கிழக்கில் தமிழ்த்தேசியம் சாகடிக்கப்படாது மீண்டும் எழுச்சிகொள்ளும் வெற்றியடையும்!

Report Print Dias Dias in கட்டுரை
234Shares

தமிழ்த்தேசிய அரசியல் என்பது தமிழ் மக்களின் குறிப்பாக வடக்கு, கிழக்கு தமிழ்பேசும் மக்களின் சுயநிர்ணய உரிமையை வென்றெடுப்பதற்கான அரசியல் பாதை, அரசியல் பணி என்பதை முதலில் தெளிவாக அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

தந்தை செல்வாவின் தீர்க தரிசனம் 1948, காலப்பகுதியில் இருந்தமையால் தான் இணைந்த வடக்கு, கிழக்கு தாயகம் தமிழ்மக்களின் பூர்வீக நிலம். அதனைக் கபளீகரம் செய்து துண்டாடக்கூடாது என்பதற்காகவே இலங்கை தமிழரசு கட்சியை 1949 டிசம்பர் 18ம் நாள் ஆரம்பித்து அதன் பிரதான கொள்கையாகச் சமஷ்டி அடிப்படையிலான தீர்வு ஒன்றே வடக்கு, கிழக்கு தமிழ் மக்களுடைய அடிப்படை உரிமையைப் பாதுகாக்கும் என்ற எண்ணக்கருவால் அரசியல் பணிகளை அகிம்சை போராட்ட வடிவமாக மாற்றிப் பயணித்தார்.

அந்த உன்னத கொள்கையை உதாசீனம் செய்த சிங்கள பேரினவாத ஆட்சியாளர்கள் தொடராகச் செயல்பட்டமையால் தான் 1976 மே 14ல் தந்தை செல்வா வட்டுக்கோட்டையில் தமிழீழ தனியரசுக் கொள்கை பிரகடனம் செய்தார், அவரின் மறைவு 1977 ஏப்ரல் 26 இடம்பெற்றது.

அவரால் நிறைவேற்றப்பட்ட வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கான அங்கீகாரம் வடக்கு, கிழக்கு மாகாணத்தில் உள்ள 18 தொகுதி, 1977 யூன் 24ல் இடம்பெற்ற பொதுத்தேர்தலில் தமிழ்பேசும் மக்கள் ஆணையை வழங்கினர், அதில் கல்குடா தொகுதி மக்கள் மட்டும் தோல்வி கண்டிருந்தது.

அந்த ஆணையால்தான் இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில் முதல் தடவையாகத் தமிழன் ஒருவன் எதிர்க்கட்சி தலைவரானார்.

அது அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்துக்குக் கிடைத்தது.

அந்த மக்கள் ஆணையைப் பார்ப்பதற்கு முன்னமே தமிழ்மக்களைக் கடவுள்தான் காப்பாற்றவேண்டும் என்ற வார்த்தையை மட்டும் விட்டு விட்டு தந்தை செல்வா 1977 ஏப்ரல் 26ல் இறையடி எய்தினார்.

அதன் பின்னரான காலப்பகுதி இளைஞர்கள் 36, விடுதலை இயக்கங்களைத் தொடங்கி கரந்தடித்தாக்குதல் மூலம் ஈழ விடுதலை போராட்டத்தை ஆயுதப்போராக மாற்றினர்.

36விடுதலை இயக்கங்கள் கால ஓட்டத்தில் 30ஆக, 20ஆக, 7ஆக விடுதலை இயக்கங்கள் மாற்றமடைந்து இறுதியாக 1987 யூலை 24ம் திகதி இலங்கை அரசு தலைவர் ஜே.ஆர்.ஜெயவர்தன மற்றும் இந்தியப் பிரதமர் ராஜீவ காந்தி இருவரும் கைச்சாத்திட்ட இலங்கை இந்திய ஒப்பந்தத்துடன் ஏழாக இருந்த விடுதலை இயக்கங்கள் தங்கள் செயல்பாடுகளை நிறுத்தி சில இயக்கங்கள் அரசியல் கட்சிகளாக மாறின.

அந்த காலத்தில் விடுதலைப்புலிகளுக்கும் ஏனைய இயக்கங்களுக்கும் இடையிலான மோதல்கள் இடம்பெற்றன, சில இயக்கங்களை விடுதலைப்புலிகள் தடைசெய்தனர்.

1987 யூலை 24 தொடக்கம் 2009 மே 18 வரை ஏறக்குறைய 22வருடங்கள் தமிழீழ விடுதலைப்புலிகள் மட்டுமே இனவிடுதலைப் போராட்டத்தைத் தொடர்ச்சியாக முன்னெடுத்தனர்.

