சட்டவிரோத படகுப்பயணத்திற்கு தடை! அவுஸ்திரேலியா கடும் எச்சரிக்கை

Report Print Murali Murali in அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக படகு வழியாக செல்ல முயல்பவர்களை கடுமையாக எச்சரிக்கும் விதமாக சட்டவிரோத படகுப்பயணத்தை ஒருபோதும் சகித்துக்கொள்ளாது என்ற எச்சரிக்கை காணொளியை வெளியிட்டிருக்கிறார் அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மாரிசன்.

அதில், “சட்டவிரோத படகுப்பயணம் மூலம் அவுஸ்திரேலியா வர முயற்சிக்கும் எவரும் ஒருபோதும் இங்கே வாழ அனுமதிக்கப்படமாட்டார்கள்.

அவுஸ்திரேலியா நோக்கிய கடைசி வெற்றிகரமான கடல்வழி ஆட்கடத்தல் நடவடிக்கை இடம்பெற்று தற்போது நான்கரை ஆண்டுகளுக்கும் மேலாகின்றது.

இந்த காலப்பகுதியில், 34 ஆட்கடத்தல் படகுகளில் 800க்கும் மேற்பட்டவர்களை, ‘ஆட்கடத்தல் படகுகளைத் திருப்பி அனுப்புவது என்ற எமது அரசாங்கத்தின் கொள்கை’யின் அடிப்படையில் அவர்களது புறப்பட்ட நாட்டிற்கோ அல்லது அவர்களின் தாய்நாட்டிற்கோ எமது அரசாங்கம் திருப்பி அனுப்பியது.”

முன்னதாக, 2013 ஆம் ஆண்டு முதல் கடுமையான எல்லைப் பாதுகாப்புக் கொள்கைகளை நடைமுறைப்படுத்திவரும் ஆஸ்திரேலிய அரசு, படகு வழியே அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைய முயற்சிப்பவர்களை முழுமையாக நிராகரித்து வருகின்றது.

மேலும் அந்த எச்சரிக்கையில், “அவுஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகள் அவுஸ்திரேலியாவை நோக்கிவரும் ஆட்கடத்தல் படகுகளை இடைமறித்து, அதிலுள்ளவர்களை அவர்கள் புறப்பட்டுவந்த நாட்டிற்கோ, அல்லது அவர்களின் தாய்நாட்டிற்கோ திருப்பியனுப்பி வைப்பார்கள்.

கடந்த காலங்களில் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு ஆயிரக்கணக்கானோர் பயணப்பட்டிருக்கிறார்கள். அத்துடன், சட்டவிரோத படகுப்பயணம் மூலம் எமது நாட்டுக்கு வர முற்பட்ட 1200 பேருக்கும் மேற்பட்டோர் மரணமடைந்திருக்கிறார்கள்.

இது மறுபடியும் இடம்பெற ஒருபோதும் நாம் அனுமதிக்க மாட்டோம். நானும் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன். இந்தக் காரணத்திற்காக, அவுஸ்திரேலியாவின் கடல் எல்லைப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேலதிகமாக பலப்படுத்துவதை நான் அங்கீகரித்துள்ளேன்.

எனது எண்ணங்களையும், அறிவுறுத்தல்களையும் மீள வலியுறுத்துவதற்காக Operation Soveregin Borders நடவடிக்கைகளுக்கான கட்டளை அதிகாரியைத் தனியாகச் சந்தித்துமிருக்கிறேன்.

தவறிழைக்க வேண்டாம், சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்திரேலியா வர முயன்றால் நீங்கள் வெற்றியடைய மாட்டீர்கள்.

அதனால் உங்களது பணத்தை விரயமாக்கவோ அல்லது உங்கள் உயிரையோ அல்லது வேறு யாருடைய உயிரையோ அநாவசியமாக பணயம் வைக்க வேண்டாம்,” என அவர் மேலும் கூறியுள்ளார்.