இலங்கைத்தீவில் நாதியற்ற தமிழினம்

Report Print Tamilini in கட்டுரை
189Shares

இந்த இலங்கைத் தீவில் தமிழர்களின் தனித்துவ இருப்பை அழித்து, இல்லாதொழிப்பதன் மூலம், தீவில் தமது உரிமையை ஏகபோகமாக நிலைநாட்ட விளையும் பெளத்த, சிங்களப் பேரினவாதம் அதற்காகக் காலத்துக்குக் காலம் புதுப்புது வழிவகைகளை தந்திரோபாயமாக - நுட்பமாக - கையாண்டு வருகின்றது.

ஆரம்பத்தில் - ஆங்கிலேயரிடம் இருந்து இலங்கை சுதந்திரம் பெற்றதாகக் கூறப்படும் 1948இற்குப் பிற்பட்ட காலத்தில் - அரசினால் தமிழர் தாயகப் பகுதியில் திட்டமிடப்பட்ட சிங்களக் குடியேற்றங்கள் முன்னெடுக்கப்பட்டன. பெருத்த எடுப்பில் - பாரிய நிதிச் செலவில் - அவை மேற்கொள்ளப்பட்டன.

அவை இரண்டு கட்டங்களாக முதலில் கட்டவிழ்ந்தன. தமிழர்களின் தாயகப் பூமியான - பாரம்பரிய வரலாற்றுப் பிரதேசமான - வடக்கையும், கிழக்கையும் பிரித்து, ஊடறுத்துத் துண்டாக்கும் நடவடிக்கை முதலாவது.

வெலி ஓயா, கந்தளாய், கல்லோயா குடியேற்றத் திட்டங்கள் இந்த வகைக்குள் அடங்குவன. கிழக்குத் தாயகப் பிரதேசங்களை - அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களை - பெருத்த எடுப்பில் சூறையாடி, ஜனத்தொகை விகிதாசாரத்தை மாற்றி அமைத்துத் தமிழர்களை அங்கு சிறுபான்மையினராக்குவது அடுத்தது.

திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களுக்குப் பாதுகாப்பு என்ற பெயரில் அந்தந்தப் பிரதேசங்களில் பெளத்த, சிங்கள இராணுவத்தையும் ஏனைய படைகளையும் கட்டமைப்பு ரீதியாக நிறுவி ஆக்கிரமிப்பது அடுத்த கட்டம்.

அதிலும் கூட இரண்டாவது நிலை இருந்தது. முதலில் சிங்கள இராணுவம், தான் நிலைகொண்ட பிரதேசங்களில் இருந்து பூர்வீகத் தமிழரை வேரோடும் வேரடி மண்ணோடும் தூக்கிக் கடாசியது. பின்னர் தான் நிலைகொண்டிருந்த தளங்களில் இருந்து படை நடவடிக்கைகளை முன்னெடுத்து தமிழர்களின் பூர்வீகக் கிராமங்களை ஊடுருவி சின்னாபின்னமாக்கித் துடைத்தழித்தது.

அது இப்போதும் அடுத்த கட்டமாக - தொடர் கதையாக - தொடர்கின்றது.

அதனையே - "முள்ளிவாய்க்காலில் விடுதலைப் புலிகளைத் தோற்கடித்தமையோடு யுத்தம் நின்றுவிடவில்லை. அரசாங்கம் தமிழர் தேசத்தை ஆக்கிரமிக்கும் யுத்தத்தை இன்னுமொரு வடிவத்தில் தொடர்ந்து கொண்டிருக்கின்றது'' - என்று வெளிப்படையாகச் சுட்டிக்காட்டி எமக்கு எச்சரிக்கை மணி எழுப்புகின்றார் தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன்.

அவர் கூறுகின்றமை போல யுத்த காலம் வரை வெளிப்படையாகத் தமிழர் தேசத்தை - தாயகத்தை - ஆக்கிரமித்துக் கபளீகரம் பண்ணிய சிங்கள் இராணுவம் இப்போது மதிநுட்பத்துடன் - நுணுக்கமான நகர்வுகள் மூலம் - சத்தம் சந்தடியின்றி - அந்தக் காரியத்தைக் கனகச்சிதமாக முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றது.

"யுத்தத்தின் பின்னர் வடக்கில் வனவளத் திணைக்களத்தின் ஊடாகவும், வன ஜீவராசிகள் திணைக்களத்தின் ஊடாகவும் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களில் பல லட்சம் ஏக்கர்களை சிங்கள் அரசு கையகப்படுத்தியுள்ளது. பச்சை முகமூடி அணிந்து கொண்டு அரசாங்கம் தொடுத்திருக்கும் இந்த யுத்தம் தொடர்பாக நாம் விழித்துக் கொள்ளாவிடில் கடைசியில் அமெரிக்காவின் பூர்வீகக்குடிகளான செவ்விந்தியர்களின் கதியே எமக்கு ஏற்படலாம்'' - என்று ஐங்கரநேசன் எச்சரித்திருக்கின்ற விடயம் உண்மையில் தமிழினத்துக்கு ஏற்பட்டுள்ள பேராபத்துப் பற்றிய "அலாரம்'தான்.

ஏற்கனவே போரழிவுகளினால் நலிவுற்றிருக்கும் தமிழினம் சத்தம் சந்தடியின்றி அரங்கேறும் இந்தப் பெரும் ஆக்கிரமிப்புக்கு முகம் கொடுக்க முடியாமல் துவண்டு போய் நிற்கின்றது என்பதும் முழு உண்மை. வெறும் அகிம்சைப் போர் அரசியல் நடத்தும் நமது தலைவர்கள் இந்த ஆக்கிரமிப்பை எதிர்கொண்டு நிமிர்வதற்கான யோசனைகளோ, திட்டங்களோ, உத்திகளோ, இவை அனைத்தையும் தாண்டி அவற்றை எதிர்கொண்டு நிமிர்வதற்கான திடசங்கற்பம், பற்றுறுதி, துணிச்சலோ அற்றவர்களாக இருக்கின்றமையால்,இந்த ஆக்கிரமிப்பு தங்குதடையின்றி - கேட்பார் மறிப்பாரின்றி - தமிழர் தேசத்துக்குள் புற்று நோயாகப் பரவி ஆழ ஊடுருவி, நிலைகொண்டு தமிழின இருப்பை அழித்து வருகின்றது.

யுத்தம் முடிவடைந்த பின்னர் வனவளத் திணைக்களம் வடக்கில் ஐந்து லட்சம் ஏக்கர் காடுகளைப் புதிய ஒதுக்குக் காடுகளாகப் பிரகடனப்படுத்தியுள்ளது. ஒரு லட்சம் ஏக்கர்கள் காடுகளைப் பேணல் காடுகளாகப் பிரகடனப்படுத்தியுள்ளது.

யுத்தத்தினால் தமிழர்கள் கைவிட்டு, பாதுகாப்புக் கருதி வெளியேறிய இடங்கள் எல்லாம் இப்போது காடுகளின் பெயரால் தமிழர் துரத்தப்படும் இடங்களாகி விட்டன.

ஒருபுறம் பெளத்த, புராதன இடங்கள் என்ற பெயரில் ஆக்கிரமிப்பு. மறுபுறம் வனங்கள், வன ஜீவராசிகளின் பெயரால் காணிச் சூறையாடல்.

தமிழினத்துக்கு இந்த இலங்கைத் தீவில் நாதியில்லை என்பதுதான் நிலைமை.