அறுபது மணி நேரப் பட்டறிவு

Report Print Tamilini in கட்டுரை

"நாரதர் கலகம் நன்மையில் முடியும்' என்பார்கள். அப்படித்தான் முடிந்திருக்கின்றது யாழ் பல்கலைக்கழக நிர்வாகம் அதிரடியாக ஆரம்பித்து வைத்த கலகமும் என்று தோன்றுகின்றது.

உச்சத்தில் இருந்து ஒரே நாளில் வில்லன் ஸ்தானத்துக்கு வீழ்ந்த யாழ் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சிறிசற்குணராசா, மீண்டும் ஒரே இரவில் தன்னை கதாநாயகன் அந்தஸ்துக்கு துணிச்சலுடன் தூக்கி நிறுத்தி, தான் அலங்கரிக்கும் பதவி நிலையின் தனித்துவச் சிறப்பை உலகுக்கு எடுத்தியம்பி நிற்கின்றார்.

எந்தப் பத்தியில் அவரை வைதோமோ அந்தப் பத்தியில் அவரைப் பாராட்டி மெச்சும் கைங்கரியத்தை ஓரிரு தினங்களுக்குள் ஆற்றச் செய்யும் அதிசயத்தை அவர் புரிந்திருக்கின்றார்.

இத்தகைய ஓர் இக்கட்டுச் சூழலிலும் - இவ்வளவு பின்னடைவுக்குப் பின்னரும் - தம்மைச் சுதாகரித்துக் கொண்டு, உடைத்த நினைவுத் தூபியை பல்கலைக்கழக நிர்வாகம் மூலமே - சட்ட ரீதியாகவே - மீள அமைத்துக் கொடுப்பது என்ற தீர்மானத்தை எடுத்து, அதற்கான அனுமதியையும் மேலிடத்தில் போராடிப் பெற்று, விரைந்து அதைச் செயற்படுத்த எடுத்த அவரின் தற்றுணிவு மெச்சத்தக்கது.

இது, விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என சமாளிப்பு அல்ல. வீழ்ந்தாலும் எழுவோம் என்ற பீனிக்ஸ் பறவையின் மீளெழுச்சி. பின்னடைவிலும் நியாயத்தை நிறுத்தும் தைரியம்.

தன்னுடைய தனிப்பட்ட செயற்பாட்டுக்கு, நடவடிக்கைக்குவிடுக்கப்பட்ட சவாலாக இதைக் கருதாமல், சமுதாயத்துக்கு எழுந்துள்ள நெருக்கடியாகக் கருதி, அவர் கையாண்டமையால்தான் இத்தகைய துணிச்சலான முடிவு ஒன்றைத் தீர்மானிக்க அவரால் இயன்றிருக்கின்றது எனக் கருதுகின்றோம்.

பல்கலைக்கழகத்தை ஒட்டி வெடித்த ஒரு போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றி இது என்பதிலும் பார்க்க, யாழ் பல்கலைக்கழக சமூகத்தை பிளவுபட விடாமல் கட்டிக்காப்பதற்கு, துணைவேந்தர் பேராசிரியர் சிறிசற்குணராஜா எடுத்த மீட்பு முயற்சிக்குக் கிடைத்த வெற்றியாகக் கருதுவதுதான் பொருத்தமாக இருக்கும்.

யாழ் பல்கலைக்கழகத்தில் கடந்த அறுபது மணி நேரத்தில் கட்டவிழ்ந்த சம்பவங்களும் அவற்றின் அதிர்வுகளும் பல படிப்பினைகளை, அனுபவங்களை, இவற்றை எல்லாம் கடந்து தமிழ் சமூகத்துக்குப் போதுமான மனத்தெம்பையும் தைரியத்தையும் தந்து நிற்கின்றன என்பது கண்கூடு.

விடுதலைப் போராட்டப் பின்னடைவுகளுக்குப் பின்னரும்- அரசியல் ரீதியான பிளவுபாடுகள், குழு மோதல்களுக்குப் பின்னரும் - போரியல் ரீதியான பாதிப்புகள், இழப்புகளுக்குப் பின்னரும் - நாங்கள் தனித்து இருக்கவில்லை, பிளவுபட்டுச் சிதறுண்டு சின்னாபின்னமாகிவிடவில்லை, எமக்கென்று வலுவான ஆதரவு தமிழர் தாயகத்தில் மட்டுமல்ல, புலம்பெயர் தேசங்களில் மட்டுமல்ல, தாய்த் தமிழகத்திலும், இந்தியாவிலும் அதற்கப்பால் பரந்த உலகெங்கும் உள்ளது என்ற மனத்தெம்பையும் தைரியத்தையும் இந்த அறுபது மணி நேரத்துக்குள் உலகெங்கும் இருந்து பீறிட்ட உணர்வெழுச்சி நமக்குத் தந்து நிற்கின்றது.

போராட்டம் நடத்திய மாணவர்கள் அந்நியர்கள் அல்லர், பல்கலைக்கழக நிர்வாகத்துக்குத் தொல்லை தரும் சக்திகளும் அல்லர், அவர்கள் எனது மாணவர்கள், என் பிளளைகள் என்றுரைத்தமையின் மூலம் - அதையும் கூட இத்துணை எதிர்ப்பு நெருக்கடிகளுக்குப் பின்னரும் துணைவேந்தரே நேரடியாகக் கூறியமையின் மூலம் - யாழ் பல்கலைக்கழகம் பிளவுண்டு நிற்கவில்லை, கருத்து முரண்பாட்டால் பிளவுபட்டும், ஐக்கியப்பட்டே உள்ளது என்ற உண்மை உரத்து உரைக்கப்பட்டிருக்கின்றது.

அது மட்டுமல்ல, நமது உரிமைகளில் ஒன்றான நினைவேந்தல் உரிமையை நிலைநாட்டும் தீவிரத்தில் தமிழர்களுடன் மற்றொரு சிறுபான்மை இனமான முஸ்லிம்களும் ஒன்றித்தே நிற்கின்றார்கள் என்ற உண்மையை - யதார்த்தத்தை - இன்றைய களநிலைமை எமக்கு எடுத்தியம்பி இருக்கின்றது.

கொள்கை, கோட்பாடு ரீதியாகத் தமிழ்த் தேசிய சக்திகளும், கட்சிகளும் பிளவுபட்டு நின்றாலும் உரிமைக் கோரிக்கை என்ற தளத்தில் அவர்கள் ஒன்றிணையக் கூடிய வாய்ப்பான களப்புறச் சூழல் தாராளமாகத் திறந்தே உள்ளது என்ற நிலைமை எமக்கு இந்த அறுபது மணி நேரத்தில் உணர்த்தப்பட்டிருக்கின்றது.

பல்கலைக்கழக சமூகம் - குறிப்பாக மாணவர் சக்தி - காத்திரமான அதிர்வு அலைகளை ஏற்படுத்தக் கூடிய வலிமையில் தான் நம்மிடம் உள்ளது என்ற அகக் கண்ணை தமிழ் அரசியல் சக்திகளுக்கு இந்த நிகழ்வு படம் போட்டுக் காட்டியிருக்கின்றது.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக, உரிமைகள் விடயத்தில் அடிமைப்பட்டுப் போகாதே, எழுச்சியுடன் பீனிக்ஸ் பறவைபோல மீண்டுவா, நாளை நமதே என்ற செய்தியை - மன வலிமையை - ஓர்மத்தை பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் மூலம் நம் தமிழினத்துக்கு உணர்த்த இந்த அறுபது நேர நிகழ்வு வழி செய்திருக்கின்றது.