கரந்தடித்தாக்குதல் கறை மட்டும் நடத்திய விடுதலைப்புலிகள் முதன்முதலாக 1987 அக்டோபர் 10ம் திகதி முதலாம் கட்ட ஈழப்போரை இந்திய அமைதிப் படைகளுக்கு எதிராக நடத்தினர்.

இந்த முதலாம் கட்ட போர்க்காலத்தில் தான் 1988 நவம்பர் 19ம் திகதி வடக்கு, கிழக்கு இணைந்த முதலாவது மாகாணசபை தேர்தல் இடம்பெற்றது.

13வது அரசியல் திருத்தத்துடன் இலங்கை இந்திய ஒப்பந்தம் மூலம் மாகாணசபை முறை அறிமுகப்படுத்தப்பட்டு இந்த தேர்தல் இடம்பெற்றது.

இந்த மாகாணசபை சட்ட மூலத்தில் வடக்கு, கிழக்கு மக்களுக்கான பூரண அதிகாரப்பகிர்வு இல்லை என்ற காரணத்தால் அப்போதைய அரசியல் கட்சியாக இருந்த தமிழர் விடுதலை கூட்டணி, தமிழ் மக்கள் விடுதலை இயக்கம், மற்றும் போராட்ட இயக்கமாக இருந்த தமிழீழ விடுதலைப்புலிகள் இந்த மாகாணசபை தேர்தலைப் புறக்கணித்தனர்.

இந்திய அமைதிப்படையின் ஆசீர்வாதம் கண்காணிப்புடன் ஈழமக்கள் புரட்சிகர முன்னணி(ஈபீஆர்எல்எவ்) வரதராஜப்பெருமாள் இணைந்த வடகிழக்கு முதலமைச்சரானார்.

ஆனால் அவரே சரியாக ஒரு வருடம் மூன்று மாதம் ஐந்து நாட்களில் மாகாணசபைக்கு அதிகாரங்கள் இல்லையென அவரின் வாயால் கூறி தமிழீழத்தைப் பிரகடனம் செய்து விட்டு 1990 மார்ச் 24 இந்தியப்படைகளின் கப்பலில் ஏறி இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.

வடக்கு, கிழக்கு மாகாணசபை கலைக்கப்பட்டு நிர்வாகம் ஆளுநர் ஊடாக அரச அதிகாரிகளுக்குச் சென்றது.

1988 தொடக்கம் 2008 வரையும் 20வருடங்கள் வடக்கு, கிழக்கு இணைந்த மாகாணங்களுக்கே அரசால் நிதி ஒதுக்கப்பட்டது.

2004 ஏப்ரல் 8ல் பொதுத்தேர்தலுக்காக வேட்பு மனு 2004 பெப்ரவரி 23ல் தாக்கல் செய்யப்பட்டுத் தேர்தல் பிரசாரங்கள் ஆரம்பமான வேளை சரியாக 11 நாட்களால், 2004 மார்ச் 6ல் விடுதலைப்புலிகளுக்கும் கருணா குழுவுக்கும் பிளவு ஏற்பட்டு விடுதலைப்புலிகளுக்குள் இருந்து கருணா குழு பிரிந்து பிரதேச வாத கருத்துக்களை மட்டக்களப்பு மண்ணில் விதைத்து தமிழ் ஆயுத ஓட்டுக்குழுவாக இராணுவத்துடன் சேர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாளர்களை அச்சுறுத்தியதுடன், யாழ் வர்த்தகர்களை மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து வெளியேறுமாறு துண்டுப்பிரசுரங்களை விநியோகித்து அச்சுறுத்தியது.

அந்த காலம் 2004 தொடக்கம் 2008 வரை பல கொலைகள், கடத்தல்கள், வெள்ளைவேன் அச்சுறுத்தல்கள், கைதுகள்.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான மாமனிதர்களான ஜொசப்பரராசசிங்கம், ரவிராஜ், சிவநேசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு, ஊடகவியலாளர்களான மாமனிதர் சிவராம், நாட்டுப்பற்றாளர் நடேசன், கல்விமான்களான கிழக்கு பல்கலைக்கழக விவசாய பீட பேராசிரியர் ரவிந்திரநாத், விரிவுரையாளர் தம்பையா, தமிழர் புனர்வாழ்வுக்கழக பிறேமினி, வசந்தராஜன், சுஜிந்திரன், ரவீந்திரன், சதீஷ்கரன், லோகிதாஷ்,மற்றும் வங்கி முகாமையாளர்களும் தமிழரசு கட்சி மாவட்ட உறுப்பினருமான திருமலை விக்கினேஷ்வரன் விடுதலைப்புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட அரசியல் பொறுப்பாளர் கௌசல்யன், எருவில் கிராம சேவை உத்தியோகத்தர் திருச்செல்வம், அவரின் தாயார் மற்றும் மகன் என எண்ணற்ற பிரபலமானவர்களும் நூற்றுக்கணக்கான அப்பாவி பொதுமக்களும் சுட்டுக்கொல்லப்பட்டனர், கடத்தி காணாமல் ஆக்கப்பட்டனர்.

