடுகல் நாட்டி தெய்வமாக வழிபடும் வழக்கம் தமிழரிடம் இருந்தது. நடுகல்லில் வீரன் பெயரும் வாழ்க்கைக்குறிப்பும் பொறிக்கப்பட்டன. அதற்கு சான்றுகள் கூட உள்ளன.

மேலும், களத்தில் வீழ்ந்த, எதிரி நாட்டுப் படையினருக்குப் பூரண இராணுவ மரியாதை அளிப்பதும், உடலைப் பக்குவமாக அவன் நாட்டிற்கு அனுப்பிவைப்பதும், உலகின் போரியல் மரபு.

அதேபோல் ஒரு நாட்டை ஆக்கிரமிக்கும் இராணுவம் அங்கிருக்கும் இடு நிலங்களையும், போர் வீரர்களின் கல்லறைகளையும் குறைவிடாது பாதுகாக்கவேண்டிய பொறுப்புடையதாகும்.

பெல்ஜியம், பிரான்ஸ் ஆகிய நாடுகளில், முதலாம், இரண்டாம் உலகப் போர்களில் இறந்த ஜேர்மன் படையாட்களின் கல்லறைகள் காணப்படுகின்றன. ஜேர்மன் படைகள் வெளியேற்றப்பட்டாலும் அவர்கள் விட்டுச் சென்ற கல்லறைகள் மிகவும் நேர்த்தியாக இன்றும் இந்த நாடுகளால் பேணப்படுகின்றன.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜப்பான் இதுவரை ஈடுபட்ட இராணுவ நடவடிக்கைகள் அனைத்திலும் இறந்த பல மில்லியன் கணக்கிலான படையினரின் ஆத்ம அஞ்சலிக்காக நிறுவப்பட்ட யசுக்கினி நினைவாலயம் (YASUKUNI SHRINE) இருக்கிறது.

இரண்டாம் உலகப் போரில் போர்க் குற்றவாளிகளாகக் காணப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட 14 ஏ கிளாஸ் (A Class) போர் குற்றவாளிகளின் ஆத்மாக்களுக்கும் இக்கோயிலில் அஞ்சலி செலுத்தப்படுகிறது.

நாசி ஜேர்மனி படுகொலைசெய்த ஆறு மில்லியன் யூதர்களுக்கான உத்தியோகபூர்வ நினைவாலயம் இஸ்ரேல் அரசினால் ஜெருசலேம் நகரில் திறக்கப்பட்டுள்ளது. அதன் பெயர் யாத் வாசெம்.

வியட்நாம் போரில் உயிரிழந்த அமெரிக்கப் படையினருக்குத் தலைநகர் வோஷிங்ரனில் ஒரு பிரத்தியேக நினைவுச் சின்னம் எழுப்பப்பட்டுள்ளது.

1982 நவம்பர் 13ஆம் நாள் அது நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது. தலைநகரின் முக்கிய பூங்கா ஒன்றில் மூன்று ஏக்கர் நிலம் நினைவுச் சின்னம் வைப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழில் ட எழுத்துப்போன்ற வடிவில் இரு கருங்கற் சுவர்கள் நினைவுச் சின்னமாக நிறுத்தப்பட்டுள்ளன.

சுவர்களுக்கான கருங்கற்கள் இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் இருந்து கொண்டுவரப்பட்டு அமெரிக்காவின் வேர்மொன்ற்VERMONT மாநிலத்தில் செப்பனிடப்பட்டுள்ளன.

இவ்வாறு சொல்லிக்கொண்டே போகலாம்...

உலகளவில் போரில் இறந்த எதிரிகளுக்காகவும் நினைவுச் சின்னங்களை நிறுவி பாதுகாத்துவரும் உலக நாடுகள் மத்தியில்,

இலங்கையில், தம் இனத்திற்காக போராடியவர்களின் நினைவுச் சின்னங்களை அழித்தீர்கள்,

சரி... அவர்களுக்காக நினைவில்லங்களை நிறுவவேண்டாம்.... ஆனால் நம் மாவீரச் செல்வங்களை மனதில் நிறுத்தி பூஜித்துக்கொள்வதற்குநம் இன மக்களுக்கு, ஒரு நாளில் ஒரு சில மணித்துளிகளாவது சுதந்திரமாக சுவாசித்து,மாவீரர்களின் ஆத்மா சாந்தியடைய அனுமதியைக் கொடுக்கலாமே..... !

you my like this video