மே18ல் அவுஸ்திரேலிய நாடாளுமன்ற தேர்தல்! அகதிகள் முதல் காலநிலை மாற்றம் வரை

Report Print Murali Murali in அவுஸ்திரேலியா

அடுத்த அவுஸ்திரேலிய பிரதமரை தீர்மானிக்கக்கூடிய அந்நாட்டு நாடாளுமன்ற தேர்தல் எதிர்வரும் மே 18ம் திகதி நடைபெற இருப்பதாக அவுஸ்திரேலியாவின் தற்போதைய பிரதமர் ஸ்காட் மாரிசன் அறிவித்திருக்கிறார்.

இத்தேர்தலில் காலநிலை மாற்றம், அகதிகள் விவகாரம், பொருளாதார மேலாண்மை, தலைமைத்துவம் உள்ளிட்டவை ஆதிக்கம் செலுத்தக்கூடிய பிரச்னைகளாக இருக்கும் என அறியப்படுகின்றது.

“உலகிலேயே சிறந்த ஒரு நாட்டில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால் நமது எதிர்காலத்தை பாதுகாத்து கொள்வதற்கான வழியை வலிமையான பொருளாதாரமே அமைத்து கொடுக்கும்,” என பத்திரிகையாளர்களிடையே பேசியிருக்கிறார் பிரதமர் ஸ்காட் மாரிசன்.

தற்போதைய நிலையில், ஸ்காட் மாரிசன் தலைமையிலான லிபரல் ஆட்சி மைனாரிட்டி ஆட்சியாகவே இருந்து வருகின்றது.

அந்த வகையில், இத்தேர்தலை அவுஸ்திரேலியாவின் எதிர்காலத்தை தீர்மானிக்கப்போகும் தேர்தலாக குறிப்பிட்டுள்ள அவர் பெரும்பான்மை பலமுடைய ஓர் ஆட்சியினை அமைக்க திட்டமிட்டிருக்கிறார்.

அதே சமயம், எதிர்க்கட்சியான லேபர் கட்சியும் இத்தேர்தல் வெற்றியினை பெரிதும் எதிர்ப்பார்த்திருக்கின்றது. அங்கு வெளியாகியுள்ள கருத்துக் கணிப்புகளின் படி, இரு கட்சிகளிடையே கடுமையான போட்டி நிலவும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

ஆனால், லேபர் கட்சியின் தலைவர் பில் ஷார்ட்னை காட்டிலும் அவுஸ்திரேலிய மக்களிடையே பரிட்சயமானவராக ஸ்காட் மாரிசனே அறியப்படுகிறார்.

அகதிகள் விவகாரத்தில் கடும் கொள்கை கொண்டுள்ள ஸ்காட் மாரிசன் தென்கிழக்காசிய நாடுகளிலிருந்து வந்த ஆட்கடத்தல் படகுகளை தடுத்ததில் முக்கிய பங்கினைக் கொண்டிருக்கிறார்.

அப்படியான படகுகளில் வந்த அகதிகள்/ தஞ்சக்கோரிக்கையாளர்களை கையாண்ட விதம், படகுகளை திருப்பி அனுப்பும் முறையின் மீது மனித உரிமை அமைப்புகள் தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.

2013ல் லிபரல் தலைமையிலான கூட்டணி அரசு அமைந்த போது, ஸ்காட் மாரிசன் அதில் குடிவரவு மற்றும் எல்லைப்பாதுகாப்பு அமைச்சராக பொறுப்பேற்றார்.

அப்போது ஆஸ்திரேலியாவை நெருங்கிய படகுகளை உயிர் காக்கும் படகுகளில் எரிபொருளை நிரப்பி, இந்தோனேசியா வரை செல்வதற்கு ஏற்ப படகுகள் திருப்பி அனுப்பப்பட்டதாக கூறப்பட்டது.

அப்படி திருப்பி அனுப்பப்பட்ட ஆயிரக்கணக்கான அகதிகள்/ தஞ்சக்கோரிக்கையாளர்கள் இந்தோனேசிய முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர்.

அவுஸ்திரேலியாவின் கொள்கை இந்தோனேசிய இறையாண்மை அவமதிப்பதாக இந்தோனேசிய அரசாங்கம் குற்றம் சாட்டியிருந்தது.

இப்படி படகுகளை தடுக்கக்கூடிய ரகசிய இராணுவ நடவடிக்கையினை மேற்பார்வையிடுபவராக ஸ்காட் மாரிசன் இருந்தார். லேபர் ஆட்சி திரும்பி வந்தால் அது படகுகள் வருகையை ஊக்குவிக்கும் என லிபரல் கட்சி தொடர்ந்து தெரிவித்து வருகின்றது.

அதே போல், காலநிலை மாற்றம் குறித்த கொள்கையும் அவுஸ்திரேலிய தேர்தலின் முக்கிய சிக்கலாக உருவெடுத்துள்ளது.