அதுமட்டுமன்றி மட்டக்களப்பு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்த பா.அரியநேத்திரன், க.கனகசபை, செல்வி த.தங்கேஷ்வரி. சே.ஹெயானந்தமூர்த்தி ஆகியோரின் சகோதரர்களும், உறவினர்கள் மட்டக்களப்பில் கடத்தப்பட்டனர்.

வடக்கு, கிழக்கிலிருந்து தெரிவான 22 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களும் சொந்த மாவட்டங்களுக்குச் செல்ல முடியாதவாறு அவர்களின் குடும்பங்களும், உறவினர்களும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது.

தமிழ்த்தேசிய ஆதரவாளர்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் அச்சுறுத்தல் கொடுத்து பீதியில் கிழக்கு மாகாணத்தை வைக்க வேண்டிய தேவை ஆட்சியாளருக்கு இருந்தது.

அது ஏனெனில் 2008, கிழக்கு மாகாணசபை தேர்தலில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வேட்புமனு தாக்கல் செய்யக்கூடாது, அப்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிட்டால் தாம் எதிர்பார்த்த தமக்குத் தலையாட்டுபவர்களைக் கிழக்கு மாகாணசபையில் ஆட்சியமைக்க முடியாது என்பதற்காகவே திட்டமிட்டு கிழக்கில் அச்ச சூழல் நிலவியது.

அதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தலில் போட்டியிடாமல் பின்வாங்கும் நிலை உருவானது.

இதனைச் சாதகமாகப் பயன்படுத்தி விடுதலைப்புலிகளிலிருந்து பிரபல்லியமான பிள்ளையான் என்று அழைக்கப்படும் சந்திரகாந்தன் என்பவரை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி வெற்றிலை சின்னத்தில் தேர்தலில் நிறுத்தி முதலமைச்சராக ஆக்கப்பட்டார் இதுதான் வரலாறு.

அப்போது கிழக்கு மாகாணசபைக்கு இந்தியா மட்டுமன்றி பல சர்வதேச நாடுகளும் தொண்டு அமைப்புகளும் கிழக்கு மாகாண அபிவிருத்திக்குப் பல மில்லியன் நிதிகளை வழங்கியனர், அதனூடாக சில அபிவிருத்திகள் இடம்பெற்றன.

அந்த காலத்தில் யார் முதலமைச்சராக இருந்தாலும் இது நடந்திருக்கும். அதன் பின்னரான காலத்தில் பிரதேச வாத அரசியலை முன்னிறுத்தி வடக்கான், கிழக்கான் என்ற பிற்போக்கு பிரதேச வாத அரசியலைச் செய்வதற்காகச் சிலர் பயன்படுத்தப்பட்டனர்.

தமிழ்த்தேசிய அரசியலை மழுங்கடித்து தமிழ்மக்களுக்கான உரிமைகளை இல்லாமல் செய்வதற்கான ஒரு தலைமையைக் கிழக்கில் வளர்க்க வேண்டிய தேவை ஆட்சியாளர்களிடம் இருந்தது.

அதன் வெளிப்பாடுதான் விடுதலைப்புலிகளிலிருந்து பிரிந்த கருணா, பிள்ளையான் போன்றவர்களை வைத்து 2007ல் தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் என்ற பெயரில் அரசியல் கட்சியை உருவாக்கிய பின்பு அதேகட்சியில் முன்பு தலைவராக இருந்த கருணாவை அக்கட்சியில் இல்லாமல் ஒதுக்கி முதலமைச்சராக இருந்த சந்திரகாந்தன் தலைவராக அக்கட்சிக்கு நியமிக்கப்பட்டு தற்போதும் அக்கட்சி இயங்கி வருகிறது.

கடந்த பொதுத்தேர்தலில் 2020 அந்த கட்சித் தலைவர் சந்திரகாந்தன் சிறையிலிருந்து கூடுதலான வாக்குகளைப் பெற்றார்.

அதற்கான காரணங்களில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மீது கடந்த நல்லாட்சி அரசில் பலவிடயங்களைச் செய்யவில்லை என்ற காரணமும் ஒன்றாக இருந்தது, அது உண்மைதான் .

