அவுஸ்திரேலிய தீவு சிறையில் 1000 நாட்களைக் கடந்த இலங்கை தமிழ் அகதி குடும்பம்!

Report Print Murali Murali in அவுஸ்திரேலியா
212Shares

அவுஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைந்து பின்னர் விசா காலாவதியாகிய நிலையில் தடுப்பிற்கு கொண்டு செல்லப்பட்ட இலங்கைத் தமிழ் அகதி குடும்பம் ஆயிரம் நாட்களை தடுப்பு முகாமில் கடந்திருக்கிறது.

கடந்த 2012 இல் படகு வழியாக இலங்கையிலிருந்து வெளியேறி அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைந்திருந்த நடேசலிங்கமும், 2013 இல் தஞ்சமடைந்திருந்த பிரியாவும் அவுஸ்திரேலியாவில் சந்தித்த பின் திருமணம் செய்து கொண்டனர்.

தஞ்சக்கோரிக்கையாளர்களான அவர்களுக்கு அவுஸ்திரேலியாவிலேயே இரு பெண் குழந்தைகள் (கோபிகா, தருணிகா) பிறந்தன.

அவுஸ்திரேலியாவின் பிலோயலா (Biloela) நகரில் வசித்து வந்த இவர்களின் விசா, கடந்த மார்ச் 2018ல் காலாவதியாகியதாக கைது செய்யப்பட்டு மெல்பேர்ன் தடுப்பு முகாமில் வைக்கப்பட்டனர்.

அண்மையில், அவர்கள் இலங்கைக்கு நாடுகடத்தப்பட இருந்த நிலையில் அம்முயற்சி கடைசி நிமிட நீதிமன்ற தலையீட்டால் தடுத்து நிறுத்தப்பட்டது. பின்னர், அவர்களை கிறிஸ்துமஸ் தீவுக்கு கொண்டு சென்றது அவுஸ்திரேலிய அரசு.

அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரிய தமிழ் அகதி குடும்பம், அந்நாட்டிலிருந்து நாடுகடத்தப்படும் ஆபத்தை எதிர்கொண்டுள்ள நிலையில் அதுதொடர்பான வழக்கு அவுஸ்திரேலிய நீதிமன்றத்தில் நடந்து வருகின்றது.

இவ்வழக்கில் ஒரு சிறு முன்னேற்றமாக இக்குடும்பத்திற்கு ஆதரவான தீர்ப்பு கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகி இருந்தது.

அத்தீர்ப்பில், இக்குடும்பத்தின் இரண்டாவது குழந்தை தருணிகாவின் பாதுகாப்பு விசா பரிசீலணைத் தொடர்பாக அக்குடும்பத்திற்கோ அல்லது அவர்களது வழக்கறிஞருக்கோ தெரியப்படுத்தவில்லை என நீதிபதி மார்க் மோஸின்ஸ்கை சுட்டிக்காட்டியிருக்கிறார்.

இந்த சுட்டிக்காட்டல், இக்குடும்பத்திற்கு ஆதரவான சிறு முன்னேற்றமாக கருதப்படும் நிலையில் வழக்கு நிறைவடையும் வரை இவர்களை இலங்கைக்கு நாடுகடத்த தொடர்ந்து தடைவிதிக்கப்பட்டிருக்கிறது.