பொது மக்களுக்கு முழுமையான அரச சேவையை வழங்க ஜனாதிபதியின் நடவடிக்கை

Report Print Vethu Vethu in அவுஸ்திரேலியா

திறமையின்மை, தாமதம் மற்றும் ஊழல் ஆகியவற்றைக் குறைக்கும் நோக்கத்துடன் அனைத்து அரசு நிறுவனங்களையும் ஒரே தரவு வலையமைப்பில் இணைப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது கவனத்தை செலுத்தியுள்ளார்.

அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் அதிகாரிகளுடன் இன்று பிற்பகல் இடம்பெற்ற சந்திப்பின் போது ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையின் தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப நிறுவனத்தின் தலையீட்டின் கீழ் அனைத்து அரசாங்க நிறுவனங்களிடமும் உள்ள தகவல்களை சேகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்களுக்கு நெருக்கமான அனைத்து பொது நிறுவனங்களுக்கும் முன்னுரிமை அளிக்கும் வலைப்பின்னல் திட்டத்தை செயல்படுத்துவதே இதன் நோக்கமாகும்.

அடையாள அட்டைகள், ஓட்டுநர் மற்றும் கடவுச்சீட்டு, பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்கள் மற்றும் காணி உறுதிப் பத்திரங்கள் உள்ளிட்ட பல துறைகளின் சேவையை விரைவுபடுத்த தொழில்நுட்பம் மற்றும் இணையத்தைப் பயன்படுத்த இந்த புதிய முறை உதவுகிறது.

ஒரே கட்டமைப்பில் தரவை எடுத்துக்கொள்வது நேரத்தைக் குறைப்பதோடு, திறமையின்மை மற்றும் ஊழலைத் தடுக்க உதவும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

வரிவிதிப்பு முதல் ஓய்வூதியம் வரை பலதரப்பட்ட அரச துறைகளை தன்னியங்க செய்வதன் மூலம் பணியை எளிதாக்குவதே முக்கிய நோக்கமாகும்.

தரவுகளை சேகரிப்பதன் மூலம், ஒரு நாட்டை பாதிக்கும் முக்கிய முடிவுகளை எடுக்கும்போது சரியான பகுப்பாய்வு செய்ய முடியும் என்று ஜனாதிபதி வலியுறுத்தினார்.

இது அரசாங்க நிறுவனங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் ஏற்படும் தாமதங்களைத் தவிர்க்கவும் உதவும் என ஜனாபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டின் விரைவான வளர்ச்சிக்காக பல நிறுவனங்களின் தலைவர்களாக வல்லுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலர் ஊதியமின்றி நாட்டிற்காக அர்ப்பணிப்புடன் இருப்பதால் அரசு அதிகாரிகள் தங்கள் முழு ஆதரவையும் வழங்க வேண்டும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

புத்துயிர் பெற வேண்டிய பல நிறுவனங்களின் தலைவர்களை நியமிக்கும் போது, சம்பந்தப்பட்ட துறையில் திறமையானவர்கள் குறித்து ஒரு கோப்பு இல்லாதது தடையாக இருப்பதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.