ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் அகதிகள் படகு மீண்டும் அவுஸ்திரேலியாவுக்குள் வருவது உறுதி!

Report Print Murali Murali in அவுஸ்திரேலியா

லேபர் கட்சி ஆட்சிக்கு வந்தால் அகதிகள் படகு அவுஸ்திரேலியாவுக்குள் மீண்டும் வரத்தொடங்கும் என எச்சரித்திருக்கிறார் அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன்.

அத்துடன், “அவர்கள் ஆட்சியில் மனுஸ் மற்றும் நவுரு தீவுகளில் உள்ள அகதிகளையும் அவுஸ்திரேலியாவுக்கு கொண்டுவந்துவிடுவார்கள்” என லேபர் கட்சியை விமர்சித்திருக்கிறார்.

அதே சமயம், லிபரல் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் எல்லைப்பாதுகாப்பு கொள்கைகளில் எந்த மாற்றமும் இருக்காது, அந்த பாதுகாப்பு கொள்கைகள் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என பீட்டர் டட்டன் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

மனுஸ் மற்றும் நவுருத்தீவில் உள்ள புகலிட கோரிக்கையாளர்களின் முகாம்கள் அவுஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்களாக செயல்பட்டு வருகின்றது.

அவுஸ்திரேலியாவுக்கு படகு வழியாக வர முயன்ற அகதிகளை சுமார் 5 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவைத்துள்ள அவுஸ்திரேலியாவை ஆளும் லிபரல் அரசாங்கம், அந்த அகதிகளை ஒருபோதும் அவுஸ்திரேலியாவுக்குள் குடியேற அனுமதிக்க மாட்டோம் என தெரிவித்து வருகின்றது.

மனுஸ் மற்றும் நவுருத்தீவு முகாம்களில் உள்ள அகதிகளில் ஆண்டுக்கு 150 பேரை நியூசிலாந்தில் மீள்குடியேற்றம் செய்வதற்கான திட்டத்தை நியூசிலாந்து அரசு தொடர்ந்து முன்வைத்து வருகின்றது.

இந்த நிலையில், நியூசிலாந்து முன்வைத்துள்ள கோரிக்கை முழுமையாக நிராகரிக்கவில்லை என்றும் அதே சமயம் அதை ஏற்றுக்கொள்வது அவுஸ்திரேலியாவின் நலனுக்கு சரியானதாக இருக்காது என்றும் பீட்டர் டட்டன் தெரிவித்திருக்கிறார்.

“நியூசிலாந்து அரசின் திட்டத்தின் படி, தடுப்பு முகாம்களில் உள்ள அகதிகளை நியூசிலாந்தில் குடியேற்றினால் அது அவர்களை அவுஸ்திரேலியாவுக்குள் பின்கதவு வழியாக அனுமதிப்பது போல ஆகிவிடும்.

ஏனெனில், நியூசிலாந்தில் குடியுரிமை பெரும் எவரும் அவுஸ்திரேலியாவுக்கு எளிமையாக வந்துவிடலாம் என்ற நடைமுறை உள்ளது,” எனக் கூறியுள்ள டட்டன் அது இந்த சிக்கலில் பிரச்னையாக மாறிவிடும் எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

இதேவேளை, அவுஸ்திரேலியாவின் 46வது நாடாளுமன்றத்துக்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் மே 18ம் திகதி நடைபெற இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.