இராணுவத்திடம் கடிவாளம்

Report Print Subathra in கட்டுரை

சுகாதார அமைச்சின் செயலாளராக உள்ள மேஜர் ஜெனரல் சஞ்ஜீவ முனசிங்கவை நீக்கி விட்டு, அனுபவம் வாய்ந்த சுகாதார அதிகாரி ஒருவரை அந்தப் பதவிக்கு நியமிக்க வேண்டும் என்று, முருத்தெட்டுவே ஆனந்த தேரர் அண்மையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அவர் இந்த வேண்டுகோளை விடுத்து ஒரு வாரத்துக்குள், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட ரீதியாக ஒருங்கிணைப்பதற்கு, 25 இராணுவ அதிகாரிகள் இணைப்பதிகாரிகளாக நியமிக்கப்பட்டிருப்பது ஆச்சரியமான விடயம். தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை ஆட்சிக்கு கொண்டு வருவதில் முக்கிய பங்கு வகித்த செயற்பாட்டாளர்களில், முருத்தெட்டுவே ஆனந்த தேரரும் ஒருவர்.

தற்போதைய அரசாங்கத்தை அதிகாரத்துக்கு கொண்டு வருவதற்காக தீவிரமாக செயற்பட்டிருந்த போதும், இப்போது முருத்தெட்டுவே ஆனந்த தேரர் போன்றவர்கள் அரசாங்கத்தின் செயற்பாடுகள் மீது, அதிருப்தியை கொண்டிருக்கிறார்கள். சுகாதார அமைச்சின் செயலாளரான மேஜர் ஜெனரல் சஞ்ஜீவ முனசிங்கவை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று அவர் விடுத்திருந்த கோரிக்கை, அந்த ஏமாற்றத்தின் வெளிப்பாடுகளில் ஒன்று தான்.

கொரோனா தொற்றின் முதல் அலை பரவியபோது, சுகாதார அமைச்சின் செயலாளராக இருந்தவர் அனில் ஜாசிங்க. அவர் முதல் அலையைக் கட்டுப்படுத்துவதில் திறமையாகச் செயற்பட்டிருந்தார் என்ற கருத்து பரவலாக காணப்பட்டது. ஆனால், இடையில் அவரை நீக்கி விட்டு, இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் சஞ்ஜீவ முனசிங்கவை சுகாதார அமைச்சின் செயலாளராக நியமித்திருந்தார் ஜனாதிபதி.

கொரோனா தடுப்பு நடவடிக்கையை இன்னும் கூடுதல் வினைத்திறனுடன் செயற்படுத்தவே, அவரை நியமித்திருப்பதாகவும், அவர் மிகவும் திறமையான அதிகாரி என்றும் அரசாங்கம் நியாயப்படுத்தியிருந்தது. இந்த நியமனம் வழங்கப்பட்ட போது, அரச சிவில் நிர்வாகம் இராணுவ மயப்படுத்தப்படுவதாக கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்தன.

அதனையெல்லாம் அரசாங்கம் பொருட்டாகவே கருதியிருக்கவில்லை. தனது முடிவை எப்போதும் மாற்றிக் கொள்ளாத ஜனாதிபதி இந்த விவகாரத்திலும் அவ்வாறே நடந்து கொண்டார். அப்போது அவரது செயலை போற்றி மகிழ்ந்தவர்கள் தான் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் போன்றவர்கள்.

அவர்களே இப்போது, இராணுவ அதிகாரியை நீக்கி விட்டு அனுபவம் மிக்க சிவில் அதிகாரியை சுகாதார அமைச்சின் செயலாளராக நியமிக்க வேண்டும் என்று கோரத் தொடங்கியிருக்கிறார்கள். இது, சிவில் நிர்வாகத்தை இராணுவ மயப்படுத்தும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்கொண்டுள்ள முதல் சறுக்கல் எனலாம்.

