நாட்டியக்கலையை கற்றுக் கொள்ள வேண்டியது மாணவர்களின் கட்டாயம்

Report Print Nesan Nesan in கலை

நாட்டியக்கலையினை மிகவும் சிறந்த முறையில் கற்று கொள்ள வேண்டியது ஒவ்வொரு மாணவர்களினதும் கட்டாயமாகும் என சுவாமி விபுலானந்தா இசை நடனக்கல்லூரியின் முன்னாள் அதிபர் ஸ்ரீமதி கமலாதேவி ஞானதாஸ் தெரிவித்துள்ளார்.

நிருத்திய ஷேத்திரா நாட்டியப்பள்ளி மாணவர்களின் நாட்டிய யாகம் நிகழ்வானது நேற்று மாலை கல்முனை மரியா தெரேசா கல்லூரி மண்டபத்தில் கலாவித்தகர் ஸ்ரீமதி மாதுமையாள் வரதராஜன் தலைமையில் நடைபெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கூறுகையில்,

நாட்டியக்கலை என்பது அனைவராலும் விரும்பக்கூடியதொன்றாகும். தன்னை மறந்த நிலையில் இரசிக்கும் ஒரு கைங்கரியத்தை கொண்டமைந்த கலையாகும்.

அதனை ஒவ்வொரு மாணவர்களும் சரியான நுட்பமான முறையில் கற்றுத்தேறுதல் வேண்டும். குறிப்பாக என்னிடம் கற்ற மாணவர்கள் இன்று மிக உயர்ந்த இடத்தில் இருக்கின்றார்கள். அதனை காணும்போது நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன்.

நாட்டியக்கலையினை பொறுத்தவரையில் பெற்றோர்களுக்கு ஒன்றைக்கூற வேண்டும். தங்களது குழந்தைகளை ஒழுங்கான முறையில் சரியான நேரத்தில் நாட்டிய ஆசிரியரிடம் கொடுத்து நாட்டியக்கலையை கற்பதற்கு வழிவகைகளை செய்து கொடுக்க வேண்டும்.

அவ்வாறு செய்யும் பொழுது அந்த குழந்தை நாட்டியக்கலையில் சிறந்த ஒரு இடத்தினை பெற்றுக்கொள்வார் என்பது உண்மை.

இன்று இந்த இடத்திலே அதிகளவான மாணவர்களுக்கு கல்வி போதித்து நிகழ்வுகளை மிகச்சிறப்பாக நடத்திக்காட்டிய ஸ்ரீமதி மாதுமையாள் வரதராஜன் மிகவும் துடிப்புள்ள ஒரு நாட்டிய மாணவி.

தான் கல்வி கற்ற காலந்தொடக்கம் இன்று வரைக்கும் மிகவும் உயிர்த்துடிப்புள்ள ஒரு மாணவியாகவே செயற்பட்டு இக்கலையை பயின்றார்.

தான் ஏதாவது நிகழ்ச்சிகளை பொறுப்பெடுத்து விட்டார் என்றால் அதில் வெற்றி காணும் வரை ஓயாமல் தொடர்ந்தேட்சியாக பயிற்சிகளில் ஈடுபட்டு அதில் வெற்றியும் பெறுவர்.

அப்போது அவர் எவ்வாறு சுறுசுறுப்பாக செயற்பட்டாதோ அதே போன்றுதான் இப்போதும் செயற்படுகின்றார் என்பதனை காணும்போது மிகவும் சந்தோசமாக இருக்கின்றது என குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிகழ்வில் ஸ்ரீமதி மாதுமையாள் வரதராஜனின் கலைத்துறையை பாராட்டி, பரதசூடாமணி சுபித்ரா கிருபாகரன் பரத கலாலய மாணவர்களினால் நர்த்தன வித்தகி எனும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.