அவுஸ்திரேலியா அரசுக்கு எதிராக மிகப்பெரிய நட்டஈடு கோரி வழக்கு!

Report Print Murali Murali in அவுஸ்திரேலியா

தங்களது பூர்வீக நிலத்தை அரசு சுவீகரித்துக்கொண்டதாகவும் இதற்கு நட்டஈடு தரப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தி அவுஸ்திரேலிய பூர்வீக குடிமக்களில் ஒருபகுதியினர் சார்பில் அவுஸ்திரேலியாவிலேயே அதிகூடிய நட்டஈட்டினை கோரும் வழக்கு கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு பூர்வீக குடிமக்களுக்கு வெற்றியாக அமையுமானால் உலகின் அதிகூடிய நட்ட ஈடு செலுத்தப்பட்ட வழக்குகளில் ஒன்றாக வரலாற்றில் பதிவுசெய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்நாட்டு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது. அந்த செய்தியில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“மேற்கு அவுஸ்திரேலியாவின் Noongarபூர்வ குடிமக்கள் தங்களது பூர்வீக நிலத்தின் பெரும்பகுதியான Noongar பிரதேசத்தினை WA மாநில அரசு சுவீகரித்து வைத்துக்கொண்டு தங்களது உரிமைகளை பறித்திருப்பதாக தெரிவித்திருக்கிறது.

இவ்வாறு சுவீகரித்து வைத்துள்ள - கிட்டத்தட்ட - இரண்டுகோடி ஹெக்டயர் பரப்பளவு கொண்ட நிலம் மேற்கு அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால், கனியவள அகழ்வு - விவசாயம் - வர்த்தகம் - பொதுமக்கள் குடியிருப்பு போன்ற வருவாய் ஈட்டும் காரணங்களுக்காக பயன்படுத்தப்படுவதாகவும் அதில் தமக்குரிய உரிமைகள் முற்றாக கபளீகரம் செய்யப்பட்டுள்ளதாகவும் - இந்த வழக்கினை தாக்கல் செய்துள்ள Noongar பூர்வீக குடிமக்கள் சார்பிலான Naomi Smith தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் தங்களுக்கு தமது பூர்வீக நிலத்திலுள்ள பண்பாட்டு - கலாச்சார உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறியுள்ளார். இந்த இழப்புக்கு அரசாங்கம் தங்களுக்கு நட்டஈடு வழங்கவேண்டும் என்றும் அவர் தனது வழக்கில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கின் மூலம் கோரப்பட்டுள்ள நட்ட ஈட்டுத்தொகை 29 ஆயிரம் கோடி டொலர்கள் ($ 290 பில்லியன்) ஆகும். இது அவுஸ்திரேலியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் ( ஒரு லட்சத்து 40 ஆயிரம் கோடி டொலர்கள் - $1.4 ட்ரில்லியன்) கால்வாசித்தொகையாகும்.

அதேவேளை, மேற்கு அவுஸ்திரேலிய மாநிலத்தின் மொத்த உற்பத்தியிலும் ($259பில்லியன்) அதிகமானதாகும்.

Noongar பூர்வீக குடிகள் சார்பில் வழக்கை முன்னெடுத்துள்ள சட்டநிறுவனம், இதில் தாங்கள் நிச்சயம் வெற்றிபெறலாம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள். ஏற்கனவே வெற்றிபெற்ற இதுபோன்ற அவுஸ்திரேலிய வழக்கினை அவர்கள் ஆதாரம் காண்பித்துள்ளார்கள்.

மேற்கு அவுஸ்திரேலியாவின் தென் மேற்கு பகுதியில் வசிக்கும் Noongar மக்கள் ஆஸ்திரேலிய பூர்வீக குடிமக்களில் ஒரு பகுதியினர் ஆவர்.

2001 குடிசனமதிப்பீட்டின்போது இந்த மக்களின் வழித்தோன்றல்களாக சுமார் 21 ஆயிரம் பேர் இன்னமும் வசித்துவருவதாக தெரிவிக்கப்பட்டது.

சுமார் 14 உப குழுக்களைக்கொண்ட இந்தமக்கள் மத்தியில் 13 மொழிகள் பேசப்பட்டன. அவற்றில் ஐந்து மொழிகள் இன்னமும் புழக்கத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.