ஜனாதிபதியைப் பொறுத்தவரையில், போரில் வெற்றியைப் பெற்றுக் கொடுத்த இராணுவ அதிகாரிகளால் எந்த துறையிலும் வெற்றியைப் பெற்றுக்கொடுக்க முடியும் என்று நம்புகிறார். அவர்களே அதற்கு தகுதியானவர்கள், நம்பக் கூடியவர்கள், ஊழல் மோசடி இல்லாதவர்கள், திறமையான நிர்வாகிகள் என்று கருதுகிறார்.

அதனால் தான், அவர் தன்னைச் சுற்றி முக்கியமான அரச துறைகளின் பொறுப்புவாய்ந்த பதவிகளில் இராணுவ அதிகாரிகளை நியமித்து வருகிறார்.

வெளிநாட்டுத் தூதுவர்களாக, அமைச்சுக்களின் செயலாளர்களாக, மாகாண ஆளுநர்களாக, நிறுவனங்களின் தலைவர்களாக, அரசதுறை அமைப்புகளின் பணிப்பாளர்களாக, பெரும் எண்ணிக்கையான இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். தன்னைச் சுற்றி முன்னாள், இந்நாள் படை அதிகாரிகளின் கூட்டம் இருக்க வேண்டும். அதுவே தனது ஆட்சிக்கு பாதுகாப்பு என்று ஜனாதிபதி கருதுவதாக தெரிகிறது.

ஆனால், சிவில் அதிகாரிகளை விடவும், படை அதிகாரிகளால் திறமையாகச் செயற்பட முடியும் என்ற தோரணையில், அமைச்சுக்களின் செயலர்களாக, முக்கிய அரச துறைகளின் தலைவர்களாக நியமிக்கப்பட்ட பலர் தற்போது சறுக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

கொரோனா பரவல் தான், சிவில் நிர்வாக பொறுப்புகளுக்கு நியமிக்கப்பட்ட இராணுவ அதிகாரிகள் பலரினதும், பலவீனங்களை வெளிப்படுத்தியது. அவ்வாறு பொறுப்பை நிறைவேற்றத் தவறிய இராணுவ அதிகாரிகளில் ஒருவராகப் பார்க்கப்படுபவர் தான், சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் சஞ்ஜீவ முனசிங்க.

எந்தளவுக்கு நம்பிக்கையுடன் அவர் சுகாதார அமைச்சை பொறுப்பேற்றாரோ அதேயளவுக்கு அவர் இப்போது வினைத்திறனற்றவராக பார்க்கப்படுகிறார். கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தில் நியமிக்கப்பட்ட பெரும்பாலான படை அதிகாரிகளின் நிலை இது தான்.

போர்க்களத்தில் திறமையாகச் செயற்பட்டவர்களையும் விசுவாசமானவர்களையும் கொண்ட குறுகிய வட்டத்துக்குள் நாட்டின் ஒட்டுமொத்த சிவில் நிர்வாகத்தையும் நடத்தி விடலாம் என போடப்பட்ட திட்டம் இப்போது தோல்வியை நோக்கி நகருகிறது.

ஆனாலும், கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம், நாட்டை இராணுவ மயப்படுத்தும், சிவில் நிர்வாகத்தை இராணுவமயப்படுத்தும் முடிவில் இருந்து பின்வாங்கத் தயாராக இல்லை. ஏற்கனவே, பாதுகாப்பு, வெளிவிவகாரம், விவசாயம், சுகாதாரம் ஆகிய அமைச்சுக்களின் செயலாளர்களாக படை அதிகாரிகளை நியமித்திருந்த ஜனாதிபதி, கடைசியாக உருவாக்கப்பட்ட பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக, மேஜர் ஜெனரல் நந்த மல்லவராச்சியை நியமித்திருந்தார்.