அப்போது பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க பல விடயத்தைச் செய்யக்கூடிய அதிகாரத்திலிருந்த போதும் வேண்டுமென்று தட்டிக் கழித்து காலத்தைக் கடத்தியது என்பதில் மாற்றுக் கருத்துக்கள் இல்லை.

ஆனால் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை தமிழ்மக்கள் எப்போதுமே தமிழ்த்தேசிய கொள்கையிலிருந்து விலகிச்செல்பவர்கள் இல்லை.

தேர்தலில் சில சலுகைகள் அபிவிருத்திகள் பதவி ஆசைகளைக் கருத்தில் கொண்டு வாக்களிக்கும் சந்தர்ப்பங்களும் உண்டு.

தமிழ்த்தேசிய இன விடுதலையை மையப்படுத்தி கொள்கை அரசியலுக்காக வாக்களிக்கும் மக்களும் உண்டு.

அந்த வகையில் தான் கடந்த தேர்தலிலும் மாற்றங்கள் வடக்கு, கிழக்கு முழுவதும் ஏற்பட்டது, அந்த மாற்றம் என்பது நிரந்தமானது அல்ல, ஒரு தற்காலிக பின்னடைவுதான்.

கடந்த 2018 உள்ளூராட்சி சபைதேர்தலில் செங்கலடி பிரதேச சபையில் 31 உறுப்பினர்களில் 7 உறுப்பினர் மட்டுமே இந்த கலப்பு தேர்தல் வட்டார தேர்தலில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைப் பற்றி இருந்தது.

ஏனைய உறுப்பினர்களாக ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி 8 உறுப்பினர்களும், தமிழ்மக்கள் விடுதலைப் புலிகள் 8 உறுப்பினர்களும், ஐக்கிய தேசியக் கட்சி 4 உறுப்பினர்களும், தமிழர் விடுதலை கூட்டணி 2 உறுப்பினர்களும், சுயேச்சை குழு 2 உறுப்பினர்களும் அடங்குவர்.

இதனால் 2018ல் தவிசாளர் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியைச் சேர்ந்தவரும், பிரதி தவுசாளர் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு உறுப்பினரும் தெரிவு செய்யப்பட்டனர்.

இறுதியாகக் கடந்த 2020, வரவுசெலவு திட்டம் இரண்டுதடவை தோல்வி கண்டதால் கடந்த 18/01/2021, மீண்டும் புதிய தவிசாளர் தெரிவு இடம்பெற்ற போது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிலிருந்து சர்வானந்தனும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியிலிருந்து திருநாவுக்கரசு என்பவரும் போட்டியிட்டனர்.

இதில் ஏழு பேரை மட்டும் கொண்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியைச் சேர்ந்த ஆறு உறுப்பினர்களும், ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த மூன்று உறுப்பினர்களும், தமிழர் விடுதலை கூட்டணி ஒரு உறுப்பினரும் ஆதரவு வழங்கியுள்ளனர்.

இந்த வெற்றி எதைக் கோடிட்டுக்காட்டுகிறது என்றால் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புதான் சரியாகவும், நேர்மையாகவும் நிர்வாகம் செய்யக்கூடியவர்கள் என்பதையும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்கு எதிராக தவிசாளரை முன்மொழிந்த தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியைத் தாம் ஏற்கவில்லை என்ற செய்தியைவெளிக்காட்டியுள்ளது.

சிறையிலிருந்து பெரும் வெற்றியீட்டி நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகி மாவட்ட அபிவிருத்தி தலைவராகச் செயல்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் நேரடியாக செங்கலடி பிரதேச சபை தவிசாளர் தெரிவில் சமூகம் கொடுத்திருக்கும் போதே இந்த தெரிவு இடம்பெற்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு 17 உறுப்பினர்களும், தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சிக்கு 11 உறுப்பினர்களும் ஆதரவு வழங்கி இருந்தனர்.

இது ஒரு பிரதேச சபை தவிசாளர் தெரிவு மட்டுமே எனக் கூறினாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஒரு எழுச்சியையும் உத்வேகத்தையும் கொடுத்துள்ளது என்பதற்கு மாற்றுக்கருத்துகள் இல்லை.

கிழக்கு மாகாணத்தில் தமிழ்த்தேசியம் சாகடிக்கப்படாது இது பரந்து எழுச்சி பெறும் வெற்றியடையும். அதற்குத் தமிழ்மக்கள் அனைவரும் எமது நிலம், எமது மொழி, எமது கலாசாரம், எமது உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டுமானால் இளைஞர்கள் உட்பட அனைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குப்பின்னால் அணி திரள வேண்டும்.