எப்போது எங்களுக்கு விடுதலை? அவுஸ்திரேலிய தடுப்பு முகாமிலிருந்து குரலெழுப்பும் அகதி

Report Print Murali Murali in அவுஸ்திரேலியா

அகதிகளையும் தஞ்சக்கோரிக்கையாளர்களையும் கையாளும் விதம் குறித்து அவுஸ்திரேலிய அரசு செய்து வரும் பிரசாரத்தை நிராகரிக்குமாறு குர்து- ஈரானிய பத்திரிகையாளரும், அகதியுமான பெஹ்ரூஸ் பூச்சானி அவுஸ்திரேலியர்களுக்கு கூறியுள்ளார்.

கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக மனுஸ்தீவில் சிறைவைக்கப்பட்டுள்ள அவர் ‘நண்பன் இல்லை, ஆனால் மலைகள்: மனுஸ் சிறையிலிருந்து எழுதுகிறேன்’ என்ற புத்தகத்தை எழுதியிருக்கிறார்.

இதற்காக அவுஸ்திரேலியாவில் வழங்கப்படும் இலக்கியதற்கான விக்டோரியா பரிசை வென்றிருக்கிறார்.

இவ்விருதை ஏற்றுக்கொண்டு மனுஸ்தீவிலிருந்து காணொலி காட்சி மூலம் பேசிய அவர், “இலக்கியத்திற்கு விடுதலை பெற்றுக்கொடுப்பதற்கான அதிகாரம் உள்ளது,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அலைப்பேசியில் எழுதிவைப்பது, காகிதத்தில் எழுதி வைப்பது பாதுகாப்பற்றது என்பதால் வாட்ஸ்அப் மூலம் இப்புத்தகத்தை எழுதியதாக கூறியுள்ளார் பெஹ்ரூஸ் பூச்சானி.

“அதிகாரிகள் எந்த நேரத்திலும் அறையை உடைத்து அலைப்பேசியை எடுத்துச்செல்லும் ஆபத்து அப்போது இருந்தது. ஏனெனில், அப்போது அலைபேசியை வைத்திருப்பது சட்டவிரோதமாகும்.”

அவுஸ்திரேலியாவுக்கு படகு வழியாக வர முயற்சிக்கும் அகதிகளை கடல் கடந்த தடுப்பு முகாமில் வைத்திருக்கும் திட்டம், கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டு வரப்பட்டு இன்றுவரை அகதிகள்/ தஞ்சக்கோரிக்கையாளர்கள் சிறைவைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் ஒருபோதும் அவுஸ்திரேலியாவில் குடியேற்றப்பட மாட்டார்கள் எனக் கூறிவருகிறது அவுஸ்திரேலிய அரசு.

பப்பு நியூ கினியா அரசின் கோரிக்கைக்கு இணங்க அத்தடுப்பு முகாம் மூடப்பட்டுவிட்டதாக அவுஸ்திரேலியா அரசு சொல்லி வந்தாலும், 300க்கும் மேற்பட்ட அகதிகள் அத்தீவிலேயே வாழ்ந்து வருகின்றனர்.

“எங்களுக்கு எப்போது விடுதலை கிடைக்கும் என்பதே எங்கள் அனைவரது எண்ணத்திலும் உள்ள கேள்வி,” என்னும் பூச்சானி இதனை திட்டமிடப்பட்ட சித்ரவதை என்கிறார்.

2013ம் ஆண்டு முதல் கடுமையான எல்லைப் பாதுகாப்புக் கொள்கைகளை நடைமுறைப்படுத்திவரும் அவுஸ்திரேலிய அரசு, படகு வழியே அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைய முயற்சிப்பவர்களை முழுமையாக நிராகரித்து வருகின்றது.

2013ம் ஆண்டு காலக்கட்டத்தில் இப்படி வர முயன்ற நூற்றுக்கணக்கான அகதிகள் பப்பு நியூ கினியா, நவுரு போன்ற தீவு நாடுகளில் உள்ள அவுஸ்திரேலிய தடுப்பு முகாம்களில் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.

இங்கு இலங்கைத் தமிழ் அகதிகளும் சில இந்தியர்களும் கூட தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.