இதைவிட, அண்மையில் ச.தொ.ச நிறுவனத்தின் தலைவர் பதவிக்கு முன்னாள் கடற்படை அதிகாரியான ரியர் அட்மிரல் ஆனந்த பீரிஸ், ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டிருக்கிறார். ஏற்கனவே, நுகர்வோர் அதிகாரசபையின் தலைவராக மேஜர் ஜெனரல் சாந்த பண்டார பதவியில் இருந்தாலும், அத்தியாவசிய பொருட்களின் கட்டுப்பாட்டு விலைப் பொறிமுறைகளை அவரால் நடைமுறைப்படுத்த முடியவில்லை.

அரிசி, தேங்காய், ரின் மீன், சீனி, என்று பல அத்தியாவசியப் பொருட்களுக்கு அரசாங்கம் நிர்ணயித்த விலைக்கு பொருட்கள் விற்கப்படுவதை நுகர்வோர் அதிகார சபைத் தலைவரான மேஜர் ஜெனரல் சாந்த பண்டாரவினால் உறுதிப்படுத்த முடியவில்லை. இந்த நிலையில் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் சதொச நிறுவனத்தின் தலைவராக முன்னாள் கடற்படை அதிகாரியை நியமித்திருக்கிறார் ஜனாதிபதி.

அதுபோல, கல் குவாரிகளில், வெடிமருந்துகள் பயன்படுத்தப்படுவதை கண்காணிப்பதற்கு, மூத்த இராணுவ அதிகாரி ஒருவரை பொறுப்பில் நியமிக்க அரசாங்கம் முடிவு செய்திருக்கிறது. அதுபோல, சிறைச்சாலைகளின் பாதுகாப்புக்கு 200 பேர் கொண்ட முன்னாள் படை அதிகாரிகளின் குழுவொன்றை நியமிக்க அமைச்சரவை அனுமதி பெறப்பட்டுள்ளது.

ஏற்கனவே சிறைச்சாலைகளின் பாதுகாப்புக்கு சிறைச்சாலை அதிகாரிகள் இருக்கிறார்கள். பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் உள்ளனர். ஆனாலும், புதிதாக 200 பேர் கொண்ட முன்னாள் படை அதிகாரிகளின் அணியை உருவாக்கத் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதன் மூலமாக, சிறைச்சாலைகள் மறைமுகமான இராணுவ கண்காணிப்புக்குள் கொண்டு வரப்படவுள்ளன.

இந்த நிலையில் புத்தாண்டில் 25 மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு நடவடிக்கையை முகாமைத்துவம் செய்வதற்கான இணைப்பதிகாரிகளாக இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இதன் மூலம், கொரோனா தடுப்பு நடவடிக்கை, தனிமைப்படுத்தல், உலர் உணவு விநியோகம், அத்தியாவசிய தேவைகளை வழங்குதல் போன்ற, பணிகள் சிவில் அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் இருந்து இராணுவ இணைப்பதிகாரிகளிடம் சென்றுள்ளது.

இந்த விவகாரங்களில் இனி இராணுவ அதிகாரிகளுக்கு பதிலளிக்க வேண்டிய நிலைக்கு சிவில் அதிகாரிகள் தள்ளப்பட்டுள்ளார்கள். இராணுவ இணைப்பதிகாரிகளின் அனுமதியுடனேயே இனி செயற்பட வேண்டிய நிலைக்கு அவர்கள் உள்ளாகியிருக்கிறார்கள்.

இதன் மூலம், புதிய ஆண்டு இலங்கையில் படை அதிகாரிகளின் ஆதிக்கம் மிகுந்த ஆண்டாக அடையாளப்படுத்தப்படும் நிலை உருவாகியிருக்கிறது. தற்போதைய அரசாங்கத்தின் இராணுவமயப்படுத்தல் கொள்கை, சர்வதேச அளவில் கடுமையான கண்டனங்களுக்கு உள்ளாகி வருகின்ற நிலையிலும் கூட, அரசாங்கம் தனது இராணுவவாதக் கொள்கையில் இருந்து விலகுவதாகத் தெரியவில்லை.